ADS 468x60

18 November 2019

புதிய ஜனாதிபதியிடம் மக்களின் நியாயமான வேண்டுதல்!

நாம் இன்று ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து 80 விகித வாக்களிப்பை நாட்டில் வழங்கி ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த பெருமைக்குரிய குடிமக்களாக இருக்கின்றோம். எனவே புதிதாக பதவியேறறிருக்கும் இருக்கும் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களே உங்கள் செயற்பாடுகளை நாம் நம்புகின்றோம். புதிதாக உங்களை வாழ்த்துகின்றோம். இன்று ஜனாதிபதியாவதற்கு மக்கள் தமது கடமையையை நிறைவேற்றியுள்ள நிலையில் மக்களின் வேண்டுதலை ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றும் நேரமிது. பாமர மக்கள் அவரிடம் எதிர்பார்த்து நிற்கும் வேண்டுதல்களை அவர்களில் ஒருத்தன் என்றவகையில் அவற்றை முன்னுரிமைப்படுத்தி இங்கு வேண்டுதல்களாக முன்வைத்துள்ளேன்.

உங்களிடம் இருந்து நாங்கள் பொன்னோ பொருளோ எதிர்பார்க்கவில்லை, மாறாக எமது நாட்டில் ஓரு சில மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை  மக்களாகிய நாம், இலங்கையை  இறையாண்மையுடைய, பொது உடைமையான, சமயச்சார்பற்ற, சனநாயக, குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்களுக்கு, சமூக சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், அரசியல் சுதந்திரம், நீதி கோரும் உரிமை சிந்திக்க சுதந்திரம், பேசச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், தான் விரும்பும் சமயத்தைப் பின்பற்ற, வழிபாடு செய்ய உரிமை ஆகியவற்றையும் சமுதாயப் படிநிலைகளில் சமவாய்ப்புகளோடு அவரவர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான சமத்துவம் உங்கள் ஆட்சியில் கிடைக்கவேண்டும் என வேண்டுகின்றோம்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையோடு தனிநபர் சுயமரியாதைக்குச் சகோதர உணர்வோடு உறுதியளித்தல் ஆகியவற்றையும் நாம் அனுபவிக்க நீங்கள் ஆதரவு நல்க வேண்டும்.

அனைவரும் சமநிலை,யாவர்க்கும் சமநீதி, எழுத்துரிமை, பேச்சுரிமை, தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான சமத்துவம் போன்றவை அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் முன்வந்து அமுல்படுத்த வேண்டுகின்றோம்.

பேதமற்ற ஆட்சி..
எமது நாட்டு மக்களை பௌத்தர், இந்துக்கள், சிங்களவர், தமிழர் என எந்தவகையிலும் பிரித்துப் பார்காதீர்கள். நாங்கள் இலங்கைத் தாயின் குழந்தைகள் என, அனைவரையும் ஒரு தாய் பிள்ளையாய் நேசியுங்கள். உங்களுக்கு வாக்களிக்காத 6,328,244 பேரும் இலங்கைக் குடிமக்களே அவர்களையும் உங்கள்பால் ஈர்த்து முழு மக்களின் அபிலாஷைகளையும் பெறுவீர்கள் என நம்புகிறோம். 

பெண்களுக்கு முன்னுரிமை..
நாட்டின் பொருளாதார மூலவேர்களே நமது மூன்று வகையான பெண்களும்தான். அதில் ஒன்று தேயிலை இறபர் தோட்டவேலை செய்யும் பெண்கள், இரண்டு ஆடைத் தொழிலகங்களில் பணிபுரியும் பெண்கள் மூன்றாவது மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரியும் பணிப்பெண்கள்.

இங்குள்ள பெண் பணியாளர்களினால்தான் நாடு பாரிய பொருளாதார ஈட்டங்களை கொண்டுள்ளது. இதில் மத்தியகிழக்குக்கு சென்று உழைக்கும் அதிகம் பெண்கள் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இருந்து சென்று சொல்லொண்ணா துயரத்தின் மத்தியில் தமது உழைப்பை எமது நாட்டிற்கு அன்நியச் செலாவணியாக ஈட்டிதருகின்றார்கள். இருப்பினும் இவர்கள் மிக கவலையுடனே தமது வாழ்க்கையை பல அர்பணிப்புகளுடன் நடாத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களது எல்லாவிதமான துன்பங்களும் களைவதற்கு நீங்கள் ஆவண செய்யவேண்டும். அதை நீங்கள் புரிந்துகொண்டு அவற்றை நிவர்த்தி செய்வீர்கள் என எதிர்பார்கின்றோம்.

சம அந்தஸ்த்து..
நாங்கள் பயணம் செய்யும்போது வசதிபடைத்தவர்கள் ஒரு வகுப்பிலும் இல்லாதவர் இன்னொருவர் வசதி குறைந்த வகுப்பிலும் செல்லும் நிலை எமது நாட்டின் வங்குரோத்து நிலையை எமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றது.

எமது நாட்டின் புகையிரத வண்டிகளில் நாம் பார்த்திருக்கின்றோம் அங்கு வகுப்புகள் வசதிக்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருக்கும். இவற்றில் குறைந்தது மூன்றாம் வகுப்புப் பெட்டிகளையாவது உங்கள் ஆட்சியில் இல்லாது செய்து, அனைத்து மக்களும் மகிழ்சியாக வர்கபேதமின்றி பயணம் செய்யும் ஒரு யுகத்தினை உருவாக்க வேண்டுகின்றோம்.

இளையோர் வேலைவாய்ப்பு..
நம்நாட்டில் கௌரவமான வேலை நல்ல ஊதியம் இல்லை எனச் சொல்லி, உயிரை பணயம்வைத்து கடலில் வோட்டில் சென்று உயிரை காவுகொடுத்து துயரப்படும் ஒரு நிலையை இல்லாது செய்ய நல்ல கௌரவமான தொழில்வாய்ப்பினை எமது இளைஞர் யுவதிகளுக்கு உருவாக்கிக்கொடுங்கள். அதுபோல் நமது நாட்டிற்கு ஏனையநாட்டவர்களும் வேலைதேடி வரும் ஒரு யுகத்தினை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

பொருளாதாரச் சுமை களைதல்..
சூத்திரம் போடும் ஆத்திரமூட்டும் பொருளாதாரக் கொள்கை எம்போன்ற வளரத்துடிக்கும் வறுமைக்குள்ளான நாட்டுக்கு எந்த வகையிலும் ஒரு வரப்பிரசாதமாக அமையப்போவதில்லை. எனவே நியயமான விலையை அத்தியாவசியப் பொருட்களின்மீது விதிப்பதன் ஊடாக மக்களை பொருளாதாரச் சுமையில் இருந்து விடுதலை கொடுப்பீர்கள் என எதிர்பார்கின்றோம்.

ஒரு உழைப்பாழியின் மாதவருமானத்தினை குறைந்தது 60,000 ரூபாய்கள் என நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டுகின்றோம். இது இலங்கையின் தலைக்கான தனிமனித வருமானம் 4200 அ.டொலர் என கூறப்பட்டதற்கிணங்க இதை மெய்ப்பிக்க உங்களிடம் வேண்டுகின்றோம். இதற்குமேல் வேலையில்லாதவர் என்ற வர்க்கம் வெறும் பூச்சியமாக இருக்கவேண்டும் என எதிர்பார்கின்றோம்.

நலிவுற்றோர் மீதான விஷேட கவனம்..
உங்களுக்கு தெரிந்திருக்கும் ஒரு மனைவியை இழந்த ஆணினாலே அந்தக் குடும்பத்தை பராமரிக்க பெரும்சிரமப்படும் நிலையில். வடகிழக்கில் மாத்திரம் 80,000 கணவரை இழந்து நிர்கதியான குடும்பங்கள் அதிகம் நலிவுற்று, யாரும் கவனிக்காத நிலையில் குடும்பப்பாரம் சுமக்க முடியாமல் சொல்லவும் மெல்லவும் முடியாத நிலையில் சீரழிந்துபோய்க்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மீது உங்கள் கருசனை அதிகரித்து அவர்களை மீட்சிக்கும் இரட்சகராக உங்களை பார்க்க விரும்புகின்றோம்.

இன்னும் பாதிக்கப்பட்ட எமது தமிழ் பிரதேசங்கள் ஒரு சில அபிவிருத்தியுடன் பாராமுகமாக இருக்கின்ற நிலைமாறி எமது பகுதிகள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உட்கட்டுமான, சுகாதார, கல்வி, சமுக விவகாரங்களில் விஷேட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட நீங்கள் ஆவண செய்யவேண்டும்.

விவசாயக் குடிகளை பாதுகாத்தல்..
எமது நாட்டின் 40 வீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் விவசாயிகளாகும். இவர்கள் எப்படித்தான் உழைத்தாலும் அவர்களின் பங்களிப்பு உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 7 வீதம் மாத்திரமே. இந்த நிலை மாறவேண்டும், இவர்கள் நமது நாட்டின் முதுகெலும்பு, ஆனால் இவர்கள்தான் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடிமக்களில் அதிமாக இருக்கின்றனர். இதனால் முதுகெலும்பு வளையத் துவங்கியுள்ளது. இவர்களின் உற்பத்திகளை ஊக்குவிக்க கட்டுப்பாட்டு விலைகளை விதிக்கவேண்டும், மானியங்களை வழங்கவேண்டும், காப்புறுதிகளை உறுதிப்படுத்தி நஷ்டஈடுகளை வழங்கவேண்டும், உள்நாட்டுப்பொருட்களுக்கு மாறான இறக்குமதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். அதன் மூலம் நமது நாட்டின் முதுகெலும்பை பலப்படுத்தி 7 விகித பங்களிப்பை 50 விகிதமாக்கி எமது தொழிலாழிகளின் வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டுகின்றோம்.

அதுபோல சிறு முயற்றியாளர்கள் அதிகம் உருவாக வேண்டும் அதற்காக பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து இதற்கான பிரத்தியேக திறன் அவர்களிடையே போதிக்கப்பட்டு, திறனுடைய பட்டதாரிகளை உருவாக்க ஆவண செய்யவேண்டுகின்றோம்.

துஷ்டர்களை அணுகாமை...
பயங்கரவாதத்துடன் சம்மந்தப்பட்டவர்களை, தேசத்துரோகிகளை எக்காரணம் கொண்டும் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இது உங்களுக்கு மக்கள் தந்த ஆணை, அதற்கு மதிப்புக்கொடுத்து ஒரு நல்லாட்சியை நடாத்துவதற்கு உங்களை எதிர்பார்க்கின்றோம்.

காணாமற் போனோர் காணி விவகாரங்களை தீர்த்துவைத்தல்..
எல்லாவற்றுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான நாட்களாக ஆகுதி ஏதுமின்ற காணாமல் போன உறவுகளுக்காய் கண்ணீருடன் காத்துக்கிடக்கும் அன்புள்ளங்களை உங்கள் சகோதர சகோதரிகளாக மதித்தும் வெறும் அரசியல் கைதிகளாக நீதியின்று நெடுநாளாக வாடும் தமிழ் கைதிகளின் விடுதலையிலும் நீங்கள் அதிகருசனை செலுத்துவீர்கள் எனவும், இவர்களை உங்கள் தாய்போன்று மதித்து அவர்களின் வேண்டுதலை நிறைவு செய்யவும் உங்களை அன்போடு வேண்டுகின்றோம். ஆயிரக்கணக்கில் விடுதலைப் புலிகளில் இருந்தவர்களுக்கு புனர்வாழ்வளித்து புதிப்பித்த உங்களுக்கு இவற்றையும் செய்து எம்மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடிப்பீர்களென நம்புகின்றோம்.

இவற்றைப்போல் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் தமிழ் மக்களின் பூர்வீக சொந்த நிலங்களை விடுவிக்கும் அத்தனை ஆற்றலும் உங்களுக்கு இருக்கின்றது. இந்த நியாயத்தன்மையை பரிசீலித்து அவற்றை விடுவித்து அந்த மக்களின் நன்மதிப்பை பெறுவீர்கள் என நம்புகின்றோம்.

இன்னும் நில ஆக்கிரமிப்பு மத ஆக்கிரமிப்பு என்பன இல்லாத எல்லோரும் சமமாக வாழ வழிசெய்வதை நிலைநாட்டுவதன் ஊடாக சட்டம் ஒழுங்கு நீதி என்பனவற்றினை பேணிப் பாதுகாப்பீர்களென முழுநம்பிக்கை வைக்கின்றோம்.

மேலுள்ள வேண்டுதல் ஒன்றும் சாதாரண வேண்டுதல் அல்ல, ஏனெனில் நாம் இந்த வேண்டுதல்களை ஒரு சாதாரண மனிதரிடம் கேட்க முடியாது. நீங்கள் பாரபட்சம் இல்லாது உங்கள் குடிமக்களுக்கு இவற்றை செய்யக்கூடிய வல்லமை, அறிவு, திறன் உள்ளவர் அதனால் தான் இவற்றை வரிசைப்படுத்தி உள்ளேன். நீங்கள் இவற்றை கருத்தில் எடுத்து ஒரு புதிய இலங்கையை எல்லோரும் எதிர்பார்த்தற்கிணங்க எமக்கு கையளிப்பீர்கள் என நம்புகின்றோம். உங்களுக்கு இவற்றையெல்லாம் நிறைவேற்ற நீண்ட ஆயுளும், சக்தியும் கிடைக்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை கையேந்திக் கும்பிடுகின்றேன்.

ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்...

0 comments:

Post a Comment