ADS 468x60

05 September 2021

யார் பொறுப்பு? விவசாயி – நுகர்வோர் - அதிகாரிகள்.

இன்று நாடு முடக்கப்பட்டிருக்கின்றது, வர்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இருப்பினும் சாதாரண மக்கள் இவற்றினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசாங்கம் பலவகையிலும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றது. 

உண்மையில் என்ன நடக்கின்றது? விவசாயிகள் எந்தவித தடையுமின்றி விவசாயத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவசாய உற்பத்திகளை தங்குதடையின்றி கொண்டுசெல்லவும் அவற்றைச் சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அந்த பொருட்கள் இலங்கையில் இயக்கத்தில் உள்ள நுவரெலியா, தம்புள்ள, கபெட்டிபொலாவ போன்ற ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களில் மொத்த விற்பனைக்கு தருவிக்கப்படுகின்றது. அவை இங்கிருந்து மக்களுக்கு இந்த முடக்ககாலத்திலும் வாகனங்களில் வீதி வீதியாகச் சென்று விநியோகிக்க அரசு வழிவகை செய்துள்ளது.

இலங்கையில் பொதுவாக, மீன் இல்லாமல் உணவை உண்டுகொள்ளலாம், ஆனால் மரக்கறி இன்றி எந்தப்பொருட்களையும் நுகர முடியாத அளவுக்கு எமது நாட்டு மக்களின் உணவுப் பழக்கவழக்கம் இருக்கின்றது. 

இருப்பினும் ஊரடங்குச் சட்டம், உரவகைகளின் நிறுத்தம், உள்ளீடுகளின் விலை அதிகரிப்பு என்பன உற்பத்தியாகும் விளைச்சலை உரியவிலைக்கு விற்கமுடியாமல்; இலாபமீட்டமுடியாமல் இருப்பதை பல விவசாயிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர். மறுபுறம் நுகர்வோரின்; எண்ணிக்கை நாட்டில் நாளாந்தம் அதிகரித்து வருகின்றதே தவிர குறைவதில்லை. அதேசமயம் மறுபுறத்தில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் தொகை குறைந்துகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் செய்திகள் என்னவெனில், அது விவசாயிகள் குறைகூறுகின்றார்கள் நாம் மாதக்கணக்கில் பெற்ற கடின உழைப்பை, அவர்களது விளைச்சலை ஒருசில நாட்களிலேயே குறைந்த விலைக்கு ( உம்: தக்காளி 100 ரூபா) பெற்றுச் செல்லுகின்றனர். மறுபுறும் பொதுமக்கள் (நுகர்வோர்) கூறுகின்றார்கள் (உம்: 250 கிராம் தக்காளி 100 ரூபா) 'அவற்றை அதிக விலைக்கு வாங்கி எத்தனை பேரின் பசியைப் போக்குவது?' என்று.

தகைசார் அதிகாரிகள் கூறுகிறார்கள், அனைத்து மக்களுக்கும் போதியளவு பொருட்கள் வழமைபோல் விவசாயிகளிடமிருந்து கிடைத்து வருகின்றது. அதுபோக, விளைச்சல் குறைவாக உள்ள மரக்கறிவகைகள் ஏனைய நாடுகளிலிருந்த இறக்குமதி செய்யப்படுகின்றன (உம்: இந்திய மற்றும் பாகிஸ்தான் வெங்காயம், உருளைக்கிழங்கு). ஆகவே பிரச்சினை என்னவெனில், இந்த காலகட்டத்தினை பல இடைத்தரகர்கள் தமது உழைப்பை பன்மடங்காக்க மக்களிடம் பொய்கூறி பொருட்களை கூடியவிலைக்கு விற்றுவருகின்றனர்.  

இன்று சாதாரண மக்கள் அவர்களது வீடுகளில் அடங்கியுள்ளனர். வெளியே சென்று வேலை செய்ய முடியவில்லை, அதனால் வருமானம் இழந்து வயிற்றை நிரப்ப முடியாமல் பரிதவிக்கின்றனர். இந்த நிலையில் விளைச்சல் குறையவில்லை, விவசாயம் தடைப்படவில்லை மற்றும் இறக்குமதிகளும் இடம்பெறுகின்றன. மறுபுறத்தில் வழமையாக கொள்வனவு செய்கின்ற நுகர்வோரின் அளவு இந்த முடக்கநிலைகாரணமாக குறைந்துள்ள நிலையில் ஏன் இந்த விலையேற்றம் நிகழ வேண்டும்?. என்பது அனைவரதும் கேள்வி.

இதற்கு யார் பொறுப்பு? நுக்வோரா!. அப்படியெனில், நுகர்வோர் வியாபாரம் செய்ய வருகின்றவர்களிடம் விலைப்பட்டியலை அறிந்து அவர்களிடம் ஏன் விலையினை கூட்டியுள்ளீர்கள் என கேள்வி கேட்க வேண்டுமே தவிர, அரசாங்கம்தான் காரணமென குறைகூறக்கூடாது என்கின்றனர். இது முடக்ககாலம் எங்கும் செல்ல முடியாது. அதனால் இவர் இல்லாவிடின் இன்னொரு விற்பனையாளரிடம் செல்ல முடியாத நிலை. ஆகவே கிடைப்பதை வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற மனநிலை நுகர்வோர்களுடையது. ஆதனால் நுகர்வோரை எப்படித்தான் குறைகூறுவது.

மறுபுறத்தில் அதிகாரிகளா பொறுப்பு? என்றால், ஆம் நுகர்வோர் அதிகார சபை ஊழியர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகள், இவர்களை கண்காணிக்க அரசு முறையாகப் பணிக்கவில்லை. அப்படி இவர்கள் பணியைச் சரிவரச் செய்தால் நாம் ஏன் இதில் கருசனைகொள்ளவேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றனர். இந்த அதிகாரிகள் விடுகின்ற பிழைகள் காரணமாகவே பதுக்கல்கள் மற்றும் மாபியாக்கள் இடம்பெற்றுவருகின்றன எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆகவே அதிகாரிகளின் பொறுப்பு இதில் அதிகப்படுத்த வேண்டும். 

இந்த நிலையில், விவசாயிகள் விவசாயத்தினை செவ்வனே செய்து மக்களுக்காக உணவு உற்ப்பத்தியினை தொய்வில்லாமல் பார்த்துக்கொள்ளுகின்றார்கள். மறுபுறத்தில் இத்தனை நாட்கள் முடக்கியும் பல உபாதைகளுக்கும் உழைச்சலுக்கும் மத்தியில் மக்கள் வீதியில் இறங்கி யாரையும் குற்றம் சுமத்தாமல் அவர்கள் தமது பாதுகபப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு, அரசாங்கத்துக்கு ஆதரவுகொடுப்பதில் மிக கரிசனை எடுத்துக்கொள்ளுகின்றனர். 

அவக்கோடா என்ற ஆய்வு நிறுவனத்தின் தகவலுக்கு இணங்க அரசாங்கத்தின் அந்நியச் செலாவணியினை மிகுதப்படுத்த குறித்த அத்தியாவசியப் பொருட்கள் மீதான இறக்குமதித்தடை மற்றும் அதிகரித்த வரி ஆகியன பல அத்தியாவசியப் பொருட்களின் விலையில் அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாட்டினையும் ஏற்படுத்தியுள்ளது. , ஒரு உதாரணத்தினை பார்க்கலாம். இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்கு முன்னர் மஞ்சள் ஒரு கிலோவின் விலை 350 ஆக இருந்தது. ஆனால் தடைக்குப் பின்னர் அது இப்போது சந்தையில் 3500 ரூபாவுக்கும் மேல் 6900 ரூபாவரை விற்க்கப்படுகின்றது.  அதுபோல்தான் ஏனைய இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.

இதேபோல துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற பல பொருட்கள் பல காலத்து கவனிப்பாரன்றி களஞ்சியசாலையில் இருப்பதாகவும், அது மிக நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தைக்கு எடுத்துவரப்படுகின்றபொழுது, உள்ழூர் உற்பத்திகளின் விலையினைக் குறைக்கவேண்டி இருப்பதாகவும், சில நேரங்களில் அந்தந்தப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் விசனம் கொள்ளுகின்றனர் சில அதிகாரிகள். 

இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்கின்றபொழுது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நல்ல விலையினையும், ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் நல்ல பொருட்களையும் பெற்றுக்கொடுப்பதனை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு மக்களுடையதல்ல. மக்கள் தெரிவுசெய்த அரசாங்கம் மற்றும் அங்கு அங்கம் வகிக்கும் துறைசார் அதிகாரிகளினுடையதே என்பதே என்னுடைய கருத்தாகும். மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதங்கமாக இருப்பது வெள்ளிடை மலை.

S.Thanigaseelan

0 comments:

Post a Comment