ADS 468x60

01 October 2019

சிறுவர்கள்- கல்வியறிவின்மை- வறுமை ஒரு மீள முடியாத நச்சு வட்டம்

இன்றைய குளந்தைகளே நாளைய தலைவர்கள். அவர்கள்தான் விஞ்ஞானிகளாகவும், விமானிகளாகவும், ஞானிகளாகவும், வழிகாட்டிகளாகவும் என பல வடிவங்களில் இந்த உலகத்தினை முன்னே கொண்டு செல்லும் மாபெரும் சக்திகள் என்பதை இந்த உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால்தான் பல அபிவிருத்தியடைந்த நாடுகள் இவர்களை வளர்த்துவிடுவதில் அதிக செலவினையும், அக்கறையினையும் செலுத்திவருவதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவேதான் சிறுவர்களிடையே காணப்படும் வறுமையை கணிசமான அளவு குறைத்து இல்லாமல் செய்யும் ஒரு செயற்திட்டம் எல்லா நாடுகளிடையேயும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் உள்ளடங்கலாக முக்கியமானதொன்றாகப் பார்க்கப்படுகின்றது. 


மில்லியன் கணக்கான குழந்தைகள் வறுமை, பாகுபாடு, சலுகையின் அடிப்படையிலான கல்வியின் தரம் அல்லது அவர்கள் மிகவும் பசியாக இருப்பதால் கற்றுக்கொள்வதற்கான வாய்பை இழந்துவிடுகின்றனர். இந்த குழந்தைகள் சமுதாயத்திற்குள் முன்னேசெல்வதற்கு தேவையான அடிப்படை திறன்களையும் அறிவையும் பெறுவதற்கு முன்பு பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்.

உலகில் இன்று சுமார் 250 மில்லியன் 5 முதல் 12 வயதுடையவர்கள் பள்ளியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிக்கவோ எழுதவோ முடியாது.

கல்வியும் சிறுவர்களும்

கல்வி குழந்தைகளின் வாழ்க்கையை வறுமையை சமாளிக்க உதவுவதன் மூலம் அவர்களை மாற்றுகிறது. இது சிறந்த ஆரோக்கியத்திற்கும் வருமான வாய்ப்புகளையும் அதிகரிக்க வழிவகுக்கிறது. அது இல்லாமல், பல குழந்தைகள் வறுமை மற்றும் கஷ்ட வாழ்க்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.

கல்வி என்பது பல குழந்தைகளுக்கு வறுமையிலிருந்து வெளியேறும் பாதையாக இருக்கின்றது. இது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான அறிவையும் திறமையையும் பெற ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் மில்லியன் கணக்கான குழந்தைகள் ஒரு வகுப்பறையின் உட்புறத்தை ஒருபோதும் பார்ப்பதில்லை.

பல குடும்பங்களுக்கு, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதன் நீண்டகால நன்மைகளை விட, அவர்களை உடனடியாக வேலைக்கு அனுப்புவது அல்லது வேலைகளில் உதவுவதற்காக அவர்களை வீட்டில் வைத்திருப்பது ஆகியவற்றிலே அதிகநாட்டம் உள்ளது. இதனால் அவர்களது கல்வியை தியாகம் செய்து குறுகிய கால வருமான நோக்கத்திற்காகச் சென்று வறுமைச் சுழற்சியில் சிக்கிக்கொள்ளுகின்றனர். 

இச்சிறுபராயத்தில் ஏற்படும் வறுமையானது அவர்களிடையே மிக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. இவை பரம்பரை பரம்பரையாக வறுமை எனும் நச்சுவட்டத்துள் அவர்களை தள்ளிவிடுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை நம் சிறுவர்கள் இன்று எவ்வாறான ஒரு நிலைமையில் இருக்கின்றார்கள் என்பவற்றையும் எதிர்காலத்தில் வறுமையெனும் கொடிய பிடியில் இருந்து மீள்வதற்கான மார்க்கங்கள் பற்றியும் இங்கு ஆராய உள்ளேன்.

இலங்கையில் எந்த சமுக பொருளாதார வகுதிக்குள் உள்ள குழந்தைகள் அதிகம் நலிவுற்ற மற்றும் வறிய குழந்தைகளாக இருக்கின்றனர்! என்பதனை அடையாளம் காணுதல் வேண்டும். குறிப்பாக எமது நாட்டில் விவசாயம், மீன்பிடி ஆகியவற்றினை மேற்கொள்ளும் குடும்பத்தலைவர்களைக் கொண்ட குடும்பங்களிடையே 25.9 விகிதமும் அவை அல்லாத ஏனைய துறையில் உள்ள சிறுவர்கள் 19 விகிதமும் என அடையாளம் கண்டுள்ளனர். தவிரவும் இயலாமை அல்லது வயோதிபத்திலும் தொழில் புரியும் நிலையில் உள்ளவர்களின் சிறுவர்கள் 15.7 விகிதமும், திறனுள்ள விவசாய மீன்பிடி குடும்பங்களிடையே உள்ள சிறுவர்கள் 12.3 விகிதமும் என தகவல் கூறுகின்றன.

அதுபோல் எந்த எந்தப் பிராந்தியங்கள் அதிக வறுமையில் வாடும் சிறுவர்களை தன்னகத்தே கொண்டுள்ளன எனப் பார்போமானால், மொத்தமாக உள்ள 19 வயதுக்கு குறைந்த 706,902 வறிய சிறுவர்களில், அதிகமாக கிராமியத் துறைகளில் ஈடுபடும் குடும்பங்களிடையேதான் 79.2 விகிதமானவர்களும், 13 விகிதமானவர்கள் மலையகத் தொழிலாளர்களிடையேயும் காணப்பட ஏனைய 7.8 விகித வறிய சிறுவர்கள் நகர்புற குடும்பங்களிடையே உள்ளமை தகவல் சொல்லுகின்றது.

இங்கு இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் தான் மொத்த வறிய சிறுவர்களில் 63,000 பேரினைக் அதிகம் கொண்ட நலிவுற்ற மாவட்டமாக அறியப்பட்டுள்ளது அது 8.9 விகிதமாகும். அதுக்கு அடுத்தடுத்து முறையே ரத்னபுர 7.7 விகிதம், வதுள்ள 7.7 விகிதம் மற்றும் காலி 6.4 விகிதம், நுவரெலிய 6.1 விகிதம், கண்டி 6.2 விகிதம் அத்துடன் மொனராகலை 4.9 என வறிய சிறுவர்கள் அதிகமாக காணப்படும் நலிவுற்ற மாவட்டங்களாக இவை அடையாளங் காணப்பட்டுள்ளன. 

இவ்வாறான நிலைக்கு பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. குறிப்பாக, குடும்ப அமைப்பு பிளவுபடுவதனால் பிள்ளைகள் மீதான கவனம் குறைவடைவது, தாயோ அல்லது தந்தையோ வெளிநாடு செல்கின்றமை, குழந்தைகள் பல்வேறுவிதமான குற்றச்செயல்களிலும் துர்நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றமை, வறுமை கரணமாக தொழில்களில் ஈடுபடுகின்றமை, பெற்றோர்களின் கல்வி  அறிவின்மை போன்ற சமூக பொருளாதார காரணங்கள் இந்த நிலைமைகளுக்கு காரணங்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது. 

இதற்கு அப்பால் முரண்பாடான ஏட்டிக்குப் போட்டியான அரசியல் நிலவரம் காரணமாக பொருளாதாரச் சுமை, சுகாதார, கல்வி மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

எட்டமுடியாக் கல்வியும் ஏழைக் குழந்தைகளும்

நாம் பல ஆண்டுகளாக எமது நாட்டில் இலவசக் கல்வியினை எல்லாக் குழந்தைகளுக்கும் சமமாக அரசாங்கத்திடம் இருந்து பெற்று வருகின்றோம். இருந்தும் வறிய சிறுவர்கள் தரம் 13வரை தமது இவ்விலவச கல்வியை பெறுவதில் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். இதன்போது படிப்பினை தொடர முடியாமல் பல சிறுவர்கள் பாடசாலையைவிட்டு இடை விலகுவதனைக் காணலாம். இங்கு கல்விகற்கும் 3.5 மில்லியன் சிறுவர்களில் 391,461 சிறுவர்கள் (11.3) வறியவர்கள். இதில் 6.2 விகிதம் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனச் சொல்லப்பட, மேலும் ஆர்வத்துடன் பாடசாலை செல்லும் சிறுவர்கள் குறைவாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

14 வயதுக்கு உட்பட்ட அதிகம் சிறார்கள் கட்டாயம் கல்வி கற்க்கவேண்டிய முறைசார் கல்வியினை விட்டு விலகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றில், அவதானத்தின்படி 15-16 க்குட்பட்ட 23.8 விகிதமான வறிய சிறுவர்கள் பாடசாலைக்கு சமுகமளிப்பதில்லை எனவும் பாடசாலையில் கட்டாயம் கல்விகற்கவேண்டிய வயதெல்லைக்குட்பட்ட கால்பகுதி (25 விகிதம்) வறியமாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகி வருவதாகவும் இத்தகவல் சுட்டிக்காட்டுகின்றது. 17-18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களின் இடைவிலகல் மிக மிக அதிகம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதாவது அநேகமானோர் சாதாரண தரம் எடுத்தவுடன் தேர்சி பெறுகின்றார்களோ இல்லையோ பலர் அவற்றில் இருந்து இடைவிலகிச் செல்கின்றனர் என தரவுகள் கூறுகின்றன. இங்கு வறுமைக்குட்பட்ட சிறுவர்களின் இடைவிலகள் ஏனைய மாணவர்களைவிடவும் இருமடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவற்றிலிருந்தான மீட்சிமைக்கான முன்மொழிவுகள்.

குறிப்பாக விவசாயம் மீன்பிடி மற்றும் கூலித்தொழிலில், ஈடுபடும் தலைவர்கள் உள்ள குடும்பங்களில் அதுபோல் பலவேறு விடயங்களினால் நலிவுற்றவர்கள் தலைமைதாங்கும் குடும்பங்களில் இருந்து கல்வி கற்கும் வறிய சிறுவர்களை அவர்களது கல்விசார்ந்து அதிவிஷேட கவனம் செலுத்தப்படவேண்டும்.

மூன்று தசாப்தகாலமாக இலங்கை மக்களினுடைய வருமானப் பகிர்வில் ஏற்றத்தாழ்வு இருந்து வருவது ஒரு சிறிய அளவிலேனும் மாறவில்லை என்ற ஒரு முறைப்பாடு இலங்கையைப் பொறுத்தளவில் இருந்து வருகின்றது. பாரிய அளவில் சிறுவர்களிடையே இருந்துவருகின்ற வறுமை நிலையைக் குறைக்;கவும் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் வறுமையைக் குறைக்கவும் முக்கியமான பரிந்துரை சமமான வருமானப் பகிர்வில் அதிக முக்கியத்தினை கொடுத்து கொள்கைரீதியான நிரந்தர மாற்றத்தினை ஏற்படுத்துதலாகும்.

கல்விக்காக மேலதிக 10 விகிதம் நிதி ஒதுக்கீட்டினை பாதீட்டில் இடம்பெறச் செய்தல் வேண்டும். இதில் குறிப்பாக நலிவுற்ற மாணவர்களுக்காக அதாவது நாளாந்த காலை உணவை பெற முடியாத பிள்ளைகளுக்கு பாடசாலை நாட்களில் சத்துணவினைப் பெற கூப்பன் நடைமுறைப்படுத்தப்படனும்.

மாகாண சபைக்கு கீழ்வரும் எல்லா வசதிகளும் கொண்ட பாடசாலைகள் மாகாண சபைக்கு கீழ்வரும் பிரதேச சபை மட்டத்தில் எடுத்தேத்துதல்வேண்டும்.

தொழில் வழிகாட்டல்களை ஆரம்பப் பாடசாலை தொடங்கி உயர்தரம் ஈறாக அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் இம்மாணவர்களை அதற்கு தகுந்தாற்போல் ஆற்றுப்படுத்தும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

சமுக பொருளாதார முன்னேற்றங்களை கிராமிய பிராந்திய பகுதிநோக்கி நகர்த்துவதன் மூலம் இடைவிலகலை பூச்சியமாகக் கொண்டு செல்லுதல்.

குறைந்த ஆசிரியர், ஏனைய வளங்கள் உள்ள பாடசாலைகளை தொடர்சியாக கண்காணித்து அவற்றை நிவர்த்தி செய்ய அமைச்சு ரீதியில் முடிவினை எடுத்தல். 

குறிப்பாக 50 மாணவர்களுக்கு குறைந்த தொகையினைக் கொண்டு 1486 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அதுபோல் 50- 100 மாணவர்களை மாத்திரம் கொண்டு 1560 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. வெறும் 3,133 பாடசாலைகளில் வெறும் 9 ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் ஒரு துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இவை மிகக் கவனமாகக் கையாளப்படுமிடத்து வறிய மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து இடைவிலகும் வீதம் குறைவடையலாம் அதன்மூலம் கல்வியால் வறுமையடையாத ஒரு சமுகத்தினைச் சிருஷ்டிக்க முடியும்.


கொண்டுவர வேண்டிய கொள்கை மாற்றம்

ஆகவே இந்த நலிவுறும் நிலையிலிருந்தான மீளுகைக்கு கிராமியப் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதுடன் அதன்மூலம் அனைத்தையும் இம்மக்களால் அடைந்துகொள்ளும் வழிசெய்தலும் வேண்டும். அத்துடன் பிராந்திய மட்டத்தில் வேறுபாடின்றி உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்து வேலைவாய்ப்பினை ஊக்குவித்து செயலாற்றுவது வறுமையைக் குறைக்கும் முக்கியமான மார்க்கமாகப் பார்க்கப்படுகின்றது.

ஆக கல்வியை நாம் தூண்டி ஊக்குவிப்பதனால் வறுமை நிலையை அது குறைவடைய வைக்கின்றது இந்த நிலை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதனையும் நாம் காணலாம். இதனால் கல்வியானது சுபீட்சமான சிறுவர்களின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஒரு நல்ல முதலீடு எனக் கொள்ளலாம். துpறன் அறிவு ஆகியவை வலுவூட்டப்படும் வகையில் வழங்கப்படும் ஒரு தரமான கல்வி அந்த சிறுவர்களின் இயலுமையை தெரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாக உள்ளது. எல்லாரும் சமமான கல்வியைப் பெறும் வழி செய்து கொடுத்தல் என்பது ஒட்டுமொத்த வறுமையை குறைப்பதற்கான பாரிய செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. அத்துடன் இவை சிறுவர்களின் வளம் நிறைந்த எதிர்காலத்துக்கான ஒரு திருப்புமுனையாகவும் நோக்கப்படுகின்றது.


உஷாத்துணை நூல்கள்

0 comments:

Post a Comment