ADS 468x60

21 August 2023

ஏன் இந்த வரட்சி இன்னும் நமது நாட்டில் தொடர்கின்றது.

கடந்த காலங்களில் நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் எப்படி வறண்டு போயிருந்தது என்பதை நாட்டு மக்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கலாம். எத்தனையோ ஆறுகள், கால்வாய்கள், ஓடைகள், குளங்கள் வறண்டு கிடப்பதையும், ஏரியின் அடிப்பகுதி வானத்தை நோக்கி வாயைத் திறந்து வற்றி இருப்பதையும் நாம் வரலாற்றில் இதற்குமுன் பெரிதாகக் கண்ட வரலாறு உண்டா சொல்லுங்கள். இது ஏன் இன்று நடந்தது? சமீபத்திய வரலாற்றை நாம் எளிதில் மறந்துவிட முடியுமா? இந்த நாட்டில் மரங்களை வெட்டி பாரிய காடழிப்புக்கு வழிவகுத்தவர்கள் யார்? யார் செய்தாலும் இன்று விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடிமக்களும் ஒத்துழைத்த குற்றத்திற்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது அல்லவா?

இவற்றின் விளைவாக, இன்று கடும் வரட்சி ஏற்பட்டு அதன் காரணமாக, நாட்டின் எட்டு மாகாணங்களில் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. 54,984 குடும்பங்களைச் சேர்ந்த 183,050 பேர் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அன்றிலிருந்து இன்றுவரை நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி என்று தம்பட்டம் அடிக்கும் மக்கள் இருக்கும் இந்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த காடழிப்புகளை சிந்தித்தால், தற்போதைய நெருக்கடிக்கு யார் காரணம் என்று இலகுவாக கண்டு பிடிக்க முடியும். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மட்டும் எத்தனை ஏக்கர் காடுகள் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அழிக்கப்பட்டுள்ளன? விமான நிலையத்துக்கு மட்டும் 5000 ஏக்கர். துறைமுகத்தின் கீழ் பரப்பளவு 4000 ஏக்கர். சஃபாரி பூங்கா 500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் மைதானம் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இப்படியாக அண்மையில் மாத்திரம் நாட்டில் 20,000 ஏக்கர் வன நிலங்கள் மற்றும் விளைச்சல்தரும் வயல்வெளிகள் இவ்வாறு அர்த்தமற்ற முறையில் அழிக்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் விவசாயத்தின் செழிப்பு நிலமாக விளங்கிய பல இடங்கள் இன்று  சஹாரா பாலைவனமாக மாறுவதையா அபிவிருத்தி என்று நம்புகின்றோம்.

இதற்கிடையில், இன்னும் மீதமுள்ள விளைநிலங்களை பாதுகாப்பது எளிதானது அல்ல. வன நிலங்களை இழந்த யானைகள் கூட்டம் தற்போது வயல்வெளிகள் மற்றும் கிராமங்களுக்கு படையெடுத்து வருகின்றன. 

நீர்த்தேக்கங்கள் தூர்வாரப்பட்ட போது சமணல ஏரியில் இருந்து தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த எதிர்ப்புகள் நியாயமற்றவை அல்ல. ஆனால் அந்தப் எதிர்புத் தொடர முடியுமா? இந்த நாட்டில் இன்னும் தெளிவான வளர்ச்சிக் கொள்கை இல்லை. தமது வயிற்றை வளர்கவென ஒவ்வொருவரும் கதை சொல்லிக் காலம் கடத்துகிறார்கள். 

பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்குவதாக விவசாயத்துறை அமைச்சர் பெருமிதத்துடன் அறிவிக்கிறார். இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு 40,000 ரூபாய் எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் இன்று ஒரு ஏக்கர் நெற்பயிர்களுக்குச் செலவழிக்க வேண்டிய தொகையை நினைக்கும் போது நாற்பதாயிரம் ரூபாய் எதற்குப் போதும்?. எனவே அவரவர் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய தெளிவான மற்றும் உண்மையான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே சரிந்து கிடக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும்.

இன்னும் உரப்பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்நாட்டு விவசாயிகள் விவசாயத்தை ஏறக்குறைய முற்றாகக் கைவிட்டு ஏனைய வாழ்வாதாரங்களில் கவனம் செலுத்தி வருவது இரகசியமல்ல. இந்தச் செலவினைச் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்களைப் பற்றி அவ்வளவு மகிழ்ச்சி இல்லை என்று பலர் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலைமையின் அடிப்படையில் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு இந்நாட்டின் விவசாயச் செயற்பாடுகளை மீட்டெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் காலத்துக்குக் காலம் நடத்த திட்டமிடப்பட்ட விவசாயப் புரட்சிகள் மற்றும் போர்கள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். 

கடந்த காலங்களில் கோதுமை மாஃபியா, அரிசி மாஃபியா என்றெல்லாம் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. நாட்டிலிருந்து அரிசியைக் கொண்டு வந்து மாபியாக்களைக் இல்லாது செய்யும்; திட்டமும் இருந்தது. அரிசி விலைக் கட்டுப்பாடு தொடர்பில் வர்த்தமானி பல கொண்டுவரப்பட்டும் அவற்றை கட்டுபடுத்த முடியவில்லை. 

எனவே, இப்போது கடந்த காலத்தைப் பற்றிப் பேசி வருத்தப்படுவதற்குப் பதிலாக நாளையைப் பற்றிப் பேச வேண்டும். நாளைய நாட்டின் எழுச்சிக்கான கதை நடைமுறைச் செயற்பாடாக இருக்க வேண்டும்.

ஊடகங்கள் முன் தம்பட்டம் அடிப்பதை விடுத்து இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. குறுகிய அரசியல் இலக்குகளை அடைவதற்குப் பதிலாக நாட்டைப் பற்றி சிந்திக்கும் சந்தர்ப்பத்தை இனியும் தள்ளிப்போடக்கூடாது.


0 comments:

Post a Comment