ADS 468x60

06 January 2021

கொள்ளை இலாபம் தரும் கோழி வளர்ப்பு

இன்று பலரது விருப்பத்திற்குரிய உணவாக கோழி மாறிவருகின்றதனை, அதற்கான நாளாந்த விலை ஏற்றத்தினை வைத்தே நாம் அறிந்துகொள்ளலாம் அல்லவா! அந்த வகையில் கோழி வளர்ப்பு பலருக்கு வெற்றியினையும் பலருக்கு நஷ்ட்டத்தினையும் கொடுத்துள்ளது நஷ்டம் ஏற்படுவதற்கான காரணம் அவர்கள் அதனை முறையாக செய்து முகாமை செய்யாமையே! 

அதனை எவ்வாறு முறையாகச் செய்து இலாபமீட்டலாம் எனப் பார்க்கலாம் வாருங்கள்.

கோழிப்பண்ணை இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் கால்நடைத் தொழிலாகும். 2019 ஆம் ஆண்டில் கோழி உற்பத்தி மூலம் 0.38 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களித்தது, இது இலங்கையின் மொத்த கால்நடை உற்பத்திப் பங்களிப்பில் 64 வீதமாகும் ஆகும். ஆனால் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அதன் உற்பத்தியில் பின்னடைவை ஏற்படுத்தியது.

கோழி இறைச்சியில் உயர் தர புரதம், தாதுப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் தரவல்ல சரிவிகித உணவின் முக்கிய மூலதனமாகும். விரைவான வளர்ச்சி மற்றும் அதிக உணவை இறைச்சியாக மாற்றும் திறன் கொண்ட இறைச்சிக் கோழிகள் (புராய்லர்) இனங்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இறைச்சிக் கோழிப்பண்ணை தொழில் ஓர் குடும்பத்தின் முதன்மை வருமான மூலதனமாகவோ அல்லது கூடுதல் வருமானம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். கோழி உரம் நல்ல மதிப்புடையதானதால், பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க பயன்படுத்தலாம்.

இறைச்சிக் கோழி வளர்ப்பில் பயன்கள்

  • முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிப்பண்ணைகளை விட முதலீடுச் செலவு சற்றுக் குறைவு.
  • வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள்.
  • ஒன்றிற்கு மேற்பட்ட கோழிகளை ஒரே கொட்டகையில் வளர்க்கலாம்.
  • கால்நடைகளைக் காட்டிலும், குறைந்த தீவனத்திலிருந்து அதிக இறைச்சி உற்பத்தி செய்யவல்லது.
  • முதலீடு செய்த குறைந்த நாளிலேயே வலுமானம் ஈட்டலாம்.
  • ஆடு மற்றும் செம்மறியாட்டு இறைச்சியைக் காட்டிலும், நல்ல வரவேற்பு மற்றும் தேவை அதிகம்.

இறைச்சிக் கோழிப் பண்ணையின் முக்கியத்துவமும் எதிர்காலமும்.

இறைச்சிக் கோழி வளர்ப்பில், கடந்த 10 ஆண்டுகளில் எமது நாடு கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. உயர்தரக் கோழிக்குஞ்சு, கருவிகள், தடுப்பு மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை வழிகாட்டிகளும் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கின்றது. பராமரிப்பு முகாமைத்துவ முறைகள் அதிகமாகி, நோய்த்தாக்குதலால் ஏற்படும் இறப்பு வீகிதமும் வெகுவாக குறைந்துள்ளது. அநேக நிறுவனங்களும் தொழில் முனைவோருக்கு பயிற்சியளித்து வருகின்றன. 

இறைச்சிக் கோழிப்பண்ணைக்கு பரிந்துரைக்கப்படும் பொது முகாமைத்துவ முறைகள்.

இறைச்சிக் கோழிப் பண்ணையின் மூலம் சிறந்த பொருளாதார இலாபம் பெற நவீன மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறைகளைக் கடைபிடிக்கவேண்டும். சில முக்கிய விதிமுறைகளும், பரிந்துரைக்கப்பட்ட முறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொட்டகை அமைத்தல்

கொட்டகை அமைக்க நீர்த் தேக்கமாகாத உயரமான நிலங்களை தேர்வு செய்யவேண்டும்.

நீர், மின்சாரம், பாதை வசதி போன்றவை உள்ளவாறு ஏற்பாடு  செய்யவேண்டும். உயிர்க்கோழி மற்றும் தயாரான இறைச்சியையோ விற்பதற்கு சந்தை அருகில் உள்ளவாறு ஏற்பாடு செய்யவேண்டும்.

பண்ணை ஆரம்பிக்கும் முன் பயிற்சியும் அதுபோல் அனுபவமும் பெற்றபின் ஆரம்பிக்கலாம். பண்ணையிலேயே இருந்து தங்கி அடிக்கடி கண்காணிக்கவேண்டும்.

தேவையான அளவு இடம், தீவன இடைவெளி மற்றும் தண்ணீர் இடைவெளி விடவேண்டும்.

மழைநீர் புகாத வண்ணம், கொட்டகையின் பக்கச் சுவர்கள் வடக்குதெற்கு திசையிலும், வாசல் மற்றும் பின் பகுதி கிழக்கு மேற்கு திசையிலும் உள்ளவாறு அமைக்கவேண்டும்.

பலமான கூரை அமைத்து, நிலத்திலிருந்து ஒரு அடி உயரம் உயர்த்தி அமைக்கவேண்டும்.

3-4 அடி வரை கூரையின் மேல் படுதாவை போட்டால் மழை நீர் இறங்காமல் தவிர்க்கலாம்.

இரண்டு கொட்டகைக்கும் இடையே குறைந்தபட்சம் 50 அடி இடைவெளிவிட்டு கட்டவேண்டும்.

எல்லாப் பருவங்களில் சூரியஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்குமாறு. நாய், பூனை, பாம்பு, எலிகள் புகாத வண்ணம் கொட்டகை அமைக்கவேண்டும்.

சுற்றுச்சூழல் சுத்தமாகவும், ஈ, நுளம்பு பரவாமல் பாதுகாக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவையும் சுழற்சி முறையில் கோழிகளை விற்றபின்பு, கொட்டகையை கோழி எச்சம், எரு இல்லாமல் சுத்தம் செய்து சுவற்றில் சுண்ணாம்பு பூசி பின் 0.5 சதவிகிதம் மாலத்தியான், டிடிடி பூச்சிக்கொல்லி தெளித்தபின் அடுத்த குழு குஞ்சுகளை விடவேண்டும்.

நன்கு உலர்ந்த தூய்மையான சருகுகள் (மரத்தூள், உமி) போன்றவை அறையில் நான்கு அடுக்குகள் போட்டபின், சுத்தமான குஞ்சுத் தடுப்பான், தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்துப் பின்னர், கோழிக்குஞ்சுகளை விடவேண்டும்.

கூளங்கள் எப்பொழுதும் உலர்ந்து சுத்தமாக இருத்தல் அவசியம். வாரம் இருமுறை, கூளத்தை கிளறிவிடவேண்டும். கூளங்கள் ஈரமானாலோ, அவற்றை அகற்றிவிட்டு, புதிய கூளங்கள் இடவேண்டும்.

கோழி வளர்ப்பிற்கு தேவையான கருவிகள்

அறிவியல் பூர்வமாக தயார் செய்யப்பட்ட குஞ்சுத் தடுப்பான், தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளையே உபயோகிக்கவேண்டும்.

கோழிக் குஞ்சு

ஒரு நாள் வயதான சிறந்த இனத்தை அங்கீகரிக்கப்பட்ட குஞ்சுப் பொரிப்பகத்திலிருந்து வாங்கவேண்டும். பொதுவாக 2- 5 சதவிகிதம் கூடுதல் குஞ்சுகள் வாங்கவேண்டும்.

தீவனம்

உயர்தர சரிவிகித தீவனம் உபயோகித்து, சரியான அனுபவம் இருந்தால் பண்ணையிலேயே தீவனம் தயாரிக்கலாம்.

தீவனத்தை சுத்தமான உலர்ந்து காற்றோட்டமான அறையில்   சேமிக்கவேண்டும். ஈரமான தீவனத்தில் பூஞ்சாணம் நோய்த்தாக்கம் வரும்.

நன்றாக வடிவமைக்கப்பட்ட தீவனப் பாத்திரத்தை உபயோகிக்கவேண்டும். எலியைக் கட்டுப்படுத்தி தீவனம் சேதமாகாமல் காக்கவேண்டும்.

ஒவ்வொரு குழுக்கோழிகளுக்கு தனித்தனியாக தீவனப் பதிவேடு உபயோகிக்கவேண்டும்.

நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் தீவனம் உட்கொள்ளும் திறன் குறையும். மட்டுமல்லாது, தரம் குறைந்த தீவனமாகவோ அல்லது கொட்டகையில் வெப்பம் அதிகரித்தாலோ, குறைந்த இறை விழுங்கும்.

கோழிகளுக்கு தண்ணீர் அளித்தல்

எப்பொழுதும் தூய்மையான நீரையே அளிக்கவேண்டும்.

சிறந்த முறiயில் வடிவமைக்கப்பட்ட கருவிகளையே நீர் அளிக்க உபயோகிக்கவேண்டும். தேவையான இடைவெளிவிட்டு தண்ணீர்க் கருவியை வைக்கவேண்டும்.

தண்ணீர் பாத்திரங்களை தூய்மையாக வைத்தல் அவசியம்.  தண்ணீரை நேரடி சூரிய ஒளிப்படாத இடங்களில் சேமித்து வைக்கவேண்டும். கோடைக்காலங்களில் குளிர்ந்த நீரை அளிக்கவேண்டும்.

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

தூய்மையான சுகாதார நிலை (கோழியின் கொட்டகை), சரிவிகித உணவு, தூய்மையான நீர், ஆரோக்கியமான குஞ்சு ஆகியவையே நோய்த் தடுப்புக்கு முக்கிய அம்சங்களாகும்.

விருந்தினரை கோழிப்பண்ணையின் உள்ளே அனுமதிக்கவேண்டாம். அப்படி வந்தாலும், அவர்கள் கால்களை கிருமிநாசினி கரைசலில் நனைத்து பின்னர், கால்களில் காலணியும், உடல் கவசமும் அணிந்த பின்பு அனுமதிக்கலாம்.

நோய்த் தடுப்பு மருந்து அட்டவணையை உபயோகிக்கவேண்டும்.

நல்ல தரம் வாய்ந்த தடுப்பு மருந்துக்களை வாங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து மருந்துக்களை குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில், சூரியஒளி நேரடியாகப்படாத இடங்களில் செமித்து வைக்கவேண்டும்.

உபயோகப்படுத்திய பின் மீதமுள்ள மருந்தை சரியாக களைந்தெறிய வேண்டும். காலாவதியான மருந்தை உபயோகப்படுத்தக்கூடாது.

இறந்தக் கோழியை உடனடியாக புதைத்தோ, எரித்தோ அப்புறப்படுத்திவிட வேண்டும்.

பண்ணைக் கழிவுகளை தகுந்த முறையில் வெளியேற்றவேண்டும்.

நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட கோழிகளை பண்ணையிலிருந்து நீக்கிவேண்டும்.

இறப்பு பதிவேட்டினை ஒவ்வொரு கோழிக் குழுவிற்கும் தயார் செய்து முறையாக எழுதி வைக்கவேண்டும்.

கோழி எருவை (நோயினால் பாதிக்கப்பட்ட) பண்ணைக் கொட்டகையிலிருந்த அப்புறப்படுத்தி சுத்தம் செய்யவேண்டும்.

எலிகளே கோழியின் நோய்க் கிருமிகள் பரவக் காரணமாகின்றன. ஆகையால் அவற்றைத் தவிர்க்கவேண்டும். எலிப்பொறி வைத்து எலிகளைக் கொல்லவேண்டும்.

பொதுவாக கோழிகளுக்கு மருந்துகள் தண்ணீரில் கலந்து அளிக்கப்படுகின்றது. அவ்வாறு வைக்கும் போது முந்தைய நாள் வைத்த நீரையெல்லாம் அகற்றிவிட்டு, புதிதாக நீருடன் மருந்தைக் கலந்து வைத்தால், நல்ல பலன் தரும்.

மிதமான நோய்த் தாக்கத்தால் கோழிகள் இறந்துவிடாது ஆனால் எடை அளவு குறைந்துக் காணப்படும். ஆகையால் எடை குறைவிற்கு காரணம் என்ன என்றுக் கண்டறிந்து பின் நிவர்த்தி செய்யலாம்.

தீவிரக் கண்காணிப்பு மற்றும் முறையான பதிவேடு கையாளுதல் ஆகியவை நல்லப் பண்ணைப் பராமரிப்பிற்கு துணைபுரியும்.

பதனிடுதல் மற்றும் விற்பனை

கோழி இறைச்சியின் தேவையும், சந்தை வாய்ப்பையும் உறுதிச் செய்யது, பண்ணை அருகிலே இருக்குமாறு பண்ணை அமைக்கவேண்டும்.

சந்தை நிலவரத்தை நன்கு கவனித்து உயிர்க் கோழியின் தேவையைக் கண்டறியவேண்டும்.

கோழிகளை 6-7 வாரங்களுக்கு மேல் பண்ணiயில் வைத்திருக்கக்கூடாது, ஏனெனில் அதன் தீவன மாற்றத் தன்மைக் குறைய ஆரம்பித்துவிடும்.

கோழி இறைச்சியை விற்கும் போது நன்றாக சுத்தப்படுத்திய பாத்திரங்களையும் கருவிகளையும் பயன்படுத்தவேண்டும். கோழி இறைச்சியை குளிர்ந்த நீரில் 3-4 மணி நேரம் வைத்துப் பின் பாலித்தீன் பைகளில் வைத்துக் காற்றுப் புகாமல் வைத்து அடைத்துவிடவேண்டும்.

பதனப்படுத்தப்பட்ட இறைச்சியை விரைவில் விற்கவேண்டும். அவை பாதுகாக்க வேண்டுமெனில், ஆழ் குளிர் சாதனம் (10 முதல் 200 டி செ) உபயோகிக்கலாம். நீண்ட தூரம் எடுத்துச் செல்ல வேண்டுமெனில், குளிர்ச் சாதன வசதியுடைய வாகனம் உபயோகிக்கவேண்டும்.

இவ்வாறான எல்லா நடைமுறைகளையும் நன்கு கடைப்பிடித்தால் நல்ல பலாபலன்களை இந்தத் தொழில் மூலம் பெறுவது உறுதி.

ஆதாரம்: 

http://www.daph.gov.lk/web/images/content_image/news_bulletins/poultry_industry_monthly_report/2020/PoultrySectorForecast_2020_colour.pdf

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்

https://ta.vikaspedia.in/agriculture


0 comments:

Post a Comment