ADS 468x60

05 September 2024

வெள்ளிச்சரத்தில் இது எனது 1000மாவது ஆக்கம்!


'கற்றவரிடம் கற்பதைவிட கற்றுக்கொண்டிருப்பவரிடம் கற்றுக்கொள்'- கார்ல்மாக்ஸ் சொன்னதுக்கு அமைய நான் கற்றுக்கொண்டு இருப்பதனையே உங்களுக்கு கற்றுத்தருவதற்காக இந்த தளம் எனக்கு அமைந்தவரம். ஆம், இது 'வெள்ளிச்சரத்தில்' https://vellisaram.blogspot.com/ எனது ஆயிரமாவது ஆக்கம். இது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாசகர்களை அண்மித்துவிட்டது. இந்தப்பிரபஞ்சத்துக்கு இதற்காக முதல் நன்றிகள்! 

இன்று நான் பெருமைகொள்கின்றேன். இந்தப் பிரபஞ்சம் விசித்திரமானது, பல அற்புதங்கள் நிறைந்தது. பல மனிதர்கள், பல முகங்கள், வௌ;வேறுபட்ட மனங்கள் அத்தனையும் படித்தற்குரியது. அதற்குள் எமது நாட்டில் குறுக்கு வழிகளன்றி சாதனைகள், அடைவுகள் மிகக் கடினமானது. ஆனாலும் நேர்வழியில் பயணம் செய்ய இத்தனை வருடங்கள் கடந்து இந்த ஆயிரமாவது மயிற்கல்லை எட்ட முடிந்தது. எனக்காக அல்ல இந்த சமுகத்துக்காக! எனக்கு ஆங்கிலத்திலும் ஒரு வுலக்ஸ் இருக்கின்றது யுனோவி  https://unoov.blogspot.com/என்ற பெயரில். நான் எனது அப்பாவில் 41ம் நாளில் இதனை வெளியிடுவதில் பெருமைகொள்ளுகின்றேன்.

எத்தனை ஊக்கங்கள், எத்தனை ஏக்கங்கள், எத்தனை ஆக்கங்கள், எத்தனை தாக்கங்கள், எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள், எத்தனை தடைகள், எத்தனை விடைகள் அத்தனையும் தாண்டி இன்று ஒருத்தனாக ஆயிரம் ஆக்கங்களை இந்தப் பூமிக்கு ஈன்றளித்து உவகைகொள்ளுகின்றேன்.

'கற்றது கையளவு' என்றார் ஓளவைப்பாட்டி. அந்த கையளவில் இருந்து வந்தவைதான் இவை. பொருளாதாரம், கலை, எம் சமுக இருப்பு, மொழி, எமக்கான அரசியல், எமது மண், கவிதைகள் என விதைக்கப்பட்ட சிறு சிறு விதைகள் இன்று ஆயிரம் கிளைகளுடன் ஆல விருட்சமாக வளர்ந்து வளம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இதனை நினைத்தாலே எனது அத்தனை அர்பணிப்புக்களும் கண்முன்னே விரிகின்றன. 

எழுதுதல் கருத்துக்களை பரிமாற உதவுகின்றது, எழுத்து சமுகத்தினை வழிப்படையச் செய்ய உதவுகின்றது, பிரச்சினைகளை சொல்லி அதற்கான தீர்வைச் சொல்ல உதவுகின்றது, நாட்டின் கிராமத்தின் அழகைச் சொல்ல, அதன் தேவைகளை சொல்ல, நீங்கள் மறந்தாலும் விஷயங்களை நினைவுபடுத்தவோ அல்லது புதுப்பிக்கவோ எழுதுவது உதவுகிறது. எழுதுவது திட்டமிட்டு செயல்படுத்த உதவுகிறது. எழுதுவது என்பது ஒருவருடன் பகிர்ந்து கொள்வது போன்றது. சில உள்முக சிந்தனையாளர்கள் சொல்லத் தயங்கினால், எழுதுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். ஒரு அழுத்தமான பிரச்சினை எழுதப்பட்டவுடன், அதை வெளியே சொல்ல விரும்பாவிட்டாலும், அது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும். அதன் பிறகு தேவை என்றால் வெளியே சொல்லலாம். இல்லையெனில், அதை எழுதுவது உங்கள் மன அழுத்தத்தை அதிகபட்சமாக நீக்கியிருக்கும் என்பதால் நீங்கள் அதை விட்டுவிடலாம்.

இன்று பெரும்பாலும் கல்வியிலாயாளர்களும், அதிகாரிகளும் தமது பதிவி உயர்வுக்காக மாத்திரம் பயன்படுத்தும் ஒன்றாக குறுகிவிட்ட எழுத்தாக்கம் சமுகத்தின் தற்போதைய உண்மை விம்பத்தை  பிரதிபலிக்கவில்லை நகல்களாக. அதுமாத்திரமின்றி படைப்பாளிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும், இலகுபடுத்தப்பட்டிருக்கும் இன்றய அபிவிருத்தி உலகத்தில் அவற்றைப் பயன்படுத்தவும், பிரNhயகிக்கவும் தெரியாதவர்களாகவும் இருப்பவர்கள் கடமைக்கும் காசுக்கும் சமுகத்தில் உலாவருகின்றனர். இளைஞர்கள் தமது பொழுதுபோக்கிற்காக எழுத்தினை கையில் எடுக்கவேண்டும். அவை சிந்தனைகளைத் தூண்டும், ஆக்கபூர்வமாக உருவாக்கத் தோன்றும்.

இந்த பயணத்தில் நான் பலருக்கு நன்றி கூற வேண்டி இருக்கின்றது அந்த வகையில் இந்த தளத்திற்கான முன்னோடி தம்பி ரமேஷ் இவர்தான் சிதறல்கள் எனும் ஒரு பிளாக்ஸ்பர்ட்டை முதலில் எனக்குத் தெரிந்த வகையில் உருவாக்கி மிக சொல்லப்படாத விடயங்களை எல்லாம் எழுதும் தளம் ஒன்று உள்ளதை எனக்கு அறிய தந்தவர். எனக்குள் ஏற்கனவே; எழுதும் ஆற்றல் தீயாய் சுடர் விட்ட நேரம் அது. அப்போது மிக நேர்த்தியான ஆக்கங்களை மாத்திரம் வீரகேசரி பத்திரிகையில் எழுதி வந்த காலம்.

ஆனால் பத்திரிகைகளில் எழுதுவது போன்று அல்லாமல், எங்களுக்கு வேண்டிய வகையில் எமது சாமானியனின் ஆதங்கங்களையும் சர்வதேசமறியவைக்க எனக்கு ஒரு தளம் தேவைப்பட்டது. அதனை எனக்கு விரும்பியவாறு வடிவமைத்துக் கொண்டு வேண்டிய எழுத்துருக்களை வேண்டிய மாதிரி பயன்படுத்திக்கொண்டு அதற்கான படங்களை மற்றும் வீடியோ கலவைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டு ஒரு அழகான ஆதாரப்பூர்வமான ஆக்கங்களை எமக்கு விரும்பிய வகையில் எழுதுவதற்கான பலமாக இதனை பார்த்தேன்.

இந்த தளத்திற்கான தோற்றத்திற்கு அடித்ததமாக இருந்த தம்பி ரமேஸிக்கு நன்றிகள் கூற கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். அதன் பின்னர் ஆயிரம் வாசகர்களை எனது எழுத்து ஈர்த்தது, பட்டி தொட்டிகளையும் எனது ஆக்கத்தில் கோர்த்தது.

நாட்டிய பயிருக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாமா? என்னை பாராட்டி, என் எழுத்தை அதன் மூலமாக நான் செய்த சேவைகளை தூண்டி விட சில நல்ல உள்ளங்கள் நேரில் தோன்றின. அவர்களுள் முதன்மையானவர் எனது தகப்பனுக்கு நிகராக என்னை நேசிக்கும் அன்ரன் அங்கிள் என்பேன்.

இவர் என்னைப் போலவே எமது மண் மக்கள் இரண்டிலும் அபார ஈடுபாடு கொண்டவர் என்றால் மிகையில்லை. இவர்தான் என்னை அதிகம் எழுதும்படி தூண்டினார.; நான் செய்யும் சேவைகளை ஊக்கப்படுத்தினார். அதற்காக எனக்கு உதவிகளை எல்லாம் செய்தார். அப்போது எனது வீட்டில் இருந்த கம்ப்யூட்டரை மாத்திரம் பயன்படுத்தினேன். ஆனால் நீ ஒரு வளர்ந்து வருகின்ற வளம், உனக்கு எழுத இலகுவாக இருக்க வேண்டும் என சொல்லி எனக்கு ஒரு மடிக்கணிணியை அன்பளிப்பு செய்தார்.

அதுதான் எனக்கு எழுத்தில் ஜீவ ஊற்றாக இருந்தது. எனது எழுத்துக்கு உரம் சேர்த்தது. எனக்கு போகுமிடமெல்லாம் சென்று எழுதுவதற்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கியது. அது மாத்திரமல்ல எனது ஆக்கம் ஒவ்வொன்றையும் நடுநிலையாக நின்று வாசிப்பவர் இவர். இவரை இந்த பதிவில் நான் நினைவு கூறாவிடின் சிறப்பாக இருக்காது. நன்றி அப்பா! சாதாரணமான நன்றியல்ல கோடான கோடி நன்றிகள் உங்களை இறைவன் நீண்ட காலம் வாழ ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்.

அடுத்தது எனது தாய் தந்தை, எனது அப்பா இவ்வாறான வேலைகளை நான் சமுகத்துக்குச் செய்வதில் அபார விருப்பத்துடன் தட்டிக்கொடுப்பார். நான் உட்காந்து எழுதும்போதெல்லாம் என்னை யார் அழைத்தாலும் 'அவன் தம்பி வேலயாய் இருக்கிறான்', அதுபோக 'தம்பிக்கு ரீபோட்டுக் கொடுத்தீங்களா' இப்படி நான் எழுதுவதை உணர்ந்து அதற்கு ஈடுணையற்ற உதவி புரிந்தவர். அவர் நான் எழுதும் ஆக்கங்களைப் படித்து, பாடல்களை இரசித்து, தட்டிக்கொடுத்து எனது உதவிக்கரமாக இருந்தார். இந்தக்கட்டுரையை எழுது ஆரம்பிக்கும் நேரத்தில் அவர் இருந்தார், அவர் இருக்கும் போதே இதனை ஒரு விழாவாக அவரையும் அழத்துக்கொண்டு செய்யவேண்டும் என எண்ணி இருந்தேன் ஆனால் அது வெறும் கனவாய்ப் போனது. அவர் இன்னு என்னுடன் இல்லாமல் என்னை விட்டுப் பிரிந்தது எனக்கு சொல்லொணா இழப்பாகும். அவர் இருந்திருந்தால் மிக்க மகிழ்வடைந்திருப்பார். அவருக்காகவே இந்த 1000மாவது ஆக்கத்தினை சமர்பணமாக்குகின்றேன்.

அதுபோல எனது அம்மா அவர் இது பற்றி பெரிதாக அறிந்திராவிடினும் எனக்கு எல்லா வகையிலும் அனுசரணையாக இருந்த ஒரு தாய் எனில் அது மிகையில்லை. அதுபோல எனது தங்கை மிக உதவியாக இருந்தாள் எல்லா விதத்திலும். எனக்கு அன்னம் தருவதிலிருந்து தேத்தண்ணிக் கிண்ணம் தருவதுவரையும் மனங்கோணாமல் எனது இந்த அத்தனைவேலைக்கும் ஊக்கமாக உதவியாக வரும் எல்லா நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதில் மட்டக்களப்பு மண்ணுக்கே சாட்சியான ஒருத்தி. அவளுடன் சேர்ந்து கணவர், பிள்ளைகள் என அனைத்து உறுப்பினர்களும் எல்லாவகையிலும் உதவியாக இருந்தவர்கள்தான். அவர்களுக்கு நன்றி என்று கூறி வரையரை செய்ய முடியவில்லை.

இதுபோன்று எனது அன்பு மனையாள் மிகப்பெரும் பலமாக இருக்கின்றாள். ஏன்னை யாரும் தொந்தரவு பண்ணாமல் இருப்பதில் மிக கவனமாக இருப்பவள். நான் உருவாக்கும் ஒவ்வொரு ஆக்கத்துக்கும் பின்புலமாக இருப்பவள், பிழைதிருத்தம்கூட கண்டுபிடித்து எழுதுவதனை செம்மைப்படுத்தும் அம்மை. இந்த ஆயிரம் மயிற்கல்லை அடைய அயராது உறுதுணையானவள் என்றால் அது மிகையில்லை.

இவர்களைத்தவிர, குறிப்பிட்டுச் சொல்லும் சிலர் இருக்கின்றனர். அவர்கள் எனது தூண்டுகோல்கள். அம்மா என ஆசையோடு அழைத்துவந்த பிலோமினா அன்ரி, எனது எழுத்தின் உயிரோட்டத்தினை உள்ளுணர்ந்து வாசிக்கும் ஒரு வாசகி. இறுதிவரை என்னை ஊக்கப்படுத்தி, கனேடிய வானொலியில் என் சிந்தனைகளும் சமுக கருத்துக்களையும் விதைப்பதற்காக என்னை வழிப்படுத்திய ஒரு தாய்! இன்று எம்முடன் இல்லாமல் இறையடி எய்திவிட்டார்.

அதேபோல அமெரிக்காவில் வசிக்கும் அம்பிகா அக்கா, வைத்தியர் சஞ்சு அண்ணா, சர்மிலா அக்கா, கலாநிதி பாலசுகுமார், பேராசிரியர் கிட்ணன் கோவிந்தன், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பன் ரவி, நண்பன் ஜீவா, ரமேஸ்வரன், வைத்தியர் சுகுணன், அண்ணன் காண்டீபன், பேபேராசிரிர் சுரேஸ், பேபேராசிரிர் ஜெயப்பிரபா மற்றும் பேபேராசிரிர் ஜெயராஜ் என சிலரை நான் குறிப்பிட்டுச் சொல்லலாம் எனது எழுத்தின்பால் ஆர்வம் கொண்டு என்னுடன் நெருக்கமாக இந்த கடின பாதையில் பயணித்து இந்த உச்சத்தினை தொட உதவியவர்கள். இன்னும் பல இலட்சக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். அவர்களையெல்லாம் சொல்லப்போனால் இந்தப் பக்கம் தாங்காது அது என் அன்புக்கும் மதிப்புக்கும் எனது எழுத்துக்கும் பின்னால் இருக்கும் வாசகர்கள். இவர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.

ஏன்னையும் நான் சார்ந்த மக்களின் மொழி, கலை, கலாசாரம், மண்வாசணை, தேவைகள், தீர்வுகள் என அனைத்தையும் பொதிசுமந்தது எனது எழுத்தும் அதற்கான ஊடகமும்தான்.

எனவே உத்தரவாதமான வெற்றியை அடைய முக்கியமான விஷயங்களை எழுதுங்கள்.

0 comments:

Post a Comment