ADS 468x60

22 December 2022

பொது மக்கள் ஒருபோதும் தேர்தலைக் கோரவில்லை!

இன்று பல பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தவண்ணமுள்ளன. 2023ல் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மக்களின் வாழ்க்கை எளிதாகுமா? ஐஎம்எப் கடன் தொகை கிடைக்குமா? மின்சாரம் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுமா? இது போன்ற பல பிரச்சனைகள் பொது சமூகத்தில் இருப்பது போல் தெரிகிறது. தற்போது மின்சார நெருக்கடி பற்றி பேசப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்கள் வேகமாக வறண்டு கிடப்பது இதனை பாதிக்கும் முக்கிய காரணிகள் என பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மின்சார விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமையை நாம் பாதுகாக்கத் தவறினால், நாம் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மின்சாரம் இல்லாதபோது பொருளாதாரமும் அதோகெதியாகி பாதிக்கப்பட்டுவிடும்.

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் தொடர்பான கடுமையான நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசாங்கம் வெற்றி பெற்றாலும், அதை பராமரிப்பது எளிதானது அல்ல என்று தோன்றுகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. எரிபொருள்; வாங்குவதற்கு அரசிடம் போதிய பணம் இல்லை. அரசாங்கம் பணத்தை வழங்கி எரிபொருள் நெருக்கடியை தற்காலிகமாக தீர்த்து வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அச்சமும் சந்தேகமும் கொண்டுள்ளனர். அதுதான் சமூகத்தின் உண்மை நிலை.

கிணற்றில் விழுந்தவன் ஜனநாயகத்தைக் கோரவில்லை. உயிரைக் காப்பாற்ற வெளியே வரவேண்டும் என்பதே அவனது முதல் வேண்டுகோள்! அவன் வெளியே பாதுகாப்பாக வந்ததும், ஜனநாயகம் அல்லது பிற விஷயங்கள் கோரப்படலாம். அல்லது அதற்காக போராடலாம். பொருளாதாரப் படுகுழியில் இருந்து வெளிவர பங்களிப்பதே நம் அனைவரின் முதல் படியாக இருக்க வேண்டும். இதற்கும் ஒரு நிபந்தனை உள்ளது. அதாவது நாட்டில் ஓரளவு அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவது. இப்போது எதுவாக இருந்தாலும் எல்லாமே மக்களைச் சார்ந்தது என்றே சொல்லலாம்.

அரசியல் கட்சி அமைப்புகளும், பொதுமக்களும் ஒரே கருத்தில் உள்ளனர் என்று கூற முடியாது. பெரும்பான்மையான மக்கள் ஒரு பக்கமாகவும் அரசியல் கட்சிகள் இன்னொரு பக்கமாகவும் செயற்படுவதைக் காணமுடிகிறது. கட்சித் தலைவர்கள் தேர்தலைக் கோருகின்றனர். அதற்கான வழக்குகளும் நடந்து வருகின்றன. ஆனால், நாங்கள் நினைக்கும் அளவுக்கு பொது மக்கள் ஒருபோதும் தேர்தலைக் கோரவில்லை. சாமானிய மக்கள் தேர்தல் வாக்குகளால் விரக்தியடைந்துள்ளனர். அதிகாரத்துக்காக அரசியல்வாதிகளின் தேர்தல் யுத்தத்தினால் நாடு வங்குரோத்துக்கே செல்லும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். சிலர் தேர்தலுக்குத் தேவைப்படும் பெரும் தொகையை வீண் செலவாகக் கருதுகிறார்கள், இந்த நேரத்தில் இதுபோன்ற செலவுகளைச் செய்வது நியாயமற்றது. அதில் தவறு எதையும் பார்க்க முடியாது.

ஜனாதிபதியின் தலைமையில் பல அரசியல் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட ஒரு பிரேரணை, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இது பொதுமக்களின் முன்மொழிவு என்பது கருத்தில்கொள்ளவேண்டும்.

அடுத்த ஜனவரி ஐ. எம். எஃப். கடன் தொகை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திறைசேரி நிதியத்தின் செயற்குழு அந்த முடிவை எடுக்கவுள்ளது. ஏதேனும் காரணத்தால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டால், ஐ. எம். எஃப். நிறுவன முடிவுகள் மாற்றத்திற்கு உட்பட்ட வாய்ப்புள்ளது. இல்லையெனில், முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படலாம். எந்த அமைப்பும் ஒரு அரசியல் போர்க்களத்திற்கு நிதியளிக்க விரும்புவதில்லை. வாக்கெடுப்பு ஒரு நல்ல விஷயம், ஆனால் அது பொருத்தமான அமைப்பில் செய்யப்பட வேண்டும். தற்போது தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லை, அதை மெதுவாக கட்டியமைக்க வேண்டும்.


0 comments:

Post a Comment