ADS 468x60

08 November 2019

மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணம்: இனத்தால் ஒன்றானாலும் தேவையால் மாறுபட்டவர்கள்- ஐனாதிபதி தேர்தல் 1982-2015.

ஆய்வுக்கட்டுரை 

பின்புலம்.
வடகிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்கள் பல தேர்தல் சூழலை கடந்து வந்த அனுபவசாலிகள். பல விதமான தேர்தல்களை பலவிதமான மனிதர்களுடன், கட்சிகளுடன், கொள்கைகளுடன், அதனால்  நாம் இத்தனை காலமும் வடக்குடன் ஒப்பிடும்பொழுது மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் கடந்துவந்த தேர்தல் களம், முற்றிலும் மாறுபட்டது, இந்த ஆண்டு ஒரு புதிய ஐனாதிபதியினையும் அடுத்த ஆண்டு ஒரு புதிய பிரதமரினையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வாய்ந்த ஒரு கூட்டமாக வாக்காளர்கள் பார்க்கப்படுகின்றனர். 

வேறுபட்ட வாக்குப் பதிவுகள் கீழுள்ள அட்டவணையில் ஆண்டு மற்றும் மாவட்டம் கட்சி என்ற ரீதியில் தரப்பட்டுள்ளது

Source :https://en.wikipedia.org


ஆகவே புதிய தலைமைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் எமது மக்களுக்கு என்ன புதிய முன்னேற்றம் நடைபெற இருக்கின்றது! என்பது சிந்திக்கவேண்டியதொன்று. ஏனெனில் கடந்த அரசாங்கங்களில்; மக்கள் தமது அடிப்படை வசதிகளை மாத்திரமல்லாது தமது நாட்டின் பொருளாதாரம் கூட கொள்ளையடிப்போரினால் அதளபாதாழம் வரை கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனால் அவற்றில் இருந்து மீழ ஒரு வினைத்திறனான நேர்மைத்தன்மையான தலைமைத்துவம் மிக்க ஒரு ஆழுமையினை தெரிவுசெய்வதில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளமை கண்கூடு.

நடைபெற இருக்கும் தேர்தலின் சாதக பாதக நிலமைகள், இனிவரும் காலங்களில் எதிர்நோக்க இருக்கும் சவால்கள் அவற்றை முறியடிப்பதற்கான வழிமுறைகள் ஆகியனபற்றி விரிவாகப் பார்க இருக்கின்றோம்.

தமிழர்கள் முள்ளிவாய்காலில் மட்டுமல்ல கட்ந்த 60 ஆண்டுகளாக இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு சிங்கள தேசத்திற்கு தண்டனை கொடுக்கப்படல் வேண்டும் என்றால். அந்த தண்டனையானது தமிழர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தி அல்லது நிராகரிப்பதன் மூலமோ ஆட்சி மாற்றம் என்னும் பெயரால் ஆள்மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதால் கொடுக்கவே முடியாது. அது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல்தான் அமையும். மாறாக சித்திரம் வரைவதற்கான சுவரையாவது பாதுகாக்க தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏமாற்றாது பூர்திசெய்யும் ஒருவரை ஆதரித்தே ஆகணும்.

தமிழ் பிரதிநிதிகளால் ஐனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் காலா காலமாக சர்ச்சைகளையே ஏற்படுத்தி வந்தது. உதாரணமாக 2010 இல் நடைபெற்ற தேர்தலில், சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்ற மாட்டார் என்பதனை நன்றாக தெரிந்து கொண்ட பின்னரும் கூட ஐனாதிபதித் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களை சின்னாபின்னப்படுத்திய படைகளை தலைமை தாங்கி நேரடியாக நெறிப்படுத்திய இலங்கைப் படைத்தளபதியும் ஐனாதிபதி வேட்பாளர்களில் ஒருவருமான சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்தது. அந்த ஆண்டில் இவர் ஐனாதிபதியாக தெரிவு செய்யப்படவும் இல்லை.

ஆனால் இக்கட்சியின் முக்கியஸ்த்தர்களின் விடாப்பிடியினால் கூட்டமைப்பு இந்த வரலாற்றுத் தவறை இழைத்தது. அப்போது எடுத்த முடிவானது நிச்சயமாக தமிழ் மக்களின் நலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல அது சர்வதேச நாடுகளின் நலன்கருதி எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே இது பார்க்கப்பட்டது. என பல விமர்சனங்கள் வந்தன. 

இன்று பல ஊடகத்துறை வளர்சி கண்டுள்ளது, வீட்டுக்கு வீடு அவை பெருகி மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் சுயமாக போட்டியாளரை தமது விருப்புக்கு இணங்க தெரிவு செய்யும் ஆற்றல் அறிவு விழிப்பினை கொண்டுள்ளனர். ஆகவே முன்பு போன்று இன்னொருவர் சொல்லும் ஒருவரை தெரிவு செய்யும் நிலமை மாற்றம் கண்டுள்ளது. ஆக இதுவரை நடாத்தப்பட்ட ஐனாதிபதித் தேர்தலில் கிடைத்த முறைக்கு மாறாக இம்முறை தேர்தல் குறிப்பாக மட்டக்களப்பில் அமையலாம் என்பதே பொதுமக்களது கணிப்பாக இருக்கின்றது.


அறிமுகம்.

இலங்கையில் ஐனாதிபதி பதவி அதி உயர்ந்த அதிகாரமிக்க ஒன்றாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக பல நன்மை தீமைகளை குறிப்பாக சிறுபான்மை மக்கள் கண்டு வந்துள்ளனர் அதிகமாக இவர்கள் மிக மிக குறைவான நன்மைகளையே இந்த அதிகார மாற்றத்தின் மூலம் பெற்று வந்துள்ளனர். 

இன்று இரு பிரதான வேட்பாளர்களும் அதிகூடிய கவனத்தினை நாட்டை குறுகிய நீண்ட கால அபிவிருத்தி செய்வதிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் முண்டியடித்து தமது விஞ்ஞாபனங்களை வெளியிட்டு வைத்துள்ளமை எந்தளவு பல இன்னல்களை சந்தித்து அரசியல் அனாதைகளாக்கப்பட்டிருக்கும் மனங்களில் மாற்றங்களை கொண்டுவரும் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். 

எது எவ்வாறு இருப்பினும் வடக்கில் யாழிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் தமிழர்கள் இருப்பினும் விருப்புகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் மிக வேறுபட்டதாகவே இருந்து வந்துள்ளது என்பதற்கான ஆதார பூர்வமான ஆய்வே இக்கட்டுரையில் காண்பிக்கப்பட இருக்கின்றது.

இங்குள்ள ஆய்வுகளை எடுத்துநோக்கினால் யாழ் வாக்காளர்கள் விடுதலைப்போராட்டம் வலுப்பெறுமுன்னர் மிக மாறுபட்ட கட்சிகளையே ஒவ்வொரு மாவட்டத்திலும் பாரிய வித்தியாசத்தில் ஆதரித்து வந்துள்ளர்.

ஐனாதிபதி தேர்தல் ஆரம்பிக்கப்பட்ட காலம் இருந்து யூ.என்.பி கட்சியினையே தமிழ் தரப்பு பிரதிநிதிகளின் வேண்டுகோளை தட்டிக் கழிக்காமல் வாக்களித்து வர இதற்கு மாறாக யாழ் வாக்காளர்கள் சுதந்திரக் கட்சியை ஆதரித்து வந்துள்ளமையை நாம் கீழுள்ள வரைபுகளில் காணலாம். இவை முறையே படம் ஒன்று யூஎன்பி கட்சி ஆதரவையும் படம் இரண்டு சுதந்திரக் கட்சி ஆதரவினையும் காட்டுகின்றது.

Picture-01
Picture -02
Source: https://en.wikipedia.org

இனரீதியான சனத்தொகைப் பரம்பல்.

இங்கு வரைபில் குறிப்பிட்டதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தினை எடுத்துக்கொள்ளுவோமானால், இம்மாவட்டத்தில் அதிகப்படியான மக்கள் தமிழர்களாகவும் இரண்டாம் நிலையில் முஸ்லிம் மக்களும் செறிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சுதந்திரத்துக்கு பின்னர் ஜனநாயகத்தன்மையை நிலைநிறுத்தி மக்களாட்சியை கொண்டுவர தேர்தலை நடைமுறைப்படுத்தும் ஒரு முறைமை உருவாக்கப்பட்டது. அதன் பலனாக தேர்தல் மாவட்டங்கள் 1978 திருத்தச்சட்டத்தின் பின்னரே உருவாக்கப்பட்டிருந்தது. அந்த காலத்தில் 22 தேர்தல் மாவட்டங்களே உருவாக்கப்பட்டிருந்தன. அதில் மட்டக்களப்பும் கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தன்மை வாய்க்கப்பெற்ற ஒரு மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் இவை நிருவாக மாவட்டங்களாக செயல்படலாயின. ஆனால் வடக்கில் கிளினொச்சியும் யாழ்பாணமும் இணைந்தே தேர்தல் மாவட்டமாக செயற்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நிருவாக மாவட்டமாக இருப்பதுடன் இது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 5 உறுப்பினர்களை தெரிவு செய்துகொடுக்கும் சரியாக 398,301  வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக உள்ளது (2018 - இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு). இங்கு கல்குடா (115974), மட்டக்களப்பு (187682), பட்டிருப்பு (94645) ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளை தன்னகத்தே கொண்ட ஒரு மாவட்டமாகும்.  

ஐனாதிபதி தேர்தலானது, ஐனாதிபதி தேர்தல் சுற்றறிக்கை 1981, இலக்கம் 15 இன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவானது இலங்கைச் சட்டத்தின் ஊடாக ஐனாதிபதி தேர்தலை நடாத்த கடமைப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஐனாதிபதியின் ஆட்சிக்காலம் முடிவடையும் நாட்களுக்கு ஒரு மாதத்துக்கு குறையாமலும் இரு மாதங்களுக்கு கூடாமலும் அமையும் வண்ணம் இத்தேர்தல் நடாத்தப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. 
இங்கு அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றினை மையப்படுத்தி தேர்தலில் குதிப்பவர்கள் காலாகாலமாக தமது விஞ்ஞாபனத்தினை வெளியிட்டு வைத்து தேர்தலை நேர்கொண்டு வெற்றி தோல்விகளை அவரவர் கொள்கைகள், நடவடிக்கையின் பிரகாரம் கண்டுவந்துள்ளனர்.

இத்தேர்தல் காலங்களில் அனைத்து இனத்தவர்களும் போட்டியிட்டு வந்தாலும் பெரும்பாண்மை இனத்தில் இருந்துவந்த ஒருவரே ஐனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு வந்துள்ளனர்.

ஐனாதிபதித் தேர்தலும் மட்டக்களப்பு வாக்காளரும்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் காணப்படுமு; தொகுதிவாரியான வாக்காளர் தொகை இங்கு 2009 ஆம் ஆண்டில் இருந்து 2018 வரையும் தரவுகளாக கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. இதில் பட்டிருப்பு தொகுதி மக்களின் வாக்களிப்பு காலாகாலமாக த.தே.கூட்டமைப்பு சொன்ன வாக்கை 80 சதவீதத்துக்குமேல் காப்பாற்றி வரலாறுபடைத்த தொகுதி.



முதலாவது ஐனாதிபதித் தேர்தல் 1982

இலங்கையின் முதலாவது ஐனாதிபதித்தேர்தல் 1982 ஒக்டோபர் 20ம் திகதியிலேயே நடைபெற்றது. இதில் ஜனாதிபதியாக திரு ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்கள் தெரிவாகியிருந்தார். அவர் 52% (3,450,811) வாக்குகளையும் எதிரணியில் போட்டியிட்ட சுதந்திரக் கட்சி வேட்பாளர் 39.07%  (2,548,438) வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்காலத்தில் கிழக்கில் மட்டக்களப்பு மக்கள் தமிழ்பற்றோடு இருந்ததுபோல எந்த இடத்திலும் இருந்ததில்லை. அவர்கள் வடக்கில் இருந்து தேர்தலில் களமிறங்கிய திரு குமார் பொன்னம்பலத்துக்கு இவர் ஒரு ஐனாதிபதியாக வரமுடியாது என்பதனை அறிநதும், சுமார் 47,095 வாக்குகளை அளித்து தமது ஆதரவைக் காட்டினர்.  அது மொத்த வாக்கில் 39.22% விகிதமாக பதிவாகி இருந்தது. 

இது இரு மாவட்டமும் இணைந்து வடக்கில் தனித் தமிழ் தொகுதிகளில் அளி;க்கப்பட்ட சதவிகிதத்துக்கு சமமான விகிதத்தில் அளிக்கப்பட்டமை இம்மாவட்ட மக்களின் தமிழ்பற்றை காட்டி நின்றது. அதில் பட்டிருப்பு தொகுதி வாக்காள பெருமக்கள் அதிகூடிய வாக்குகளாக 21,918 இனை செலுத்தியிருந்தனர் என்பதுடன் மொத்த வாக்காளர்களில் 75.22 விகிதத்தினர் வாக்கு நிலையங்களுக்கு சென்று வாக்களித்த ஜனநாயக அறிவுடையோராக இருந்தமை என்பது வரலாற்றுப் பதிவு.

அந்த ஆண்டில்  ஐ.தே.க சார்பில் திரு ஜே. ஆர் ஜயவர்தன அவர்கள் 48,094 அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தார். அதற்கு அடுத்ததாக குமார் பொன்னம்பலம் அவர்களும் அதற்கு அடுத்து சுதந்திரக் கட்சியில் களமிறங்கிய கெக்டர் கொபேகடுவ 21,688 வாக்குகளைப் பெற்று தோல்வியினை தழுவியிருந்தார்.

அதே நேரம் கிளிநொச்சி மற்று யாழ்பாணம் ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய தேர்தல் மாவட்டங்களில் திரு குமார் பொன்னம்பலம் அவர்கள் 87,263 (40.03%) அதிகப்படியான வாக்குகளைப் பெற சு.க வேட்பாளர் கொபேகடுவ 77,300 வாக்குகளைப் பெற ஜே.ஆர்.ஜயவர்தன 44,780 வாக்குகளை அதிகப்படியாகப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ஒரு வேற்றுமை என்னவெனில் மட்டக்களப்பு ஐ.தே. கட்சியினையும் யாழில் சு.கட்சியினையும் ஆதரித்திருந்தமையே. இந்த யுகத்திலே ஜே.ஆர் அவர்கள் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி ஒரு வித்தியாசமான அரசியல் பாதைக்கு வழிவகுத்திருந்தார்.

இரண்டாவது ஐனாதிபதித் தேர்தல் 1988

அதன்பின் வந்த இலங்கையின் 1988 இரண்டாவது தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரணசிங்கப் பிரேமதாச அவர்கள் வெற்றியீட்டியிருந்தார். இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 61,657 (50.99 விகிதம்) வாக்குகளும், சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஸ்ரீமாவுக்கு 21,018 வாக்குகளும் பதிவாகின. இதன்போது எல்லா தொகுதிகளிலும் ஐ.தே. கட்சியே அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொண்டது.

ஆனால் அது தலைகீழான ஆதரவை வடக்கின் இரு மாவட்டங்களிலும் காட்டி நின்றது. அங்கு சு.கட்சி வேட்பாளர் ஸ்ரீமா அவர்கள் 44,197 அதிகப்படியான வாக்குகளையும் ஐ.தே கட்சியினர் 33,650 வாக்குகளை குறைந்தபடியாகவும் பெற்றுக்கொள்ள அந்த வருடத்தில் பிரேமதாச ஐனாதிபதியானார். 

ஆகவே வடகிழக்கில் இரு மாவட்டங்களிலும் வௌ;வேறான ஆதரவுத்தளம் இருந்து வந்துள்ளமையே இந்தத்தரவுகள் புடம்போட்டுக்காட்டுகின்றன.

மூன்றாவது ஐனாதிபதித் தேர்தல் 1994

ஆனால் அதன் பின் பல அசம்பாவிதங்கள், யுத்தமேகம சூழ்ந்த கால நிலை மட்டக்களப்பு வாக்காளர்களிடையே பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தமையை இலங்கையின் மூன்றாவது தேர்தல் நடந்த 1994 இல் காணக்கூடியதாக இருந்தது. 

இந்த முறை ஒரு மாற்றுக் கட்சி வேட்பாளரான திருமதி.சந்திரிக்கா குமாரதுங்க இந்த ஆண்டில் ஐனாதிபதியாகினார். அவருக்கே மட்டக்களப்பில் 144,725 (87.30விகிதம்) அதிக வாக்குகள் அளிக்கப்பட்டது. எதிராக களமிறக்கப்பட்ட ஐ.தே.கட்சி வேட்பாளர் ஸ்ரீமதி அவர்கள் வெறும் எட்டு விகித வாக்குகளையே பெற்றனர்.

ஆக மட்டக்களப்பு மக்கள் வெற்றிபெறக்கூடிய ஒருவரையே இதுவரை காலமும் ஆதரித்து வந்துள்ளனர். அது வடக்கில் தலைகீழாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால் அது மூன்றாவது ஐனாதிபதி தேர்தலில் வடக்கில் மாற்றத்தினை காட்டி நின்றது. அங்கு வாக்குகள் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்தது. யாழ் மற்று கிளிநொச்சி மாவட்ட மொத்த வாக்காளர்கள் 596,366 ஆக இருக்க அதில் மொத்தமாக அளி;க்கப்பட்ட வாக்குகளாக வெறும் 17,575 (2.97 விகிதம்) வாக்குகளே பதிவாகின. அதிலும் இங்கு ஊர்காவற்துறை மற்றும் யாழ் நகரப்பகுதி மக்களே கணிசமான வாக்குகளை செலுத்தியிருந்தனர். இதில் சந்திரிக்கா அவர்கள் 16,934 வாக்குகளைப் பெற்றதே அதிகமாக பதிவாகியிருந்தன.

ஆக, ஒரு தமிழர் வடக்கில் இருந்து களமிறங்கும் போது, கிழக்கில் உள்ள தமிழர்கள் அனைவரும் பாரிய ஆதரவினை வழங்க பெரும்பாண்மை இன பிரதிநிதிகளுக்கான வாக்களிப்பு இருபுலத்திலும் பாரியளவில் மாறுபட்டதாகவே காணப்பட்டது நாம் வரலாற்றில் மாறுபட்டவிதத்தில் பார்க்கவேண்டிய ஒரு முடிவாகும்.

நான்காவது ஐனாதிபதித் தேர்தல் 1999.

மட்டக்களப்பின் இதுவரையான வரலாற்றில் மாறுபட்ட ஒரு தேர்தலை சந்திக்க நேர்ந்தது. நான்காவது தடவை இம்முறை நடாதடதப்பட்ட தேர்தலில் மூன்று தடவைகள் ஐ.தே.கட்சிக்கு இம்மக்கள் அமோ வாக்குகளை அளித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டில்தான் தாம் விரும்பிய ஒரு ஐனாதிபதியை கொண்டுவரமுடியாத நிலையினை தரவுகள் காட்டுகின்றன. இந்த ஆண்டில் மொத்தமாக சந்திரிக்கா அவர்கள் 4,312,157 வாக்குகளையும் ரணில் அவர்கள் 3,602,748 வாக்குகளையும் மொத்தமாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்ஆண்டில் மட்டக்களப்பில் மொத்தமாக 66 விகிதமானவர்கள் வாக்களித்திருந்தனர். அதில் 104,100 வாக்குகளை (61.19%) பெற்றவராக திரு ரணில்விக்ரம அவர்கள் இருந்தார்கள் மாறாக 58,975 வாக்குகளை மாத்திரம் எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திரிக்கா அவர்கள் பெற்றுக்கொள்ள ஒரு தோல்வியை தழுவிய ஐனாதிபதிவேட்பாளரை இவர்கள் ஆதரித்திருந்தனர். அதற்கு பல அரசியல் காரணிகள் பின்புலமாக இருந்தமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இங்கு பட்டிருப்பு தொகுதி மக்கள் மிக அதிகப்படியான வாக்குகளை திரு ரணில் அவர்களுக்கு செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தரப்பட்டுள்ள அட்டவணையில் தரப்பட்ட வாக்களிக்கப்பட்ட சதவீத அடிப்படையில் மட்டக்களப்பு மக்கள் த.தே.கூட்டமைப்பின் வேண்டுகோளை தட்டிக்களிக்காமல் அதிகம் அவர்கள் வேண்டிக்கொண்ட UNP கே தமது வாக்குகளை அளிக்க மாறாக எதிராக வாக்களித்த சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளமையினையே இவ்விரு படங்களும் துலக்குகின்றன்.

UNP கட்சி வேட்பாளருக்கு இரு பிரதேசங்களிலும் அளிக்கப்பட்ட வாக்கு வீதங்கள்



சுதந்திரக் கட்சி வேட்பாளருக்கு இரு பிரதேசங்களிலும் அளிக்கப்பட்ட வாக்கு வீதங்கள்


அவ்வாறு மாறுபட்ட ஒரு சூழலிலும் வடக்கில் குறிப்பாக யாழ் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் திருமதி சந்திரிக்காவே 52,043 வாக்குகளை அதிகப்படியாக பெற்றுக்கொண்டு ஒரு வெற்றி பெற்ற ஐனாதிபதியை தெரிவு செய்தனர். ரணில் அவர்கள் 48,005 வாக்குகளையே குறைந்தபட்சம் அங்கு பெற்றிருந்தார்.

ஆக மட்டக்களப்பு தமிழ் மக்களின் விருப்பு இந்த ஐனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை வேறுபட்டதாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு இங்கு கணிசமான அளவு வாழுகின்ற முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் பார்க்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐந்தாவது ஐனாதிபதித் தேர்தல் 2005

இம்முறையும் மட்டக்களப்பு வாக்காளர்கள் ஒரு ஐனாதிபதியாக வரமுடியாதவர்கே வாக்களித்துள்ளனர். இம்முறை திரு மகிந்த ராஜபக்ச அவர்கள் ஐனாதிபதியாக ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார். ஆனால் மட்டக்களப்பில் ஐ.தே.க வேட்பாளராக களமிறங்கிய ரணில் அவர்களுக்கே த.தே.கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க வாக்குகளை அள்ளி வழங்கியிருந்தனர். 

79.51 விகித வாக்குகள் ரணில் அவர்களுக்கும் வெறும் 18.87 விகித வாக்குகளை மகிந்த அவர்களுக்கும் இம்மாவட்ட மக்கள் வழங்கி இருந்தனர். இந்த ஆண்டில் மொத்த வாக்காளர்களில் வெறும் 56 விதிதமானவர்களே இதில் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பட்டிருப்பு தொகுதி மக்கள் அமோகமான வாக்குகளை திரு ரணில் அவர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் வரலாற்றில் முதல் முதல் 99மூ விகிதமான வாக்காளர்கள் இந்த தேர்தலை நிராககரித்திருந்தனர் யாழ் மற்றும் கிளிநெனச்சி மாவட்டங்களில். மகிந்த ராஜபக்சவுக்கு 5,523 வாக்குகளே அதிகப்படியாக இங்கு இடப்பட்டிருந்தது. இங்கு அதிகமாக அளிக்கப்பட்ட வாக்குகளாக தபால் வாக்குகளே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் வாக்களிப்பு முறமை இரு மாவட்டங்களிலும் அதே வேறுபாட்டை காட்டினாலும் அங்கு நிராகரிக்கப்பட்ட வாக்குகள் ஒரு செய்தியை சொல்லி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஆறாவது ஐனாதிபதித் தேர்தல் 2010

இம்முறை இருமாவட்டத்திலும் ஒரு ஒற்றுமை காணப்படுகின்றது. விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்டு சமாதான சூழலில் எவ்வாறான ஒருமைப்பாடு இரு பிரதேசங்களிலும் காணப்பட்டன என்பதனையே இங்கு காண இருக்கின்றோம். இருப்பினும் த.தே.கூட்டமைப்பு தோல்வி பெறும் ஒருவருடன் ஒன்றுசேர்ந்து வழமைபோல் ஒட்டுமொத்த தமிழர்களையும் சிங்கள தேசத்துக்கு எதிரிகள் எனச் சொன்னதற்கு அப்பால் இந்தத் தேர்தல் மூலம் எந்த நனடமைகளையும் பெறாமல் போய்விட்டோம்.

குறிப்பாக 2010 இல் இருபெரும் தளபதிகள் களத்தில் நின்றனர். ஒன்று யுத்தத்தினை நேரில் செய்து முடித்த சரத்பொன்சேகா மற்றயவர் யுத்தத்தினை நெறிப்படுத்தி தலைமைதாங்கிய தலைவர் மகிந்த இருவரும் ஒருவேலையை வெற்றிக்காக செய்தாலும் மாறுபட்ட கட்சிகளில் களமிறங்கி இருந்தனர். இருப்பினும் மகிந்த அவர்கள் 6,015,934 (57.88மூ) வாக்குகளைப் பெற்று இரண்டாவது தடவை ஜனாதிபதியாக வெற்றிபெற வெறும் 4,173,185 (40.15மூ) வாக்குகளைப் பெற்று சரத் பொன்சேகா தோல்வியை தழுவியிருந்தார்.

ஆனால் யுத்தத்தின் வடுக்களை சுமந்த மக்கள் மகிந்த அவர்கள் மீது உள்ள கோபத்தினை தீர்த்துக்கொள்ள வேறு வழிகிடையாது சரத்பொன்சேகாவுக்கே தங்களது வாக்குகளை வழங்கி இருந்தனர். மட்டக்களப்பிவ் 68.98ம% வாக்குகளை சரத்பொன்சேகாவுக்கும் வெறும் 26% வாக்குகளை மகிந்த அவர்களுக்கும் வழங்கி இருந்தனர். இந்த ஆண்டிலும் பட்டிருப்பு தொகுதி மக்கள் பாரியளவில் சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்திருந்தனர்.

சென்ற ஆண்டைப்போல் இந்த ஆண்டிலும் இருவருக்குமான நிராகரிப்பு யாழ் கிளினொச்சி தேர்தல் மாவட்டங்களில் காணப்பட்டது. வெறும் 29% மானவர்களே வாக்களித்திருந்தனர். அதில் சரத்பொன்சேகா 63% வாக்குகளையும் மகிந்த அவர்கள் வெறும் 24% வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏழாவது ஐனாதிபதித் தேர்தல் 2015

இம்முறை தேர்தலில் இரு மாவட்டங்களிலும் மைத்திரிபால ஆதரிக்கப்பட்டார். நல்லாட்சி என்ற ஒரு தாரக மந்திரத்தை வைத்துக்கொண்டு மகிந்த அணி கணிசமான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. அதனால் மகிந்த அணி மாத்திரமல்ல அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் தமிழ் மக்களை எதிரியாக நோக்க இன்னும் இன்னும் மகிந்தவுக்கான அனுதாப அலை பெரிதாகி ஆதரவு பல்கிப்பெருகின சிங்கள மக்களிடையே. ஆனால் ஒரு எதிர்கட்சி பதவி தவிர தமிழர்களுக்கு இந்த நல்லாட்சியில் கிடைத்த பிச்சை வேறென்ன இருக்கிறது.


இந்த ஆண்டில்கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கினை அதிகம் நம்பி ஆதரித்தவர்கள் மட்டக்களப்பாரே அதாவது மாவட்டத்தில் 82 வீதமான வாக்குகளை நம்பி நல்லாட்சிக் குழுவுக்கு வழங்கிளர் பதிலுக்கு எமக்கு கிடைத்த பயன் ஒன்றுமே கிடைத்ததில்லை. இதற்கு வெறும் எதிர்கட்சி தலைவர் பதவியை கொடுத்தும் அதை வைத்துக்கொண்டு ஒரு பிரதேச செயலகத்தினைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலை. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நம்பிக்கை துரோகமிழைத்த எந்த வரலாறும் கிடையாது. மேலுள்ள வரைபில்கூட யாழ் வாக்காளர்களே அதிகப்படியான வாக்குகளை 2015 இல் மகிந்த தரப்புக்கு வழங்கியிருந்தமையை காட்டுகின்றது.

எட்டாவது தேர்தல் 2019

இத்தேர்தலில் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட பல நாட்களுக்கு பின்னர்தான் த.தே.கூட்டமைப்பு அதன் ஆதரவுக்கரத்தை சஜித்துக்கு நீட்டி தமிழ் மக்கள் அனைவரையும் இந்த அன்னம் சின்னத்துக்கு வாக்களித்துதவுமாறு திரு.சம்பந்தன் அவர்கள் பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளார். ஆனால் அதற்கு முன்னர் பல்கலைக்கழக சமுகம் இப்பிரதிநிதிகளுடன் இணைந்து தயாரித்த 13 அம்சக் கோரிக்கையினை எந்த பிரதான போட்டியாளர்களும் அவர்களது பெரும்பாண்மை ஆதரவு கருதி அவற்றை ஏற்க மறுத்த நிலையில்,

எவ்வாறு சஜித்தினை இவர்கள் ஆதரித்தனர்? இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேண்டுகோளா? இவர்கள் ஆதரிக்கச் சொல்லும் ஒருவருக்கே மட்டக்களப்பு மக்கள் மறுபேச்சு இன்றி ஆதரவளிக்கப்போகின்றார்களா? அவ்வாறு ஆதரவளித்தால் இந்த அன்னம் அணியினால் என்ன பிரயோசனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச தளத்தில் இருந்து கிழக்குவாழ் அரசியல் அனாதைகளுக்கு கிடைக்கப்போகின்றது? என்கின்ற பல கேள்விகளை இதேபோல மொட்டு வேட்பாளரிடமும் மக்கள் அடுக்கிக்கொண்டு போகின்றனர்.

ஆகவேதான், எவ்வாறான ஒரு தலைவரை கிழக்குவாழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்ற அறிவு வரலாற்றுத் தவறுகளை நிவர்த்தி செய்யும் ஒரு அடையாளமாகப் பார்க்கப்படும். மட்டக்களப்பு மாவட்டம் ஓரிரு தடவைகள் அல்ல பல தடவைகள் ஏனைய 25 மாவட்டங்களுக்குள்ளும் 2006 இல் இருந்து வறுமைக்குட்பட்டவர்கள் அதிகம் வாழும் மாவட்டமாக இடம்பிடித துயரை தலையில் சுமந்து நிற்கின்றது. மொத்த குடித்தொகையில் அது 20.3 வீதமாக இருந்து வந்துள்ளது. ஆக நாள் ஒன்றுக்கு 2 டொலர்க்கும் குறைவாக வருமானம் பெறும் ஒரு நிலைக்கு எம் மக்களை ஆழுகின்றவர்கள் தள்ளியுள்ளனர்.

இங்கு தொழில் செய்கின்றவர்களில் கிட்டத்தட்ட 60 விகிதத்தினர் விவசாயம் மற்றும மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் குறைந்த வருமானம் காரணமாக கணிசமானவர்கள் வறுமை பொறிக்குள் அகப்பட்டு இருக்கின்றனர். அதற்கு காரணம் குறைந்தளவான உற்பத்தி கிடைப்பனவு எனச் சொல்லப்படுகின்றது. விவசாயத்தில் ஈடுபடும் ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டம் மிக குறைந்த உற்பத்தியினையே காட்டி வந்துள்ளது. காரணம் காலகாலமாக ஏற்பட்டு வந்த அனர்த சூழ்நிலையாகும். 

அதுபோல் 30,000 க்கும் மேல் யுத்தம் அனர்த்தங்களால் அதிகம் கணவரை இளந்த பெண்களையும் கொண்ட மிக நலிவுற்ற பெண்களை இலங்கையிலேயே அதிகம் கொண்ட பரிதாபத்துக்குரிய மாவட்டம். இவ்வாறு நில அபகரிப்பு, மதமாற்றம், கலாசார சீரழிவு, மதுபானப் பாவனை எல்லாமே அதிகமுள்ள ஒரு அநாதரவான மாவட்டமாக, தூக்கி நிறுத்த யாருமில்லாத அன்னமிட்ட எமது தேசம கன்னத்தில் கைவைத்து கவலைப்பட யார் காரணம்?

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு எமது இந்த நலிவுறு சமுகத்தை நல்லெண்ணம் கொண்டு முன்னே கொண்டுவரும் அணிக்கே நாம் சிந்தித்து வாக்கழிக்கவேண்டும்.

எந்த வேட்பாளருக்கு நாம் வாக்களிக்கலாம்.

மேலுள்ள இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நாம் நலிவுற்ற வர்க்கமாய், சொந்த ஆற்றில், வயலில், கடலில் மாற்றானுக்கு வேலை செய்யும் திறந்தவெளி அடிமையாய் இன்னும் எத்தனை வருடங்கள் இருக்க விரும்புகின்றீர்கள் என்பதனை மட்டக்களப்பு வாழ் மக்களே அதை நீங்களே  தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்களை ஏமாற்றியவர்கள் ஏழேழு பரம்பரைக்கும் சொத்து சேர்த்து நல்ல நல்ல நிலையில் இருக்கின்றனர். அவர்களெல்லாம் உ;களிடம் வாக்குப் பிச்சை எடுத்தவர்கள். ஆனால் உங்களிடம் பிச்சையெடுக்கவே உங்களை பிச்சைக்காரர்களாக்கிவிடும் சாணக்கியம் இன்று மக்களுக்கு நன்கு புரியத்துவங்கியுள்ளது. எனவே உங்கள் தெரிவில் இம்முறை பின்வரும் தகுதி, நம்பிக்கை உள்ள ஒருவரை நீங்களாகவே தேர்ந்தெடுங்கள்.

நாம் கீழே தந்துள்ள அட்டவணையை நன்கு அவதானித்துப் பாருங்கள் அதன்படி ஒரு தலைவர் என்னவிதமான தகுதிகளை நோக்கக்கூற்றை கொண்டிருக்கவேண்டும் என்ப துநன்றாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சமுக மற்றும் அரசியல் ஸ்த்திரத்தன்மையை நிலை நாட்டும் ஒரு அரசியல் சாசனத்தினை உருவாக்கி நல்ல முதலீடுகளை உள்ளீர்கும் சாணக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும். 


அடுத்து நாட்டினை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு நல்ல நோக்கம் கொண்டவராக இருக்கவேண்டும். ஏனெனில் நாட்டில் 32 வீதமான தனியாட்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்றனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் மக்களில் 20.3 வீதமானவர்கள் வறுமைக் ஆகாட்டினடகீழ் வாழும் துர்பாக்கிய நிலைக்குள் உள்ளமை.

அதுத்து என்ன வகையான கொள்கைகளை நாட்டின், மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த முன்வைத்துள்ளனர் என்பதனை அவதானிக்க வேண்டும். புதியதாரளமயப்படுத்தல் என்கின்ற கொள்கையில் இயங்கும் அரசை நம்பி செயற்பட முடியாது. அதாவது திறந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், தனியார்மயமாக்கல், வர்த்தகத்தில் குறைந்த அரச தலையீடு, பொதுச்சேவைக்கான செலவினை குறைத்தல் ஆகியன உள்ளடங்கும். இவற்றை அனுசரிக்காத அரசு ஒன்று 1956 க்கு முதல் இருந்தது. ஆனால் அவை மாற்றம் பெற்று மக்களை ஏமாற்றிக் கொண்டுவருகின்றது.

எமது மாவட்டத்தினைப் பொறுத்தவரை இந்தக் கொள்கை பாரிய தாக்கத்தினை கொண்டு வருகின்றது. அதாவது முன்பு கூறியதற்கு அமைவாக இங்கு 60 விகிதத்துக்கு மேலாக விவசாயிகள் வாழுகின்றபோதும் அவர்கள் தெழிவான வருமானத்தினை இறக்குமதிப் பொருட்களின் வருகை, உள்ளீடுகளின் விலை அதிகரிப்பு, உற்பத்திப் பொருளுக்கான நிர்ணய விலை கிடைக்காமை போன்ற இன்னோரன்ன விடயங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதேபோல முதலீடுகளை ஈர்த்தெடுக்கும், உற்பத்தித்திறனை வளர்த்தெடுக்கும் தொழிலாளர்களை உருவாக்கும், உலக சந்தையில் உள்ளுர் பொருட்களுக்கான போட்டித்தன்மையை அதிகரிக்கும், விவசாயிகளை ஊக்குவிக்கும் அனைத்துக் கொள்கைகளையும் கொண்ட ஒருவர்தான் சிறந்த நாட்டின் தலைவராக இருக்க வேண்டும் என்பதனை இந்த வரைபு நன்கு புலப்படுத்துகின்றது. 

எது எவ்வாறிருந்தபோதும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை இனியாவது மனதில் கொள்வோம், நாம் இதுவரை செய்த அர்பணிப்புக்கான பயனை அடையாமல் பிற்போக்கான எந்த முடிவையும் எடுக்காமல் இருக்க வேண்டும். அத்துடன் தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக மாறவேண்டும். அவர்களால் இன்னும் ஏமாற முடியாது இழப்பதற்கும் ஒன்றும் இல்லை.

ஐந்தாண்டுகள் நாம் ஒரு ஆட்சியை ஒருவரிடம் கொடுக்கப்போகின்றோம். நன்கு சிந்திப்போம் வாக்களிப்போம்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

ஆக்கபூர்வமான உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படும்.

உஷாத்துணை.



0 comments:

Post a Comment