ADS 468x60

29 January 2024

சாவு கிடையாது சம்பந்தன் சேர்

ஆழ்ந்த இரங்கல்களை சொல்லவா ஆங்கிலம் கற்பித்தீர்கள்!

எமது கிராத்தில் இருந்து முழு உலகத்திலும் உள்ள மாணவ மணிகளை படைத்து இன்று எமை விட்டு மீழாத் துயில்கொள்ளும்  இராசையா திருஞானசம்பந்தன்(ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்)  சேருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் முதலில்.

நான் நினைக்கின்றேன் அது 90 ஆம் ஆண்டு காலம். அப்போ அதிபயங்கரமான காலகட்டம். கல்வி என்பதே முயல்கொம்பு எங்களுக்கு. அந்த காலத்தில். அதிலும் ஆங்கிலம் கச்சி வேப்பங்காய். ஏனெனில் ஒழுங்கான ஆசிரியர்கள் அந்த நேரத்தில் கிடையவே கிடையாது. ஏதோ ஆங்கிலம் தவிர்ந்து ஐந்து பாடங்களில் சித்தியடைந்து, தத்தி தவழ்ந்து கரைசேர்ந்தாலே பெரிய விடயம் அப்போ.

இவ்வாறான ஒரு பற்றாக்குறையான காலத்தில்தான் வற்றாத வளமாக எமது ஊர் பாடசாலைக்கு வந்தார் திருஞானசம்பந்தன் சேர். அவரை சம்பந்தன் சேர் என்றே அழைப்போம். 

அவர் வந்த நேரம் ஆங்கில ரிவிசன் கிளாஸ் யாரும் தருவதில்லை. அந்தப் புத்தகம் மாத்திரம் அழகாக ஒத்த கூடக்கிழியாம பத்திரமா இருக்கும். அது இப்பவும் எனக்கு ஞாபகம். இடை இடையே வயதுபோன ஓய்வுபெற்ற ஒரு சிலர் ஆசிரியர்களாக வாடகைக்கு வந்துபோவார்கள் கோடைகால மழைபோல அவ்வளவுதான். 

இந்த பெரிய இடைவெளி உள்ள நேரத்தில்தான், சம்பந்தன் சேர் எமது கிராமத்து தேத்தாத்தீவு மகா வித்தியாலயத்துக்கு வருகின்றார். 

அப்போதுதான் ஆங்கிலப் புத்தகம் அடுக்கி வைத்த இடங்களைத் தேடிக் கொண்டுவரத் துவங்கினோம். வாசித்தல், எழுதுதல், பேசுதல், கேட்டல் என பல சங்கதி அதுக்குள் இருப்பதை அவரால் அறியத்துவங்கினோம். ஊர் எல்லாம் அப்போ ஆங்கிலக்காச்சல் பரவத் துவங்குகின்றது. அதற்குக் காரணம் சம்பந்தன் சேரின் கண்டிப்பு, அவர் அவரது கடமைமேல் வைத்திருந்த பற்று என்பன காரணமாக இருந்தது. 

அவரே ஊர் தலைவராய் இருப்பதுபோல் பாவனை செய்தோம். ஏனெனில் அவரே இந்த ஊருக்கு முன்னோடியாக பிள்ளைகளைக் கண்டித்து நல்வழிப்படுத்த ஈடுபட்டார். அதனால் பெற்றோர்களும், அவருக்கு மரியாதை கொடுக்கத் துவங்கினார்கள் ஏதும் பிள்ளைகள் பிழை செய்தாலும் பெற்றோர்களால் முடியாததனை 'சம்பந்தன் சேரிட்ட சொல்லவா' என பிள்ளைகளை மிரட்டும் அளவுக்கு அவர் மேல் நம்பிக்கை கொண்டிருந்தது ஊர். பிள்ளைகளுக்கு தனியாளாக நின்று கற்பித்தலில் மாற்றத்தினைக் கொண்டு வருகின்றார். 

பூ.... இதுதானா ஆங்கிலம் என மனதை எண்ணவைத்து அதை படிப்பதனை ஒண்ணவைத்தவர். வீணாய் பொழுதுபோக்கும் மாணவர்களை ஆணா பெண்ணா என்று பார்க்காமல் நல்வழிகாட்டவே நையப்புடைத்தார். அவர்களில் நானும் ஒருத்தனாக இன்று வையம் அறியும் வகையில் ஆங்கிலத்தில் ஓருளவு புலமை பெற்றுள்ளேன் என்றால் அவரன்றி இது சாத்தியமே இல்லை.

பெற்றோரின் பேரழுத்தம் காரணமாய் ஆங்கிலம் கற்றோரை அதிகரிக்க பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்கின்றார். அதை அவர் காசுக்காய் செய்யவில்லை குழந்தைகளின் எதிர்கால ஏற்றத்துக்காய் செய்தார். அதன்பின்னர் இரவு பகல் பாராமல் கல்வி கற்பிபதனையே அவரது உயிராக நேசித்தார். ஆதனால் பல அரட்டையடிக்கும் அந்தக்காலத்து ஆசிரியர்கள் பலர் இவரை பகைத்துக்கொண்டதனையும் நாம் பார்த்தோம்.

இந்த பெருமகனால் தேத்தாத்தீவுக் கிராமம் மாத்திரமா பயனடைந்தது! இல்லை, எனக்குத் தெரிந்த வகையில் பட்டிருப்புத் தொகுதியில் குருக்கள்மடம் துவங்கி கல்லாறுவரை அந்த 'சம்பந்தன் சேர்' எனும் கல்வி மரத்தில் பயன்பெறலாயினர். இவர் மிக பங்சுவாலிட்டியானவர். நடத்தை ஒழுக்கம் என்பனவற்றை நன்கு கற்றுக்கொடுத்தார். அவற்றை தவறுகின்றவர்கள் அவரது சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் அவரிடம் 'நோ எக்ஸ்கியூஸ்'. அதுதான் அவரது உள்ளும் வெளியும். அதுபோல நேரத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை என்வாழ்வில் இவர் தவிர எவரும் கற்றுக்கொடுத்ததில்லை. அதிகாலையிலேயே ஆரம்பித்துவிடுவார் அவர் பணியை, அது மழை குளிர், எதுவாக இருந்தாலும் மாற்றம் இராது.

இன்னும் ஞாபகம் இருக்கின்றது. ஒரு தடைவ நான் அவர் வகுப்புக்களை நடாத்திக்கொண்டிருந்தவேளை அவரை சந்திக்கச் செல்கின்றேன். அப்போது 'வாங்க தணிகசீலன்' என எனது பெயரை அழகாக உச்சரித்து, ஆங்கிலத்தில் என்னுடன் உரையாடி, 'இவர் எனது பழைய மாணவர்' என பெருமையாக அந்த மாணவர்கள் மத்தியில் சொல்லி, மகிழந்த நொடி எனை இன்றும் நெகிழ வைக்கின்றது.

இவாது பிரத்தியேக வகுப்பில் ஒரு புறம், பத்திரிகைகள், புத்தகங்களால் நிரம்பி இருக்கும். பொழுதுபோக்க போதிய கருவிகள் இருக்கும் அவை அனைத்தும் கல்வியே போதிக்கும். இவருடைய கையெழுத்து அத்தனை அழகு. அவருடைய உச்சரிப்பு தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி அத்தனை துல்லியம். இத்தனைக்கும் ஆசிரியத்தினைத்தாண்டி அவர் ஒரு எழுத்தாளர், பாடகர், நாடக நடிகர், கவிஞர் என பல்திறமையாளர்.

இவர் பாடத்தினை மாத்திரம் படிப்பிக்கவில்லை, வாழ்கையினையும் கற்றுக்கொடுத்தார். அதனால் ஆயிரம் ஆயிரம் மாணவ மணிகள் இன்று ஆலவிருட்சமாகி பயன்தந்துகொண்டிருப்பதற்கு நீங்களே காரணம் என்பது மிகையில்லை சேர்.

இன்னும் எழுதிகொண்டு போகலாம், ஆனால் அதற்காதக ஒரு புத்தகம் தேவை. இவ்வாறான ஒரு நல் ஆசானை இன்று எமது மாவட்டம் இழந்துள்ளது. அது எனக்கு தாங்கமுடியாத வேதனையை தருகின்றது. 'சேர்' உங்களைப்போல ஆசிரியர்கள் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும், அந்த ஊர் தழைத்தோங்கும், நெறியுடையோர் நிலத்தில் நிறைவார்கள், அறிவுடையோர் ஆட்சிபுரிவார்கள். ஆங்கிலம் கற்று திரைகடலையும் வென்றுவிடுவார்கள்! ஏன் அரசியலும் அழகாய் அலங்கரிக்கும்.

உங்கள் ஆத்மக சாந்திபெற என்றும் என் கிராமம் சார்பாக பிரார்த்தித்தவனாக உங்கள் அணையா தீபத்தில் உயிர்வாழும் மாணவன்.

S.தணிகசீலன்.


0 comments:

Post a Comment