கால்கள் நகர மறுத்தன ஓங்கிக் குலை(ர)க்கும் நாய்களின் சத்தம், ஓரங்களில் நிற்க்கும் பற்றைக்காடுகள், தேங்கிக் கிடக்கும் மழை தண்ணீர், இவற்றுக்கு இடையே மின்னிக் ஒளிரும் குப்பி விளக்குகளின் அடியில் மண்டியிட்டுக் கிடக்கும் குழந்தைகளை போகும் இடம் எல்லாம் கண்டோம்.
எமது நாடு எங்கோ சென்று கொண்டிருக்கிறது, இருந்தும் இன்னும் இருளில் மண்டிக் கிடக்கும் எம் தமிழ் குழந்தைகளின் கல்வியும், இருள் மயமாய் போய்விட்டது. அது ஒரு கசப்பான அனுபவம். சென்ற பரம்பரை அந்த கல்விச் செல்வத்துக்கு உரித்தற்றவர்களாக நடந்த கொடிய யுத்தம் அவர்களை நிர்க்கதியாக்கியுள்ளது.



பெரிய அடர்ந்த காடு, வில்லுக்குளத்தின் ஓரங்காரங்களில் ஓங்கி வளர்ந்த மதுரை மரங்களின் இடையே முளைத்து நின்ற பற்றைக்காடுளினுள் ரீங்காரமிடும் சில்லூறுகள், சீனிக்கற்கள் போல் பால் மணல் மண்ணில் உயர்ந்த நாவற்சோலை, அதன் அருகே பெரியவட்டி, சின்ன வட்டி, உப்பு வட்டிக்குளங்களின் பசுமையின் அரவணைப்பில்; பாடித்திரியும் பறவையின் ஒலி, பக்கத்தில் ஆலையடி முன்மாரிக்கண்ட வயல் ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பயங்கொள்ள வைக்கும் நிஷப்த இடம்.
