ADS 468x60

13 October 2019

மாவட்டத்தின் வறுமையை ஒழிக்கும் கிராமப்புற முயற்சியாண்மை.

எமது நாட்டில் சுதந்திரம் கிடைத்து 7 தசாப்தம் கடந்தும் பல கைத்தொழில்மயமாக்கலை நிறுவியும் இன்னும் எமது நாடு அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளின் பட்டியலில் வறுமைக்கோட்டிற்குள் உள்ள மக்கள் தொகையினை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து விடுபடவில்லை.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 80 விகிதமானவர்கள்  விவசாய கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கான பல புதிது புதிதாக அறிமுகப்படுத்தும் சேவைத்திட்டங்கள் உண்மையில் பாரபட்சமின்றி சென்றடைகின்றதா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஆதனால்தான் இன்று வறுமை என்னும் குறை வருவாய் உள்ள கூடிய குடும்பங்களைக் கொண்ட மாவட்டமாக இன்னும் முதனிலை வகுப்பது வெட்கம் வெட்கம்.



விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் அவர்களின் வாழ்க்கையின் இருப்பினை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கின்றது. அதுபோல் எமது மாவட்ட் பொருளாதார வளர்ச்சி இதன்மீதே பெரும்பாலும் சார்ந்துள்ளது. பெரும்பாலும் செறிந்து வாழுகின்ற கிராமப்புற மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தில் ஏற்படும் செழிப்பு, முன்னேற்றம் என்பவைதான் அந்தப் பிராந்தியத்தின் பரிபூரண வளர்ச்சியை புடம்போட்டுக் காட்டும் கண்ணாடி.

ஒரு பிராந்தியத்துக்குள் அல்லது மாவட்டத்துக்குள் அதன் பொருளாதார வளர்சிக்கான உள்ளீடு என்பது அந்த பிராந்திய மக்களின் முயற்சியாண்மையே. தொழில்முனைவோர் பற்றாக்குறையாக காணப்படும் வளங்களை மிகவும் திறமையான முறையில் பயன்படுத்துகிறார்கள், இதன் மூலம் லாபம் அதிகரிக்கும் மற்றும் செலவு குறைகிறது.

கல்வியில் உள்ள வறுமை, பற்றாக்குறை காரணமாக, பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி, இவர்களது உற்பத்தியினை சிறப்பான முறையில் சந்தைப்படுத்தல் பற்றி தெரியாது.

நிதி மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஆகியன ஒரு தொழிலை கொண்டு நடாத்துவதில் அல்லது ஆரம்பிப்பதில் கிராமப்புற தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் எனலாம்.

கிராமப்புறங்களில் பெரும்பாலானவை

தொழில்முனைவோர் கல்வியறிவின்மை, தொழில் ஆபத்து குறித்த பயம், தொழில் மேம்பாடு தொடர்பான பயிற்சி மற்றும் அனுபவமின்மை, வரையறுக்கப்பட்டவை கொள்வனவு சக்தி போன்ற விசித்திரமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆக எமது கிராமப்புற தொழில் முனைவோரை மேம்படுத்துதல் எல்லாவகையிலும் ஊக்கப்படுத்துதல் ஆகியன இந்த 80 விகிதமாக கிராமப்புற மற்றும் கிராமப்புற பின்தங்கிய சந்தைத்தொகுதியினை வளர்சிபெறச் செய்வதாய் அமைகின்றது.

சவால்களை வெற்றிபெறும் மார்க்கங்கள்

ஆகவே கிராமப்புற, நலிவுற்றோரது உற்பத்திகளை செம்மைப்படுத்தும் உட்கட்டுமான வசதிகளான பாதைகள், உள்ளுர் சந்தைவசதிகள், மின்சார இணைப்புகள் போன்ற இத்தியாதி கிராமியத்திட்டங்களை பிரதேசசபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தும் வருடாந்த திட்டத்தினை உருவாக்கவேண்டும்.

இவற்றை பின்னர் நடைமுறைப்படுத்தி, இவர்களது உற்பத்திகளை கிராமப்புற நுகர்வோருக்குள் முடிக்கிவிடாது அவற்றை நகர்புற நுகாவோருக்கும், சுப்பர்மாக்கட் உடனும் இணைப்பினை ஏற்படுத்தி சந்தை வாய்ப்புக்களை உருவாக்கும் ஏற்பாடுகளை பிரதேச மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மூலம் வசதிசெய்துகொடுக்கப்படவேண்டும்.

இங்கு நுகர்வோரை கவர தரமான பொருள் உற்பத்தி, சந்தைப்படுத்தல் உத்தி, விளம்பரம், நிதி ஏற்பாடு, பயிற்சி ஆகியவற்றினை அந்தந்த பிரதேச சேவை வழங்குணர்கள் மூலம் பெற்றுக்கொடுக்க  அவர்களை ஒருங்கிணைக்கும் செயற்தி;ட்டங்கள் வகுக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்துவதனை கண்காணிக்கவேண்டும்.

வயோதிப, பெண் மற்றும் வலதுகுறைந்த தொழில்முனைவோரின் உற்பத்திகளுக்கு சலுகைகளையும், உதவிகளையும் மேலதிகமாக வழங்கும் பிரத்தியேக ஏற்பாடுகளை கிராமியப் பொருளாதார திட்டங்களில் கவனம் செலுத்து உள்ளடக்க வேண்டும்.

அரசாங்கம் இந்த முயற்சியாளர்களுக்கு என நேரடி நிதியினை வழங்கும் திட்டத்தினை பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தனும்.

இவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை தொழில்நுட்பம் கலந்து வழங்கப்படவேண்டும்.

ஏனைய நாடுகளில் உள்ள நல்ல முயற்சியாளர்களது அனுபவம், அறிவு மற்றும் அவர்களது வெற்றியின் இரகசியம் ஆகியவற்றினை எமது மக்கள் மத்தியில் கொண்டுவந்து விழிப்பினை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு இந்த பரிந்துரைகளை ஏற்படுத்தினால்,

1. உள்ழூர் உற்பத்திகளுக்கு கிராக்கியினை உண்டு பண்ணலாம்.

2. கிராம மட்ட வேலையில்லாத இளைஞர் யுவதிகளிடையே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வேலையின்மையை இல்லாது செய்யலாம் அதே போன்று மாற்றீடான தொழிலையும் ஏற்படுத்தலாம்.

3. ஒட்டு மொத்த உள்ழூh  உற்பத்திகளையும் ஒருமித்து கூட்டுத்தாபனம் ஒன்றினை ஏற்படுத்தி அவற்றின் மூலம் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்கான உத்தரவாதத்தினை ஏற்படுத்தலாம்.

4. அதிகப்படியான உள்ழூர் மூலவளம் மனிதவளங்களை பயன்படுத்துவதற்கான சந்தர்பத்தினை உருவாக்கலாம்.
நாங்கள் எமது மாவட்டத்தில் அதிகம் கிராமப்புறங்களில் ஏற்படுத்தக்கூடிய தொழில் வாய்ப்புக்களாக,

1. விவசாய உற்பத்தி(பெறுமதி சேர்க்கப்பட்ட)
2. மீன்பிடி உற்பத்தி
3. ஆடை உற்பத்தி


முடிவுரை

பல சவால்களை நாம் பார்த்தோம் இவற்றை இல்லாமல் செய்யும் வண்ணம் பல்கலைக்கழகங்கள் பல பரிந்துரைகளை முன்வைத்து மக்களை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக இருந்துவருகின்ற நிலையில் நாம் எமது மாவட்டத்தில ஒரு பல்கலைக்கழகத்தினை வைத்திருக்கும் அதிஸ்டம் உள்ளவர்களாக இருந்தும் அதனால் சமுகத்துக்கான பங்களிப்பு என்னவாக இருக்கின்றது என்ற கேள்வி எழாமல் இல்லை.

இவர்களை ஊக்குவிக்க மாவட்ட தேசிய ரீதியிலான விருதுவழங்கும் கௌரவ நிகழ்வுகளை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் எமது மாவட்ட மானுடவளத் திறனை அதிகரித்து அதன்மூலம் மாவட்ட தேசிய பொருளாதார பங்களிப்பினையும் அதுபோல் இவர்களது குடும்ப வாழ்க்கைத்தரத்தினையும் உயர்தி ஒரு வித்தியாசமான வளர்சிகண்ட சமுகத்தினை சிருஷ்டிக்கலாம்.

ஆகவே இந்த தொழில் முனைவோர் எமது பொருளாதாரத்தின் மிக முக்கியமானவர்களாகும். இவர்களே பல நாடுகளில் அபிவிருத்தியடைந்து வரும் நிலையிலிருந்து அபிவிருத்தியடைந்த நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளனர். கிராமத்து தொழில முனைவோரோ அங்குள்ள வறுமையினை இல்லாது ஒழிப்பதற்கான திறவுகோலாக உள்ளனர்.

இதனால் பொருளாதாரத்தில் கிராமிய தொழில் முயற்சியாண்மையை பரிந்துரைப்பதற்கான அழுத்தம் அரசியடம் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆனால் ஒரு பிரச்சினை காணப்படுகின்றது எமது கிராமத்து இளைஞர் யுவதிகள் இவற்றை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளமை வருந்தத்தக்கது. ஆகவேதான் இளைஞர்களிடையே அனைத்து வசதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்கி இதுதான் ஒரு நாட்டை முன்னேற்றுவதற்கான தொழில்மார்க்கம் என்பதனை வழிப்படையச் செய்து ஊக்குவிக்கப்படனும்;.


0 comments:

Post a Comment