ADS 468x60

04 January 2021

பணம் தரும் மரங்கள்

இன்று பலர் உலகலாவிய தொற்றுக் காரணமாக தமது வாழ்வாதாரங்களை, தொழிலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மறுபுறம் இலங்கை போன்ற நாடுகளில் இந்த நிலைக்கு மாற்றுத்திட்டமாக உள்ளுர் உற்பத்தியினை அதிகரிக்க அரசு அதன் புதிய கொள்கைகளை உருவாக்கி அதற்கான மாற்றீடுகளை பெருக்கும் வழிவகைகளை செய்து வருவதனை நாம் அவதானிக்கின்றோம். அந்த வகையில் நாம் இலகுவாக உழைக்கும் பல மரங்களை தெரிந்துகொள்வது அவசியம். அதில் ஒரு பகுதிதான் பணம் காய்க்கும் மரங்கள் என்ன என்ன என இன்று உங்களுக்கு செல்ல எத்தணிக்கின்றேன். அந்த வகையில் பப்பாளி, கொய்யா, மாதுளை, பொரு நெல்லி, எலுமிச்சை, பலா போன்றவைகளை இங்கு பார்க்கலாம்.


பப்பாளி

பழம் மற்றும் பால் (பப்பையின்) உற்பத்திக்காக பப்பாளி பயிரிடப்படுகிறது.  வடிகால் வசதியுள்ள அனைத்து மண்களிலும் பப்பாளியைப் பயிரிடலாம். கோ 1, 3, 4, 7, ரெட் லேடி ஆகிய ரகங்கள் பழ உற்பத்திக்கும், கோ 2, 5, 6 ஆகிய ரகங்கள் பால் உற்பத்திக்கும் ஏற்றவை.

ஹெக்டேருக்கு அரை கிலோ விதைகள் தேவைப்படும். வாரமொரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூக்கள் தோன்றியதும், நன்கு பழம் பிடிக்க 20 பெண் மரங்களுக்கு ஓர் ஆண் மரம் என்ற விகிதத்தில் வைத்துக்கொண்டு எஞ்சிய ஆண் மரங்களை அகற்றிவிட வேண்டும்.

24-30 மாதங்களில் மகசூல் கிடைக்கும். ரகத்திற்கு ஏற்ப மகசூல் மாறுபடும்.

கொய்யா

வடிகால் வசதியுள்ள அனைத்து மண்களிலும் கொய்யாவைப் பயிரிடலாம். அலகாபாத், லக்னோ 46, 49,  அனகாபள்ளி, பனாரஸ், ரெட் பிளஷ், அர்கா அமுல்யா, அர்கா மிருதுலா மற்றும் டிஆர்ஒய் (ஜி) 1 ஆகிய ரகங்கள் எமது கிழக்கிலங்கையின் தட்பவெப்ப நிலைக்கு உகந்தவை.

பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. அடர் நடவு முறையில் பயிரிட்டால் கூடுதல் பலனைப் பெறலாம். ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்யவேண்டும். நட்ட 2-ஆம் வருடத்திலிருந்தே காய்க்க ஆரம்பித்து விடும். பூத்ததிலிருந்து  5 மாதங்கள் கழித்து கனிகளை அறுவடை செய்யலாம்.

மாதுளை

இன்று நல்ல மாதுளை நூறு கிராமின் விலை 170 ரூபாய்கள் என்றால் ஒரு கிலோ 1700 வுக்கும் அதிகமாகப் போகின்றது. அந்தளவுக்கு முக்கியமானதொன்றாக மாறியுள்ளது.

எல்லா வகை மண்களிலும் மாதுளை நன்கு வளரும். எமது மண்ணுக்குப் பொருத்தமான ரகங்களைப் பயிரிடலாம். வேர் விட்ட குச்சிகள் அல்லது 12-18 மாதங்கள் வரை ஆன பதியன்களை 60 செ.மீ. நீளம், ஆழம், அகலமுள்ள குழிகளில் 3 மீட்டர் இடைவெளியில் நடவேண்டும்.

உரப்பாசனத்துடன் கூடிய சொட்டுநீர்ப் பாசன முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. செடிகள் நட்ட நான்காமாண்டு முதல் பலன் கொடுக்கத் துவங்கும் என்றாலும் 7 ஆண்டுகளுக்குப் பின்பு முழுப் பலனும் கொடுக்கும். ஓர் ஆண்டிற்கு ஒரு ஹெக்டரில் 20-25 டன்கள் மகசூல் எடுக்கலாம்.

எலுமிச்சை

நல்ல வடிகால் வசதியுள்ள இரு மண்பாங்கான குறுமண் நிலம் ஏற்றது. பிகேஎம் 1, ராஸ்ராஜ் ரகங்களைத் தேர்வு செய்யலாம். வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 5 மீட்டர் இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும். தேவைக்கேற்ப 7-10 நாள்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மரத்துக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 30 கிலோ பசுந்தழைகள் இட வேண்டும். நட்ட 3-ஆவது ஆண்டிலிருந்து காய்ப்பிற்கு வரும். ஆண்டுக்கு ஒரு ஹெக்டேரில் 20  டன் பழங்கள் கிடைக்கும்.

பலா

எல்லாவிதமான நிலத்திலும் நன்கு வளரும். ஆனால் நிலம் ஆழமாகவும், நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்கவேண்டும். வெளிப்பலா, சிங்கப்பூர் பலா, ஒட்டுப்பலா, பண்ருட்டி, பர்லியார் 1, பிஎல்ஆர் 1, பிபிஐ 1 மற்றும் பிஎல்ஆர் (ஜே) 2 ரகங்களைப் பயிரிடலாம். செடிகள் நன்றாக வளரும் வரை வாரமொரு முறையும், பின்பு கடும் வறட்சி காலங்களில் மட்டும் நீர் பாய்ச்சினால் போதுமானது.

விதைகள் மூலமாக வளர்ந்த செடிகள் 8 வருடங்களிலும் ஒட்டுக் கட்டப்பட்ட செடிகள் ஐந்து வருடங்களிலும் காய்ப்புக்கு வரும். ஓராண்டில் ஹெக்டேருக்கு 30-35  டன் பலா கிடைக்கும்.

பழப்பயிர்களைப் பயிரிடும்போது காய்ப்பு தொடங்கும் வரை காய்கறிகள், பயறு வகைகள் போன்ற குறுகியகாலப் பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட்டு விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.

ஆதாரம் : புதியதலைமுறை, 

                    விகாஸ்பீடியா


0 comments:

Post a Comment