ADS 468x60

26 October 2019

அரசியலை தீர்மானிப்பது பொருளாதார வாக்குறுதிகளா?

ஒரு நாட்டின் ஜனநாயகதினை பலப்படுத்தும் அதே நேரம் பொருளாதாரத்தினை பலவீனப்படுத்தும் பாரிய செலவீனமாக தேர்தல் பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ஒவ்வொரு தேர்தல் நிறைவடையும் தறுவாயிலும் நமது நாடு செலவின் உச்சத்துக்கே சென்று விடுகின்றது. அதற்காக எமது பொருளாதாரம் பாரிய விலைகொடுக்க வேண்டி நேருவது அனைவருக்கும் தெரிந்த விடயம். 

இவ்வாறான தேர்தல் காலங்களில் எமது பொருளாதாரம் மூன்று வகையான சவால்களை எதிர்நோக்குகின்றது அவற்றையே இங்கு பார்க்க உள்ளோம். அதற்கு முன்னர் ஏன் பொருளாதாரம் வாக்களிப்பில செல்வாக்கு செலுத்தவேண்டும் என்பதனை சற்று பார்த்துவிட்டு வரலாம்.

பொருளாதாரத்துக்கான வாக்கு என்றால் என்ன?

அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகளின் அடிப்படையில் வைக்கப்படும் விவாதம் என்னவெனில், வாக்காளர்களது மனப்பாங்கு தேர்தல் நேரங்களில் அந்த நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது எனக் கூறுகின்றனர். ஆக கூடியளவில் தற்போது ஆடசியில் இருக்கும் அரசின் கடந்தகால நாட்டு மக்களுக்கான ஒட்டுமொத்த பொருளாதார நன்மைகளை அளவீடு செய்து அது அனுகூலம் மிகுந்ததாக இருப்பின் நிச்சயம் அந்த கட்சி சார்ந்த வேட்பாளர் தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகமுள்ளன.

அசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளியல் இவை இரண்டின் இணைப்பின் அடிப்படையில் ஆய்வாளர்கள் பல ஆதாரங்களை முன்வைக்கின்றனர். பொருளாதார வாக்களிப்பு பல பிரிவுகளாகக் கூறப்படுகின்றன. அதில் ஒன்று, தனியாளின் முடிவை வைத்தான வாக்குகள் (pocketbook voting), பாரியளவிலான பொருளாதார வளர்சிக்கான வாக்குகள் (sociotropic voting), முந்தய பொருளாதார நிலை சார்ந்த வாக்குகள் (retrospective voting), எதிர்கால பொருளாதார முன்னேற்ற நம்பிக்கைக்கான வாக்குகள் (prospective voting) என பிரித்துப் பார்க்கலாம். இதில் அமெரிக்காவின் அதிபர் தேர்வுக்கான வாக்களிப்பில்  பாரியளவிலான பொருளாதார வளர்சிக்கான வாக்குகளே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. என்பது அயல்நாட்டுப் படிப்பினை.

நிதிச் சுமைப் பாதிப்பு (Fiscal Impact)- எம்மை வெல்ல செலவிடும் தொகை. 

ஜனாதிபதியாக வருவது யாராக இருப்பினும் அது ஒரு நெருக்கடியான சண்டையாகவே பார்க்கப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகின்ற இந்த தருணத்தில் நாட்டின் தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு பெரிய குழப்பத்தினை உண்டுபண்ண இருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. ஆக இந்த தேர்தலை வெல்லும்பட்சத்தில் கடடுப்பாட்டில் இந்நாட்டைக் கொண்டுவந்து, அடுத்து என்ன நேர்வழியினை பா.ம. தேர்தலை வென்றெடுக்க கையாளப்போகின்றனர்? அதற்காக என்ன விலையினை செலுத்தப்போகின்றனர் என்பவை விடைகாணவேண்டிய கேள்விகளாக உள்ளன. இந்த விடயத்தில் இருபுறமும் பல வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளன. அவர்கள் அதிகாரத்துக்கு வரும்பட்சத்தில், இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய பல செலவீனங்களை கையாளவும் உள்ளனராம்.

சஜித் அவர்களின் பாஷன் அனைவருக்கும் குடியிருப்பதற்கான வீடுகளை நிர்மானித்து அபிவிருத்தி செய்வது என்கின்ற ஒரு அலையை (பழையதாக இருப்பினும்) ஐ.தே.க வாக்காளர்கள் மூலமாக உண்டு பண்ணி தான் ஜனாதிபதியாக வருவது. இதற்குப் பிறகும் வரும் பொதுத்தேர்தலையும் நன்கு வெற்றிபெற்று நாடாழுமன்றத்தினையும் கையகப்படுத்தி ஆடசிபுரிவது.

மறுபுறத்தில் பார்தீர்களாயின், கோட்டா அவர்களது பிரதான விஞ்ஞாபனமாக விவசாயிகளின் உரத்துக்கான மானியங்களை ஊக்குவிப்பது அத்துடன் இவரது பொருளாதார ஆலோசகர் முன்னால் மத்திய வங்கி ஆழுனர் அஜித் கப்ரால் அவர்களது பாரியளவான உட்கட்டுமான விரிவாக்கலினை அழுல்படுத்துவது என்கின்ற இரு தூண்களை மையப்படுத்தி இவரது பிரச்சாரம் செல்லுகின்றது.

இவ்வாறான பல வாக்குறுதிகள் நாளாந்தம் நேராகவும் ஊடகங்கள் மூலமாகவும் கிராமப்புற மக்களை சென்றடைந்தவண்ணமுள்ளன. இவை அவர்களிடையே மிதக்கும் வாக்குவிகிதத்தினை அதிகரித்திருக்கின்றது அது சாதாரணமக்களிடையே காணப்படும் தாவும் மனப்பாங்கினை காட்டுகின்றது.

இது இவ்வாறு இருக்க, ஏற்களவே 2019 இற்கான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வட்ஜட்டில் துண்டுவிழும் தொகை 4.8 சதவீதமாக அதிகரித்து பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த நிலையில்,  எப்படி இவர்கள் தாங்கள் போட்டுவைத்துள்ள திட்டங்களுக்கெல்லாம் (பாதீட்டினை) வட்ஜெட்டினை தயார்செய்யப்போகின்றார்கள்? 

இன்னும் அதிகப்படியான துண்டுவிழும் தொகை 5 சதவீதமாக எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் எல்லா வல்லுனர்களும் அதற்கு குறைவாக இருந்துவிடும் என தப்புக்கணக்குப்போடுவது சிலநேரங்களில் விநோதமாகவே தெரிகின்றது.

சரி ஜனாதிபதி வேட்பாளர்கள் வரிச்சுமையை குறைக்கும் (அதாவது அரசு குறைந்த வரி வருமானத்தில் இயங்கும்) பல புதிய திட்டங்களை முன்வைக்க உள்ளதாக கூறிவருகின்றனர். இருப்பினும் பொருளியலாளர்களின் துண்டுவிழும் தொகைக்கான எதிர்பார்ப்பு 5 சதவீதத்தினையும் தாண்டி சிலநேரங்களில் அது 6 வீதமாக 2020 இல் அதிகரிக்கும்; என கணிப்பிடும் நிலையில், இவர்களது வாக்குகள் வாக்காளர்களை எந்தளவுக்கு கொண்டுவிடுகின்றது என்பதனை நன்கறிந்தவர்கள் புரிந்துகொள்ளுவர்.

ஏன் நிதி பற்றாக்குறை ஒரு விடயமாகப் பார்க்கப்படுகின்றது? ஏனெனில் எமக்கு செலவிட பணம் தேவையில்லையா. எனவேதான் இந்த நிதி நெருக்கடியில் இருந்து விடுபட அரசு உள்நாட்டு வளவாளர்களிடம் இருந்து கடன் பெறவேண்டியிருக்கின்றது அதனை நிவர்த்தி செய்ய. அதேநேரம் அந்தக் கடனுக்கான வட்டி அதிகரித்து அதுவும் மக்களின்மீதே சுமையாக விழும். சர்வதேச நாணய நிதியம் கூட கடன்கொடுத்து கடன்கொடுத்து மக்களை அதளபாதாளத்தில் தள்ளிவிடுவதில் விரும்புவதில்லை நிற்க வருகின்ற புதிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற சிலவேளைகளில் அதிக கடன்களைப் பெறலாம். இருப்பினும் பெரிய பிரச்சினை என்னவெனில் ஏற்கனவே கடனில் மூழ்கி இருக்கும் எமது நாடு இன்னும் எவ்வாறான வங்குரோத்து நிலைக்கு செல்லும் என்பது குழந்தைக்கும் புரியுமல்லவா!.

கடன்சுமைப் பாதிப்பு

அதிகமாக எமது அரசு எதரிநோக்கும் பாரிய பிரச்சினை வெளிநாட்டில் பெறும் கடன்கள் மூலமாக வருடாவரும் வட்ஜெட்டில் ஏற்படும் துண்டுவிழும் தொகை அதாவது நாட்டின் வருமானத்தினை மிஞ்சிய செலவு, ஏற்றுமதியை விட இருருக்கும் இறக்குமதிச்சுமை என்பனவற்றினை அடுக்கிக்கொண்டு போகலாம்.

எமது நாடு ஒவ்வொரு வருடமும் 2022 வரைக்கும், நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் திருப்பிக்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. அது தவிர இந்த வருடம் இறக்குமதியளவில் ஓரளவு தாங்கிக்கொள்ளும் சென்மதி நிலுவைப் பிரச்சினையே காணப்படுகின்றது. ஆனால் இது 2020 இல் அசுரவேகத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே இரு வகுதியினருக்கும் நன்கு தெரியும் கடன் சுமை என்பது ஒன்றும் இனிப்பான விடயம் இல்லை. ஒருவரை ஒருவர் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் முட்டிக்கொள்வது போல் காட்டுவதனை விடுத்து, இந்த கடினமான நிலையில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதற்கான அணுகுமுறைகளை, உபாயங்களை, உத்திகளை முன்வைத்தபாடில்லை.

இரு பக்கமும் பொதுவாக முன்வைக்கப்படும் ஆலோசனை இன்னும் அதிகம் கடன்களை பெறுவது என்கின்ற கசப்பான வழிமுறையே. இன்று உலக அளவில் கடன் கொடுப்போர்கள் கவர்ச்சியான குறைந்த வட்டியை அறிவித்தாலும் அது வரும் காலங்களில் எவ்வாறு அமையும் எனச் சொல்ல முடியாது. ஆகவே எதிர்கால பொருளாதார நிலை மகிழ்சியடையும் நிலையில் இல்லை.

பொருளாதார வளர்சி பாதிப்பு

எமது பொருளாதார வளர்சி கூறிக்கொள்ளும் அளவுக்கு செழிப்பாக இல்லை. 2012 ஆம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு தடவையும், எமது பொருளாதாரம் உள்நாட்டு உற்பத்தியில் சரிவினையே சந்தித்து வந்துள்ளது. இந்தவருடம் அது மிகமோசமான நிலையினை வெளிப்படுத்தலாம். காரணம் அரசியல் ஸ்த்திரமின்மை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவையே கொண்டு சேர்த்துள்ளது.

புதிய அரசு அமையும் போது சில காலம் மக்களிடையே சில நன்மைகள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் அவை மீண்டும் பின்னால் இழுத்து மக்களை சுமைக்குள் தள்ளும் ஒரு நிலைதான் கடந்தகாலங்களில் இருந்து நாம் பெற்ற பாடம்.

புதிய கொள்கை மாற்றங்களை வருகின்ற அரசாங்கம் கொண்டு வரவேண்டும். அதன் மூலம் பாரிய மாற்றங்களைக் கொண்டு சேர்க்கும்

எது எவ்வாறோ நாம் வாக்காளர்களாக, நாளாந்த தகவல்களை அறிந்தவர்களாக இருக்கவேண்டும, ஏன் எதற்காக, யாருக்கு, எப்படி என்கின்ற கேள்விகளை எமக்குள் நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இன்று இருக்கின்ற அரசியல் களம் நாளையும் அவ்வாறே இருக்கப் போவதில்லை. உண்மையான மாற்றத்தினை யாரும் அதிகாரத்துக்கு வந்ததும் மாற்றப்போவதும் இல்லை. மாறாக இந்த தேர்தல் காலங்கள் எமக்குள் பல குரோதங்களை மாத்திரம் வளர்த்துவிட்டு போகும் ஒன்று. அவற்றில் இருந்து ஒதுங்கி நடுநிலைமையான உண்மையை அறிந்த வாக்காளர்களாக மாறுவோம் மாற்றுவோம்.


உஷாத்துணை








0 comments:

Post a Comment