ADS 468x60

26 August 2023

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சீர்குலைந்தால் என்னவாகும்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி நம் நாட்டை எல்லா பக்கங்களிலிருந்தும் தாக்குகிறது. சமீபத்திய செய்தியின்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்துப்படி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான வெற்றிடம் பாதி காலியாக உள்ளது. அரச பல்கலைக்கழகங்களுக்கு மொத்தமாக 12,992 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது இங்கு 6,548 பேர் மட்டுமே உள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்சம் ஆயிரம் விரிவுரையாளர்களையாவது பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யாவிடின் பல்கலைக்கழக முறைமை சீர்குலைந்து போகும் அபாயம் இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறுகிறார்.

இது சாதாரணமாக ஒதுக்கித் தள்ள வேண்டிய விடயமல்ல. பல்கலைக் கழகம் சீர்குலைந்தால், அதன் விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும். நாட்டிற்குத் தேவையான நிபுணர்களை உருவாக்கும் பல்கலைக்கழக அமைப்பைப் பாதுகாப்பதற்கான நடைமுறை மற்றும் விரைவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டின் கல்விக்கு அவசியமாகும்.

இந்த நிலையில் பல்கலைக்கழக அமைப்பு வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதால், இரண்டு வாரங்களுக்குள் செயலணியை நியமித்து இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, அரச பல்கலைக்கழக முறைமையை நவீனமயப்படுத்துவதற்கான தேசிய மூலோபாய திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, முகாமைத்துவ ரீதியாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கௌரவமான பெயரைப் பெற்றுள்ளமையினால் அந்தப் பணிகள் இந்தப் பல்கலைக்கழகங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதிக வரி விதிப்பு மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே பிரதான காரணம் என்பதை அண்மைய நாட்களில் பதிவாகும் சம்பவங்களில் இருந்து அவதானிக்க முடிகிறது. 

ஒரு காலத்தில், பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்வதிலிருந்து கூடத் தவிர்த்திருந்தனர். எவ்வாறாயினும், இந்த நெருக்கடியைத் தீர்ப்பதில், ஆளும் கட்சி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அடிப்படையை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு தொடர்ச்சியாக காணப்படுமானால், நாடு மேலும் சிக்கலில் சிக்குவதை தவிர்க்க முடியாது.

பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி சில பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலைகளை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளமை மிகவும் வருத்தமளிக்கிறது. இது ஒரு பாரதூரமான சோகம். கடந்த ஒன்பது மாதங்களில் சம்பளமின்றி விடுமுறை நோபேய் பெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 5000 என அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சேவையிலிருந்து விலகிய ஆசிரியர்களில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களும் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலைமை கடினமான பாடசாலைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சங்கம் கூறுகிறது. இவ்வருட இறுதியில் மேலும் 5000 ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளதாகவும், அதற்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளாவிடின் பாடசாலை முறைமைக்கு முறைகேடான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில், தற்போது சேவையில் இருக்கும் ஒரு ஆசிரியரையாவது விட்டுச் செல்லும் அபாயம் ஏற்பட்டால் கல்வி அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஒரு நாட்டின் பாடசாலை அமைப்பு மற்றும் பல்கலைக்கழக அமைப்பு ஆகியவை நாட்டின் அடுத்த திசையை நிர்ணயிக்கும் அடிப்படை காரணிகளாகும். இந்த அமைப்புகள் சிதைந்தால், இன்னும் இரண்டு தலைமுறைகளில் நம் நாட்டில் ஒரு முட்டாள் கூட்டம்தான் மிச்சமாகும். நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள், அறிவு மற்றும் தொழில்நுட்பம் இல்லாதவர்களால் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. எனவே, இந்த இரண்டு அமைப்புகளிலும் உள்ள நெருக்கடிகள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் மற்றும் உண்மையான நடைமுறை தீர்வுகளை இனியும் தாமதப்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்கள் நம்பிக்கையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முழுமையான பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.


0 comments:

Post a Comment