ADS 468x60

07 February 2011

மழை நின்றும் வாழ்வில்லை..

இன்னும் விடவில்லை –மழை
நின்றும் வாழ்வில்லை,
பென்னம் பெரிய அடப்பு - இங்கே
பேய்போல் அழிந்து கிடக்கு
தின்ன வழி ஏது -இனிமேல்
தேறும் வகை யாதோ...
           
தேறும் வழியின்றி மக்கள் தெருவில் திரிய வைத்த வெள்ளம் வடிந்தபாடும் இல்லை, மழை முடிந்த பாடும் இல்லை. மட்டக்களப்பு மக்களின் வாழ்வில் தாங்கள் செல்வமாய் வாழ்ந்ததெல்லாம் விவசாயத்தினால்தான், அதனால்தான் 'ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லை, என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லை' என்று பாடியிருக்காங்கள். அந்த ஏரின் முனையே கொடிய வெள்ளத்தால் முறித்தெறியப்பட்டுள்ளதே!. அப்புறம் ஏதப்பா பஞ்சமில்லாத வாழ்கை? கிட்டத்தட்ட 48,000 கெக்டேயர் நிலப்பரப்பில் மேட்டு நில விவசாயம் பண்ணும் இம்மக்கள் அந்தோ கெதியென நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மன்முனை தென் எருவில் பற்றுப்பிரதேசம் இவற்றுக்கு பேர்போன இடமாகும். இம்மக்களின் அனேகமானவர்கள் தங்கள் நாளாந்த வாழ்கைக்காக இந்த பயிர்ச்செய்கை தனையே நம்பி இருக்கின்றனர். இவர்கள், விசேடமாக தேற்றாத்தீவு, களுதாவளை, மாங்காடு, செட்டிபாளையம் மற்றும் குருக்கள்மடம் போன்ற கிராமங்களில் வெற்றிலைச் செய்கை, மிளகாய், கத்தரி, பயற்றை, வெண்டி மற்றும் இன்னோரன்ன பயிர்செய்கையில் நன்கு ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

தேற்றாத்தீவு கிராமத்தின் நிலவரம் இவற்றுள் மோசமானதாக இருப்பதனை மேட்டு நிலப்பயிர் செய்கையாளர் சங்கச் செயலாளர் திரு.அ.விமலேஸ்வரன் கூறுகையில் குறிப்பிட்டார். இங்கு மேட்டு நில விவசாயம் மாத்திரமில்லை சுமார் 195 ஏக்கர் வயல் செய்கையும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இவரின் அறிக்கைப்படி, வெற்றிலைத்தோட்டங்கள் வெள்ளத்தினால் மொத்தமாக 325 பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 75 முற்றாகச் சேதப்பட்டுள்ளதுடன், 250 தோட்டங்கள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அது தவிர 496 மேட்டு நிலப்பயிர்ச் செய்கையாளர்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளனர் என்றும் அதனால் 1500 குடும்பங்களுக்கு மேல் தங்களது தொழிலை இழந்து நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.

'யாரிடம் எதைப்போய்ச் சொல்வது என்று யாருக்கு தெரியும'; என்று மக்கள் அங்கலாய்த்து கொள்வதனை பார்க்கும்போது இனி வாழ்வதற்கு என்ன மிச்சம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்ளும் மக்களுக்கு, யாரும் தெம்பூட்டவில்லையே... பாவம் என்று சொல்லி பார்த்திருப்பதனை விட இந்த சமுகத்தின் பணத்தில் படித்து பெயிய இடங்களில் வாழும் நாம், நன்றி மறந்தவர்களாக மாறிவிடக் கூடாதல்லவா? நமக்கெல்லாம் ஆண்டவன் தந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, இது போன்ற பாதிக்கப்பட்ட எம் லெட்சோப லெட்சம் மக்களையும் மீட்டெடுப்பதற்கான தந்திரோபாயத்திட்டத்தினை அறிவுசார் சமுகம் என்ற வகையில் நாங்கள் திட்டமிட்டு இவர்களை முன்னே கொண்டுவரவேண்டும். அப்படியே கைவிட்டு விட்டால் எதிர்காலத்தில் நம்பெயர் சொல்ல ஒரு சமுகம் இல்லாத அநாதைகளாக்கப்படுவதே திண்ணம்.

0 comments:

Post a Comment