ADS 468x60

01 May 2024

உழைக்கும் மக்களின் உரிமை தின ஞாபகப்படுத்தல் - 2024

என் அன்பு உழைக்கும் தோழர்களே!

உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள். உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் மே தின நாளாகும்.

உலகினில் கௌரவமிக்க தலைவர்களுக்கு சிலைகளும் அவர்களுக்கென சிறப்பான நாள்களும் கொண்டாடப்படுகின்ற போதும் நாட்டின் முதுகெலும்பாக காணப்படக்கூடிய தொழிலாளர்களை வலுவூட்டும் வகையிலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் பொருட்டிலுமே இந்த தொழிலாளர் தினம் ஒவ்வொரு வருடமும் மே முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது.

இந்த தினத்தில் உழைப்புக்கான முக்கியத்துவம் தொழிலாளர்களுக்கான அங்கீகாரமும் வெளிப்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு நாட்டினிடமும் பொருளாதார சக்தியாக இந்த தொழிலாளர்கள் கருதப்படுகின்றனர். அதாவது நாட்டினுடைய பொருளாதார வீழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்கு இன்றியமையாததாகும்.

தொழிலாளர்கள் உழைக்காது விட்டு விட்டால் அந்த நாட்டின் பொருளாதாரமே முடங்கிப் போய்விடும். எனவே குறிப்பிட்டதொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டு தொழிலாளர் வர்க்கத்தின் கைகளிலேயே தங்கி உள்ளது.

'உழைப்பாளி இல்லாத நாடுதான் உலகில் எங்குமே இல்லை' என்ற வாசகத்துக்கு அமைய ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் பங்கு மகத்துவமானது.

இன்று உலகெங்கிலும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது போராட்டங்களின் வெற்றிகளுக்காகவும் கொண்டாடப்படும் உழைப்பாளர் தினம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் இந்த நாள் அரசியல் கட்சிகளால் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த 4-5 ஆண்டுகளில் உழைப்பாளர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவதற்காக அல்ல, இந்த வருடம் நடத்தப்படவிருக்கும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கான மேடையாகவே இந்த நாள் மாறிவிட்டது.

நம் நாட்டில் 20 வீதம் மிகவும் வறிய  மக்களின் சராசரி மாத வருமானம் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் ரூ.12,500 லிருந்து ரூ.17,572 ஆக உயர்ந்திருந்தாலும், பல முறை கொண்டுவரப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வுகளும், ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட விற்பனை வரி உயர்வுகளும் வாழ்க்கைச் செலவை மலைபோல் அதிகரித்து, சாதாரண சம்பளம் வாங்குபவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்தின் (ளுசi டுயமெய டுயடிழரச குழசஉந ளுரசஎநல யுnரெயட சுநிழசவ – 2022) அறிக்கையின்படி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைப்பாளர் குடும்பத்தின் சராசரி மாத ஊதியம் முறையே ரூ.63,867 மற்றும் ரூ.44,572 ஆகும். மேலும், தினசரி கூலித் தொழிலாளர்களின் சம்பளம் நகர்ப்புறத்தில் ரூ.29,545 ஆகவும் மற்றும் கிராமப்புறத்தில் ரூ.26,990 ஆகவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் ரூ.1,000 என்ற குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறவில்லை. அவர்களின் சம்பளம் அவர்கள் பறிக்கும் தேயிலையின் எடையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

அட்வோகேட்டா நிறுவனத்தின் 'றைஸ் வித் கறி குறியீடு' இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கான உணவுச் செலவு ரூ.2,538 ஆக இருப்பதாகக் கூறுகிறது. இந்த ஆய்வு இலங்கையர்கள் பொதுவாக உண்ணும் சம்பா அரிசி, பருப்பு, பூசணிக்காய், தக்காளி, கத்தரிக்காய், பருப்பு, சிவப்பு வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் மீன் போன்ற உணவுப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு சாப்பிட வேண்டுமென்றால், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்தில் ரூ.152,280 தேவை! இந்தக் கணக்கில் சீனி, பால் போன்ற பிற செலவுகள் சேர்க்கப்படவில்லை.

உலக வங்கியின் அறிக்கையின்படி, நம் நாட்டில் கால் பங்கிற்கும்; மேற்பட்ட மக்கள் போதிய, சத்தான உணவைப் பெற முடியாத வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். மே 2023 இல் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குழந்தைகளின் கல்வி, பயணம், உடை, மருந்துகள் அல்லது பொழுதுபோக்கு செலவுகளுக்கு பணம் செலவழிக்க வேண்டுமென்றால், குடும்பங்கள் அவசியமாக தங்கள் வழமையாக உண்ணும் உணவின் அளவை குறைக்க வேண்டும்.

ஆகNவு, இவ்வாறான சூழலில் அரசியல் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற தொழிலாளர்களின் துணையை நாடுகின்றன. இந்தப் புதன்கிழமை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நிச்சயம் உயர்ந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உயர் வரிகளை கண்டித்தும் கோரிக்கை வைப்பார்கள்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளைக் கண்டித்து, தொழிலாளர்கள் தங்கள் நோக்கங்களை ஆதரிக்கும்படி வற்புறுத்துவார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த அரசியல் கட்சிகளில் எதுவும் வாழ்க்கைச் செலவை எவ்வாறு குறைப்பது அல்லது சம்பளத்தை எவ்வாறு உயர்த்துவது என்பதை இன்னும் வெளிப்படுத்தவில்லை. மேலும், இழப்பை ஈட்டும் அரசு நிறுவனங்களையும் அரசு விற்பனை செய்யாமல் இருக்கக் கோருவார்கள்.

அடுத்து எக்கனொமி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2005 முதல் 2021 வரையிலான சுமார் 15 ஆண்டுகளில், அரசு நிறுவனங்கள் ரூ.1.8 ட்ரில்லியன் இழப்பை சந்தித்துள்ளன. அதுபோக பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை போன்றவற்றின் இழப்பீட்டு அரசு நிறுவனங்களின் நிலைமைகளை காட்டுகின்றது. இந்த அரசு நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் சுமார் ரூ.743 பில்லியன் இழப்பைச் சந்தித்ததாக தெரிவிக்கின்றனர்;.

என்றாலும், பிரச்சினை என்னவென்றால், சாதாரண தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இன்னும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு மின்சாரமும் எரிபொருளும் இரண்டும் அவசியம் தேவை. ஆனால், குறைந்த சம்பளம் எடுப்பவர்கள் யாரும் இவை இரண்டையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் வைத்துள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் தங்கள் உணவு உட்கொள்ளல், குழந்தைகளின் படிப்பு, மருத்துவ தேவைகள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை குறைக்க வேண்டியுள்ளது.

ஆகவே இந்த உழைப்பாளர் தினத்தில், நமது அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் 'மக்களுக்கு' இந்த பிரச்சனைகளை எவ்வாறு நடைமுறையில் கையாள்வார்கள் என்பதை விளக்க வேண்டும். 1989 ஆம் ஆண்டின் கிளர்ச்சியிலிருந்து, தொழிற்சங்கத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு வெறும் ஆமாம் சாமி ஆகிவிட்டனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியல்வாதிகள் தொழிற்சங்கவாதிகளுக்கு எறிந்துவிடும் பதவி மற்றும் சலுகைகளை எதிர்பார்க்காமல், தங்கள் உறுப்பினர்களின் தேவைகளை முதன்மைப்படுத்துவதற்கான நேரம் இது.

இந்த பிரச்சினைகளைத் தீர்க்க என்ன பண்ணலாம்,

தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அரசாங்கம் வழங்க வேண்டும். இதன் மூலம், தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, வேலைவாய்ப்புகளைப் பெற தகுதி பெறுவார்கள்.

உயர் கல்வி நிறுவனங்கள் தொழில்சார் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம், இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சந்தைக்கு தயாராக இருப்பார்கள்.

தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். நியாயமான ஊதியம் வழங்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்பான வேலைச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கைகளின் மூலம், இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்வியலில் சமூக இயக்கத்துக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய உழைக்கும் வர்க்கமாகிய இந்த தொழிலாளர்கள் போற்றத்தக்கவர்களே. அவர்களை நினைவு கூறக்கூடிய மே தினம் என்பதும் சிறந்த ஒரு நாளாகவே உள்ளது.

அதாவது நாட்டினுடைய வளர்ச்சி பாதையில் கூடவே நடை போடும் மதிக்கத்தக்க வர்க்கமாகவே தொழிலாளர் வர்க்கம் காணப்படுகின்றது என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆகவே தொழிலாளர்களுக்கு உரிய மரியாதையும் கௌரவத்தினையும் அளிப்பது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

நன்றி வணக்கம்.

சி.தணிகசீலன்


0 comments:

Post a Comment