ADS 468x60

17 January 2020

எமது நாட்டில் தொழிலதிபர்களாகும் பெண்கள் எதிர்நோக்கும் இடர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் முடிவுற்றதன் பின் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், குடும்பச்சுமையை இறக்கி வைக்கவும், சகோதர சகோதரிகளை கல்வி கற்பிப்பதற்கும், நாளாந்த பசியைப் போக்கிக்கொள்ளவும் அத்துடன் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகவே பெண்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைக்கு செல்கின்றனர். அது மாத்திரமல்ல வீட்டில் இருந்தவாறே வேதனமில்லாது வேலை செய்வதில் 20.4% விகிதமானவர்கள் பெண்களாகவும் வெறும் 3% விகிதமானவர்களே ஆண்கள் எனவும் தரவு கூறுகின்றது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாத்திரம் கிட்டத்தட்ட 45% விகிதம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மை மூலம் பங்களிப்புக் கிடைக்க, நம் நாட்டைப் பொருத்தவரை, சிறுதொழில் முனைவோர்களில், சுமார் 25% சதவீதத்தினர் மட்டும்தான் பெண்கள்.  தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு தகுதியானவர்கள் ஆண்கள்தான் என்ற முன்முடிவே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆனால் அண்டைய நாடான இந்தியாவில் இது வெறும் 7% விகிதமாக இருப்பது எமது மக்களிடையே அதிகரித்து வருகின்ற மனமாற்றத்தினைக் காட்டுகின்றது. 

ஆக அரைவாசிக்கும் அதிகமான இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் இருப்பினும் தொழில் வழங்கும் முதலாளி வர்க்கத்துள் வெறும் 0.9 விகிதமானவர்களே இருப்பது கவலைக்குரியது என புள்ளிவிபரவியல் திணைக்களம் 2011 இல் சுட்டிக்காட்டியுள்ளது கவனத்தில் எடுக்க வேண்டியதொன்றே.

எமது நாட்டைப் பொறுத்தளவில் இங்கு பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியமானதாகும். அவர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு என சொல்லப்படுகின்றனர். ஏனெனில் நாட்டுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும், ஆடைக்கைத் தொழில், வெளிநாட்டு அன்நியச் செலாவணி ஈட்டம் மற்றும் மலையக ஏற்றுமதித் தொழில் துறை ஆகியவற்றில் பெண்களே முதன்மையானவர்கள். ஆனால் இவை அனைத்தும் இன்னொருவரிடம் தொழில் புரியும் பணியாள் வேலை மாத்திரமே. இங்கு மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் 37% விகிதமானவர்களே மொத்த 8.5 மில்லியன் தொழில் புரிவோரில் தங்களது பங்களிப்பினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில், தொழில் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. ஐ.ஐ.டி. மாணவர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு முடிவுகளின்படி, அமெரிக்கா, கனடாவில், சிறுதொழில் அதிபர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் ஆவர். அதுபோல் வளர்சியடைந்த நடுகளில் ஒன்றான பிரிட்டனில், கடந்த இருபது வருடங்களில் பெண் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 

எமது நாட்டில் இப்பொழுது சிறிதளவாவது படிப்பு, வேலை, சம்பளம் ஆகியவற்றைக் கடந்து, தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி, தங்களுக்குத் தாங்களே முதலாளியாக பரிணமிக்க வேண்டும் என்ற ஆசை பெண்களிடையே வளர்ந்து வருகிறது. இப்பொழுது தொழில்களைத் துவங்குவதில், ஆண்களைவிட, பெண்கள் இருமடங்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

மேல்நாடுகளை ஒப்பிடும்போது, இலங்கைப் பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. ஆகவே இந்தப் பெண்களின் சாதனை, முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு ஓர் உந்துதல் ஆகும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் திறன், தொலைநோக்குப் பார்வை ஆகிய காரணிகள்தான், இலக்கை அடைவதற்கான வழிகள் என்பது இவர்களின் வெற்றி போதித்த பாடமாகும்.

ஒரு புதுவிதமான முடிவு நம்மத்தியில் உண்டு அது தொழில் முனைவோர்களுக்கான பயிற்சிகளைப் பெறும் பெண்களில் பெரும்பாலானோர், தொழில் துவங்கும் எண்ணமே இல்லாதவர்கள் என்பது ஆய்வின் மூலம் அறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதற்குப் பதிலாக, சுற்றமும், சூழலும், அவர்களை கேலி செய்து முடக்கி விடுகின்றன.

குறிப்பாக வடகிழக்கு தமிழ் மக்களிடையே தொழில் துவங்குவதற்கான மூலதனத்தைப் பெற, பெண்கள் பெரும் சோதனைகளைச் சந்திக்கின்றனர். கணவன் தொழில் துவங்க தன் நகைகளை பெண்கள் கழற்றிக் கொடுக்கின்றனர். ஆனால், பெண்கள் தொழில் துவங்க உதவும் பொருட்டு, குடும்ப சொத்துகளைப் பயன்படுத்த பெரும்பாலான ஆண்கள் சம்மதிப்பதில்லை.

இங்கு பெண்கள் தொழில் துவங்குவதற்கான கடன் வசதிகளை வழங்குவதில் வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன. கடன் வசதி பெறுவதற்கு, கணவனின் எழுத்துப்பூர்வ சம்மதமும், உத்தரவாதம் கையெழுத்தும் கோரப்படுகின்றன. ஆனால், இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர். நீண்ட காலமாக நம் சமூகத்தில் பெண்கள் குடும்ப பராமரிப்பாளர்களாக மட்டுமே கருதப்படுகின்றனர்.

தொழில் துவங்கத் தேவையான தன்னம்பிக்கை வளர, கல்வி அவசியம் தேவை. கல்வி கற்பதில், வடகிழக்கில உள்ள பெண்களுக்கு இன்றளவும், பல சமூக மற்றும் பொருளாதாரத் தடைகள் நிலவி வருகின்றன. பல சமுதாயங்களில், பெண் உயர் கல்வி என்பது வெறுப்புடன் பார்க்கப்படுகிறது. இம்மாதிரி சமூக சூழ்நிலைகள், தொழில் துவங்க கனவு காணும் பெண்களின் எண்ணங்களை கருவிலேயே அழித்திவிடுகின்றன. 

பெண்களை தொழிலில் நாட்டம் காட்டத் தேவையானவை?

பெண்களால் நிர்வகிக்கப்படும் பல தொழில்கள், பகுதி நேரமாகவும், பொழுதுபோக்கிற்காகவும் துவங்கப்படுகின்றன. அதனால், அவற்றில் பெரிய அளவில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. வரவு, செலவுகளைத் திட்டமிடுதல், சேமிப்பு ஆற்றல், பொறுமை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, எதிர்நோக்குத் திறன் போன்றவை பெண்களிடையே இயற்கையாக அமைந்த குணநலன்கள். இவை தொழில் வெற்றிக்குப் பெரிதும் உதவும். இவற்றுடன் கல்வியும் சேர்ந்தால் அந்த திறன்கள் முழுமை பெறும்.

சுய தொழில் செய்யும் பெண்களில் பெரும் பகுதியினர், தொழில் மற்றும் குடும்ப நிர்வாகத்திற்கு தனித் தனி நேரத்தை தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கி செயல்பட முடிவதாக கருத்து தெரிவிக்கின்றனர். பல சமூக மற்றும் பொருளாதாரத் தடைகளை உடைத்துதான், பெரும்பாலான எமது பெண்கள் தொழில் துவங்குகின்றனர். தொழில் துவங்குவதற்கான கனவுகள் பலரிடையே விரிந்திருந்தாலும், தடைகளைத் தகர்த்து வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

பெண் கல்வி, தொழில் ஈடுபாடு பற்றிய சமூக பார்வையில் தற்போது மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பெண்கள் இந்த மன மாற்றங்களைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டால், சில வருடங்களுக்குள் பெண்களில், தொழில் முனைவோரின் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது எமது கருத்து. எதிர்கொள்ளப்போகும் இடர்ப்பாடுகளை கணித்து பெண்கள் செயல்படுவதால், அவர்கள் சந்திக்கும் தோல்விகளின் அளவு குறைவாகவே இருக்கிறது. இந்த காரணத்தினால், பெண்களால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் வாராக்கடன்களின் அளவு குறைவாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இலகு கடன் திட்டங்களை பெண் முயற்சியாளர்களுக்கு என பிரத்தியேகமாக உருவாக்க வேண்டும். அத்துடன் தற்பொழுது நடைமுறையில் உள்ள தொழிற் கடன்களை மக்களிiயே பிரபல்யப்படுத்தி இவர்கள் பயன்படுத்தும் வண்ணம் அவற்றை ஒழுங்கு செய்தளிக்க வேண்டும்.

பெண்கள் வீட்டிலும் வேலைத்தளத்திலும் ஒரு சமநிலையைப் பேணுவதிலும், சமுகத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும், தனது வீட்டுக்காரரை முகாமை செய்வதிலும் பெண்ணானவள் இலகுவில் துவண்டு போகின்றாள. அதனால்; முக்கியமாக இவர்களுக்கு எந்த நேரத்திலும் ஊக்குவிப்பு தேவையாக இருக்கின்றது.

ஆகவே பெண்கள் இந்த சிறு மற்றும் நடுத்தர தொழிற் முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் ஒரு குடும்பத்தின் வருமான மட்டம் அதிகரித்து, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மேம்பட்டு வறுமை நீங்குகின்றது. இது நாட்டின் கிராமியப் பொருளாதார வளர்சிக்கு கால்கோலாக அமைந்து விடுகின்றது. 

உஷாத்துணை நூல்கள்

0 comments:

Post a Comment