இன்று எமது கடற்கரைகளில் செல்கின்ற பொழுது, அது போன்ற ஒரு மனிதாபிமான செயற்பாட்டினை எம்மால் காணக் கிடைக்கவில்லை. தங்களுடைய சொந்தக் கடற்கரையில், தங்களுக்கு உரித்தான அந்த இயற்கைச் சொத்தில், ஒரு குறிப்பிட்ட சீசனுக்குப் படுகின்ற மீனை வேண்டி உண்ண ஆவலோடு காத்திருக்கின்ற இந்த உள்ளூர் ஊர் மக்களை, எந்தவிதத்திலும் கணக்கெடுக்காத ஒரு துர்ப்பாக்கிய நிலையினை நான் இங்கு நேரடியாகவே காணுகின்றேன். "கையிலே வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல" என்று எமது முன்னோர்கள் சொல்லிய பழமொழி தான் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருகின்றது. ஊர் மக்கள் தங்கள் கண் முன்னே துடிக்கத் துடிக்கப் பிடிக்கப்படும் மீனை வாங்கி உண்ண ஆசைப்படுவார்கள். ஆனால், அந்த மக்கள் வேண்டுமென்றே அலைக்கழிக்கப்படுகின்றார்கள். அவரிடம் போய் வாங்குங்கள், இவரிடம் போய் வாங்குங்கள் என்று இன்னொருவரைச் சுட்டிக்காட்டுகின்ற பலரை நான் அங்கே கண்டேன். இது மிகவும் வெட்கக்கேடான ஒரு விடயம்.
பழைய காலத்திலோ அல்லது வேறு சில இடங்களிலோ, இன்றும் கூட அங்கு நிற்கின்ற ஊர் மக்களுக்கும், அக்கம் பக்கத்தில் இருக்கின்ற கிராம மக்களுக்கும் அந்த மீனை முதலில் பகிர்ந்து கொடுப்பார்கள். அதன் பிறகு தான் எஞ்சியவை இடைத்தரகர்கள் கைகளுக்கும், பெரும் வியாபாரிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதுதான் உண்மையான நியாயமும், தர்மமும் கூட. அந்த நிலம், அந்தக் கடல் நாங்கள் தொழில் செய்கின்ற இடமாக இருக்கலாம், ஆனால் அந்த மண்ணின் மக்கள் அதை முதலில் அனுபவிக்க நாம் இடமளிக்க வேண்டும் அல்லவா? உங்களைத் தேடி வருகின்ற மக்களுக்கு, அந்தப் பெரும் வியாபாரிக்குக் கொடுக்கின்ற அதே விலையில் ஏன் அந்த மீனைப் பார்த்து நேரடியாகக் கொடுக்க முடியாது? இது ஏமாற்றமடைந்த மக்கள் சார்பாக, உங்களுடன் நான் கேட்கின்ற மிகவும் நியாயமான கேள்வி.
இந்தப் பிரச்சினை வெறுமனே ஒரு கடற்கரையோடு, ஒரு கரைவலையோடு முடிந்துவிடுகின்ற தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது எமது ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பிலும் ஊடுருவியிருக்கும் ஒரு கட்டமைப்பு ரீதியான வீழ்ச்சியின் வெளிப்பாடு. வளங்கள் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே குவிக்கப்படுவதும், மக்களின் உழைப்பைச் சுரண்டி இடைத்தரகர்கள் மட்டுமே அதீத லாபம் அடையும் ஒரு முறையற்ற அமைப்புமே இன்று காணப்படுகின்றது. சரியான முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால், உற்பத்தியாளனுக்கும் சாதாரண நுகர்வோனுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு முற்றுமுழுதாக அறுந்து போயுள்ளது. இது மீன்பிடித் துறையில் மட்டுமல்ல, எமது விவசாயம் கூட இதே அவல நிலையைத் தான் சந்திக்கின்றது. கொளுத்தும் வெயிலில் வயலிலே நெல் விளைவிக்கும் விவசாயி போதிய வருமானமின்றி வறுமையில் வாட, அதை அவனிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி விற்கும் இடைத்தரகர்கள் நகரங்களில் மாளிகைகளில் வாழ்கின்றார்கள். கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு பாடசாலை போதிய பௌதீக வளங்கள் இன்றித் தவிக்க, அதனை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கல்வி என்பது ஒரு பெரும் வியாபாரமாக மாறிவிட்டது. நவீன வீதி வசதிகளை மேம்படுத்தி, பல புதிய உட்கட்டமைப்புக்களை உருவாக்கி, முதலீட்டு வலயம் அமைத்து, உள்ளூராட்சி சபை ஊடாகப் பல பாரிய திட்டங்களை முன்னெடுத்தாலும், இவை யாவும் கடைக்கோடி மனிதனுக்குச் சென்றடைகின்றதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
நாம் இன்று நவீன யுகத்தில் வாழ்கின்றோம். எதற்கெடுத்தாலும் ஒண்லைன் தொழில்நுட்பம் என்றும், இ கொமர்ஸ் என்றும் நாங்கள் பெருமைப்படுகின்றோம். உலகின் எந்த மூலையில் இருந்தும் பொருட்களைச் சில விநாடிகளில் வாங்கக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. ஆனால், நமது சொந்தக் கடலில் பிடிக்கப்பட்ட மீனை, நமது சொந்த மக்களுக்கு நேரடியாக வழங்கக்கூடிய ஒரு சாதாரண உள்ளூர் வர்த்தக முறையை, ஒரு மனிதாபிமானக் கட்டமைப்பை நாம் ஏன் இழந்துவிட்டோம்? தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருந்தாலும், மனித மனங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
நிச்சயமாக, இந்த இடைவெளியை நிரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்காக, நாங்கள் யாரையும் ஒட்டுமொத்தமாகக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட முடியாது. அந்த மீனவனும் பல இலட்சம் ரூபாய் கடனில் வலைகளை வாங்கி, இயந்திரங்களுக்கும் எரிபொருளுக்கும் பெரும் பணம் செலவழித்துத் தனது தொழிலைச் செய்கின்றான். அவனுக்கு உடனடியாகப் பணம் தேவைப்படுகின்றது; தனது கடன்களை அடைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கின்றது. அதனால் தான் அவன் முன்கூட்டியே பணத்தைக் கொடுக்கும் இடைத்தரகர்களை நம்பியிருக்கின்றான்.
எனவே, இங்கு மாற்றம் என்பது வெறுமனே தனிமனிதர்களிடம் மட்டும் ஏற்படக் கூடாது, அது கொள்கை அளவிலும், கட்டமைப்பு ரீதியிலும் ஏற்பட வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எவ்வளவு தான் சிறந்த முறையில் வரையப்பட்டாலும், அவற்றின் அமுல்படுத்தல் சரியான முறையில் இடம்பெறாவிட்டால், அடித்தட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. கொள்கைகளின் அமுலாக்கம் என்பது மக்களின் தேவைகளை உணர்ந்ததாக இருக்க வேண்டும்.
புகழ்பெற்ற பொருளாதார ஆய்வாளர் தோமஸ் அவர்கள் கூறுவது போல, "பொருளாதாரம் என்பது வெறுமனே பணத்தையும் இலக்கங்களையும் நிர்வகிப்பதல்ல; அது மனிதர்களின் தேவைகளையும், சமூகத்தின் வளங்களையும் நியாயமான முறையில் இணைக்கும் ஒரு கலையாகும்." இந்த நியாயமான இணைப்பை நாங்கள் எமது சமூகத்தில் உறுதி செய்ய வேண்டும். எமது பொருளாதாரம் எதிர்வரும் காலங்களில் ஒரு மீண்டெழு பொருளாதாரமாக அமைய வேண்டுமானால், அதன் ஆணிவேர் மக்களிடம் இருக்க வேண்டும். எந்தவொரு நெருக்கடியிலும் தளராமல், மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரு மீண்டெழு சமூகத்தை உருவாக்க, வளங்களின் மீதான மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.


0 comments:
Post a Comment