ADS 468x60

04 February 2021

நாம் அனைவரும் சுதந்திரம் பெற்றுவிட்டோமா?

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க நினைப்பது சுதந்திரமென்றால் என்ன? உண்மையில் நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா? நாம் சுதந்திரமாகத்தான் இந்த நாட்டில் இருக்கின்றோமா? இதை அனைவராலும் உணர முடிகிறதா? பெப்ரவரி 4-ல் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றதாக கொண்டாடுகிறோம். ஆங்கிலேயன் வந்த பிறகுதான் நாம் அடிமையானோமா? அதற்கு முன் நாம் அனைவரும் முழு சுதந்திரமாக, அதுவும் இலங்கையர்கள்  என்ற வகையில் ஒற்றுமையாக வாழ்ந்தோமா? ஆங்கிலேயன் வருவதற்கு முன்பு ஆட்சி செய்த பல்வேறு மன்னர்களும்; சூழ்ச்சியில் சிக்கி சுயத்தையிழந்து ஆட்சி செய்ததின் விளைவு, நாட்டில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அடிமைகளாகவே வாழ்ந்தனர் கையில் விலங்கிட்டு சிறையில் அல்ல. சிந்தனைக்கு விலங்கிட்டதால் நாட்டிலும், வீட்டிலும்.

ஆகவே இன்று நாம் சுதந்திர இலங்கையில் வாழ்கிறோம் என பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சுதந்திரத்தின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடைந்து விட்டதா, என்ற கேள்விக்கு நம்மிடம் பதிலிருக்கின்றதா? இன்னும் கொள்ளையர்களுக்கும், பாதாள உலகக் கோஷ்டிக்கும் நாம் பயந்து வாழ்கின்றோம், லஞ்ச ஊழல் இல்லாமல் செய்வோம் என வருவோர்களால் அதை இல்லாமல் செய்ய முடிகின்றதா? அதுக்கு மேல் பணபலம், அதிகாரம் இருப்பவர்களுக்கு தான் சமுதாயத்தில் அங்கீகாரம், மரியாதை கிடைக்கிறது. சாதாரண மக்களுக்கு சுதந்திரத்தினால் என்ன பலன் ஏற்பட்டுள்ளது? 

உலகின் ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்கிறோம். இன்னும் நாட்டில் 'ஒரு பக்கத்தில்' வறுமை ஒழிந்த பாடில்லை, அழுகை மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் ஆர்பாட்டங்கள் ஒழிந்தபாடில்லை, வேலைக்கு ஏற்ப கூலி வழங்காமல் இன்னுமொரு சமுகம் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றோம், மதசார்பற்ற நாடு என்கிறோம் ஆனால் மதத்தின் பெயரினால் வேற்று இனமக்கக்களின் வாழிடங்களில் வலுக்கட்டாயமாக மதஸ்த்தலங்களை நிறுவுதல், இங்கு இன, மத மற்றும் குல பலத்தினை வைத்து அரசியல் செய்யதல் போன்றவை இன்னும் மக்களால் விமர்சிக்கப்படுகின்றன.

ஆகவேதான் இவை போன்ற சமூக பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். சுகாதாரத் துறையை பொறுத்தளவில் நாம் இன்னும் பின்தங்கியே உள்ளோம். மருந்து தயாரிப்பில் இன்னும் மற்ற நாடுகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. எரிபொருளை வேறு நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். இதற்கும் மாற்றுவழிகளை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இலங்கையின்  வர்த்தகத்துக்கும் மற்றும் உற்பத்திக்கும் தேவையான பொருட்களையும் சேவைகளையும் இன்னும் இறக்குமதி செய்வதில் தங்கியிருக்கவேண்டியுள்ளது. நமக்கு தேவையான பொருட்களை நாமே தயாரிக்கும் போது தான் நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் அதுவே எமது மக்களுக்கு கிடைத்த சுதந்திரமாகவும் இருக்கும்.

இன்னும் சிலர், சுதந்திரத்தை தவறாக புரிந்து கொள்கின்றனர். குப்பையை தெருவில் வேண்டியவாறு வீசி அசுத்தம் செய்வது, இயற்கை வளங்களை சட்டத்தை மீறி விருப்பத்துக்குப் பயன்படுத்துவது, பொது இடங்களில் துப்புவது, ஆலயங்களைப் பயன்படுத்தி அதிகாரம் செய்வது, அங்கு உரத்த ஓசையில் ஒலிபெருக்குவது என அதீத 'சுதந்திரமாக' செயல்பட்டு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறோம். இஷ்டத்திற்கு மரங்களை வெட்டி இயற்கை வளத்தை கெடுக்கிறோம். இவைகள் தவறான புரிதல்கள்.

ஆகவே எல்லோருக்கும் இருக்கும் பொதுவான கேள்வி நாடு சுதந்திரமடைந்த நாள் முதல் இன்றுவரை நம்மை ஆளும் ஆட்சியாளர்களால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களா? உண்மையில் நாம் சுதந்திரமடைந்திருந்தால் நமது சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விட்டிருக்கவேண்டும். ஆனால் இன்றுவரை ஒவ்வொரு நாளும் நாட்டில் குறிப்பிட்ட மக்கள் தங்களின் உரிமைக்காக, அன்றாட தேவைக்காக அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கின்றார்கள் இதுவா சுதந்திரம்?. 

எது எப்படியோ மக்களை இவற்றையெல்லாம் சொல்லிச் சொல்லி அரசியல் செய்து அந்த அரசியல்வாதிகளும் அவர்களது அடிவருடிகளும் சிறப்பாக வாழ்ந்துவிட்டு போவதனால் இந்த ஏக்கத்துடன் வாழும் மக்களுக்கு அந்த சுதந்திரத்தினைப் பெற்றுக்கொடுக்க முடியாது. இதைச் சொல்லிச் சொல்லி காலத்தைக் கடத்தியதினால் மக்களது வாழ்க்கை இன்னும் இன்னும் கடன்காரர்களாகவும், இன்னொரு வர்க்கத்துக்கு கடமைபுரியும் அடிமைகளாகவும் மாறிவிட்டது மாத்திரமே மிச்சம். அவர்களை பலம் மிக்கவர்களாக மாற்ற அவர்களது பொருளாதாரத்தினையும் கல்வியினையும் பெருக்க திட்டங்களை வகுக்க அல்லும் பகலும் பாடுபடவேண்டும். அதனால் வரும் நிறைவும் வளர்சியும் சுதந்திரத்தின் ஒரு அங்கமாகப் பார்க்கப்படும். ஆகவே நாம் எமது அரசியற் தெரிவுகளில் எப்போதாவது திருப்தியடைந்ததுண்டா? இந்த திருப்தி நிலை எப்போது நிறைவேறுமோ அன்றே பாதி சுதந்திரம் பெற்றதற்கு சமமாகிவிடும். 

அதுபோல் இனங்களுக்கிடையிலான சமத்துவம், வளமான எதிர்காலம், பயங்கரவாதத்தினை தோற்கடித்தல் ஆகியவை மிக முக்கியமான குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். அத்துடன் இந்த நாளை கிடைக்கப் பெற தியாகங்கள் செய்த அனைத்து இலங்கையர்களையும் இந்த நாளில் நினைவு கூறுகின்றேன். நிறைவான சுதந்திரம் கிடைக்க அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.நிறைவான சுதந்திரம் கிடைக்க அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

0 comments:

Post a Comment