ADS 468x60

07 July 2019

கதிர்காம பாதயாத்திரை: முருகன் அழைத்தால்தான் போகலாம்!-01

காலைப் பொழுது 'பில் பில்' என விடியத்துவங்கியதும், 'கரார் கரார்' என வீட்டின் வெளியே ஒரே சத்தம்.  வானொலிப் பெட்டி வெளியில் பக்திகானங்களை ஒலித்த வண்ணம் இருந்தது. 

'இஞ்சே உரிச்ச தேங்காயெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு சும்மா பாத்திட்டு இருக்காம அதுக்கு முடிகூட்டி எடுங்க பாப்பம்' என அம்மா அப்பாவுக்கு கட்டளை இடுவதுமாக ஒரே பரபரப்பாக இருப்பதை உணர்ந்து, நானும் நேரகாலத்துக்கு எழும்பி வெளியில் வந்தேன்.

எனது அப்பா அப்போதான் வாழை இலையை பொங்கல் பானையின் மேல் போட்டு அதன்மேல் அகப்பையை பாரம் வைத்துக்கொண்டிருந்தார். மறுபுறத்தில் தங்கச்சி ஒரு சுழகில் அவலைப் உமிநீக்கிப் புடைத்துக்கொண்டிருந்த இந்த காட்சிதான் அனைத்து குடும்பங்களிடையேயும் கதிர்காம பாதயாத்திரை போகும்போது களைகட்டி இருக்கும். 

காலாகாலமாக கதிர்காமம் நடைபாதையூடாக செல்வது இலங்கையில் வடகிழக்கு மற்றும் ஊவா பிராந்திய தமிழர்களின் பாரம்பரிய ஒரு மரபாக இருந்து வருகின்றது. 

'என்ன மச்சான் மூணாம் திகதி கொடி ஏற்றம் போல' என ஒருவர் கேட்க, அதற்கு மற்றவர் 'இல்லை ரெண்டெண்டுதானே கலண்டரில இருக்கு' எனக் கூற 'சரி சரி பாப்பம் இந்த முறை நடையில போகலாம் என நினைக்கிறன். வேலை வெட்டிகளும் பெரிச இல்லாம சுருக்கிட்டு வாரன் பாப்பம் மச்சான்' என மற்றவர் பதிலளிக்க 'எதுக்கும் முருகன் அழைக்கணுமே, அதுக்கும் குடுத்து வைக்கணும் பாப்பம்' என சம்பாசனைகள் ஆரம்பித்து விடும் நடைபாதை அடியவர்களிடையே.

அவ்வாறு செல்லுபவர்கள் பக்தி முக்தியாக, உலக பந்தங்களில் இருந்து விலகி குறித்த அந்த நாட்களில் இறை நாமத்தினை நாவில் ஜெபித்தவர்களாக, மச்சம் மாமிசம் தவிர்த்து மாலையணிந்து கதிரை மலை முருகன் ஆலயம் நோக்கி காட்டுப் பாதைகள் ஊடாக செல்லுவது வழமை.

இந்த வழமைக்குள் பல விடயங்களை எமது பூர்வீக இனம் புதைத்து வைத்துள்ளமையை நானும் பல வருடங்கள் சென்று வந்தவன் என்ற வகையில் உங்களிடம் அந்த பயண அனுபவத்தினை பகிர விரும்புகின்றேன்.

கதிர்காமமும் தமிழர்களும்

எமது நாட்டில் தமிழர்களுமத் சிங்களவர்களும் ஒரே வரிசையில் நின்று இறைவனை நெஞ்சாரப் பிரார்த்தித்து வரும் ஒரே இடம் எதுவென்றால் நாம் முதலில் கதிர்காமத்தைச் சொல்லி விடலாம்.

பழம்பெரும் காலத்திலிருந்தே இந்த இரு சமூகங்களுக்கும் கதிர்காமத்தில் வீற்றிருக்கின்ற முருகக் கடவுளுக்கும் இடையில், அழிக்க முடியாத பந்தம் நிலவி வருகின்றது.ஒரு காலத்தில், வட இலங்கையை ஆண்டுவந்த எல்லாளனுடன் போர் புரியச் செல்ல முன், சிங்கள மன்னன், துட்டகைமுனு கதிர்காமத்திற்கு வந்து முருகனை வணங்கி, அதன் பின் அந்தப் போரில் வெற்றி அடைந்தான் என, சிங்களவர்களின் சரித்திரக் கதைகள் கூறுகின்றன.

அதன் பின் துட்டகைமுனு மன்னனால் இந்தக் கோயிலுக்கு பல மானியங்கள் அளிக்கபட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

தமிழர்களுக்கோ தனிப் பெருங் கடவுள், முருகன்! தமிழ்மொழியை உலகுக்கு அளித்தவனென முருகன் போற்றப்படுகின்றான். தமிழர்களின் பழம்பெரும் வழிபாடாக வேல் வழிபாடு இருந்து வருகின்றது

யாத்திரை சொல்லும் தத்துவம்.
இந்துக்களின் ஒவ்வொரு விடயங்களுக்கும் பின்னும் பலமான தத்துவப் பின்புலம் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம். அந்த வகையில் இந்தப் பாதயாத்திரை நமக்கு பல விடயங்களைப் புகட்டுகின்றது. 

இது எமக்கு கலாசாரம், நம்பிக்கை, வேண்டுதல், அனுபவம், ஓற்றுமை, பாரம்பரிய உணவு, உயிர்களிடத்தில் அன்பு, மன அடக்கம், இறை நம்பிக்கை மற்றும் சுய நம்பிக்கை, தலைமைத்துவம் திட்டமிடல், ஒழுங்குபடுத்துதல், நடைமுறைப்படுத்தல், சாதனை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற பல நற்பண்புகளை பிரதிபலித்து கிடைக்கும் அனுபவங்களாக இந்த யாத்திரை அமைந்திருக்கின்றது.

எழுதப்படாத கதிர்காம யாத்திரை விதிமுறைகள்.

ந்த யாத்திரைக்காக அடிப்படையில் சில எழுதப்படாத விதிமுறைகள் இருந்து வருகின்றன. ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இந்தப் பாதையாத்திரை செல்ல ஆயத்தமாகவேண்டு மெனில் எவ்வாறு செல்ல வேண்டும் எனக் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.

வீட்டில் கல்லாயணம், குழந்தை பிறப்பு, மரணம் இவை நிகழ்ந்து அண்மைக்காலமாக இருக்கக்கூடாது, அதிக நோயுள்ள ஒருவரை குடும்பத்தில் வைத்துவிட்டுச் செல்லக்கூடாது, பாரிய ஏதாவது வேலையை இடையில் விட்டுச் செல்லக்கூடாது என சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

காரணம் அவ்வாறான நிலையில் செல்லுகின்றவர்கள் உண்மையான இறை நினைவோடு செல்லுவது முடியாத காரணமாக இருக்கும் என்பதனாலாகும். அத்துடன் அங்குள்ள எந்த ஜீவராசிகளுக்கும் தீங்கு விளைக்காது, ஒரு சிறு பொருளையாவது அங்கிருந்து எடுத்துச் செல்லக் கூடாது இவை அனைத்தும் முருகப்பெருமானின் சொத்து என க்கூறுவதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு பங்கம் இல்லாது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பாரிய ஒரு பொருளுண்மையைப் புதைத்து வைத்திருக்கின்றனர்.

அதுபோல் இங்கு வருகின்ற அடியவர்களை ஒருவருக்கொருவர் 'சுவாமி' எனத்தான் அழைப்பது வழக்கம். ஏனெனில் முருகன் கலியுக தெய்வமாதலால் பக்தர்கள் ரூபத்தில் எம்பெருமான் வரலாம் என்கிற ஐதீகம். அதற்குள்ளும் பல விடயங்கள் புதைந்து கிடக்கின்றன. அதாவது இங்கு ஏற்றத்தாழ்வு, பெரியவர் சிறியவர், படித்தோர் பாமரர் என அனைவரையும் சமமாக நோக்கவேண்டும் என்கின்ற உண்மையை நாம் கண்டு கொள்ளலாம்.

அத்துடன் எவர் எதைக்கேட்டாலும் மற்றவர்க்கு உடனடியாக இல்லையென்றாமல் உவந்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லப்படுகின்றது. இவ்வாறு எழுதப்படாத விதிமுறைகள் பல எம்மை நல்லடியாராக மாற்றி ஒரு பரிபூரணத்தினை வழங்கிவிடுகின்றது.

நாம் செல்லும் காட்டுப் பாதை.

குறிப்பாக பாத யாத்திரை செல்லும் அநேக அடியவர்கள் பானமையில் அமைந்துள்ள உகந்தை முருகன் ஆலய முன்றலில் இருந்தே தமது பயணங்களை தொடங்குவர். அந்த இடத்திலே இருந்துதான் காட்டுப்பாதை ஆரம்பமாகின்றது.

அதனிடையே வழமையாக தரித்து நின்றுபோக என, கிணற்றடி, குமுக்கன் ஆறு, பெரிய வெட்டை, நாவலடி, நாவலடி வெட்டை, வியாள ஆறு, வள்ளியம்மன் ஆறு, கானகத்துப் பிள்ளையாரடி அதன் பின் கதிர்காமம் என இவர்களது பாதை நிறுவப்பட்டிருக்கின்றது.
இந்தப் பாதை கல்லும் முள்ளும், காடும் மேடும், குன்றும் குழியும், குளமும் குட்டையும், ஆறும் கடலும், மரமும் மலையும், காட்டு மிருகங்களின் கர்ஜனையும் என பல சவால்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு விசித்திர வனம் நிறை பாதை. 

இதை தாண்டி முருக சிந்தனையுடன் நடந்து போவதனை பாதை யாத்திரை, நடந்து போறது, நடைப்பயணம் மற்றும் பல சொற்றொடர்களால் பிரதேசத்துக்கு பிரதேசம் மாறுபட்ட பெயர்களில் அவரவர் வசதிக்கேற்ப அழைத்து வருகின்றனர்.

மாலையைப் போட்டு, கழுகுமலைப்பத்தைப் பாடி மண்டியிட்டு பெற்றோரின் அருளாசியுடன் அரோகரா என புறப்படலானோம்.

முடிகூட்டிய தேங்காயை எடுத்துக்கொண்டு முக்கண்ணன் மகனான கொம்புச்சந்நிதிக்கு கொண்டுபோய் சிதற உடைத்து சீக்கிரமாய் பிரயாணப்பட்டோம் உகந்தைநோக்கி. 

உகந்தை செல்லும் வழியில்; சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்தை தரிசித்துவிட்டு புறப்படலானோம்.

புனானயை ஊடறுத்து உகந்தை ஆலயத்தினை அடைந்ததும், அங்கே ஒரு மர நிழலை தெரிவுசெய்து அதன் கீழ் கொண்டுவந்த பொதிகளை கச்சிதமாய் இறக்கிவைத்து சற்று கை கால் அசதிபோக இளைப்பாறலானோம்.

இவ்வாலயம் புராதன முருகன் ஆயலங்களில் ஒன்றாக இருக்கின்றது. இதன் கிழக்கே ஆர்பரிக்கும் வங்கக்கடல், மேற்கே புலியும் யானையும் புகளிடமகக்கொண்ட யால வனம், வடக்கே குன்றுகள் அடங்கிய தொடர்மலை என இயற்கையாக அமைந்து விட்டதனால்; நாடுவோர் இன்பம் பெற உகந்த இடமாய் இருப்பதனால் உகந்தை என அழைக்கப்படுவது சாலவும் பொருந்தும்.

இங்கு அடியவர்கள் தங்கிப்போக அன்னதான மடங்களும் கட்டப்பட்டு இருக்கின்றது. 

இங்கு காலாறிய பக்தர்கள் சற்று வெய்யில் சாயத்துவங்கியதும் கால் நடையை ஆரம்பித்தனர். நாங்களும் அவர்களுடன் இணைந்து பி.ப 2 மணியளவில் யாத்திரையினை ஆரம்பித்தோம்.

அரோகரா அரோகரா என அடியெடுத்து வைத்தோம். எமது உணவு உடை மற்றும் தேவையானவற்றினை குடிநீருடன் எடுத்துக்கொண்டு குமரன் இருக்கும் வீடு நோக்கி குதூகலமாகப் புறப்பட்டோம்.

கிட்டத்தட்ட 10 கி.மீ தூரம் நடக்கலானோம். காற்று பலமாக வீசத்துவங்கியது. 

தலையில் ஒரு முடை, கையில் ஒரு பொதி, முதுகில் ஒரு மூட்டை என பல சுமைகளைத் தூக்கிக்கொண்டு தூரம் நடக்கத் துவங்கலானோம். முதல் நாள் என்பதனால் மூச்சிரைக்கத் துவங்கியது. இருந்தும் ஒருவாறு நடந்து முடித்தோம்.

அங்கே சென்றதும் ஒரு மர அடியாகப் பார்த்து துப்பரவாக்கிக்கொண்டு கொண்டு சென்ற விரிக்கையினை விரித்து பாரங்களை இறக்கி வைத்தோம். 

இப்படி பலர் தாங்கள் வந்த குழுக்குழுவாக ஒவ்வொரு இடமாக ஒதுங்கி இருக்கலானர். களைப்பாக இருந்தாலும் அவற்றைக் கணக்கெடுக்காமல் மூசு மூசு என விறகுகளை சேகரிக்க காட்டுக்குள் சென்றோம். சென்ற இடங்களில் கனிகளையும் சுவைத்துக்கொண்டு அடர்ந்த அந்த காட்டை அந்திமாலையில் இரசித்தவண்ணம் விறகுகளை எடுத்து விட்ட இடத்தினை அடைந்தோம்.

நாங்கள் இப்போது மிருகங்களின் வீட்டில் குடியிருக்கிநோம். அதனால் அவர்களுக்கு கோபம் வருமோ இல்லையோ? 

ஆகவேதான் இரவு நேரங்களில் மிருகங்களின் பிடியில் இருந்து பாதுகாக்க கொண்டு வந்த பெரும் கட்டைகளை வெட்டைகளில் போட்டு தீனாவால் திகிலை உண்டு பண்ணிக்கொண்டிருந்தனர் இளைஞர்கள் காட்டு மிருகம் அருகே அண்டிவிடாமல். 

அதற்கு இன்னொரு உண்மை இருக்கிறது, நாம் எல்லாம் நடப்பது, இருப்பது, உண்பது, குடிப்பது, குளிப்பது, உறங்குவது என எல்லாவற்றினையும் தனியே காட்டிலும் நீரோடைகளிலுமே செய்கின்றோம். ஆனால் எமக்கு எந்த ஜீவராசிகளினாலும் எதுவும் நேர்ந்ததில்லை. ஏனெனில் அங்கு நாமெல்லாம் இறைவனின் குழந்தைகளாகவே அழைக்கப்பட்டுச் செல்வதாக பாவனை செய்து கொள்ளுகின்றோம்.

நாமும் கொண்டுவந்த விறகுகளை வைத்து ஒரு இஞ்சித் தேனீர் வைத்து குடித்தோம். அதன் பின்னர் மளமளவென கொண்டுவந்த காய்கறிகளை வெட்டி கறியினைக் கூட்டத் துவங்கினோம். 

எல்லாம் முடிந்ததும் நாலாபக்கமும் வஜனை பாடத் துவங்கினர். கூட்டம் கூட்டமாக இவற்றை நிகழ்திக்கொண்டிருந்தனர். நாமும் இணைந்து பாடத்துவங்கினோம், மெது மெதுவாக சத்தம் நிசப்தமாகத் துவங்கியது. 

அனைவரும் தூங்கி விட்டனர். எனக்கு தூக்கம் வரவில்லை மல்லாக்கப்படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டு நட்சத்திரங்களின் ஜாலங்களையும், சில்லூறுகளின் சிலும்பல்களையும், காட்டு மிருகங்களின் கர்ஜனைகளையும் இரசித்துக்கொண்டிருந்தேன். அதனிடையே நாலாபக்கமும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது தீனாக்கட்டைகள்.

இப்படியாக சற்று நேரத்தில் நானும் கண்ணயர்தேன். ஒரு சில மணிநேரத்தின் பின்னர் திடீர் என ஒரு குடாவுக்குள் அரோகரா என்ற பாரிய ஆர்பரிப்பு கேட்டது. நித்திரைக்கண்ணில் ஒன்றும் புரியாமல் ஒரு கணம் துள்ளிக்குதித்து பக்கத்து பக்தரையும் பாத்திரங்களையும் பதம் பார்த்தது எனது கால்கள். 

அனைவரும் இப்படியே நின்ற இடம் தெரியாமல் பயத்தில் அங்கும் இங்கும் பாய்ந்து பயந்து சத்தமிடத்துவங்கினர். 

ஆமாம் நாம் தூங்கிய இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில்தான் கிணற்றடி உப்பாறு இருக்கின்றது. 

அங்குதான் மிருகங்கள் நீரருந்த வருவதுண்டு இங்கு யானை வந்துவிட்டது எனத்தான் இந்த சத்தம் வந்தது. சுத்தத்தில் பயந்து வந்த யானை நகரத்துவங்கிவிட்டது. இவ்வாறு பயமும் பக்தியுமாக அன்றய இராப்பொழுது கழிந்தது.

அதிகாலை நான்கு மணியிருக்கும் நாம் எழுந்துவிட்டோம். சுடச்சுட சுக்குத் தேனீர் போட்டெடுத்தோம். காலையில் எழுந்திருப்பதென்பது சாதாரணவிடயமல்ல அந்த களைப்புடன் அதுவும். இதன் பின்னர் இழக வைத்த கடலையை அவித்து பையில் பிறிம்பாய் எடுத்துக்கொண்டு மூட்டை முடிச்சுக்களுடன் முருகனை நினைத்துப் புறப்படலானோம்.
தயவுசெய்து இதை நண்பர்களுடன் பகிருங்கள்!

இரண்டாம் பகுதி சுவாரசியமான விடயங்களுடன் தொடரும்

0 comments:

Post a Comment