ADS 468x60

05 May 2020

சுதேசிய வழிமுறைகளினூடான தன்னிறைவை முதன்மைப்படுத்தும் கொவிட்-19

விவசாயமும் மருத்துவமும்.

இன்று கொவிட்- 19 வைரஸ் அனைத்து நாடுகளையும், முக்கியமாக விவசாயம் மற்றும் மருத்துவ அறிவியலில் அதன் தன்னிறைவை ஆய்வு செய்ய அழைத்து வந்துள்ளது. இந்த இரண்டு துறைகளும் நமது பண்டைய பாரம்பரியத்தில் கைகோர்த்துக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டது. இவை நமது மக்களின் நல்வாழ்வோடு மட்டுமல்லாமல் மண்ணின் நல்வாழ்வையும் அதனோடு தொடர்புடைய மரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் பாதுகாப்பினையும் தொடர்புபடுத்தின.  

ஏமக்கென ஒரு தனித்துவமான பாரம்பரியம் ஒன்று இருந்தது, அங்கு ஆரோக்கியமான சமுகம் ஒன்று ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பி இருந்துது, அவர்கள் நஞ்சேற்றப்பட்ட உரவகைகளையோ, கிருமிநாசினிகளையோ பயன்படுத்தாமல் அவர்களது சுதேசிய அறிவைப்பயன்படுத்தி இயற்கையான கழிவுப்பொருட்களைக்கொண்டு உரவகைகளையும் கிருமிநாசினிகளையும் கொண்டு உற்பத்திகளை உண்டாக்கியிருந்தனர்.

ஆனால் எமது மக்கள் காலனித்துவமயமாக்கப்பட்ட அதன்பின் உலகமயமாக்கப்பட்ட இன்றய சூழலில், அவர்கள்  மூளைச் சலவை செய்யப்பட்டு மேற்கில் இருந்து வருகின்ற எதையும் மேலானது என்றும், மற்றும் நமது பண்டைய வாழ்வியல் முறைகள் எதையும் தாழ்ந்ததாகவும் கருதி எமது பாரம்பரியங்களை குழிக்குள் புதைத்துள்ளனர். 

தேசத்தின் பாரம்பரிய அறிவு, அனுபவங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியனவற்றை கிட்டத்தட்ட முற்றிலுமாக இழந்துவிட்ட ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்;. இதன் விளைவாக இந்தத் தேசத்தில் இன்று நாம் யார் என்று நமக்கே தெரியாத ஒரு நிலைக்கு வந்துள்ளோம்.

நவீன சவால்களும் பாரம்பரியத் தீர்வும்

ஒரு நாட்டின் பொருளாதார சவாலானது, யாராலோ, எங்கோ உருவாக்கப்பட்ட பொருளாதார சிக்கலான கோட்பாடுகளால் தீர்த்து வைக்க முடியாது. மாறாக எமது நிலத்தின் மண்ணுக்கு நாங்கள் மரியாதை கொடுத்து இங்கு எம்முன்னோரால்; எமக்கெடுத்துச் சொன்ன  வழிகளின் மூலமே அவற்றைத் தீர்க்கலாம். 

ஆனால் இன்று நாம் வெளிநாடுகளில் இருந்து அர்த்தமற்ற முறையில் இறக்கப்பட்ட  நஞ்சு உட்செலுத்தப்பட்ட உரத்துக்கும், மற்றும் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிக்குமாக எமது நாட்டின் உழைப்பில் கிடைத்த பணத்தினை வீண்செய்கின்றோம். அதுபோல் நாம் பெருமையோடு போற்றிவந்த மண்வளத்தினையும் அவற்றைப்பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்து வருகின்றோம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், நம் மன்னர்களின் காலத்தில், நாட்டு மக்களுக்கு எமது விளைநிலத்தில் இருந்து உணவளித்தது மட்டுமல்லாமல், நமது பூர்வீக அரிசி மற்றும் பிற உற்பத்திப் பொருட்களையும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். 

ஆனால் இன்று நாம் எமக்கென இருந்த விழைபொருட்களுக்கான பேரை மாத்திரம் தொலைக்காமல், அதனோடியைந்து மண்ணையும் மண்ணோடு சேர்ந்த நீரையும் நஞ்சேற்றி வணிக ரீதியிலான வேளாண்மை செய்யப் புறப்பட்டு மக்களின் ஆரோக்கியதிற்கும் பங்கம் விளைவித்து விட்டோம். ஆக நாம் அழிவடைந்து போவதற்கான வினையை விலைகொடுத்து வாங்கிவருகின்றோம். 

இதனால் நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் போன்ற பல நோய்களை எதிர்க்கமுடியாத நோயெதிர்ப்பு குறைபாடுள்ள ஒரு மக்கள் தொகையைக்கொண்ட நாடு இன்று நம்மிடம் கைவசப்பட்டுள்ளது. அதுபோல் இன்று, மேலும் ஆயிரக்கணக்கானோர் டெங்கு போன்ற பல புதிய நோய்களுக்கு அச்சுறுத்தப்படுகிறார்கள். 

நாம் நமது கிராமப்புற நாட்டுவைத்தியம் அல்லது எமது ஆயுர்வேத மருத்துவம் போன்றவற்றினை முதன்மையாகக்கொண்டு பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத நிலையில் பரிசாரம் பார்த்து நோயற்ற வாழ்வு வாழ்ந்து வந்தோம் என்பதனை இன்று கவனம் செலுத்துவதற்கு தவறியுள்ளோம்.

பல நூற்றாண்டுகளாக நம்மைத் தக்கவைத்துள்ள எமது நாட்டிற்குள்ளேயே கிடைக்கும் பூர்வீக மூலிகைகள் மற்றும் பழங்கள், இலைகள் மற்றும் வேர்கள் எமக்கெல்லாம் மகத்தான நோய் எதிர்ப்புச் சக்திகளைக் கொடுத்தன. அவை அன்று வீடுகளிலும் வேலிகளிலும் இலவசமாகக் கிடைத்தன. 

அவையெல்லாம் இன்று எங்களுக்குப் போதுமான அறிவுரைகள், தெழிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகள் இல்லாத நிலையில் எமது முந்திய பரம்பரையுடன் அவை அழிந்துவிட்டது. அதுபோல் இன்று இவைசார்ந்த துறைதேர்ந்தவர்களையும் இரண்டாம் தரப்பினராய் எள்ளி நகைப்பதன் காரணமாக, இருப்பவர்களையும் யாரும் முன்னிலைப்படுத்துவதோ நம்புவதோ இல்லாத அபாக்கியம் நேர்ந்துள்ளது. 

இன்று எங்களுகளிடையே விதைக்கப்படும் தவறான கருத்துக்களால் நமது பூர்வீக நெல் வகைகள் எவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றன என்பதையும், வறண்ட மற்றும் ஈரநிலங்களில் வளரும் இந்த பழங்கால நெல் வகைகளில் சிலவற்றை நாம் எவ்வாறு அழிக்கிறோம் என்பது பற்றியும் போதுமான பொது விழிப்புணர்வு எங்களுக்கு இல்லாமற்போயுள்ளது.

பாரம்பரிய மீட்சிக்கான தேவை

ஆகவே கொரோனா வைரஸைக் குணப்படுத்துவது குறித்து நாம் அதிகம் பேசும்போது, பலரைக் கொன்ற டெங்கு அச்சுறுத்தலுக்கு, மேற்குலகின் அலோபதி சிகிச்சை முறையாலும் இன்னும் எந்த பிரதிபலனும்; கண்டுபிடிக்கப்பட இல்லை என்பதையும், அந்த அந்த நோயாளியின் மீட்பு அவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்டதே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகவே நாம் கடந்துவந்த முன்னோர்களது வழித்தடங்களை திரும்பிப்பார்க்கவேண்டிய நேரமிது. இது நிச்சயம், வருங்கால சந்ததியினரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு தேசமாக நாம் கவனம் செலுத்தத் தொடங்கவேண்டிய தருணம். எமக்குத் தேவையான மூலிகைகள், காய்கறிகளை உற்பத்தி செய்வது மற்றும் இவற்றின் பூர்வீக வகைகளைப் பற்றி மக்களுக்கு கற்பித்து அவற்றை நடைமுறைப்படுத்த தலைப்படவேண்டும். 

ஒவ்வொரு தனிமனிதனும் தரையில் விழும் ஒவ்வொரு துளி மழையையும், தரையில் விழும் ஒவ்வொரு இலை அல்லது கிளைகளையும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது. எங்கள் காய்கறிகளையும், மூலிகைகளையும் மிகச்சிறிய நிலத்திலோ அல்லது தொட்டிகளிலோ பயிரிடத் தொடங்கவேண்டிய நேரம் இது. 

எங்களுக்கு இறக்குமதிசெய்யப்பட்டு கற்பிக்கப்பட்ட நவீன கல்வி முறை நம்மை எமது தாய்நாட்டில் இருந்து வெகு தொலைவில் கொண்டு சென்றுவிட்டது, நாங்கள் திரும்பிவரவேண்டிய நேரம் இது. எமது வாழ்க்கையும் இவற்றை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த கட்டத்தில், காலனித்துவத்திற்கு முந்தைய காலங்களில் எமது நல்வாழ்வில் கவனம் செலுத்தியபோது, நம்மை மட்டுமல்ல, இந்த பூமியின் அனைத்து உயிரினங்களினது நல்வாழ்விலும் கவனம் செலுத்தினோம் என்பதை நம் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். 

தரமான பயனுள்ள விவசாயத்திற்கு தேவை என ஒரு நாளைக்கு டொன் கணக்கான ரசாயனங்களையும் மெமிக்கல்களையும் அந்நிய தேசங்களில் இருந்து இறக்குமதி செய்வோம் என்று இலங்கையயின் பண்டைய மன்னர்களுக்கு அன்று நாங்கள் பரிந்துரைத்திருந்தால் அது கேலிக்குரியதாகவும், போலித்தனமாகவும் இருந்திருக்கும். எங்கள் பழங்கால விவசாய முறைகளில், பூமியின் அனைத்து உயிரினங்களுக்கும் இடமளித்தோம், அவற்றுக்கான சில விளைபொருட்களை நாங்கள் வைத்திருந்தோம், மேலும் தீங்கு விளைவிக்காத விவசாய முறையை நோக்கிச் செல்லும் பல்வேறு வழிகளைக் கொண்டிருந்தோம்.

ஆயினும்கூட இன்று நாம் நமது பாரம்பரிய நல்ல பழக்கவழக்கங்களையெல்லாம் விரும்பித் துலைத்தும்விட்டோம், அவற்றை கேலி செய்கிறோம். இன்றய நவீன கல்வி முறையானது நமது நுண்ணறிவை அல்லது ஆழ்ந்த ஞானத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை; அது அநேகமாக இவற்றுக்கு நேர்மாறானவற்றினையே செய்திருக்கின்றது. இந்த நிலையானது நம்மால் எதையும் சிந்திக்க முடியாதவர்களாக செய்திருக்கின்றது.  நாம் வெறுமனே கேள்விகேட்க முடியாதவர்களாகவும், தகவல், கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்களாகவுமே இருக்கின்றோம். 

எங்களிடம் மிக உயர்ந்த பெறுமதிமிக்க கல்வி முறைகள் இருந்தன அவற்றை இன்று நவீன கல்வி முறைக்குள் இழந்துவி;டோம். அன்றய குருகுலக்கல்வியில் நம் ஒவ்வொருவரது வாழ்க்கையில் பிரயோசனப்படுத்தப்படும் திறன்விருத்தி, ஒழுக்கம், அறிவு என்பன வாழ்வில் பெறுமானம் சேர்க்கப்பட்டிருந்தன அது எமது தாய் மண்ணை நேசிக்க வைத்து வளப்படுத்தியது. 

எனவே இந்தநிலையில், விவசாயம், தன்னிறைவு, நல்வாழ்வு மற்றும் பூமியுடனான நமக்கிருக்கும் தொடர்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய நமது பண்டைய நடைமுறைகளை உயிருடன் வைத்திருக்க உறுதிபூண்டுள்ள இலங்கையர்களின் அறிவையும் நுண்ணறிவையும் மீண்டும் நாங்கள் கொண்டுவரவேண்டும்.

1933 பொருளாதார மந்த நிலையும் பரிகாரங்களும்

நமது முதல் பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயக்க எழுப்பிய விவசாயத்திற்கான தேவையைப்; பார்த்து இன்று அவற்றை நாம் மீள ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது. அவர் அன்று ஏன் நாம் உற்பத்தி செய்யக்கூடிய நீர், நில மற்றும் மனிதவளம் எம்மிடத்தில் இருக்கின்ற பட்சத்தில் எமது விவசாயத்தையும், விவசாயப் பொருட்களையும் மதிப்புக்குறைத்து, அதனால் விவசாயிகள் அவர்களது நியாய விலைக்குப் போராடும் போது ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தேவையா? என அன்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இங்கு அவர் தனது 'விவசாயமும் தேசபக்தியும்' புத்தகத்தில் எழுதியதாவது, 1933 ஆம் ஆண்டு 'உணவும் மக்களும்' என்னும் அதிகாரத்தில் நாட்டில் அந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது நாட்டின் அதிக உணவு உற்பத்தி தீர்மானத்தில் அரசு முழுக்கவனத்தினையும் செலுத்தி இருந்தது என்பதனை அறியலாம்..

'இலங்கை அடிப்படையில் ஒரு விவசாய நாடு, இங்குள்ள மக்களையும் விவசாயத்தையும் பிரிக்கமுடியாதவாறு அவை இரண்டறக்கலந்துள்ளது என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க உண்மை, பொருளாதார மந்தம் (1933) ஏற்பட்டபோது, எங்களுக்குத் தேவையான உணவு மற்றும் பானங்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக வருடத்துக்கு கிட்டத்தட்ட 87 மில்லியன் ரூபாய்க்கள் செலவிடப்பட்டது.

அதன்போது இலங்கை உணவு உற்பத்திகளாக அரிசி, வெங்காயம் மற்றும் மிளகாய்களை கலிபோர்னியாவிலும் பழங்களையும், பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை அவஸ்த்திரேலியாவிலிருந்தும் இறக்குமதி செய்ததனை உழவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்துள்ளார்.

இந்த இறக்குமதிக்குப் பின்னர் உளவியல் ரீதியில் எமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நாட்டினர் எம்மை உளவியல் ரீதியில் வெல்லத் துவங்கியுள்ளனர். அதாவது 'சிலோன்' என்ற நாமம் கொண்ட பொருட்கள் தாழ்வானவை எனவும் குறித்த வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை உபயோகிப்பது உயர்வானது என்கின்ற மனப்பாங்கினையும் அவர்கள் உளவியல் ரீதியில் எம்மிடையே ஏற்படுத்தினர்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, உணவில்லாத நிலமை கொவிட்-19 தொற்றுநோய் அபாயத்தில் உணரப்பட்டுள்ளது. யதார்த்தத்தில், இன்று எங்காவது ஒரு பழக் கடையைப் பார்த்தோமானால் அநேகமான பழவர்க்கங்கள், ஏனைய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட ஆப்பிள்களையும் ஓரஞ்சுகளையும், திராட்சைகளையும் தவிர எமது பாரம்பரியப்பழங்களான, தேன் தோடை, அன்னமினா, மங்குஸ்ட்டான், நாவற்பழம், பாலப்பழம் போன்ற இன்னோரன்ன ழங்களைக் காணமுடியாது. அவற்றை கண்டுபிடித்து உற்பத்தி செய்து விற்பனை செய்யப்போராடினால், எமது முதல் பிரதமரின் வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை என்பதை இன்று உணரமுடியும்.

முடிவுரை
ஏறக்குறைய ஒரு மாத காலமாக நாட்டின் பிரதான நகர்பகுதிகள் பூட்டப்பட்டிருப்பதால், இறக்குமதி செய்யப்பட்டுவந்த ஆடம்பர உணவுப் பொருட்கள், உணவு வகைகள் இல்லாமல் நமது நாட்டில் விளையும் ஆரோக்கியமான சத்துள்ள உற்பத்திகளை நாம் உண்ணப் பழகி தேவையற்ற செலவுகளை சுருக்கவில்லையா? 

நமது விவசாயிகள் எமது நாட்டின் கதாநாயகர்கள், அவர்கள் உற்பத்தி செய்து நாம் தன்னிறைவுகண்ட ஏனைய நாடுகளுக்கும் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவில்லையா? ஆனால் இன்று எமது கதாநாயகர்கள் இறக்குமதி செய்யும் நஞ்சு நிறைந்த பூச்சுகொல்லி, களைகொல்லி மற்றும் உரவகைக்கு அடிமையாகி, நாம் காலம் காலமாக பயன்படுத்தி வந்த தானிய, பழ விதைகளை எல்லாம் மருவவிட்டு அவற்றையும் இறக்குமதி செய்து தங்கி வாழும் அடிமைத்தனமான ஒரு சலவை செய்யப்பட்ட கதாநாயகர்களைக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.

சோகமான உண்மை என்னவென்றால், நம் மன்னர்களின் காலத்திலிருந்தே நம் தேசத்திற்கு உணவளித்த பல பூர்வீக அரிசி, தானியங்கள் மற்றும் விவசாய வகைகளையும், நம் பூர்வீக காய்கறிகளையும் பழங்களையும் பட்டியலிட்டால், நம்மில் பெரும்பாலோர் இன்று அவற்றைக் என்னவென்றுகூட அடையாளம் காண மாட்டார்கள்.

இருப்பினும், இந்த நாட்டில் இந்த பூர்வீக விதைகளை ஊக்குவிப்பதற்கும் அவற்றைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கும் அவற்றை உண்டுபண்ணச் செய்வதற்கும் சில ஆர்வமுள்ள தனிநபர்கள் இல்லாமல் இல்லை. கொரோனா வைரஸ் இன்று நமக்கு நினைவூட்டிய தன்னிறைவுக்காக ஒவ்வொரு பிரதேசத்துக்கும் இவை இன்றியமையாதது என்று நாம் ஒரு தேசமாக எழுந்து, கல்வி கற்பதற்கும், தன்னிறைவு பெறுவதற்குமான பல்வேறு வழிகளில் நம்மைத் தயார்படுத்துவதற்கும்; நாம் ஒன்றுகூடி விவாதிப்போம் ஆராய்வோம்.

சி.தணிகசீலன் (அபிவிருத்திப் பொருளாதார முதுமானி)
உதவிப்பணிப்பாளர் (ஆய்வு)
இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்திச் சபை


0 comments:

Post a Comment