ADS 468x60

10 January 2011

வெளுத்துக்கட்டும் வெள்ளத்தில் குடிபெயர்ந்திருக்கும் குடியிருப்பு மக்கள்....

 யாரைக்கேட்டாலும் மட்டக்களப்பு வெள்ளத்தை சொல்லும் அளவுக்கு மிகவும் மோசமாக அம்மக்களது வாழ்கை, வாழ்வாதாரம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி மற்றும் இன்னோரன்ன துறைகளை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது கண்கூடு. நாடு பூராகவும் 16 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது, கிழக்கில் 800,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டக்களப்பு அரசாங்கச் செயலாளரின் அறிக்கைப் பிரகாரம், மட்டக்களப்பின் பிரதேச செயலகங்களில் அதிக பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள மன்முனைத் தென் எருவில்பற்றும் ஒன்றாகும். 

 கூடுதலாக கரையோரக் கிராமங்களை நிருவகிக்கின்ற இப்பிரதேச செயலகமானது ஒரு பக்கம் ஆற்றுப்பரப்பினையும் மறுபுறம் வங்காள விரிகுடாவினையும் கொண்டமைந்த அழகான அதே நோரம் ஆபத்தான கிராமங்களை அநேகமாக் கொண்டுள்ளது. இங்கு கல்முனை மட்டக்களப்பு பாதை ஊடறுக்கும் இடத்தில் தேத்தாத்தீவின் தெற்கு கிராம சேவர் பிரிவினுள் அமைந்திருக்கும் ஒரு அழகிய குட்டித்தீவே குடியிருப்பாகும்.

குடியிருப்புக் கிராம மக்களும் அனர்த்தங்களும்...
 இது தேத்தாத்தீவுக்கு மேற்குப்புறமாக மட்டு வாவிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனைச் சூழவும் வயலும் குளங்களும் நாலாபுறமும் அமைந்துள்ளது. இங்குவாழுகின்ற அனைத்து மக்ககும் 2 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மட்/தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தினுள் தஞ்சமடைந்துள்ளனர். 
இங்கு 33 குடும்பங்கள் மாத்திரம் வசித்துவருகின்றனர். இவர்களது பிரதான ஜீவனோபாயம் கூலித்தொழிலாகும், அத்துடன் ஆடு, மாடு வளர்த்தல், மீன்பிடித் தொழில் என்பனவற்றினையும் மேற்கொள்ளுகின்றனர். இங்குள்ள பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வருவதற்கோ, அவர்கள் தொழில் செய்யப் போவதற்கோ 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்லவேண்டியிருக்கிறதும் குறிப்பிடத்தக்கது. 

இங்கு வெள்ளம் தாக்குவதற்க்கான பிரதான காரணம், இந்த குட்டித்தீவை சூழவும் உள்ள தாழ்நிலப்பரப்பான வயல் நிலங்களும் மற்றும், பெரிய குளம், வட்டிக்குளம், களுதாவளைக் குளம் போன்ற குளங்களும்தான். இருப்பினும் இம்மக்கள் மிக உயர்ந்த மேட்டுப் பகுதிகளில்தான் வாழ்ந்து வந்தனர். 1956 இல் வந்த வெள்ளம் தவிர 2004 இன் வெள்ளம் போன்ற வெள்ளப் பெருக்குளளில் இடம் பெயர்ந்து, தற்போது 2011 இன் ஆரம்பமே சோகமான வாழ்கையினை அவர்களுக்கு அளித்திருக்கின்றது.
                                         (இது நீரினால் மூடப்பட்டிருக்கும் குடியிருப்புப் பிரதான பாதை)
எதிர்கோக்கும் பிரச்சினைகள்.
தங்கவைக்கப்பட்ட மக்களின் தரவுகள் இப்போது சேமிக்கப்பட்டு வருகின்றது அதன் அடிப்படையில், தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தினுள் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள், தங்களது ஆடைகள் மற்றும் பத்திரங்களைத்தவிர ஒன்றும் கொண்டுவராத அளவுக்கு அவசர அவசரமாக இடம் பெயர்ந்துள்ளனர். 

மூன்று அடி உயரம் தண்ணீர் மேவிய நிலையில், 137 பேர் 33 குடும்பத்தினில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் தங்கள் தொழிலை முற்றாக இழந்துள்ளனர், அத்ததுடன் குடிநீர்ப்பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இவர்கள் அங்கு வெள்ளத்துக்கு அப்பால் முதலை, பாம்பு போன்றனவற்றின் தொல்லைகளுக்கு மத்தியில் இவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். 

முற்றாக 35 வீடுகளை வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக இங்கு தாங்கொணாத அவதிகளை 42 மேற்ப்பட்ட சிறுவர்களும் 8பேர் அளவில் வயது வந்தவர்களும் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வலது குறைந்தவர்களும் காயப்பட்டவர்களும் அடங்கலாக நலிவுற்றவர்களாக மாத்திரம் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுதவிர தேத்தாத்தீவின் அனைத்துப் பாகங்களில் இருந்தம் இன்னும் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டவர்களாக இங்கு இடம் பெயுர்ந்தவண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதித்தகவலின்படி இன்னும் 31 குடுப்பங்கள் மேலதிகமாக தேத்தாத்தீவின் பல பாகங்களில் இருந்தும் இடம்பெயுர்ந்து தஞ்சமடைந்துள்ளனுர்.

கருனை காட்டும் உள்ளங்கள்.
இத்தனைக்கும் முழுதாக மொத்த தேத்தாத்தீவு மக்களும் பாதிப்படைந்துள்ள வேளையிலும் அவர்கள் மக்களுக்கு உதவி செய்யும் தொண்டான்மை பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்கள் இவர்களுக்கு உணவு சமைத்தல், தகவல்களைச் சேமித்தல், மற்றும் பொருட்களைவ ளங்குதல் என்பனபோன்ற இன்னோரன்ன வேலைகளையும் செய்துகொண்டிருக்கின்றனர்.
                                                                  (ஊர்தொண்டர்கள் உதவி புரிவதில்)
இவர்களின் பரிதாவ நிலையை அறிந்த எமது பாரளுமன்ற உறுப்பினர் செல்வராசா(நவம்) அவர்கள் இந்த மக்ககைச்சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறுவதை இங்கு காணலாம்.
                                                     (பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுடன்)
அதுபோன்று மன்முனை தென் எருவில்ப்பற்று பிரதேச செயலாளர் இதனைக் கேள்வியுற்று ஓடோடிவந்து பார்வையிடுவதுடன் அவர்களுக்கு சமைத்த உணவினை வாழுங் கலைப்பயிற்சி நிறுவனத்தினரின் உதவியுடன் சட்டத்தரணி சிவநாதன் தலைமையில் வழங்குவதையும் காணலாம். 
                                           (பிரதேச செயலாளர் அவர்கள் சமைத்த உணவு வளங்குகிறார்)
ஓயாத அனர்த்தத்தினை ஓயவைப்பார் யாருளரோ!
தவிரவும் இவர்களுக்கு பாய், வெற்சிற், பாத்திர தளபாடங்கள், மருத்துவ வசதிகள் என்னன வழங்கப்படவில்லை.. அத்துடன் அடிக்கடி மின்சாரம் இல்லாமல் போவதனால் மண்ணெண்னை லாம்புகள் இங்கு தேவையாக இருக்கின்றது, அத்துடன் நுளம்புவலைகள், சுத்தமான குடி நீர் என்பனவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இவர்களின் பரிதாப நிலை சொல்லில் அடக்கவொணாது. அதற்கு மேலாக பாடசாலையை சூழ நீர்நிறைந்த வண்ணம் உள்ளதனால் அங்கு பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் என மலசலம் களித்தல், குடிநீர் அருந்துதல் என்பனவற்றை பெற சிரமப்படுகின்றனர். இன்னும் சில மணிநேரத்தினுள் பாடசாலையினுள் வெள்ளம் பரவும் அபாயம் இருப்பதனால் இவர்களின் துன்பம் இரட்டிப்பாகும் அபாயமும் இருக்கின்றது.

நான் இக்கட்டுரை எழுதும் வரை என் வீட்டில் ஒரு அடிவரை தண்ணீர் உள்ளது, அத்துடன் மின் வெட்டும் இடம்பெறுவதனால் இனிமேல் மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். எனவே இவர்களின் துன்பங்களை துடைக்க உதவும் நல்ல உள்ளங்கள் முன்வரலாம்....

4 comments:

Ramesh said...

good post seelan.

Unknown said...

உடன் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே மேலும் செய்திகள் கிடைத்தால் உடன் பதிவிடுங்கள்.

நான் உங்களை மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்கின்றேன்

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி மகாதேவன்....

Ramesh said...

தொடர் மழை இன்னுமின்னும் வாட்டுது எங்களை.

Post a Comment