நமது பாரம்பரியத்தினை போற்றும் விதமாகவும் நினைவூட்டும் விதமாகவும் சர்வதேச வேஷ்டி தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. எமது தமிழர்கள் சாதி மதம் கடந்து அவர்களது அடையாளமாக ஆண்கள் அணிய விரும்புவது வேஷ்டியைத்தான். ஆண்களின் கம்பீரத்துக்கு அடையாளமாகவும் நமது கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்வது இந்த வேஷ்டிதான். நமது தட்ப்ப வெட்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொருத்தமானதும் வேஷ்டிதான்.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகத் திகழும் உணர்வுமிக்க ஆடையான இந்த வெண்ணியற ஆடை வேஷ்டியை உடுத்துக்கொண்டு செல்லும்போது இனம்தெரியாத ஆழுமைத் தோற்றமும் கம்பீரமும் தானாகவே வந்துவிடுகின்றது. வேஷ்டி உடுத்துபவர்களின் மனசி நேர்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும் என்பதுதான் எமது மூதாதையர்களின் நம்பிக்கை. அது இப்போது இருக்கிறதா இல்லையா என என்னிடம் கேட்காதீர்கள்.
ஒருவருக்கு செலுத்தும் இறுதி மரியாதை எப்படிப்பட்டது என நான் சிங்களச் சகோதரர்களின் மரணச்சடங்கில் கலந்துகொள்ளும் பொழுதுகளில் அவதானித்து இருக்கின்றேன். அவர்கள் அவர்களது பாரம்பரிய உடைகளை அணிந்தே அந்த மரியாதையினை வழங்குவார்கள். ஆனால் ஏனோ தானோ என நின்ற மாதிரியே அந்த மரியாதையை கொடுக்கத் தெரியாதவர்களையும், அந்தக் குடும்பத்துக்கு அதனால் ஆறுதல் வழங்க முடியாதவர்களையும்தான் எமது கிராமங்களில் அநேகம்பேரிடம் காணுகின்றோம் இன்று.
இவற்றையெல்லாம் மாற்ற முடியாவிட்டாலும், நாம் ஒரு எடுத்துக்காட்டாகவாவது இருப்போம் என அவற்றை அணியும் போது, பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறேன்.ஆனால் அவர்கள் இன்று என்னைப் பார்த்து வெட்கப்படுகின்றமையை அவதானிக்கிறேன். தயவு செய்து எமது பாரம்பரியத்தை புறந்தள்ளுவதும், எமது தாயை புறந்தள்ளுவதும் ஒன்றுதான் என்பதை நினைவில் வையுங்கள். எனவே குறைந்தது, விஷேட நிகழ்வுகள், விஷேட நாட்கள் ஆகியவற்றிலாவது எமது பாரம்பரிய உடைகளை அணிய எமது பிள்ளைகளை ஊக்குவிப்போம் நாமும் மாறுவோம். அதனால் பெருமைகொள்வோம்.
இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலகுவாகவும் அழகாகவும் உடுத்துக்கொள்ள என, விதவிதமான, விலை குறைந்த வேஷ்டிகள் வருகின்றன. ஆக மேற்கத்தய கலாசாரத்தில் ஈர்க்கப்பட்டவர்கள் வேண்டுமானால் வேஷ்டியை மறந்திருக்கலாம் நாங்க மறக்கவில்லை. காலவோட்டத்தின் மாற்றத்தில் காணாமல் போவதும், நிலைமாறுவதும் அவரவர் அடையாளங்கள்தான் அந்த அடையாளங்கள் நம்கையை விட்டுப்போகாமல் கட்டிக்காப்பது நமது கையில்தான் உள்ளது.







0 comments:
Post a Comment