ADS 468x60

08 May 2026

கால்நடை வளர்ப்பும் நிலப்பிரச்சினையும்: மட்டக்களப்பு மாவட்டத்தின் நெருக்கடியான யதார்த்தம்

2009 ஆம் ஆண்டு முடிவுற்ற உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இலங்கையில் பொருளாதார மீள்கட்டமைப்பு பற்றிய உரையாடல்கள் அரங்கேறிய அதேவேளை, வடக்கு-கிழக்கு மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்கள் புதிய முறையிலான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் நிகழ்ந்து வரும் மேய்ச்சல் நில மோதல்கள், வெறும் பொருளாதாரப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், நிலம், அடையாளம் மற்றும் அரசியல் அதிகாரம் தொடர்பான ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. இந்த ஆய்வுக் கட்டுரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடைப் பொருளாதாரத்தின் வரலாற்று முக்கியத்துவம், தற்போதைய நெருக்கடியின் பன்முக பரிமாணங்கள், அதன் சமூக-பொருளாதார விளைவுகள் மற்றும் நிலையான தீர்வுக்கான சாத்தியமான வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்கிறது.

மட்டக்களப்பு மாவட்டம் ஐந்து தலைமுறைகளுக்கும் மேலாக கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. 1970களின் தொடக்க காலத்திலிருந்தே, மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பிரதேசங்கள் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க கால்நடைத் தீவனப் பகுதிகளாக விளங்கி வந்துள்ளன. ஏறாவூர்ப்பற்று (செங்கல்லடி) பிரிவுக்குள் அமைந்துள்ள இந்தப் பகுதிகள், சித்தாண்டி, இலுப்படிச்சேனை மற்றும் முறக்கொட்டாஞ்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக இருந்து வந்தன. 2023 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, 1,072 குடும்பங்கள் இந்தப் பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போருக்குப் பிந்தைய காலத்தில் உருவான மேய்ச்சல் நில மோதல்கள், இந்த பண்ணையாளர்களில் பலரை இடம்பெயர வேண்டிய கொடூரமான சூழலை உருவாக்கியுள்ளன.

இந்த நெருக்கடியின் தீவிரத்தை புள்ளிவிவரங்கள் அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன. சமீப காலங்களில் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த குடியேறிகளின் ஆக்கிரமிப்புகளின் விளைவாக 1,400க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன என்பது நிலைமையின் கொடூரத்தைக் காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டிலிருந்து மட்டும் 10,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் பல்வேறு வழிகளில் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் தினசரி பால் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தங்கள் மேய்ச்சல் நிலங்களை இழக்கும் முன்பு, உள்ளூர் பால் பண்ணை விவசாயிகள் மாவட்டத்தின் பால் உற்பத்தித் துறைக்கு தினமும் சுமார் 15,000 லிட்டர் பால் வழங்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வந்தனர். மில்கோ மற்றும் நெஸ்லே போன்ற தேசிய அளவிலான நிறுவனங்களின் பால் சேகரிப்பு மையங்களுக்கு இந்தப் பால் விநியோகம் செல்வதால், உள்ளூர்ப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்தத் தொழில் விளங்கியது.

மேய்ச்சல் நிலப் பிரச்சினையின் வேர்களை ஆராய்ந்தால், கொள்கை மற்றும் நிர்வாக தோல்விகளின் சிக்கலான வலையமைப்பு வெளிப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு நில அளவை மேற்கொள்ளப்பட்டு மேய்ச்சல் தரைக்கு நிலம் ஒதுக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட வர்த்தமானியை இதுவரை வெளியிடாதிருப்பது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிலைப்பாடு இதற்கு முக்கிய தடையாக உள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 20% ஆக இருந்த காட்டுப் பரப்பளவு தற்போது 12%க்கும் குறைவாகத் தாழ்ந்துள்ளதால், மேலும் மேய்ச்சல் தரைக்காக நிலம் ஒதுக்குவதற்கான கோரிக்கைகள் சுற்றுச்சூழல் காரணங்களை முன்னிறுத்தி புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் இந்த வாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதே பாதிக்கப்பட்ட சமூகத்தின் குற்றச்சாட்டு.

இதற்கு மேலதிகமாக, கால்நடைகளின் சரியான பதிவுகள் இல்லாத நிலை இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. 2020 ஆம் ஆண்டு வரை ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் சுமார் 130,000 கால்நடைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 300,000 முதல் 500,000 வரையான கால்நடைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பண்ணையாளர்கள் தங்களிடம் உள்ள கால்நடைகளை பதிவு செய்வதில் காட்டும் தயக்கம், பல்வேறு காரணங்களால் உருவானதாக இருக்கலாம் - வரிவிதிப்பு பற்றிய அச்சம், நிர்வாகக் கட்டுப்பாடுகள் பற்றிய கவலை, அல்லது அரச அமைப்புகள் மீதான அடிப்படை நம்பிக்கையின்மை. ஆனால் இந்த பதிவின்மை எதிர்காலத்தில் மேய்ச்சல் நிலம் ஒதுக்கப்படும்போது பண்ணையாளர்களுக்கே பாதகமாக அமையக்கூடும் என்பதை அவர்கள் உணர வேண்டியது அவசியம்.

மகாவலி 'B' வலய அபிவிருத்தி முன்னெடுப்பு இந்த நெருக்கடியை மேலும் சிக்கலாக்கியுள்ளது. 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 14,000 முதல் 16,000 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்டது. ஆனால் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், குறிப்பாக 'B' வலயத்தின் விரிவாக்கம், இந்த பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களின் மீது புதிய அழுத்தங்களை உருவாக்கியுள்ளது. மகாவலி அபிவிருத்தி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, மகாவலி திட்டம் மூலம் காணி பெற்றவர்களில் சிங்களவர்கள் 96.16% ஆகவும், வடக்கு-கிழக்குத் தமிழர்கள் வெறும் 1.42% ஆகவும், முஸ்லிம்கள் 2.39% ஆகவும் உள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் மகாவலி திட்டத்தின் கீழ் நிலம் வழங்குவதில் உள்ள சமத்துவமின்மையை தெளிவாகக் காட்டுகின்றன.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலம், வளம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான பெரிய அளவிலான சனத்தொகை பொறியியல் முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் பலமாக முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக 'வில்வ பொத்தாண' என்ற பெயரில் ஒரு புதிய நிலப்பகுதி நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படலாம் என்ற அச்சம் சமூகத்தில் நிலவுகிறது. அதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் அரசியல் நோக்கமும் இருக்கலாம் என கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் எச்சரிக்கின்றன. அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச்சட்டம், மாகாணங்களுக்கிடையிலான குடியேற்றங்களில் அந்தந்தப் பகுதிகளின் சனத்தொகை விகிதாசாரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டாலும், இந்த விதிமுறைகள் திட்டமிட்ட வகையில் மீறப்படுகின்றன என்பதே குற்றச்சாட்டு.

இந்த நிலைமையை எதிர்கொண்ட கால்நடை வளர்ப்பாளர்கள், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் சித்தாண்டி பிரதான வீதியின் ஓரமாகத் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். 400 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்த இந்தப் போராட்டம், பின்னர் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆரம்பத்தில் அதிக உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் தற்போது மந்தமான நிலையிலுள்ள ஒரு குறியீட்டுப் போராட்டமாகத் தொடர்கிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி போராட்டத்தின் 730 ஆவது நாள் நிறைவு அடைந்த போதிலும், எந்தவொரு உறுதியான தீர்வும் கிடைக்காத நிலை தொடர்கிறது. பண்ணையாளர்களின் பிரச்சினை பொதுமக்களின் கவனத்தையும் கரிசனையையும் பெற்றிருந்தாலும், அதற்கு உறுதியான தீர்வை ஏற்படுத்தும் அளவிற்கு பரவலான அரசியல் அழுத்தம் உருவாக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினையின் தேசிய அளவிலான பொருளாதார விளைவுகளையும் புரிந்துகொள்வது அவசியம். நாட்டின் மொத்தப் பாலுற்பத்தி தேவையில் சுமார் 17% மட்டுமே உள்நாட்டு உற்பத்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்தால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலுற்பத்தி மேலும் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது. அது நாட்டின் மொத்தப் பால் உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பால்மா உள்ளிட்ட பாலுற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஏற்கனவே பல மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணயம் செலவிடப்படுகிறது. இந்த நிலையில் உள்நாட்டு உற்பத்தி மேலும் குறையுமாயின், அதன் பொருளாதார விளைவுகள் நாட்டின் ஏற்கனவே நெருக்கடியான பொருளாதார நிலையை மேலும் தீவிரமாக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் சரியான முறையில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால், மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை நாட்டின் மொத்த கால்நடை எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்பது வெளிப்படும்.

இந்த நெருக்கடிக்கான நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, உடனடி நடவடிக்கைகளின் அவசியம். 2022 ஜூலை 21 அன்று வழங்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி, மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் இருந்து அனைத்து அத்துமீறிக் குடியேறியவர்களையும் வெளியேற்ற வேண்டும். மகாவலி அதிகாரசபை நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழியை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். ஆனால் நீதிமன்ற தீர்ப்புகள் வெறும் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது; அவற்றை செயல்படுத்தும் அரசியல் விருப்பமும் நிர்வாக திறனும் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, 2011 ஆம் ஆண்டு அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டபடி மேய்ச்சல் நிலங்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். 2011 ஜூன் 8 அன்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 15,035 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்குமாறு நிலம் மற்றும் நில அபிவிருத்தி அமைச்சகத்திற்கு பாராளுமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் இதுவரை அந்த வர்த்தமானி வெளியிடப்படவில்லை. இந்த தாமதத்தின் காரணங்களை ஆராய்ந்து, அதற்கான தடைகளை அகற்றுவது முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, கால்நடைகளின் முறையான பதிவு மற்றும் ஆவணப்படுத்தல் அவசியம். எதிர்காலத்தில் மேய்ச்சல் தரை ஒதுக்கப்படும் வாய்ப்பு உருவானால், பதிவு செய்யப்பட்டிருக்கும் கால்நடை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மேய்ச்சல் நிலம் ஒதுக்கப்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. ஆகையால், பண்ணையாளர்கள் தங்களுடைய கால்நடைகளை முறையாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துவது மிக முக்கியமானதாகும். இதற்காக பண்ணையாளர்களின் அச்சங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பதிவு செய்வதால் ஏற்படும் நன்மைகளை தெளிவாக விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

நான்காவதாக, மாவட்ட எல்லைகளை தெளிவாக வரையறுத்து, மேய்ச்சல் தரைகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் வரையறுக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற இனமுறுகல் நிலைகளைத் தவிர்க்க முடியும். அதேவேளை, சேனைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கும் அவர்களுடைய மாவட்டங்களுக்குள் உரிய இடங்களை ஒதுக்குவதன் மூலம், கால்நடை வளர்ப்பு, நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கப்படலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த விவசாய நடைமுறைகள் நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

ஐந்தாவதாக, நவீன கால்நடை வளர்ப்பு முறைகளை அறிமுகப்படுத்துவதன் அவசியம். பாரம்பரிய திறந்த மேய்ச்சல் முறை பல சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், அதிநவீன தொழில்நுட்பங்களையும் விஞ்ஞான முறைகளையும் பயன்படுத்தும் நவீன பால் பண்ணை மாதிரிகளை ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவின் 'அமுல்' போன்ற நிறுவனங்களின் வெற்றிகரமான மாதிரிகளை ஆய்வு செய்து, உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துப் பயன்படுத்தலாம். நீர்த் துளைகள் அமைத்தல், தீவன சாகுபடி மேம்படுத்தல், பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் தயாரிப்புகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

ஆறாவதாக, கிழக்குப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம். விவசாயத் துறையையும் கொண்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலுற்பத்தியை அதிகரிக்கத் தேவையான வழிமுறைகளை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்து, அதனைச் சம்பந்தப்பட்ட பிராந்திய மற்றும் தேசிய நிறுவனங்களுக்கு பரிந்துரைகளாக வழங்க வேண்டும். கால்நடை வளர்ப்பாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள், நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு, மற்றும் சந்தைப்படுத்தல் திறன்களை மேம்படுத்துதல் போன்ற செயல்திட்டங்களை பல்கலைக்கழகம் முன்னெடுக்கலாம்.

ஏழாவதாக, அரசியல் தீர்வின் அவசியம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைக்கும் புதிய அரசாங்கம், மேய்ச்சல் தரை தொடர்பாக கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவான தெளிவான கொள்கையை உருவாக்குவது அவசியமாகும். இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; இனச்சமநிலை, நிலநீதி மற்றும் மக்களாட்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதை அரசியல் தலைமைகள் உணர வேண்டும். மாகாண சபைகள், சட்ட நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நில உரிமை மீறல்களை ஆராய்ந்து, அரசியல் மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியமாகின்றன.

எட்டாவதாக, கால்நடை காப்பீட்டுத் திட்டம் நிறுவப்பட வேண்டும். தற்போதைக்கு கால்நடை இழப்புகளுக்கான பாதுகாப்பு இல்லை. கால்நடைகளின் மதிப்பை கருத்தில் கொண்டு, விலங்குகளின் மரணம், நோய் அல்லது வன்முறைச் சம்பவங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் காப்பீட்டுத் திட்டம் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.

ஒன்பதாவதாக, மகாவலி 'B' திட்டத்தின் நிர்வாக அமைப்பை மறுசீரமைக்க வேண்டும். தற்போது வெலிக்கந்தையில் செயற்படும் நிர்வாக அலுவலகத்தை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மாற்றுவதன் மூலம், உள்ளூர் மக்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் சேவைகளை எளிதாகப் பெற முடியும். இது நிர்வாக வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் மேம்படுத்தும்.

பத்தாவதாக, தேசிய மட்டத்தில் கொள்கை மாற்றங்கள் தேவை. அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச்சட்டத்தின் விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவது, மாகாண அதிகாரங்களை மதித்தல், மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான குடியேற்றங்களில் சனத்தொகை விகிதாசாரத்தைப் பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகள் அவசியம்.

மயிலத்தமடு மற்றும் மாதவணை மேய்ச்சல் தரைகள் தொடர்பான பிரச்சினை, வெறும் மேய்ச்சல் நிலப் பிரச்சினை அல்லது கால்நடைப் பண்ணையாளர்களின் தனிப்பட்ட சிக்கல் என்ற அளவிற்குள் மட்டும் சுருங்கிப் போகாதது. இது தமிழ் பேசும் மக்களின் நில உரிமை, அரசியல் பொருளாதாரம், இன அடையாளம் மற்றும் சக வாழ்வு அரசியல் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் ஒரு முக்கிய சமூக-பொருளாதாரப் பிரச்சினையாகும். போரின் பேரழிவிற்குப் பின்னர் நாடு தழுவிய பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், இலங்கையில் பேரினவாத அரசியல் திடமானதாகவே தொடர்கின்றது என்பதை இந்தப் பிரச்சினை வெளிப்படுத்துகிறது. இது மீண்டும் ஒரு வன்முறைமிக்க முரண்பாட்டுச் சூழலை உருவாக்கக்கூடிய சாத்தியத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

எனவே, இந்த நெருக்கடிக்கான தீர்வு பரந்த அளவிலான, ஒருங்கிணைந்த மற்றும் வினைத்திறனான நடவடிக்கைகளை கோருகிறது. கால்நடைப் பண்ணையாளர்கள், மாவட்ட மட்ட அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின் அதிகார அமைப்புகள் ஆகியவை இணைந்த ஒரு வலுவான பொது அணியாகச் செயற்பட்டு, நீண்டகாலமாக நீடித்து வரும் இந்நிலைக்குத் தீர்வு காண வேண்டும். இதன் மூலம் மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்தின் வளமான கால்நடைப் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க முடியும். நாட்டின் மொத்தக் கால்நடை உற்பத்தியிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடை விவசாயம் வழங்கும் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பது வெறும் மனிதாபிமான கடமை மட்டுமல்ல; இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் நீண்டகால சமாதானத்திற்கும் அவசியமான முன்நிபந்தனையாகும்.

0 comments:

Post a Comment