ADS 468x60

30 September 2021

நமது இளைஞர்கள் ஏன் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்?

அரசியல் பற்றிய புரிதல்

ஓ! இளைஞர்களே கனவு காணுங்கள் அது தூக்கத்தில் காணும் கனவு அல்ல நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும் என்றார் அப்துல் கலாம்.

இலங்கையில் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. உரிமைப் போராட்டம் ஆகட்டும், போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், அரசின் வேலையில்லாக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்... பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.

ஆக, ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களில் நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் மாணவர்களும், இளைஞர்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது, அரசை கண்காணிப்பது, தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவது, தேவைப்படும்போது கிளர்ந்தெழுவது, ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு அழகு.

எனவேதான் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் அரசியல் மாற்றம் வரும். 'அரசியல் என்பது சாக்கடை, அரசியலுக்கு போனா பொய் சொல்லனும், ஏமாத்தி பிழைக்கனும்' என்று சிறிய வயதிலிருந்தே அரசியல் குறித்தான எதிர்மறை எண்ணம் இளைஞர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களைப் பார்த்து, அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள். மேலும், அரசியலுக்கு வந்தால் தங்களது தரம் தாழ்ந்து விடுமோ என எண்ணுகிறார்கள். ஆனால், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் நம்முடைய வாழ்வின் ஓர் அங்கம். எனவே, நேர்மறையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல இளைஞர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.

ஆகையால், ஒரு நாடு இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்த முன்வரவில்லை என்றால் அந்த நாடு வளரவும் முடியாது, வளர்ந்த நாடுகளின் வரிசையில் இணையவும் வாய்ப்பில்லை. அதனால் நீ நிலையை மாற்றிக்கொள்ள, மனிதன் தன்னை எவ்வாறு ஆள்கிறான் என்பது பற்றி அறிந்துகொள்ள நிச்சயம் அரசியல் தெரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் வேண்டும் இது இன்று தேவையானதும், அதீத முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட.

அரசியலில் தெரிந்துகொள்வதற்கு நிறையவே இருக்கின்றது. இலகுவாக சொல்லவேண்டுமானால், தங்களுக்குள் சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கி தன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு கூட்டாகச் சேர்ந்து பெரிய அமைப்புகளை ஏற்படுத்தி, மக்களின் நல் வாழ்க்கைக்கான பாதையை உருவாக்கி தருவதே அரசியல். அதனுள் வரும் கட்சிகள் என்பவை நல் வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கும் அமைப்புக்களேயாகும். 

ஆரசியல் பற்றி எமது இளைஞர்களின் பார்வை

இந்தப்பின்னணியில், கடந்த காலங்களில் அரசியல் ஒரு சாக்கடை என கருதிய இளைஞர்களும், பொதுமக்களும் ஒதுங்கி நின்றனர். இதற்கு அவர்களின் பொருளாதார சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை, அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கு போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தது. ஆனால் தற்போது அதையும் மீறி அரசியலில் விழிப்புணர்வுடன் இளைஞர்களின் வருகை என்பது இன்று சற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மாணவர்களும், இளைஞர்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது, அரசை கண்காணிப்பது, தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவது, அரசின் தவறான திட்டங்கள், கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளுக்காக இளைஞர்களும் மாணவர்களும் கொதித்தெழுந்த நிகழ்வுகள் என அனைத்தையும் பொதுமக்களாகிய நாம் அறிவோம். அந்த வகையில் தற்போது இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆனால் அது அதிகரிக்க வேண்டும்.

தட்டிக்கழிப்பு

பெரும்பாலும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிப்பதில்லை. கட்சி பதவி, தேர்தலில் போட்டியிட சீட் போன்றவை, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், பணம் படைத்தவருக்கும், குறுக்கு வழியில் பணம் வழங்குபவர்களுக்கும் மற்றும் தெரிந்தவர்களுக்கும் வாரிசுகளுக்குமே ஒதுக்குகிறார்கள். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. இதனால் அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாமல் ஒதுங்கி விடுகின்றனர். அது மக்களுக்கு உதவாத அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

ஆரசியலில் ஈடுபட தடையாக இருக்கும் குடும்பங்கள்

இன்றய எமது தமிழ் இளைஞர்களை அதிக அளவில் அரசியலுக்கு வரவிடாமல் தடுப்பது குடும்பச் சூழலே. சூழலைக் கடக்க, படித்து வேலைக்குச் சென்று சம்பாதித்து, குடும்பத்தை முன்னேற்றுவது என்ற எண்ணமே இளைஞர்களுக்கு உள்ளது.. சில இளைஞர்கள் நம்மை நம்பி நம் குடும்பத்தினர்களே வாக்களிக்க மாட்டார்கள் என்றெண்ணுகின்றனர். இதுவே பெரும் தடையாக இருக்கிறது.

நம்மத்தியில், 'என் பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் எந்த மாணவர் அமைப்பிலும் இல்லை... அவனுக்கு அல்லது அவளுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை... படிப்புண்டு, அவன் வேலை உண்டு என்று இருக்கிறான்' என்று பல பெற்றோர்கள் பெருமையாக சொல்லக் கேட்டு இருக்கிறேன்.  இது உண்மையில் பெருமைக்குரிய வியமா..? கிடையாது.

ஆம், இன்றைய இளைஞர்களிடம் அரசியல் குறித்து யாரும் பேசுவதில்லை. பாடசாலை, பல்கலைக்கழகங்களிலோ வீட்டிலோ அதற்கான சூழல் அமையவில்லை. அதனால் அரசியல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. 'என்னுடைய புள்ள நல்லா படிச்சு, நல்ல டாக்டரா வரனும், எஞ்சினியரா வரனும்' என்று ஆசைப்படும் பெற்றோர்கள், தங்களது பிள்ளை நல்ல அரசியல்வாதி ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. அதனையும் மீறி சில இளைஞர்கள் அரசியலுக்கு வரும் போது, குடும்பமும் பெற்றோரும் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்கள், அவர்களுக்கு உறுதுணையாகப் பக்கபலமாக இருப்பதில்லை. இவை அனைத்தையும் முறியடித்து வெகு சில இளைஞர்கள் மட்டுமே அரசியலில் கால் பதிக்கிறார்கள். இதிலும், பெண் பிள்ளைகள் நிலைமை மிகவும் மோசம். அவர்களெல்லாம் தாங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பதே இங்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது

அரசியல் பயம்

அடுத்து அரசியலில் உள்ள பயம் அதனால் தமது கருத்துக்களை வெளிப்படையாய் வெளிப்படுத்த அச்சப்படுகின்றனர். சிலர் அவ்வாறு தனது கருத்துகளை வெளிப்படுத்தினாலும் இளைஞர்கள் எவரும் முனைப்போடு அரசியலில் இறங்குவதில்லை. 

மேலும் இளைஞர்கள் பலர் மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். ஆனால், ஆள்பலமிக்க அரசியல்வாதிகளால் தங்கள் குடும்பத்துக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நிம்மதியின்மை ஏற்படுமோ என்று அஞ்சுகிறார்கள். என்னதான் இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆசைப்பட்டாலும் தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்க அவர்களின் பெற்றோர்கள் தயாராக இல்லை. 

வரையறுக்கப்பட்ட அரசியல்

தாம்; அரசியலை, நண்பர்களுடனும் வீட்டிலுள்ளவர்களுடன் பேசி, கருத்துகளைப் பரிமாறிக்கொண்டும், செய்தித்தாள் படிப்பதும், தொலைக்காட்சி மூலமாகவும் கட்சிகளின் கொள்கைகளையும் அவர்களின் செயல்களையும் அறிந்தும், அவரவரை வாக்கு அளிப்பதற்குத் தயார்ப்படுத்திக் கொள்வதோடு நிறத்திக்கொள்ளுகின்றார்கள். 

நமது இளைஞர்கள், அவர்களது சிறு வயதிலிருந்தே பொருளாதாரம் சார்ந்த வாழ்வு மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. படிப்பது நல்ல மார்க் வாங்க, அந்த மார்க்கை வைத்து பல்கலைக்கழகத்தில் படிக்க, அங்கு படிப்பது மார்க் வாங்க, அந்த மார்க் வேலைக்குப் போக வேலை, சம்பளம் வாங்க என வட்டமடிப்பதுதான் வாழ்க்கை என நினைக்கும் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது கடினமே. 

சமுகவிம்பம்

பாருங்கள் இளைஞர்களின் அரசியல் வரவேற்கப்படுகிறது என்னும் விம்பம் சமூகத்திலிருந்தாலும், அது வெறும் விம்பம்தான். ஆவர்கள் வாக்களிப்பது மட்டுமே அவர்களுக்கு இந்தச் சமூகமும் குடும்பமும் முழுமையாக வழங்கக்கூடிய அரசியல் சுதந்திரம். அதைத் திறம்படச் செய்வதற்கு சமூக ஊடகங்களைத்தான் நம்பியுள்ளனர் பலர்;. தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நடுவில் சீரான அரசியல் பார்வை உள்ளவர்களையும் சமூக ஊடகங்களில் காண முடியும். அவர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்வதும், வாதம் செய்வதும்தான் பல இளைஞர்களை அரசியல்படுத்துகிறது. எனவே பல இளைஞர்கள் அரசியலைத் திறம்படச் செய்யத் தேர்தலை நோக்கிக் காத்திருக்கின்றார்கள்.

அதுபோன்று அவர்களை வழிகாட்டக்கூடிய சிறந்த வழிகாட்டுதல்கள் கிடையாது. ஆதனால் பல இளைஞர்கள் வீணாகவே வழிதவறிப்போகின்றனர்.

ஆரசியல் தலைவர்களின் வழிநடத்தல்

எமது தமிழ் இளைஞர்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதில் பெரும் பங்கு, எமது பல கட்சிகளுக்கு உண்டு. இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சியில் உத்வேகம் பெற்று ஆட்சியை பிடித்த பெரிய கட்சிகள், மாணவர்கள் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் தமக்கு ஆபத்து என்று அஞ்சுவது தெளிவாக தெரிகிறது. அதனால், ஒவ்வொரு முறையும், அனைத்து தடைகளையும் மீறி, ஒரு பெரும் திரள் இளைஞர்கள் கூட்டம், சமூக காரணங்களுக்காக அணி திரளும் போது, அதை ஏதோ ஒரு வடிவில் ஒடுக்குகிறது, நசுக்குகிறது.

அரசியல் பேசுவது தீட்டு என்ற மனநிலையை, அவர்கள் வெற்றிகரமாக உணடாக்கி, ஒரு தலைமுறை இளைஞர்களையே டி-பொலிடிசைஸ் ((Depoliticise செய்துவிட்டார்கள்.

நமது அனைத்து கட்சிகளுக்கும், இளைஞர்கள் ஒரு வாக்கு வங்கி மட்டுமே. வாக்கை தாண்டி அவர்கள் எந்த அரசியல் தெளிவையும் பெற்றுவிடக்கூடாது என்பதில் கட்சி வேறுபாடுகள் தாண்டி மிக கவனமாக இருக்கிறார்கள்.

ஏன் இவர்கள் இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த அஞ்சுகிறார்கள்...? அவர்களுக்கு நன்கு தெரியும், இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், அனைத்தையும் கேள்வி கேட்பார்கள்  என்று.

முடிவுரை

எனவே, படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எந்த தேர்தல் கட்சியிலும் இணைந்து அவர்களுக்காக கொடி பிடிக்க வேண்டாம், ஆனால் குறைந்த பட்சம் அரசியல் தெளிவில் இருக்க வேண்டாமா...?  இங்கு நடக்கும் ஒவ்வொரு விடயங்களுக்கு பின்னாலும் ஒரு மெல்லிய அரசியல் இருக்கிறது. இங்கு யார் ஆட்சியில் இருந்தாலும், கொள்கைகளை வரையறுக்கும்போது, பொது சமூகத்தின் நலனைவிட, யாரோ ஒரு சிலரின் நலன் முதன்மையாகிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், வெறும் புத்தக புழுவாக மட்டும் இருந்து வளரும் பிள்ளைகள், இந்த நவீன சமூகம் ஏற்படுத்தி உள்ள சிக்கல்களை எப்படி புரிந்துகொள்வார்கள்...? எப்படி திடமாக அதிலிருந்து மீண்டு வருவார்கள்...?

ஆகவே நம் சமுதாயத்தில் இளைஞர்கள் இவற்றை நன்கு அறிந்துகொள்ளவேண்டும் அதில் அவர்களின் பங்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட இளைஞர்களாகிய நாம் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளைப் பேசுவதிலும், பகிர்வதிலும் காட்டும் ஈடுபாடு, அன்றாட வாழ்வின் நடைமுறையில் செயல்படுத்தத் தயங்குகிறோம். ஏன் என்றால் இங்கு சமூகச் செயலிகள் என்றும் பேசுபொருளாகவே இருக்குமே தவிர, அது சமூகத்தை மாற்றப் போவதில்லை. எனவே இளைஞர்களாகிய நாம் சிந்திப்பதுடனும் சமூகத்தில் செயலாற்றவும் முயல வேண்டும். அரசியலில் இளைஞர்களுக்குத் தடை என்று ஒன்று இல்லை. நமது சமூகம் என்றும் இளைஞர்களை ஆதரிக்கும் போக்கில் கட்டமைக்கப்பட்டதாகும். எனவே, ஒன்றுபடுவோம் நம் சமுதாயத்தின் நிலையை உயர்த்துவோம்.

Reference

https://www.vikatan.com

https://www.puthiyathalaimurai.com/

0 comments:

Post a Comment