நாம் இன்று அரசியலை முழுமையாக அறியமுடியாதவர்களாக, அதில் இருந்து அப்பால் வைக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றோம். இதனால் ஒவ்வொரு தடவையும் அரசியல் மூலம் நம்பிக்கை இழந்த ஒரு வர்க்கமாக நலிவுற்றவர்களை அதிகம் பெருக்கிக்கொள்ளும் இனமாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். இவ்வாறான நிலை தொடராமல் இருக்க என்னவகையான அரசியல் எமக்கு இன்றய நிலையில் தேவையாக இருக்கின்றது? என்பதனையே இக்கட்டுரையில் உற்றுநோக்க இருக்கின்றோம்.
அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத தத்துவம். சமுதாய வாழ்க்கையில், அமைதியை தருவதற்கும் பலர் கூடி வாழ்வதற்கும் பொருளியல், ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழி வகுக்கிறது. அறநெறிகளில் மனித குலம் ஒன்றி வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றியது.
அரசியல் தத்துவங்கள், மனித உலக வரலாற்றின் நிகழ்வுகளில் இருந்து தோற்றம் பெறுகிறது. தனி மனிதன் அல்லது சமுதாயம் சார்ந்த தேவைகளின் அடிப்படையில் எழுகின்ற அக்கறையும், அதனை பூர்த்தி செய்ய முனைகின்றபோது, ஒருவர் பலருக்காக பணிபுரிதலில் காணப்படும் அணுகுமுறையுமே அரசியல் ஆகும்- மகா. பாலசுப்பிரமணியன்.
பொருத்தமான அரசியல் தகமைகள்!
பெருமைக்குரிய தமிழ் மக்களே! எங்களுக்கும் எங்கள் அரசியல்வாதிகள் நாங்கள் நினைப்பதுபோல் நல்ல தலைவர்களாக இருக்கமாட்டார்களா! என்று ஏக்கம் மட்டும்தான் மிச்சம். அன்று 'மக்கள் தீர்ரப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் அறிஞர் அண்ணா அவர்கள்;. ஆதைத்தான் பின்னர் 'மக்கள் ஆட்சித் தத்துவமாக' அறிவித்தார்கள் அரசியல் அறிஞர்கள். 'மக்களுக்காக மக்களால் அமைத்துக் கொள்ளுகிற ஆட்சி' மக்களாட்சி.
அப்பேர்பெற்ற மக்களாட்சிக்கு அத்திவாரம் போன்றதுதான் மக்களின் வாக்குரிமை, அந்த வாக்குரிமை மீது எழுப்பப்படும் மாளிகைதான் நல்லாட்சி. அந்த நல்லாட்சி அரசு நடத்தும் ஆட்சிதான் மக்களாட்சி;. அத்தகைய ஆட்சி நடத்தும்;; பொறுப்பில் அமர்பவர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நல்லவர்களாகவும் இருக்க வேண்டும்;. நா நயம் மிக்கவராக இருந்தால் மட்டும் போதாது, நாணயம் மிக்கவர்களாகவும்; இருக்க வேண்டும். நெஞசுரம்; கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்;.
அதுபோக மக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாக அமையக்கூடாது மாறாக ஆதரவு காட்டுபவர்களாகவும் அமைய வேண்டும். இப்படி மக்களின்;; பிரதிநிதிகளாக ஆட்சிக்கு வருபவர்கள் அரசில் இடம்பெறுவர்கள் தூய்மையானவர்களாக எல்லாத்துக்கும் மேலாக தொண்டுள்ளம் கொண்டவர்களாக, எளிய மக்களின் தோழர்களாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இவர்களில் எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்பதுதான் கேள்விக்குரியது.
ஓன்றை நன்கு கவனியுங்கள் பேரன்புக்குரிய மக்களே! அரசியல் அதிகாரம் என்பது 'மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பே' தவிர மக்களை ஆட்டிப்படைக்கும் உரிமையை தரும் சாதனமாக கருதாதவர்களாக, மக்களோடு மக்களாக மக்களின் தொண்டனாக வாழ்ந்து காட்டவேண்டும் என்பதுதான்; அரசியல் அறிஞர்கள் எமக்கு சொல்லிச் சென்ற பாடமாகும். அதை எத்தனைபேர் குறிப்பாக அரசியலில் உள்ளவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குரியதே!
நல்ல அரசியல்வாதிக்கான அடையாளம்
உண்மையில் சமூக நலன் சார்ந்து சேவை செய்வது தான் ஓர் அரசியல்வாதிக்குரிய நல்ல அடையாளம். தன்னிடம் உள்ள திறனை, அறிவை, ஆற்றலை, உழைப்பை, செல்வத்தை, மக்களின் மேன்மைக்கு பயன்படுத்தவே ஒருவன் பொதுவாழ்வில் அடியெடுத்து வைக்க வேண்டும்.
குறிப்பாக காந்திய யுகத்தில் அப்படிப்பட்ட மேலான மனிதர்கள் தான் அரசியல் களத்தை நோக்கி ஆர்வத்துடன் வந்தார்கள். ஆனால், இன்று சமுதாய பிரச்னை குறித்து, நலிவுற்றமக்கள் குறித்து சரியான புரிதலோ, மக்களுக்கு தொண்டாற்றும் உண்மையான துடிப்போ இல்லாது, அதிகாரத்தை சுவைக்கவும், பொதுப்பணத்தை சுரண்டவுமே பலர் அரசியல் வேடம் புனைகின்றனர்.
அரசியல் அறிஞர் அரிஸ்டாட்டில் ஆட்சி கலையை 'தலைமை அறிவியல்' என்றார். ஆனால், பொய்க்காரர்களும், தொண்டார்வமற்றவர்களும், தாதாக்களும், கள்ளச்சாராய பேர்வழிகளும், கிரிமினல் குற்றவாளிகளும், வர்த்தக சூதாடிகளும் வலம் வரும் களமாக இன்றைய அரசியல் கட்சிகள் சீரழிந்து வருகின்றன. காசுக்கு ஓட்டு போட்டு, கயவர்களின் ஆசைக்கு இரையாகும் மக்கள் இருக்கும் வரை மக்களாட்சி சிறக்காது.
உலகத்தில் எந்த மாற்றத்தையும், புரட்சியையும் மேல்தட்டு மக்கள் முன்னின்று நடத்தியது இல்லை. ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களை காசு கொடுத்து வாங்கி தங்கள் வசதிகளை தக்க வைத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்.
எனவே, 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்' அவர்களுக்கு கவலை இல்லை. கீழ்தட்டு மக்களுக்கோ ஒவ்வொரு நாளும் வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது. வயிற்று பசிக்கு சோறு தேடுவதிலேயே அவனின் நேரமும், பொழுதும் போய் விடுகிறது. சமூக பிரச்னைகளுக்காக போராட அவனால் வர இயலாது. எனவே, இரண்டுக்கும் இடையேயான நடுத்தர மக்களுக்குத்தான் சமூக பிரச்னைகள் தெரிகிறது. அவர்களால்தான் போராட முடியும்.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் தேர்வு செய்த உறுப்பினர்களே நாடாள முடியும். தேர்ந்தெடுத்தவர்கள் சரியில்லாதபோது, அவர்களை மாற்றி அமைக்கும் மாண்பு மக்களாட்சி யில் மட்டுமே உண்டு. அதை உணர்ந்து செயற்பட முடியாத செவிடர்களாக கீழ்த்தட்டு மக்களை மாற்றிவிடுகின்றனர்.
சிறந்த அரசியல் நிலவும் நாட்டில், ஒழுங்குகள் நிலவும். அறிவுத்துறை மேம்படும். பகை ஒடுங்கி பண்பாடு ஓங்கும். அரசியலின் பயன், அரசியல் நடத்துவோருக்கு அல்ல. அது மக்களுக்கே.''எப்போதெல்லாம் அறம் அழிந்து, மறம் மேலெழும்புகிறதோ, அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்து கொள்கிறேன், நல்லாரை காப்பதற்கும், தீயோரை ஒடுக்குவதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகம்தோறும், யுகம்தோறும் நான் அவதரிக்கிறேன்'' என்று கீதையில் பகவான் கண்ணன் கூறுவார்.
முடிவுரை
எமது பாரம்பரிய தத்துவத்தின் படி, அரசியல் அறத்தை பிழைத்து வாழும் அரசியல்வாதிகளுக்கு, அந்த அறமே கூற்றாகும் என்ற சிலப்பதிகாரத்தின் கூற்றுப்படி அந்த நாள் என்று வருமோ? என்று ஒவ்வொரு மனிதனும் ஏங்கி துடிக்கின்ற காலம் உள்ளது. நல்ல அரசியல் அறம் வளர, நல்லவர்கள் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டும்.
ஆக இந்த நிலையினை உணர்ந்து கற்றவர்கள், தொண்டுள்ளம் கொண்டவர்கள், சமுக ஆர்வலர்கள் வெறுமனே பார்வையாளர்களாக அல்லது விமர்சகர்களாக மாத்திரம் இருந்துவிடாது செயற்பாட்டாளர்களாக உருவெடுத்து அவர்கள் மாற்றத்தினை ஏற்படுத்தும் ஆமுக்கக் குழுவாக களத்தில் இறங்கவேண்டும். அப்போதுதான் அரசியல் பொருளாதார நலிவுறுநிலை குறிப்பாக எமது தமிழ் மக்களிடையே களையப்படும் என்பதனை நினைவில் வைத்து செயற்படுவோம்.
0 comments:
Post a Comment