ADS 468x60

24 January 2011

ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எமக்கருள?

அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ளத்தின் வடு இன்னும் காயாத ஓயாத நிலையில் புதிதாய் எழுந்திருக்கும் சந்தேகங்கள் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் ஒரு நிலையினைத் தோற்றுவித்துள்ளது. ஏற்ப்பட்ட பெரு வெள்ளத்தினால் அரிசிக்கு விலை அதிகரிக்கும் என்னும் ஒரு கதை அடிபடத்தொடங்கியது உண்மை. கிட்டத்தட்ட இலங்கைக்கான நெல் உற்பத்தியின் பாதிக்குமேல் கிழக்கிலங்கையில் இருந்து விளைவிப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இச்செய்தி பற்றிய உன்மை இலங்கை விவசாய அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது திருப்தி தருகின்ற ஒன்றாகும்.
அதாவது அரிசிக்கான விலை அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அதற்க்கான முன்னேற்ப்பாடாக நெல் சந்தைப்படுத்தும் சபையில் நெல்லை சேமித்து வைப்பதற்க்காக 5 பில்லியன் ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் ஒருகிலோ நெல் ரூபாய் 30 கு கட்டுப்பாட்டு விலையிலேயே விற்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்..

வெள்ளநீர் வடியத்தொடங்கி இருப்பதனால் பொலநறுவை போன்ற பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர் என்றும், அவர்கள் மீளவும் மாரிப்போகச் செய்கை பண்ணுவதற்க்கான அரச உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றதெனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கான விதைநெல், மற்றும் நிலப்பண்படுத்துதலுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அது போன்று அவர்களுக்கான மின்கட்டனம் அறவிடப்படுவதில்லை என்ற தீர்மானமும் நன்மையளிப்பதாகவே இருக்கின்றது. அத்துடன் பெய்த மழை வெள்ளத்தில் அனேகமான குளங்கள் நிரம்பி இருக்கின்றமையினால் இப்போகச் செய்கைக்கான நீர் பாய்சல் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த வெள்ளத்தின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய இலங்கையில் பெருமளவு விவசாயம் செய்யும் 10000 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக 12,000 க்கும் அனேகமானவர்கள் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8000 பேர் வரை அம்பாரை மாவட்டத்தினில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிப்பீட்டின்படி அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களின் பாதிப்பு மொத்த விவசாயத்தில் 10 விகிதம் என்றும் மட்டக்களப்புக்கான மதிப்பீடு இன்னும் நிறைவு பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கணிப்பீடு இதுவரை இடம்பெறாமல் இருப்பது இம்மாவட்டத்தின் மீதான பாரிய இழப்பை சொல்லுகின்ற அதே சமயம் இங்கு மக்ககளை கவனிக்க யாரும் இல்லாத சூழல் உள்ளதோ என்ற அச்சத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இன்னும் பட்டகாயம் ஆறாத பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப்பணிகள்கூட ஒழுந்கான முறையில் வழங்கப்படாமல் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின் அசமந்தபோக்கு காணப்படுகின்றமை தமிழ் மக்களின் சாபம் என்பதா அவர்களின் பாவம் என்பதா சொல்லத் தெரியவில்லை. இதனால் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பொலிகள் ஆங்காங்கே கிளம்பத்தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய மாவட்ட மக்கள் கவனிக்கப்படுவதபோல் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் இன்நாட்டு மக்களாக கவனிக்கப்படுவதில் பின்னிப்பதற்கு யார்தான் காரணமோ?

0 comments:

Post a Comment