ADS 468x60

17 November 2019

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முன்னே உள்ள சவால்களும்.

வணக்கம், தேர்தலுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தோம், இப்போது அது முடிவடைவடைந்துவிட்டது. நாட்டின் எட்டாவது புதிய தலைவரை அமோக வாக்குவீதத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர். அதற்கு முதலில் வெள்ளிச்சரம் தனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றது.

நாடும், நாட்டு மக்களும் பல இன்னல்களை சந்தித்து, கடந்த அரசாங்கத்தை வெறுத்து அந்த வெறுப்பினை கோபத்தினை புதிய கட்சி, புதிய வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதன் ஊடாக தீர்த்துள்ளனர்.

ஆனால் புதிய ஆட்சியை பல சவால்களுக்கு மத்தியில் பொறுப்பேற்க்க இருக்கும் புதிய ஜனாதிபதி அவர்கள், கட்சி, இன, பிரதேச பாகுபாடுகளை களைந்து நம்நாடு முதலில் சந்தித்து வருகின்ற பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணவேண்டிய பொறுப்பு இவருக்கு உள்ளது.

குறிப்பாக சர்வதேச வர்த்தக சமமின்மை, மீளளிக்கவேண்டிய கடன் தொகை, மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சரிவு ஆகியவற்றினைக் கருத்தில்கொண்டு ஒரு புதிய பொருளாதார சீர்திருத்தத்தினை முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு இவர்முன் இருக்கின்றது.

அண்மையில் மத்திய வங்கி ஆழுனர் அவர்கள் குறிப்பிட்ட கருத்துப்படி, எந்த ஒருவர் புதிதாக நாட்டின் தலைவராக தெரிவானாலும் உடனடியாக நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க முடியாது. அப்படி குறைக்க வேண்டுமானால்,
  • போட்டித்தன்மையான பொருளாதாரக் கொள்கை,
  • பிறநாடுகளில் இருந்தான கவர்சிகரமான முதலீட்டு ஈர்ப்பு,
  • உள்நாட்டு உற்பத்தியினை கணிசமாக அதிகரித்து, ஏற்றுமதிப் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் தந்திரோபாயம்
ஆகியவற்றினை முன்னெடுக்க வேண்டும் என ஆழுனர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக ஆட்சிக்காலத்தினுள் ஆழமாக அரசியல் மற்றும் கட்சி அபிவிருத்திக்கு முக்கியம் கொடுப்பதனை நிறுத்தி, நாட்டின் பேரினப் பொருளாதார ஸ்த்திரத்தன்மையினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் 2018 இல் ஏற்பட்ட அரசியல் சாசன நெருக்கடியானது பல பொருளாதார பின்னடைவினை இக்காலத்தில் ஏற்படுத்தி வருடம் ஒன்றுக்கு 3பில்லியன் அமெரிக்க டொலரினை 2023 வரை கடனாகத் திருப்பிக்கொடுக்கும் ஒரு நிர்பந்தத்தில் எமது நாடு இருக்கின்றது.

எனவே திடீர் என எமது நாட்டின் நிதிக்கொள்கையினை மாற்றிக்கொள்வதன் மூலமோ, அரசியல் குழப்பங்களை தீர்க்காமல் வைத்திருப்பதன் மூலமோ நாம் பெற்றிருக்கின்ற கடனை திருப்பி கொடுக்க முடியாது.

ஆகவேதான் புதிய தலைவர் இவற்றை சிரமேற்கொண்டு ஒரு புதிய நாட்டை கட்டியெழுப்பவேண்டும்.

அடுத்து எமது நாணயத்தின் பெறுமானத்தேய்வு, நாணயமாற்று வீதத்தில் கடந்த காலங்களில் பாரிய மாற்றங்களை காட்டி நின்றது. இவற்றை முகாமை செய்யும் தலைமைத்துவம் இன்று தேவையாக உள்ளது. குறிப்பாக 2011 இன் அரையாண்டில் மற்றும் 2012 பெப்ரவரி காலங்களில் இவற்றில் இருந்து பாதுகாக்க 4.5 பில்லியன் அ.டொலர் அரசாங்கத்தினால் செலவு செய்யப்பட்டது. அதனால் 13 விகித தேய்மானத்துடன் அவை நிறுத்தப்பட்டது.

அதேபோன்று 2015இலும் அது நடந்தேறியது அதற்காக 2 பில்லியன் அ.டொலர் நாட்டின் ஒதுக்கத்தில் இருந்து அதை பாதுகாக்க வீணாக செலவுசெய்யப்பட்டது. ஆகவே இலங்கை இன்னுமொருமுறை இத்தவற்றை செய்துவிடக்கூடாது என்பதில் புதிய தலைவர் உன்னிப்பாக கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

பாதுகாப்பு சவால்கள், அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியன காரணமாக இந்த ஆண்டின் பொருளாதார வளர்சியானது வெறும் 2.7 வீதமாகவே காட்டி நிற்கின்றது. ஆனால் அது 3.5 வீதமாக இருக்கவேண்டும் என ஆரம்பத்தில் எதிர்வுகூறப்பட்டமை அவதானிக்கத்தக்கது ஆனால் அது நிறைவேறவில்லை. இது மிகவும் பின்னடைவான ஒரு நாட்டின் குறிகாட்டியாகவே பார்க்கப்படுகின்றது. இது மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகின்றது.

இவை தவிர தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய தலைவர் குறிப்பாக பின்வரும் தந்திரோபாயங்களை கருத்தில் எடுக்க வேண்டும்.

1. புதிய வரிவிதிப்புக்களை அமுல்படுத்துவதன் மூலமும், முன்னுரிமை அடிப்படையில் செவீனங்களை அமைத்துக்கொள்ளுவதன் மூலமும் கரிசனை காட்டவேண்டும்
2. தனியார் முதலீட்டு வர்த்தக முறைமையை கொண்டு வந்து, முதலீடு, புதிய வர்த்தகம், புதிய அணுகுமுறை ஆகியவற்றின் ஊடாக புதிய வியாபார திட்டங்களை நாட்டிற்காக முன்னெடுக்க வேண்டும்.
3. நல் ஆட்சியை முன்னேற்றமடையச் செய்யவேண்டும்
4. திறனுள்ள ஊழியத்தினை அதுபோல் நீண்டகால ஊழியர்களின் சேவை நீடிப்பு எ;னபன அதிகரித்து நாட்டின் ஊழியர்களுக்கான கேள்வியை நிவர்த்திசெய்ய வேண்டும். அதுபோல் கணிசமான அளவு திறனை அதிகரிக்க முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிடவேண்டும்.
5. அதேபோல் வறுமைப் பொறியிலும், நலிவுறு நிலையிலும் உள்ள மக்கள் அதிவிஷேச கவனத்தில் எடத்துக்கொண்டு அவர்களை முன்னேற்றமடையச் செய்யவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வடகிழக்கில் உள்ள தமிழ்மக்களை தம்பிள்ளை போல் பாதுகாத்து, அவர்களை எடுத்தேத்த வேண்டிய பாரிய கடமை ஒன்றிருக்கின்றது. இவர்கள் புதிய ஜனாதிபதித் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு காட்டிய எதிர்ப்பை முறியடிக்கும் முகமாக அவர்களை இன்னும் அருகே அணுகி உதவும் ஒரு மனப்பாங்கை கட்சி, ஜாதி, மத பேதங்களைக் கடந்து வளர்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு புதிய ஜனாதிபதிக்கு உள்ளது. அது ஒன்றும் முடியாத காரணமும் இல்லை ஏனெனில் இவர் அதிகப்படியான மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக உள்ளார்.

ஆகவே உங்களது வெற்றியில் பங்கெடுக்காத சிறுபான்மை மக்களின் கணிசமானோரின் மனங்களை வென்றெடுத்து, இனங்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாக அமைவதற்கும், குறுகிய வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற மனப்பதிவை ஏற்படுத்துவதற்கும் முன்வருவீர்கள் என்று நம்புகின்றோம்.

இந்த சவால்களை முறியடித்து பொதுமக்களின் ஆணைக்கு அடிபணிந்து எமது நாட்டை மீட்டெடுக்கும் அனைத்து வாண்மையும் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு உண்டு என நாம் நம்புகின்றோம். அதனால் நாட்டின் பொருளாதார வளர்சியை அதிகரித்து மக்களின் வறுமையை குறைத்து அவர்களை பாதுகாத்து ஒவ்வொரு குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தினையும் கணிசமாக அதிகரித்து ஒரு சுவீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதனையே இன்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

2 comments:

சுகுணன் said...

Timely written analytical article.
Congratulations Seelan

S.T.Seelan (S.Thanigaseelan) said...

Thank you very much

Post a Comment