ADS 468x60

05 November 2024

பொதுப் பணத்தை நம்பியிருக்கும் அதிகாரிகளை நாட்டின் மீது அக்கறையுள்ள அதிகாரிகளாக மாற்றுவதே முதல் பணி.


இன்று நடப்பவற்றை அவதானித்தால் நாம் அழுவதற்கு பிறந்த நாட்டு மக்களா! என எண்ணத்தோணுது. வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது மக்கள் அழுகிறார்கள். நிலச்சரிவுகள் வந்து அண்டை வீட்டாரை உயிருடன் புதைக்கும்போது மக்கள் அழுகிறார்கள். வீதி விபத்துகளில் இளைஞர்கள் உயிரிழக்கும்போது ஒட்டுமொத்த நாடும் அழுகிறது. நாட்டின் ஆட்சியாளர்கள் கொழும்பில் குளிர் அறைகளில் இவற்றை பேசிவிட்டு ஓரிரு வாரங்களில் அனைத்தையும் மறந்து விடுகின்றனர். மழைக்காலத்தில் மரங்கொத்திகள் கூடு கட்ட பேரம் பேசுவதும், மழைக்காலம் முடிந்ததும் அந்த எண்ணத்தை மறந்து விளையாடுவதும் ஒரு கதை. இலங்கையின் ஆட்சியாளர்களும் அப்படித்தான்.

பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று காயமடைந்துள்ளதுடன் 23 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் அதுவும் கடந்து போகும்.

உலக வங்கியின் தரவுகளின்படி, தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் விபத்துக்களினால் ஏற்படும் இறப்பு வீதத்தில் முதலிடத்தில் உள்ளது. அந்தத்தரவில், வீதி விபத்துக்களால் இலங்கை வருடாந்தம் சுமார் 3,000 உயிர்களை இழக்கிறது எனவும், மேலும் சுமார் 8,000 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி ஊனமுற்றவர்களாக மாறுகின்றனர் எனவும் அதிர்சியூட்டுகிறது.

வீதி விபத்தில் பலியானவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் வேலைசெய்யும் வகுதியினர்;. 15-64 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் சுறுசுறுப்பாகவும் தொழிலாளர் சக்திக்கு பங்களிப்பவர்களாகவும் உள்ளனர். வீதி விபத்து மரணங்கள் மற்றும் காயங்கள் இலங்கை போன்ற நாடுகளில் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-5மூ வரை செலவாகும் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, துன்ஹிந்த - பதுளை வீதியில் விபத்துக்குள்ளான போது, கொத்தலாவல பாதுகாப்புக் பல்கலைக்கழகத்தின்  36 மாணவர்கள், 03 விரிவுரையாளர்கள், குழுவிற்குப் பொறுப்பான பயிற்றுவிப்பாளர், மற்றும் பேருந்தின் சாரதி உட்பட 42 பேர் இருந்தனர். இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துக்குக் காரணம், வளைவில் இருந்து நீண்ட காலமாக வெளிப்பட்ட பெரிய கல் அகற்றப்படாததால் இதற்கு முன்னரும் இந்த இடத்தில் பல வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக துன்ஹிந்த பிரதேச மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். குறித்த பாதையில் அதிவேகமாக சென்ற பேருந்தின் முன் இடது டயர் கல் மீது மோதி பஸ் கவிழ்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், விபத்தையடுத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் அங்கு வந்து கல்லை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து நடக்கும் முன், கற்களை அகற்ற, அதிகாரிகள் ஆர்வம் காட்டியிருந்தால், அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்காது. இச்சம்பவம் இதுபோன்ற முதல் சம்பவம் அல்ல. அதிகாரிகளின் அலட்சியத்தால், இதற்கு முன், இதுபோன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. மார்ச் 20, 2021 அன்று, கொழும்பு-பதுளை வீதியில் லுனுகல என்ற இடத்தில் பேருந்து விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் படுகாயமடைந்தனர்.

வீதியில் குறுக்காய் கிடந்த கல் ஒன்று நீண்ட காலமாக அகற்றப்படாமல் கிடப்பதே லுனுகல விபத்துக்குக் காரணம். பயணிகளின் உயிரைப் பறித்த பின்னர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரும் அங்கு பணிபுரிந்து சில நாட்களுக்குள் அபாயகரமான கல்லை அகற்றியுள்ளனர். அதன் போது ஊவா மாகாண ஆளுனர் பல தடவைகள் இந்த கொடிய கல்லை அகற்றுமாறு நோட்டீஸ் எழுதி கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

சில அரசு அதிகாரிகள் தங்களின் சேவைக்குக் தரும் சம்பளம், சலுகைகள் பற்றி கவலைப்படுவதில்லை என்பதையே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் காட்டுகின்றன. அரசாங்க சேவையை அலட்சியப்படுத்தியமையால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புதிய அரசாங்கத்தின் முன் இருக்கும் பாரிய சவாலாக பொதுப் பணத்தை நம்பியிருக்கும் அதிகாரிகளை நாட்டின் மீது அக்கறையுள்ள அதிகாரிகளாக மாற்றுவதே முதல் பணி.


0 comments:

Post a Comment