ADS 468x60

05 November 2019

விவசாயிகளின் குரல்வளையை நசிக்கும் வெட்டுவாய்ப் பிரச்சாரம்.

இன்று ஒரு புதிதான சற்று விசனமான செய்தி ஒன்று பரவி வருவதனைப் சமுகவலைத் தளங்களில் பார்க்ககூடியதாக இருக்கின்றது. அது, திடீரென வந்த காட்டுவெள்ளம் காரணமாக இம்முறை மட்டக்களப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ள 150,000 ஏக்கர் வயல் நிலங்களில் கிட்டத்தட்ட 20-30 வீதம் வரையான வாவிக்கரையை அண்டிய வெறும் ஓரிருவார இளம் வேளாண்மைப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்ததே.

இவற்றின் மூலம் இந்த வெள்ளநீர் ஆரம்பத்திலேயே வடிந்து ஓடாவிடின் எமது மாவட்ட விவசாயிகள் பெறும் சுமார் 20-30 வரையான மெற்றிக்தொன் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்பது எனது கணிப்பு.


இங்கு நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் அது, இந்த விவசாயிகள் தாழ்நிலப்பரப்பில், அத்துமீறி நீர்தேங்கும் இடங்களில் பயிர் செய்தவர்கள் அல்ல. இவர்கள் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட உறுதிக்காணியில் முறைப்படி காலாகாலமாக வேளாண்மை செய்கை பண்ணி வருபவர்கள்.

இவர்கள் அனைவரும் விவசாயிகள், பல முதலீடுகளை இட்டு மனித வலுவை மாடாய் பயன்படுத்தி தமது பூர்வீகத் தொழிலாக இதனை தொன்றுதொட்டு செய்கை பண்ணி வருபவர்கள்.

நிற்க காலா காலமாக வெள்ள நீர் வந்து மூடுவதும் அவை 10-15 நாட்கள் இருந்து பின்னர் முகத்துவாரத்தை முட்டி உடைத்து செல்வதும் அதன்பின் வெள்ளத்தில் பாசு படிந்த பயிர்களை ஒன்று இரண்டு மடங்கு செலவு செய்து நஷ்டப்படுவதும் இம்முறை மாத்திரம் நடந்தது அல்ல.

குறிப்பாக இதற்கு முன்னர் ஒரு மாசம் அல்லது அதற்கு மேல் பயிரானதன் பின்னர் நொவம்பர் இறுதி அல்லது டிசம்பரில்தான் இம்மாதிரியான வெள்ளம் நாசப்படுத்தியதை கண்டுள்ளோம், அவதானித்திருக்கின்றோம்.

ஆனால் அண்மைக்காலமாக முகத்துவாரம் வெட்டுதல் என்கின்ற ஒன்றை புதிதாக ஆரம்பித்துள்ளனர். அதன் மூலம் விவசாயிகள் மன அளவில் ஓரளவு ஆறுதல் பட்டுக்கொண்டாலும் சமுக ஆர்வலர்கள் இவற்றின் மூலம் மாவட்டத்துக்கு வரும் எதிர்விளைவுகள் மற்றும் தனிப்பட்டோரின் சுயலாபம் என்பன கருதி இவை செய்யப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவேதான் அந்தக் குற்றச்சாட்டுக்குள் 99 வீதமான பாதிக்கப்பட்ட விவசாயிகள் அகப்பட்டுள்ளமையை குற்றம் சாட்டுகின்ற இழப்பறியாதவர்கள் கருத்தில் கொண்டு இருபக்க நியாயங்களை சொன்னால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். ஏன்பதே எனது வாதம். அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், முடிவெடுத்தல் ஆகியவற்றில் நாம் அறிய அந்த அந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் பங்களிப்பை இங்கு முடிவெடுப்பவர்கள் பெற்று அதை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துகிறார்களா என்பதே எனது கேள்வி. 

எனவேதான் இவ்வாறான புரளிகளைத் தவிர்க்க இந்த நிர்கதிக்குள் அகப்பட்ட விவசாயிகளின் சங்கப் பிரதிநிதிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் தொடர்புடைய கல்விமான்கள் புத்திஜீவிகளை அரசாங்க அதிபர் உடனடியாக அழைத்து எல்லோரதும் அபிப்பிராயங்களை கேட்டறிந்து இதன் சாதக பாதக நிலைமைகளை கருத்தில் கொண்டு ஒரு முடிவினை அதிகமானவர்களின் ஏகோபித்த இணக்கப்பாட்டுடன் செய்வார்களாயின், அது எந்த நபராலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட மாட்டாது என்பதே எனது கருத்து.

இல்லாவிடில் வந்தவனும் போனவனும் எந்தவித அடிப்படையும் இன்றி விளக்கமில்லாத விளம்பல்களை இலவசமாக உள்ள சமுகப் பொதுவெளியில் பொழுது போக்க புரளிகிளப்புவதனை யாராலும் தடுக்க முடியாது.

அதுமாத்திரமல்ல அபிவிருத்திப் பணிகளை திட்டமிடும் பொழுதும், அவற்றை நடைமுறைப்படுத்தும்பொழுதும் கட்டாயம் பெண்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களது உள்வாங்கள் நிலைத்திருக்கும் அபிவிருத்தியை நிர்ணயிக்கும் ஒன்றாக அமையும் அல்லாதவை அழிவை கொண்டுவரும் அனர்த்தங்களாகி இவ்வாறு அல்லோல கல்லோலப்பட வைக்கும் என்பதனில் எந்தவித சந்தேகமும் இல்லை.

0 comments:

Post a Comment