ADS 468x60

20 May 2024

இஞ்சியின் விலை 5000! நாமும் விளைவிக்கலாம்!

இன்று நாம் பொருளியல், வர்தகம் மற்றும் விவசாயத்தில் எல்லாம் விசேட பட்டம் பெற்றவர்களை நூற்றுக்கணக்கில் உருவாக்குகின்றோம். இதனால் விவசாயம் செழித்து அவர்களின் வியாபாரம் வளர்ந்து மக்களின் பொருளாதாரம் உயர்கின்றதா? இல்லை. ஆனால் இன்னும் எமது மக்கள் எதிர்கால தேவையை அறியாதவர்களாகவும் அதற்கு ஏற்ப தமது உற்பத்திகளை நிரம்பல் செய்யாதவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் தொடர் இழப்புக்கள், நஷ்டம் காரணமாக விவசாயிகள் திறனற்ற தொழிலாளியாக கூலியாளாய் குவைற், கட்டார், சவுதி என தொழிலை மாற்றி தொலைந்துபோகின்றனர். மட்டக்களப்பின் அடையாளமே விவசாயம் அதனை தொலைத்துக்கொண்டிருக்கின்றோம். இதற்கு யார் யார் காரணம்?

விடயத்துக்கு வருவோம். இன்று இஞ்சி ஒரு கிலோவின் விலை 5000, மாதுளை ஒரு கிலோ 3000 ரூபாய், ஆனால் கத்தரிக்காய் 100 ரூபாய், பயற்றங்காய் ஒரு கிலோ 60/- ரூபாய், பச்சமிளகாய் ஒரு Kg 300 ரூபாய், அதுபோல புடலங்காய், பீற்கு இவையெல்லாம் விலை குறைந்த மரக்கறி வகைகளே. ஆனால் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிலும் மாங்காடு, தேத்தாத்தீவு, களுதாவளை, எருவில் மற்றும் மகிழூர் போன்ற கிராமப்புறங்களில் விலை குறைந்த மரக்கறிகளையே தொடர்நு விளைவிக்கின்றனர். அதற்கு இன்னும பாரம்பரிய விவசாய முறைகளையே பாவித்து வருகின்றனர். இப்படியே போனால் இலாபத்தினை எதிர்பார்கமுடியுமா?

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது, நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது இஞ்சி கடையில், சந்தையில் வாங்கியதாகத் சரித்திரமே இல்லை. ஒவ்வொருவருடைய வெற்றிலைத்தோட்டத்திலும் இது தாராளமாக விளைந்து கிடைக்கும். அதில் என் அம்மா சம்பல்போட்டுத் தருமளவுக்கு மிகைவிளையக்கூடிய மண்வளம். அதுமாத்திரமா, கிழங்கு வகைகள், நாட்டுக்கொச்சிக்காய், தேசி, மாதுளை என அபரிமிதமாக விளைந்த மண் ஐயா இது, ஆனால் இன்று அவை மறைந்துபோயுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் எமது; அறிவார்ந்த நிறுவனங்கள் (உ.ம்: பல்கலைக்கழகங்கள்) , துறைதேர்ந்தவர்கள், தலைவர்கள், உத்தியோகத்தர்கள் அவர்களது சமுகப் பொறுப்பை சரியாகச் செய்யவில்லை என்பதனாலாகும். இவர்கள் வருடா வருடம் எமது மண் வளத்துக்கு ஏற்ப, எந்தப் பயிர் அதிக இலாபத்தினைக் கொடுக்கும், அதற்கு என்ன விலை இருக்கும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு அறிக்கையினை (போகாஸ்ரிங் ரிபோர்ட்ட) தயாரித்து அதை மக்களுக்கு தெழிவுபடுத்தி வருவார்களானால் நிச்சயம் விவசாயிகள் அதிக இலாபம் பெறுவர். 

இந்த அறிக்கையில் எத்தனை ஏக்கர் நிலம் இதற்கு தயார்படுத்தலாம், எத்தனை மெற்றிக்டன் நாட்டுக்குள் தேவையாக இருக்கின்றது, எந்தக்காலத்தில் இவை அதிகம் கிராக்கியாக உள்ளது, யார் இதனை மக்களுக்கு முன்னின்று முதலீடு செய்வது, அதற்கான நாத்தினை எவ்வாறு பெறுவது, அதனை சீசன் இல்லாத காலங்களில் பெறுமதி சேர்த்து எப்படி சந்தைப்படுத்துவது போன்ற இன்னோரன்ன முக்கிய விடயங்களை தெரிந்துகொள்ளலாம். அதுபோல விவசாயிகளின் மனோபாவமும் இதில் அடங்கும். அவர்களும் மாறத்தயாராக வேண்டும். அதற்குத்தான் விஞ்ஞான ஆராய்சிபூர்வமான சரியான வழிகாட்டல்வேண்டும்.

இப்படியெல்லாம் செய்தால்; எங்கே எமது தொழிலாளர்களை ஏழை விவசாயிகள் என அழைக்க முடியாமல்போகுமோ என்ற பயமோ தெரியவில்லை. எத்தனை உத்தியோகத்தர்கள் (அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாயப் பரிசோதகர், விவசாய விரிவாக்க உத்தியோகத்தர், நீர்பாசன உத்தியோகத்தர், இன்னும் பலர்), கல்வி புலத்தில் உள்ள (ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், நிபுணர்கள்), அரசியல்வாதிகள், ஊர்தலைவர்கள் என அடுக்கிக்கொண்டு போகலாம். 

இவர்களில் பலர் இருக்கின்றார்கள் என அதிகமாக மக்கள் பணத்தில் ஒழுங்கு செய்யும் விளையாட்டு, சமய, பொது நிகழ்வுகளுக்கு மாலை போட்டு கௌரவிக்க அழைப்பதனால்; மாத்திரம் தெரிந்துகொள்ளுகின்றோம். 

இன்று ஏற்றுமதி சார்ந்து வடக்கில், மலைநாட்டில், தெற்கில் உள்ள மக்கள் மள மள என வளர்ந்து வருகின்றனர். அதற்கேற்றால்போல் தமது உற்பத்தி செயற்பாடுகளை மாற்றி அதிக ஆதாயம் கண்டுவருகின்றனர். ஆனால் இங்கு அவர்கள் உற்பத்தி செய்வதனை வேண்டி எமது; காலை சுரண்டும் வர்த்தக முதலைகள் மக்களை இவையெல்லாம் தெரியாத குருடர்களாக வைத்திருக்கின்றனர். 

ஒன்றிணைந்து செயல்படுவோம்

விவசாய துறையை மேம்படுத்துவதற்கு, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இதற்காக என்ன செய்யலாம் என்பதற்கான சில யோசனைகள்:

  • இஞ்சி உற்பத்தி பணிக்குழு: விவசாயிகள், வேளாண்மைத்துறை நிபுணர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கிய ஒரு பணிக்குழுவை உருவாக்குவது.
  • சந்தை ஆராய்ச்சி: தேசிய மற்றும் சர்வதேச அளவில் இஞ்சி தேவை, விலை போக்குகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றிய ஆராய்ச்சி.
  • மண் பரிசோதனை: மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் மண் பரிசோதனை செய்து, இஞ்சி சாகுபடிக்கு ஏற்ற பகுதிகளை அடையாளம் காணுதல்.
  • பயிற்சி திட்டங்கள்: விவசாயிகளுக்கு நவீன இஞ்சி சாகுபடி நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் மற்றும் அறுவடைக்கு பிந்தைய முகாமைத்துவம் குறித்த பயிற்சி திட்டங்கள்.
  • நிதி உதவி மற்றும் கட்டமைப்பு மேம்பாடு: விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்கள் வாங்குவதற்கு அரசு மானியங்கள், கடன வசதிகள் மற்றும் தனியார் முதலீடுகளை ஆராய்தல். சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் அவசியம்.
  • ஒத்துழைப்பு சந்தைப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல்: மொத்தமாக விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்கும், சிறந்த விலை பேசி கொள்வதற்கும் விவசாயிகள் கூட்டுறவுகளை உருவாக்குதல். இஞ்சி பவுடர், இஞ்சி பேஸ்ட் மற்றும் இஞ்சி மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதையும் பரிசீலிக்கலாம்.
  • ஏற்றுமதி சந்தை ஆய்வு: உயர் தரம் வாய்ந்த மட்டக்களப்பு இஞ்சிக்கு சாத்தியமுள்ள ஏற்றுமதி சந்தைகளை ஆராய்தல்.

முடிவுரை

இந்த யோசனைகளை செயல்படுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டால், மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய துறையை புத்துய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். இஞ்சி போன்ற அதிக லாபம் தரும் பயிர்களின் அறுவடை மூலம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யலாம், வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை மீண்டும் விவசாயத்தின் அடையாளமாக நிலைநிறுத்தலாம்.

என் அன்பார்ந்த விவசாய பெருமக்களே! தயங்க வேண்டாம். உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உங்களுடன் கைகோர்த்து உழைக்க நான் தயார்!

மாற்றுவோம் மாறுவோம்!


0 comments:

Post a Comment