ADS 468x60

15 May 2026

ஒருவரின் வெற்றிக் கொண்டாட்டம், மற்றவரின் ஆறாத வடுவாக இருக்கும் வரை உண்மையான நல்லிணக்கம் என்பது எட்டாக்கனிதான்

எமது நிலத்தின் காயங்களை ஆற்ற பௌதீக ரீதியான புனரமைப்பு மிக அவசியம் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில், போருக்குப் பிந்தைய இந்த ஆண்டுகளில் எமது பகுதிகளில் வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன, புகையிரதப் பாதைகள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன, எமது பிள்ளைகள் கல்வி கற்க அழகான பாடசாலைகளும், சிகிச்சை பெற நவீன மருத்துவமனைகளும் உருவாகியுள்ளன. இதற்காக நாம் செய்த முதலீடுகள் எமது பொருளாதாரத்தைச் சற்றே நிமிர்த்தியுள்ளன. சுற்றுலாத்துறை வளர்ந்து, நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதை எம்மால் பார்க்க முடிகிறது.

இருப்பினும்...வெறும் கற்களாலும் சீமெந்தினாலும் கட்டப்படும் கட்டடங்கள் மட்டுமே ஒரு தேசத்தின் வெற்றியைத் தீர்மானித்துவிடாது. வீதிகள் போடப்பட்டாலும், அந்த வீதிகளில் நடந்து செல்லும் மக்களின் இதயங்களுக்கு இடையே இன்னும் தூரம் குறையவில்லை என்பதே கசப்பான உண்மை.

எம்மிடையே ஒரு பொதுவான 'தேசியக் கதை' (National Narrative) இல்லை. தெற்கில் இருப்பவர்களுக்கு இந்தப் போரின் முடிவு ஒரு வெற்றிக் கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் வாழும் எனது தமிழ் உறவுகளுக்கு, இந்தப் போர் என்பது இடம்பெயர்வு, இழப்பு மற்றும் சொல்லொணாத் துயரங்களின் வடுக்கள் நிறைந்த ஒரு நினைவு. இந்த இரு வேறுபட்ட உணர்வுகளை நாம் ஒரு புள்ளியில் இணைக்கத் தவறிவிட்டோம். ஒருவரின் வெற்றிக் கொண்டாட்டம், மற்றவரின் ஆறாத வடுவாக இருக்கும் வரை உண்மையான நல்லிணக்கம் என்பது எட்டாக்கனிதான்."

"இன்றுவரை, காணாமல் போன தங்கள் உறவுகளுக்காகக் காத்திருக்கும் எத்தனையோ குடும்பங்களுக்கு நாம் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் மன நிறைவுதான் இந்தத் தேசத்தின் அமைதிக்கான அத்திவாரம். அதேபோல், உள்கட்டமைப்பு வளர்ந்திருந்தாலும், எமது இளைஞர்கள் இன்னும் வேலைவாய்ப்பின்றித் தவிக்கிறார்கள். வறுமை எமது கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது. அபிவிருத்தி என்பது கொழும்பிலிருந்து திட்டமிடப்படுவதாக மட்டும் இருக்கக் கூடாது; அது எமது மக்களின் தேவைகளை உணர்ந்து, எமது சமூகத்தால் இயக்கப்படுவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் 'புறக்கணிக்கப்படுகிறோம்' என்ற உணர்வு எம்மிடமிருந்து மறையும்.

இறுதியாக நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்...

இலங்கையின் வெற்றி என்பது இனி வரும் காலங்களில் போர் இல்லாத நிலையை வைத்து மட்டும் அளவிடப்படாது. மாறாக, இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு சிங்கள, தமிழ் மக்களும் சரிசமமாக மதிக்கப்படுகிறோம், எமது உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன, நாம் இந்த நாட்டின் ஒரு அங்கம் என்று உணரும்போது மட்டுமே அந்த வெற்றி முழுமையடையும்.

 

0 comments:

Post a Comment