ADS 468x60

25 February 2024

மத்தியவங்கியின் சம்பள அதிகரிப்பும் ஒடுக்கப்பட்ட பொதுமக்களும்.

சம்பளம் போதாது, வாழவே பிடிக்கல, ஒரு பொருட்களையும் கிடைக்கிற சம்பளத்தில வாங்கமுடியல என எல்லோருமே அரசியல்வாதிகளைத்தவிர விரக்தியில் இருக்கின்றனர் இன்று. இந்த நேரத்தில்தான் மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரித்த சம்பள உயர்வு நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 29.53 வீதம் முதல் 79.97 வீதம் அதிக விகிதாச்சாரத்தில் மூன்று வருட ஊதிய திருத்தத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளது. 

தெரியுமா மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் மாதாந்த சம்பளம் 1.7 மில்லியனில் இருந்து அலுவலக உதவியாளர்களின் சம்பளமும் ரூ. 974,965 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு அலுவலக உதவியாளரின் மொத்த ஊதியம், ஒரு நுழைவு நிலை மருத்துவரின் ஊதியத்தை விட இப்போது உயர்ந்துள்ளது என்று அனைவரும் தெரிவிக்கின்றனர்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தற்போது பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இவ்வளவு பெரிய சம்பள அதிகரிப்பை முன்னெடுக்க நாணயச்சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலத்த விவாதம் நடைபெற்றது. பொதுவாக சம்பள உயர்வுக்கு எதிராக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், சமூகத்தில் இன்று பட்டிதொட்டியெங்கும் இதுபற்றிய விவாதம் அதிகமாக உள்ளது. 

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அண்மைக்காலமாக அதிகரிக்கப்பட்டமை தெரியவந்ததையடுத்து, மத்திய வங்கி அகப்பையினை கையில் வைத்துக்கொண்டு தமக்கு தாமே பங்கிட்டுக்கொள்வது சரியா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பள உயர்வு 79 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக சிலர் தெரிவித்தனர். இதன்காரணமாக, இந்த உயர் சம்பள அதிகரிப்புக் குறித்து கஷ்டத்தின் மத்தியில் வாழும் சாமானியர்களிடம் கேள்வி எழுப்புவது நியாயம் என நினைக்கிறேன்.

இன்று மக்கள் அதிகரித்துள்ள பொருட்களின் விலை மற்றும் வரிச்சுமையை எதிர்கொள்வதோடு, பாணுக்கும் காசில்லாமல் பரிதவித்து வருகின்றனர். இவ்வாறு தாங்கள் வாழக்கூட முடியாத இக்கட்டான சூழ்நிலையில் மத்திய வங்கி தமக்கென உயர் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்வது சரியா என பெரும்பான்மையான சாதாரண மக்கள் கேட்கின்றனர். 

நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளால் ஏற்படும் துன்பங்களையும் மக்கள் அதன் சுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு, எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான நீண்ட வரிசைகள் மற்றும் மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பது அனைவருக்கும் நினைவிருக்கிறது. 

ஆனால், அந்த மிகக் கடினமான காலகட்டத்திலும், நாட்டின் மிகப்பெரும்பாலான சாதாரண பொதுமக்கள், மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், அந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் அதிகபட்ச சுமையைத் தாங்க வேண்டியுள்ளது. 

இருந்த போதிலும், இந்த இக்கட்டான தருணம், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு அதே வலியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் அல்லவா? நாடு வங்குரோத்தான பிறகு, நாடு ஓரளவு மீண்டு, ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெற்றுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை சாமானிய மக்கள் மீது மட்டும் சுமத்துவது நியாயமில்லை. தற்போது ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையை எட்டியுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. 

அக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் சுமையை சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகவும் சமமான அடிப்படையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். ஆனால், இந்த ஊதிய உயர்வினை மாத்திரம் அதற்கு உதாரணம் காட்ட விரும்பவில்லை.

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் கடந்த வருடங்களில் அதிக சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் நாம் அறிந்துள்ளோம். தகவலுடன்; அதனைக் கூறுவதானால், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 2006 இல் 93 சதவீதமும், 2015 இல் 72 சதவீதமும் அதிகரித்துள்ளது. எனவே தற்போதைய ஆழுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் காலத்தில் மாத்திரமல்ல சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் அந்த மத்திய வங்கி ஊழியர்களின் வருமான வரியை மத்திய வங்கியே செலுத்தியதும் சிறப்பு. குறிப்பாக 2019க்குப் பிறகு, அந்த வரிகள் மத்திய வங்கி ஊழியர்களுக்கு மத்திய வங்கியால் செலுத்தப்படாது. 

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு முழுமையான விளக்கத்தை வழங்குமாறும் மத்திய வங்கியிடம் பாராளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதற்கு மத்திய வங்கி இந்த நாட்களில் தயாராகி வருவதாகவும் அறியமுடிகிறது. மத்திய வங்கி கூறும் சம்பள அதிகரிப்பு கதை பற்றிய அனைத்து உண்மைகளும் எதிர்வரும் காலங்களில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும். ஆனால் நாடு இன்னும் உயிரோடு இயங்குகின்றது, மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள், எனவே மத்திய வங்கியின் பாரிய சம்பள அதிகரிப்பு பற்றி பலர் ஒடுக்கப்பட்ட பொது மக்களின் பக்கம் இருந்து பேச வேண்டியுள்ளது.


0 comments:

Post a Comment