ADS 468x60

13 August 2021

நாங்கள் மீண்டும் மீண்டு திரும்ப முடியாத நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்,

அரசாங்கம் கடைசி முயற்சியாக மட்டுமே நாட்டில் முடக்குதலை விதிப்பதாக கூறியது. அதன் பொருள் என்னவென்றால், நாடு இதுவரை முடியாத இறுதி நிலைக்கு வரவில்லை என்பதுதானே. இருப்பினும், கோவிட் தொடர்பான இறப்புகள் இப்போது தினசரி சராசரியாக 150 ஐத் தாண்டிவிட்டன, மேலும் குறிப்பாக டெல்டா வைரஸ் திரிபுகளின் எண்ணிக்கைப் பதிவு மோசமாக இருக்கின்றது மறுபுறும். 

அரசாங்கத்தின் நம்பிக்கை மற்றும் சில நிபுணர்களின் ஆலோசனை என்னவெனில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சிறந்த வழி பொதுமக்களுக்கான தடுப்பூசியினை துரிதப்படுத்துவதாகும். இது நாட்டினை முடக்குவதற்கான எந்த தேவையினையும் ஏற்படுத்தாது என கருத்திடுகின்றனர், அதனால் அதனை துரிதப்படுத்தி வருகின்றனர் அது வரவேற்கத்தக்கதுதான்.

இருப்பினும் எமது நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட நபர்கள் கூட வைரஸ் பரவலுக்கு ஆளாகி இருப்பதுடன் இறந்தும் உள்ளனர் என்பதனை இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் அவர்களிடம் எந்த அறிகுறிகளையும் காணாதுவிடினும்;, அவர்கள் இன்னும் சமூகத்தின் மிகவும் நலிவுற்ற பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

ஆகவே இந்த அடையாளம் காணப்படாத தொற்றுள்ள பலரும் சமுகத்தில் உள்ளனர், இவர்களுக்கும் இப்போது மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படுகிறது, ஆனால் துரதிஸ்டவசமாக நாட்டின் சுகாதார பாதுகாப்பினையும் உடைக்கும் புள்ளியின் விளிம்பில் நாடு இன்றுள்ளது. கோவிட் நோயாளிகள் அதிகரிக்க அதன் விளைவாக ஏனைய நோயாளிகளை பராமரிப்பதற்கான வளங்களைக் குறைக்கவேண்டியுள்ளமை யதார்த்தமானதே. இவற்றையெல்லாம் நாம் கருத்தில்கொண்டால் கொவிட் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் இறப்போரின் எண்ணிக்கையினை தற்போதுள்ளதனைவிட அதிகரித்தே கணக்கிடவேண்டும்.. 

ஆகவே இதற்கான தற்காலிக தீர்வு, நாட்டை சில கிழைமைகளுக்காவது முடக்கிவிடுவதே என பல புத்திஜீவிகள் எடுத்துக்கூறிவருகின்றனர். இந்த நடவடிக்கைதான் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவினை ஏற்படுத்தி, மருத்துவமனைகளில் தங்கி இருப்போருக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதுடன், ஏனைய தொற்றா நோயாளர்களையும் பராமரித்து சிpச்சையளிக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படும்.

ஆனால் அரசு நாட்டை முடக்காமலே தொற்றுப்பரவலை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடலாம் என திடமாக நம்புவது வேறெந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறையாகவே எண்ணத் தோன்றுகின்றது. இருப்பினும் உலகில் பல நாடுகள் பரீட்சித்த உண்மை நாட்டை முடக்குவதனூடாகவே வெற்றிகண்டதென்பதே. 

கடந்த ஆண்டு தொற்றின் ஆரம்ப நிலையிலேயே நாட்டினை முற்றாக மூடுதலில் இருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, இப்போது வேறுமாதிரியான மாகாணங்களுக்கிடையேயான பயணத்தடையினை உத்தியாகக் கையாளுவதற்கான காரணமாக இருக்கலாம் ஒப்பீட்டளவில்;, தற்போது நிலைமை பல மடங்கு ஆபத்தானதாக இருப்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் அதிகரித்துவரும் கடுமையான உயிர்ச்சேதம் ஏற்கத்தக்கதா என்று அவர்கள் தங்களைக் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் இனிமேலும் நேரத்தை வீணாக்க முடியாது, பல வாரங்களாக மருத்துவ வல்லுநர்கள், முன்னணியில் உள்ளவர்கள், தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

எல்லைகளை மீண்டும் திறப்பது, அதன்பின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் நாட்டில் சுற்றுலாவின் மறுமலர்ச்சி பற்றிய பேச்சு, சந்தேகத்திற்கு இடமின்றி சமுக மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமானதாக இருந்தாலும், இவையெல்லாம் இன்றய காலத்தின் அவசிய தேவை இல்லை. இன்று நாங்கள் மீண்டும் மீண்டு திரும்ப முடியாத நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம், எங்கள் பிராந்திய அண்டை நாடுகளும் இதேபோன்ற சங்கடத்தை அனுபவிப்பதை நாங்கள் கண்டோம், அரசாங்கம் இவற்றை தொடர்ந்து இழுத்தடிக்க முடியாது. நடவடிக்கைக்கான நேரம் இப்போது வந்துவிட்டது, அதனை கருத்தில்கொள்ள வேண்டும் என்பதே எமது அபிப்பிராயம்.

S.Thanigaseelan (S.T.Seelan)


0 comments:

Post a Comment