ADS 468x60

04 February 2020

நாம் பூரண சுதந்திரம் பெற்றவர்களா?


இன்று எமது நாட்டில் 72வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. இற்றைக்கு 72 வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டை தம்வசப்படுத்தி, எம்மையெல்லாம் அடக்கி அடிமைகளாக, ஒடுக்கி ஒன்றுமில்லாதவர்களாக தமது ஆட்சிக்கு கீழ் ஆங்கிலேயர்கள் எம்மைக் கட்டி ஆண்டு வந்தனர். அந்த அடிமை விலங்கை உடைக்க அல்லும் பகலும் போராடி பல உயித்தியாகங்களை செய்து நமது முன்னோர்கள் பின்னர் எமது நாட்டை நாங்களே ஆள திருப்பி சுதந்திரமாகப் பெற்றுக்கொண்ட தினம்.     இருப்பினும், நம்மில் பலர் இன்று தமக்கு தாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி, சுதந்திரம் என்றால் என்ன? இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது? என்பதை எல்லாம் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு விழாவாகவே கடைபிடிக்கப்பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப்போல் இதுவும் ஒரு விடுமுறைநாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.

நெடுங்காலத் தொடர் போராட்டத்துக்குப் பின்புதான் நமக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. எதற்காக அவர்களிடம் இருந்து விடுதலை பெறப் போராடினோம்? அந்த விடுதலையின் மூலம் என்னென்ன பலன்களை அடைந்திருக்கிறோம்? உண்மையிலேயே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோர்களின் கனவு நனவாகி இருக்கிறதா? சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்குமானது. அப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா?

சுதந்திரத்திற்குப் பல முகங்கள், பல அர்த்தங்கள் இருக்கின்றன. சிறைக்குள் இருக்கும் ஒருவருக்கு (அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை) வெளியில் வருவது விடுதலை. வணிகர்களைக் கேட்டால் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்தால் அது சுதந்திரம். குடும்பத் தலைவிகளுக்கும், அலுவலகத்தின் இடைநிலை ஊழியர்களுக்கும் அவர்களது அன்றாட வேலைகளிலிருந்து விலக்குக் கிடைக்கும் நாள்கள் சுதந்திர தினம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு அங்கிருந்து பட்டம்பெற்று வெளியேறுதல் சுதந்திரம் எனக் கூறிக்கொண்டு போகலாம்.

உளவியல் வல்லூநர்கள் குறிப்பிட்ட மனநிலையிலிருந்து விடுபடுதலை சுதந்திரம் என்றார்கள்.  உதாரணமாக அச்சம், ஆசை என்பனவற்றிலிருந்தான விடுதலை என்கிறார்கள். பெரும்பாலானோருக்கு சுதந்திரம் என்பது அவர்கள் விரும்பியதைச் செய்வதை அனுமதிக்கும் சூழல்.

எனக்கோ சுதந்திரம் என்பது நான் செய்ய விரும்புவதை அனுமதிப்பது மட்டுமல்ல, செய்ய விரும்பாததை என்மேல் திணிக்காமல் இருப்பதும்தான் சுதந்திரம். என்னை ஆங்கிலத்திலோ (தமிழிலோ) பேச அனுமதிப்பது மட்டுமல்ல, என்னை இன்னொரு மொழியில்; பேசுமாறு வற்புறுத்தாமல் இருப்பது சுதந்திரம்.

உண்மையான விடுதலையை இம்மக்களுக்குக் கிடைக்காமல் செய்து வருபவர்கள், அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளும் சிலரின் கையிலேயே நமது தேசியக்கொடி சிக்கிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசவே நாம் தயங்குகிறோம். இந்நாட்டுக்கும், இம்மக்களுக்கும், இம்மண்ணுக்கும், இம்மொழிகளுக்கும் துரோகம் இழைப்பவர்களாலும், அழிப்பவர்களாலும்தான் பெரும்பாலும் உரிமை எடுத்துக்கொள்ளுகின்றனர். வெள்ளைக்காரனிடம் இருந்து விடுதலையைப் பெற்று, சில கொள்ளைக்காரர்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு, சுதந்திர தினத்தைக் கொண்டாடலமா?.

இன்று சுதந்திரத்திற்காகப் போராடி அதைப் பெற்றுத்தந்தவர்கள் உயிரோடு மீண்டெழுந்து வந்து இந்த நாட்டைச் சுற்றிப் பார்த்தால் என்ன கூறுவார்கள்? நாம் கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தைப் பார்த்து என்ன சொல்வார்கள்? நம் நாட்டை ஆண்டவர்களிடம்; என்ன கேட்பார்பார்கள்? அவர்கள் அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்?

வெள்ளைக்காரனிடம் இருந்து நம் நாட்டை மீட்டெடுத்தபோது அந்த மகிழ்ச்சி இருந்தது. அப்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் நாடு விடுதலைப் பெற்ற நாளைக் கொண்டாடுவதைத் தவிர முதன்மையான மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?

கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மதுக்கடை, மத, இனக் கலவரங்கள், பெண்ணடிமை போன்ற வற்றில் எது இங்கே குறைவு? மதுவை எதிர்த்து அந்த போதை அடிமைத்தனத்தில் இருந்து விடுபட தியாகிகள்; நாடு முழுக்கப் பயணம் செய்து போராடினார்கள் அன்று. ஆனால் மக்களை ஆட்சி செய்பவர்களே மக்களிடத்தில் மதுபானக்கடைகளை அமைத்துக்கொடுக்க அனுமதிப்பதும், அதனால் பல ஏழைகள் சிக்கித் தவிர்ப்பதையும் கண்டுகொள்ளாமல் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதெல்லாம் எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும்?

ஊழலிலும், லஞ்சத்திலும் சிக்கித்தவிக்கும் எமது இளைஞர்களை இந்த நாட்டில் இருந்து முற்றாக விடுதலை பெற்றுக்கொடுக்காமல் அவற்றை வியாபாரம் செய்பவர்களை முற்றாக இல்லாதொழிக்காமல் சிறிதும் குற்றவுணர்வின்றி கொண்டாடுவதா சுதந்திரம்?.

இத்தனை ஆண்டுகள் கடந்தும் நாட்டின் மக்கள் தொகையில் அதிகம் பேருக்கு சொந்த வீடு கிடைக்க வழியில்லை. கழிப்பிட வசதிகூட பெறாத மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் நமது நாடும் இருக்கின்றது. உணவுப் பண்டங்களை வீணடிப்பதிலும், ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல், அதற்கு உத்திரவாதமும் இல்லாமல் அலைவதும் நம்நாட்டில் இல்லாமல் இல்லை.

சொந்த நாட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவையைக் கூட 72 ஆண்டுகள் கடந்தும் செய்து தர முடியாத அவலத்துடன்தான் மக்கள் ஆட்சியின் மூலமாக உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் தொடர்ந்து சுதந்திரத்தைப் பெருமையுடன் கொண்டாடிக்கொண்டு வருகின்றன.

நமக்கு விடுதலை கிடைத்தபின் நமது நாட்டின் உயிரான கிராமங்கள் அழியத் தொடங்கின. உள்ளூர் உற்பத்தி அழிந்து, சிறு தொழில்கள் அழிக்கப்பட்டு காலங்காலமாக செய்து வந்த தொழில்களை விட்டுவிட்டு, தன் மண்ணை விட்டுவிட்டு நகரத்துக்கும் திறனற்ற வெளிநாட்டு வேலைகளுக்கும் இடம் பெயர்ந்தோம்.

இன்று பொதுவாக, சுதந்திரம் எதை கொடுத்ததோ, இல்லையோ நாட்டின் வளத்தை சுரண்டி, மக்களை ஏமாற்றி, சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் என்னும் தொழிலைக் கொடுத்திருக்கிறது.

சேர்த்ததை, கொள்ளையடித்ததை எங்கே வைப்பது எனத் தெரியாமல் தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கிறார்கள். வாக்கு ஒன்று கையில் இருப்பதனாலேயே நம்நாட்டில் ஏழை எளியவர்களை உயிரோடு வைத் திருக்கிறார்கள். அது ஒன்றுதான் இந்த எளிய மக்களுக்கு இங்கேயிருக்கும் மதிப்பு. ஆட்சியை உருவாக்குபவர்கள் ஏழைகளாகவும், அதனை முழுமையாக அனுபவிப்பவர்கள் பணக்காரர்களாகவும் இருக்கும் வரை இங்கே எந்த முன்னேற்றமும் உருவாகப் போவதில்லை.

பன்முகத்தன்மையும் சுதந்திரமும்.

பன்முகத்தன்மை என்பதுதான் சுதந்திரத்தின் பொன் முத்திரை, தனித்த அடையாளம். ஏனெனில் அது என்னைக் கூட்டத்திலிருந்து தனித்து நிற்க அனுமதிக்கிறது. நான் நானாக இருக்க இடமளிக்கிறது. ஆலமரங்கள் அடர்ந்த வனத்தில் ஒரு புல்லின் இதழாக இருக்கத்தான் எனக்கு விருப்பம் என்றால் அதைப் புலம்பாமல், முகச்சுளிப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் நாடே சுதந்திர நாடு.

பன்முகத் தன்மை என்பது இயற்கையானது. இது ஏதோ பெரும் தத்துவம் அல்ல, கண் எதிரே காணும் காட்சி. எந்த மலரிலும் எல்லா இதழ்களும் ஒரே அளவில் இருப்பதில்லை. எந்தச் செடியிலும் எல்லா மலரும் ஒன்றேபோல் இருப்பதில்லை. ஒரே மரத்தின் விதைகளிலிருந்து வெளிப்படும் விருட்சங்கள்கூட வேறு வேறான அளவில் விரிகின்றன.

மலை இருக்கும் இடத்தில் கடல் இல்லை. கடல் இருக்கும் இடத்தில் வயல் இல்லை. வயல் இருக்கும் இடத்தில் வனம் இல்லை. வனத்தில் உள்ளவை எல்லாம் ஒன்றாக இல்லை. எல்லோருக்கும் மழை இல்லை. இரத்தினபுரியில்; வெள்ளம் பெருக்கெடுத்து வீதிகளில் விரைந்தோடுகையில் மட்டக்களப்பில் என் நா வறள்கிறது. அமெரிக்கர்களின் கோடை ஆஸ்திரேலியர்களின் குளிர்காலம் இவையெல்லாம் பன்முகத்தன்மையின் வடிவங்கள்.

சுதந்திரம் இயல்பானது, இயற்கையானது என நம்புபவர்கள் எவரும் அது பன்முகத் தன்மை கொண்டது என்பதை ஏற்பார்கள்.

இலங்கையன்; என்பதில் என்றும் பெருமிதம் கொள்பவன் நான். அதற்கு அதன் தொன்மை மட்டும் காரணமல்ல. அதன் பன்முகத்தன்மையும் காரணம்.. நான் பொட்டுவைக்கக்கூடாது, பரிதா அணியக்கூடாது, எனது மொழியை, மத அனுஷ்டானங்களை, கலாசாரத்தினை முதன்மையாகப் பயன்படுத்தக்கூடாது, எனது இனத்தை மட்டும் சட்டங்கள் போட்டு அடக்கவேண்டும், நான் பேசுவதை நீ விளங்காவிட்டாலும் நீ எதைப்பேசினாலும் எழுதினாலும் விளங்கவேண்டும் என்பதா சுதந்திரம்? அதுவா விடுதலை? 

சுதந்திரத்தின் அச்சாணியே பனடமுகத்தன்மையை பழுதுபடாமல் பாதுகாப்பது. அது என்று எல்லா மக்களாலும் உணரவைக்கப்படுகின்றதோ அதுவே சுதந்திரநாள். இந்த சுதந்திர தாகத்தின் கானல்நீராகவே அரசியல் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளின் ஏமாற்றுப்பொறிக்குள் அகப்படாத சிந்தனை எமது மக்களுக்கு எப்போது வளருகின்றதோ அதுவே ஒரு விடுதலை நாளாக அமையும்.

தமக்கு இவர்களின் காலத்திலாவது ஒரு சுதந்திரமான வாழ்க்கை மலருமா என்று இன்று புதிய அரசாங்கத்தில் இருக்கின்றவர்களை பலர் எதிர்பார்கின்றார்கள், அவ்வாறு இவவர்களுக்கு நல்ல மனநிலை இன்னும் அதிகரிக்க இறைவனை நாம் அனைவரும் வேண்டுவோம்.

ஆக, பூரண சுதந்திரம் என்பதே ஒரு மாயை. புத்தகங்களில் மட்டுமே வாழும் கற்பனை. நம் உள் மனதை இதமாக்கிக் கொள்ள நாம் கண்டறிந்த ஒரு சொல். சுதந்திரம் என்பது 'நசுக்கப்பட்டவர்களின் ஏக்கம், இதயமற்ற உலகின் இதயம், ஆன்மா அழிந்துபோன சூழலில் ஆன்மா', அது மக்களுடைய அபின் (மார்கஸ் மன்னிப்பாராக, அவர் மதம் என்பதைக் குறிக்க இந்தச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார்).

ஆனாலும் அந்த மாயைக்கு, அந்த இதம் தரும் கற்பனைக்கு, அந்த போதை தரும் அபினுக்கு என் மனம் ஏங்குகிறது.

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

உஷாத்துணை

https://ilakkiyam.com/bhrathiyar-padalgal/58-desiya-geethangal/4087-sudandira-thagam

https://www.dinamani.com/editorial-articles/center-page-
articles/2017/aug/19/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2757722.html

https://www.facebook.com/577820532301834/photos/a.578024428948111/1064957366921479/?type=1&theater

0 comments:

Post a Comment