ADS 468x60

10 July 2024

களுதாவளைச் சுயம்புலிங்கர் பேராலயம் ஒரு ஆன்மீக நிறுவனமாகும் கனவு!

 இந்துசமுத்திரத்தின் முத்தான இலங்காபுரியின் கிழக்கே, இராவணன் இருந்தாண்ட பூர்வீக மண்ணின் தெற்கே, மீன்பாடும் தேன்நாடான மட்டக்களப்புக்கு தெற்கே, வங்கக் கடல் அலைமோத, வற்றாத வாவிமகள் வளைந்தோட, வெற்றிலையும் வேளாண்மையும், வெற்றி கொண்ட தமிழ் மக்களும் செறிந்திலங்கு களுவைநகரில் சுயம்பாக வந்தமர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க களுதாவளைச் சுயம்புலிங்கப்பெருமானின் பொற்பாதம் பணிந்து ஒரு கட்டுரையினை எழுதுகின்றேன்.

'களுதாவளைக்கு நீங்க வந்து பாருங்க-அங்கு 

கணநாதன் சந்நதியில் நின்று பாருங்கள் 

ஆறாத காயங்களும் ஆறி போகுங்க-அது

ஆறாவிட்டால் வந்து என்னைக் கேளுங்க' 

எழுத்தினை இப்படி துவங்குகின்றேன். எனது சிறிய வயசில் பசுமரத்தாணிபோல் பதிந்த பல விடயங்களில் என்னுடைய அம்மம்மாவின் பாசம் அன்பு என்பவை மறக்கமுடியாதது. ஆம் எனது அம்மம்மா என்னுடனும் எல்லோருடனும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் ஒரு இறை நம்பிக்கைகொண்டவர். அவர்; பார்ப்பதற்கு எப்பொழுதும் நெற்றி நிறைய நீறணிந்து, சுத்தமாக உடைதரித்து மங்கலமாக இருப்பார்.


எங்களுடைய அம்மம்மாவின் காலத்தில் எங்களுக்கு வெற்றிலை தோட்டம் வயல்கள் இருந்தன. தோட்டத்தில் வாழை, கரும்பு, வள்ளிக்கிழங்கு, மா மரங்கள், தென்னை மரங்கள் என எல்லாம் காய்த்து கனிந்து கிடக்கும். அந்த நேரத்தில், காய்ச்சல், தலைவலி, அம்மை போன்ற நோய்கள் வந்தால் மற்றும் விஷப்பாம்பு கடித்தால் கூட வைத்தியசாலைக்கு செல்வது கிடையாது நாட்டு வைத்தியர்களைத்தான் நாடுவோம்.

அந்த நேரங்களில்; கடவுளை மன்றாடி ஒரு நேர்த்தி வைத்து விடுவார்கள், அந்தவகையில், என்னுடைய அம்மம்மாவின் குலதெய்வம் களுதாவளைப்; பிள்ளையார். எதற்கெடுத்தாலும் 'என்ற களுதாவளப் பிள்ளையாரே' என்று தான் வணங்குவார், இப்பொழுது நானும் எங்களது குடும்பமும் அவ்வாறே. நூங்கள் தேத்தாத்தீவு எனினும் திருவிழா என்றால் மச்சம் மாமிசம் கிடையவே கிடையாது. இன்றளவும் அப்படித்தான்.

அதனால் வாழை பழுத்தால் முதல் சீப்பு கழுதாளை கிழவனுக்கு, வயல் வெட்டினால் முதல் அரிசி பிள்ளையாருக்கு என்றும் ஒரு நேர்த்தியினை வைத்து விடுவார். அப்படி பழுத்தவுடன்; இரண்டு மூன்று நல்ல சீப்புகளை தெரித்து எடுத்து, ஒரு பனை ஓலை பெட்டிக்குள் பக்குவமாக வைத்து, அந்த வாழைப்பழத்துடன் தேங்காய், கற்பூரம், அரிசி, பாக்கு, பூ இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு வெள்ளை துணியால் அந்தப் பெட்டியினை கட்டி காலையில் தலைமுழுகி குளித்து விட்டு கால்நடையாக குளத்துக்குள்ளால் சென்று அந்த ஆலயத்தில் சென்று கொடுப்போம். அதற்கு என்னையும் அழைத்துச் செல்வார்.

இப்பவும் ஞாபகம் இருக்கிறது அங்கு பிள்ளையார் ஆலயத்தில் உள்விதி மணலால் நிரம்பி இருக்கும். என்னுடைய வயதை ஒத்தவர்களுக்கு அது தெரியலாம். அங்கு சென்றதும் என்னை அறியாத மகிழ்ச்சி. காற்றின் வருடல், கங்கையின் குளிர்சி, ஆற்றின் அலையோசை, அரசைமர இலையோசை அதில் கிளிகளும் மைனாக்களும் போடும் குரவை இசை என இலவசமாகக் கிடைக்கும் தெய்வீக அனுபவங்கள்தான் அந்த மகிழ்வினை எனக்குத் தரும். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது உண்மையில் அது அந்த ஆண்டவனின் கருணையாக தான் இருக்க வேண்டும்.

அங்கு அந்த ஆலய உள்வீதி மணலில் சென்றவுடன் அந்த மணலில் மண்ணைத் தீய்த்துத் தீய்த்து சில்லறை காசுகள் 10 சதம் 5 சதம் தேடி எடுப்பேன். இங்கு செல்வதில் இன்னொரு எதிர்பார்ப்பு எனக்கு இருக்கும் அது நாம் கொண்டு போன பூசைப்பெட்டி, பூசை முடிந்ததும் அங்கு கொண்டு வந்த வேறு அடியார்களின் நைவேத்தியங்கள் குறிப்பாக மோதகம், பொங்கல், பழம் இவற்றையெல்லாம் நாங்கள் கொண்டு போன பூசைப்பெட்டிக்குள் எடுத்து எங்களுக்கு பூசை முடிந்தவுடன் தருவார்கள்.

அதை உண்பதில் எனக்கு அலாதிப் பிரியம். அதுபோக பூசை முடிந்ததும் அனைத்து அடியார்களும் அங்குள்ள அறங்காவலர்கள் பூசை பொருட்கள் பொங்கல் ஆகியவற்றினை பகிர்ந்து கொடுப்பார்கள் அதுவும் ஒரு நிறைவாக இருக்கும்.

இதற்கெல்லாம் உறுதியான ஒரு கட்டமைப்பு இருப்பது முதல் காரணம். இங்குள்ள நிர்வாகம் ஒரு கட்டுக்கோப்பான, நல்ல தலைமைத்துவத்துடன் இயங்குவதனை இன்று வரை அவதானித்து வருகின்றேன். அவர்களின் தொடர்பாடல், ஒருங்கிணைப்பு, திட்டமிடல், கட்டளையிடல், ஆவணப்படுத்தல், மற்றும் கண்காணித்தல் என்பன ஒரு அரசாங்கத்திற்கு நிகரான அமைப்பாக இருக்கும், இருக்கின்றது.

இங்கு எப்பொழுதும் அயலூர் அடியவர்களை அன்போடு அனுசரித்து முதலிடம் கொடுப்பார்கள் அது மட்டக்களப்புக்கே உரித்தான வந்தோரை வாழவைக்கும் பண்புதான். இங்குள்ள நிருவாகத்தினர் ஒரு ரூபாய் என்றாலும் கணக்குக்காட்டுவார்கள் அந்தளவுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன பிரதானமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் ஆண்டவனுக்கும் அங்குவரும் தொண்டர்களுக்கும் வகைகூறும் தலைவர்கள். 

இங்கு ஆலயத்தை சுத்தமாக வைத்திருப்பதுடன், பாதுகாப்பும் இளைஞர்களால் வழங்கப்படும் இதற்கு இவர்களைவிட்டால் வேறு உதாரணம் எனக்குக்கிடையாது. இவர்கள் சுற்றுச்சூழலை வருடா வருடம் அழகு படுத்தி துன்ப துயரங்கள் மற்றும் விரக்தியோடு வருகின்றவர்களும் இயற்கையின் வனத்தில் இன்பம் அடைந்து செல்லும் ஒரு அழகிய இடம் இது. இலங்கையில் இல்லை ஏன் உலகத்தில் பல ஆலயங்களுக்கு சென்று உள்ளேன் ஆனால் எங்கு கிடைக்கும் மன நிறைவு, அமைவிடம், இறை அருள் வேறு எங்கும் நான் கண்டதே இல்லை.

ஒரு விடயத்தை நான் இங்கு நமது பிராந்திய இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு ஏன் அதற்கு மேல் உங்கள் கலாநிதி பட்டங்களுக்காகவும் இங்கு உள்ள நிதி முகாமைத்துவம், நிர்வாக முறைமை, மனித வளப்பயன்பாடு, மற்றும் பௌதிவளப் பயன்பாடு, களஞ்சியப்படுத்தல் மற்றும சுற்றுச்சூழல் பேணுதல் என்று பலவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவுககு இங்குள்ள கட்டமைப்பினை நாம் பயன்படுத்தலாம், ஆய்வுக்குட்படுத்தலாம். அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். 

இதற்குமேல் இவற்றை ஊடகங்கள் ஏனைய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வேறு பல ஆலயங்களின் நிருவாகிகள் இந்த ஆலயத்தை ஒரு 'மாதிரியாக' மற்றும் முன்னுதாரணமாக எடுத்து அவர்களுக்கு களப்பயணங்களை ஏற்படுத்த அங்கே தங்கி இருந்து பயிற்சி பட்டறைகளையும், அவர்களின் அனுபவ பகிர்வினையும் ஒழுங்குப்படுத்த களுதாவளை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரை உள்ளன்போடு நாட வேண்டும்.

இருப்பினும் இன்னும் ஒரு வேண்டுகோள் இருக்கின்றது! எனக்குத் தெரிந்தவரை பொதுவாக இந்து மதம் பல வழிகளிலும் எமது மாவட்டத்தில் வலுவிழந்து வருகின்றது. மதமாற்றம், வறுமை, அரசியல் அநாதைகள் என்று பட்டியலிடலாம். காரணம் ஏனைய மதத்தில் உள்ள அந்த மக்களுக்கு இடர் காலத்தில் உதவும் நிலைபோல இங்கு கிடையாது. நாம் அவர்களை கண்டு கொள்ளாமல் விடுவது, வசதி குறைந்த மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது, கல்வி வசதிகளை செய்து தருவது என்பனவற்றில் நாம் பின்நிற்கின்றோம்;. இருப்பினும் இவற்றிக்கு மாறாக களுதாவளைப் பிள்ளையார் ஆலயம் செயற்படுவது பெருமையாக இருக்கின்றது. இன்னும் அவற்றை விரிவுபடுத்தவேண்டும் என்பது எனது வேண்டுதல்.

இவை தவிரவும் குறிப்பிட்ட எமது தாய் மத தெளிவூட்டல்களை செய்ய இளைஞர்களிடையே மற்றும் மக்களிடையே இந்து பண்பாடு, அறநெறிகள் என்பனவற்றை பிரதிபலிக்கின்ற மாநாடுகளை இங்கு அடிக்கடி நடாத்த வேண்டும். மற்றும் நல்ல திறமையானவர்களை, புத்திஜீவிகளைப் பாராட்டி ஒருங்கிணைத்து எமது மதத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூற சஞ்சிகைகளை வெளியிட வேண்டும். 

அதுபோல எமது மாவட்டத்தின் எமது வழிபாட்டு முறைகளை ஆழ்ந்து அறிந்து தெளிய ஆய்வுகளைச் செய்ய வேண்டும். அவற்றுக்கான மூல ஆவணங்களை கொண்ட ஆன்மீக நூலகத்தினையும் எமது ஆண்மீக, தமிழ் பாரம்பரியங்களை, அருமை பெருமைகளை மற்றோருக்கும் தெரியப்படுத்தும் வண்ணம் அருங்காட்சியகத்தினையும் ஆலயத்திலேயே நிறுவ வேண்டும். இவ்வாறான ஒரு பொது ஆன்மீக வளர்ச்சி பெருந்தலமாக இந்த களுதாவளைப் சுயம்புலிங்கப்பேராலயம்; திகழ வேண்டும் என்பது என்னுடைய அவா, என்னுடைய அப்பனிடம் அந்த வேண்டுதல் எப்பொழுதும் இருக்கும். அந்த மக்களும் இவற்றுக்கு செவி சாய்பாபார்கள் என நம்பி இவற்றையெல்லாம் தெரியப்படுத்துகின்றேன்.

இன்னுமொரு முக்கிய விடயத்தினை கூறு விரும்புகின்றேன். அது முக்கியமாக ஆலயங்களுக்கு வருகின்ற பக்தர்கள் பல மன புலம்பல்களுடனும் குறைபாடுகளுடனும் வேதனைகளுடனும் சிலர் நல்ல விடயங்களை சுமந்து கொண்டும் ஆலயங்களுக்கு வருவார்களே தவிர வெறுமனே அங்கே கொடுக்கின்ற பொங்கல்; பஞ்சாமிர்தம் இவற்றை உண்டு போவதற்காக வருவதில்லை. ஆனால் எமது ஆலய குருமார்களில் எத்தனை பேரை பூசை முடிந்தவுடன் மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு அறிவுரை போதித்து வழிபடுத்தி அவர்களது மனக்கிலேசங்களை தீர்க்கும் வண்ணம் ஆலயத்தில் மக்களுடன் பேசுகின்றார்கள், போதிக்கின்றார்கள் என்றால் அது கேள்விக்குறிதான்.

அவ்வாறான நிலையினை மாற்றி பல தேசங்களில் இருந்தும் பல பிரச்சினைகளுடனும் மன சஞ்சலங்களுடன் ஆண்டவனின் ஆலயம் நாடி வருகின்றவர்களின் மத்தியில் குருமார்கள் பேசுவதற்காக அவர்களை வழிப்படுத்துவதற்காக அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தயார்படுத்துகின்ற இடமாக களுதாவளைப் பிள்ளையாராலயம் திகழ வேண்டும். 

இங்கு இருந்தே ஏனைய ஆலய குருமார்களுக்கும் பக்தர்களோடு எவ்வாறு பேசுவது! குறைந்தது பூசை முடிந்தவுடன் ஐந்து நிமிடமாவது அமைதியாக இருந்து அவர்களுடன் உரையாடுவதற்கு, போதிப்பதற்கு, ஆற்றுப்படுத்துவதற்கு எத்தனையோ ஆயிரக்கணக்கான தேவாரங்கள், புராண இதிகாச இலக்கியங்கள் எங்களுக்காக இருக்கின்ற பொழுது, அவற்றிலிருந்து பல உதாரணங்களை சொல்லி ஒவ்வொருவருடைய மனக்குறைகளையும் தீர்த்து எடுத்துச் செல்லக்கூடிய பல விடயங்களை அந்த ஆலயத்திலிருந்து தொடங்குங்கள் என்பது என்னுடைய இன்னும் ஒரு வேண்டுகோள்.

அது போக இன்று கொடூரமான தொழில் வாய்ப்பின்மை, அரசியல் பொருளாதார நெருக்கடிகள், விலையேற்றம், கல்வியில் பின்னடைவு போன்ற விரக்தி காரணமாக பல விபரீத முடிவுகளை எமது சமூகத்தில் இளைஞர்கள் எடுத்து வருவதனை கண்கூடாக காண்கின்றோம்.

ஆனால் எமது தமிழ் மதத்தில் இவற்றுக்கான பல தீர்வுகள் பல அறிவுரைகள் பல வழிகாட்டுதல்கள் இருக்கின்றன அல்லவா! குறிப்பாக தியான பயிற்சகள், மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி, கூட்டுப்பிரார்தனைகள் என்பனவற்றை எல்லாம் கூறிக்கொண்டு போகலாம். ஆகவே நாம் ஆலயத்தில் அமைதியைப் பேணும் இடமாக அதற்கான மண்டபங்களை அதற்கு பிரத்தியேகமாக கட்டிக் கொடுக்க வேண்டும் அதன் மூலம் பல மக்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் பல செய்திகளை நாம் இந்த உலகிற்கு அறிய கொடுக்கலாம்.

ஆகவே நான் கூறிய இந்த பரிந்துரைகளை எல்லாம் நடைமுறைப்படுத்தினால் இது ஆலயமாக மாத்திரமின்றி நான் முன்பு கூறியது போல எடுத்துக்காட்டான மாதிரி ஆன்மீக நிறுவனமாக பரிணமிக்கும் என்பது எனது அன்பார்ந்த வேண்டுதல்.

அந்த வகையில் இவ்வாறான ஒரு கனவினை நான் எமது களுதாவளை அப்பனின் சந்நிதானம் செல்லும் போதெல்லாம் எனது மனக்கண்ணில் நினைத்துப் பார்ப்பதுண்டு. இந்த சுயம்புலிங்கப் பிள்ளையாரிடம் இதற்கான விண்ணப்பங்களை அடிக்கடி வைப்பதும் உண்டு. எனவே எல்லா திறமையும், ஆளுமையும், திறனும் கொண்ட இந்த ஆலய நிருவாக சபை இந்த களுதாவளை மக்கள் இவற்றை நிச்சயம் கருத்தில் கொள்ளுவார்கள் என திடமாக நம்புகின்றேன்.

ஏனெனில் இந்த ஆலயத்தில் எங்குமில்லாதவாறு வரலாற்றுச் சான்றுகளுடன் இயற்கையாகவே மூர்த்தி தலம் தீர்த்தம் என அனைத்தும் சிறப்பாக ஒரு சேர அமையப்பெற்று மிக சீர்பெற்ற பொருத்தமான இடமாக நான் பார்க்கின்றேன். இவை சிறப்பாக நிறைவேறி கிழக்கின் தமிழ் மதத்தின் தலைநகரமாக திகழவேண்டும் என எதிர்பார்கின்றேன்.

களுதாவளைக்கு நீங்க வந்து பாருங்க-அங்கு 

கணநாதன் சன்னதியில் நின்று பாருங்கள் 

ஆறாத காயங்களும் ஆறி போகுங்க-அது

ஆறாவிட்டால் வந்து என்னைக் கேளுங்க 


மீன்பாடும் தேனாட்டில் சுயம்புலிங்கம் -அங்கு 

மேலோரும் வணங்கிட அருளும் லிங்கம் 

சித்திபல கொடுத்திடும் சிவனின் பிள்ளை –அவரை

சுற்றிவர போகுமய்யா சோகம் எல்லாம் தீருமய்யா!


வேதனைகள் சோதனைகள் போக்கிடும் தலம்- வந்து

வேண்டுவோர்கு என்நாளும் வளரும் குலம்!

பாமரரும் கோமகனும் தேடிவருவார் -உன்னைப்

பார்ததுமே பாவம் போகும் பாரமெல்லாம் ஓடிவிடும்


பார்வையின்றி கேள்வியின்றி வந்தவர்களும்- உன்னை

பாத்தவுடன் பார்வைபெற்றுச் சென்றவர்களும்

எத்தனையோ பக்தர்கெல்லாம் தேடிவருவார்- உனக்கு

ஏழை பணக்காரனில்லை எல்லோருக்கும் சொந்தப்பிள்ளை


ஒருதரம் களுதாவளைக்கு நீங்க வந்து பாருங்க -அங்கு 

கணநாதன் சன்னதியில் நின்று பாருங்க 

ஆறாத காயங்களும் ஆறி போகுங்க-அது

ஆறாவிட்டால் வந்து என்னைக் கேளுங்க 


0 comments:

Post a Comment