களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.
இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.
இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.
மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.
“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.
பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?
அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…
“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.
அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.
அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.
அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.
மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.
அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.
அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.
0 comments:
Post a Comment