ADS 468x60

23 January 2022

கொவிட்டினை முறியடித்து மூன்று துறையால் முன்னேவரும் இலங்கைப் பொருளாதாரம்- 2022.

இன்று மக்கள் அதிகம் பொருளாதாரம் பற்றி படிப்படியாக அறியத் துவங்கியுள்ளனர். நாடு எதிர்கொண்டுவரும் சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான பின்னடைவை மக்கள் தமது வாழ்க்கையில் முதல் தடைவ அனுபவித்து வருவதனால் அதனுடைய தாக்கத்தை அவர்கள் உணர்ந்துவருகின்றனர். அதற்கு வலுவூட்டும் வகையில், தற்போதைய பொருளாதார நிலை குறித்து சமூகத்திலும் ஊடகங்களிலும் பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது. கொவிட்-19 தாக்கம் இலங்கையைப் பொறுத்தவரை வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள் இரண்டையும் மோசமாகப் பாதித்துள்ளது.  எமது நாட்டிற்கு அதிக அந்நிய வருவாய் ஈட்டித்தரும் மூன்று துறைகளான சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவபாய்ப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியன கொண்டுள்ள சவால்கள் இத்துறைகள் மூலமான உட்பெறுகையை அல்லது அந்நிய ஈட்டத்தினை கேள்விக்குள்ளாக்கியமையே டொலர் நெருக்கடிக்கான நேரடிக்காரணங்கள்.

இன்று இந்த நாட்டின் பின்னடைவை காரணம் காட்டி அரசை மாத்திரம் விமர்சித்தால் அது பயனற்றது. மாறாக இளைஞர்கள் திறனாளர்களாக மாறி உழைப்பைக் கையில் எடுக்கவேண்டும், அதற்காக ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த திறன் அபிவிருத்தி தசாப்தக் கொள்கை அமுல்படுத்த பாடுபடவேண்டும்.

அண்மைக்காலமாக வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டுவதற்காக இலங்கை சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ளது. கோவிட்-19க்கு மத்தியில் இந்தத் தொழில் முற்றிலும் பின்னடைந்துள்ள நிலையில் சுற்றுலாத்துறை மூலம் வாழ்வாதாரம் பெறும் அனைத்து நாடுகளையும் நடைமுறையில் பாதித்தது. எமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. சுற்றுலாத்துறை பின்னடைவு டொலர்கள் இழப்புக்களை மாத்திரம் தோற்றுவிக்காமல் பயணிகளின் வருகை குறைவடைந்தமையினால் ஆயிரக்கணக்கானவர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது. இது இலங்கையால் தாங்கிக் கொள்ள முடியாத இரட்டைச் பாதிப்புகளாக வர்ணிக்கப்படுகின்றது.

அதற்கு அடுத்த காரணமாக, கோவிட்-19 நோயினால் நாட்டிற்குத் திரும்பிய அழைக்கப்பட்ட இலங்கையிலுள்ள புலம்பெயர்ந்தவர்களினால் அனுப்பப்படும் பணம் பெருமளவு குறைக்கப்பட்டது. சுற்றுலா மற்றும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் ஆண்டுதோறும் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுத்தருவதனால், தடைப்பட்டு நிற்பது பொருளாதாரத்திற்கு பாரிய இழப்பாகும். இந்தத் தொற்றுநோயின் ஆரம்பத்தின் 12 மாதங்களில் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது, இது எமது நாட்டுக்கு ஈட்டித்தரும் அந்நிய வருவாய் நிலைமையை மோசமாக்கியது.

இந்தப்பின்னணியில்,  மோட்டார் வாகனங்கள் மற்றும் சில ஆடம்பர பொருட்களைத் தவிர நாட்டின் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க குறைப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தவிர, நாம் மக்களின் தேவைக்காக எரிபொருள் உட்பட சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும், இதற்கு மட்டும் ஆண்டுக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும். உள்ளூர் உணவு விளைச்சல் போதுமானதாக இல்லாத காரணத்தினாலோ அல்லது பயிர்கள் உள்நாட்டில் பயிரிடப்படாத காரணத்தினாலோ சில உணவுப் பொருட்களும் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறான பல நேரடிக்காரணங்களால் இலங்கை கடுமையான டொலர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது, ஒரு நல்ல செய்தி என்னவென்றால், மேலே குறிப்பிட்டுள்ள மூன்று துறைகளும் - சுற்றுலா, வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதி - படிப்படியாக உயர்ந்து வருகின்றன. 2022 ஆம் ஆண்டின் முதல் சில வாரங்களில் 30,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது நலிவடைந்த தொழில்துறைக்கு நம்பிக்கையின் கயிற்றை வழங்கியுள்ளது. மேலும், 100,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் 2021 ஆம் ஆண்டில் மட்டும் தங்கள் முந்தய வெளிநாட்டு வேலைகளுக்குத் மீண்டும் திரும்பியுள்ளனர் அல்லது புதியவர்கள் அங்கு சென்றுள்ளனர். 2021 ஆம் ஆண்டின் கடைசி சில மாதங்களில் ஏற்றுமதித் துறை பல சாதனைகளை கண்டுள்ளது. இவை 2022 ஆம் ஆண்டிற்கான நல்ல அறிகுறிகளாக பார்க்கவேண்டும்.

இவ்வாறான ஒரு பொருளாதார முட்டுக்கட்டைக்கு மத்தியில், அரசாங்கம் உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற சிந்தனைக் களம் உருவாகி வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், உணவுப் பாதுகாப்பும் எரிசக்திப் பாதுகாப்பும் மிக முக்கியமானவை அதனால் இவற்றுக்கான முன்னுரிமைகளை தட்டிக்கழிக்க முடியாது..

பொருளியலாளர்களின் கணிப்புப்படி, தற்போதைக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்றாலும், வறட்சியின் காரணமாக நீர்மின்சார இழப்பு மற்றும் டொலர் நெருக்கடியால் ஒரே நேரத்தில் அதிக அளவில் எரிபொருளை வாங்க முடியாமல் மின்சாரத்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். இந்த வகையில், சமீபத்திய அமெரிக்க டொலர் 500 மில்லியன் இந்தியக் கடன் வழங்கலானது எரிபொருள் கொள்முதலுக்கு மிகவும் பொருத்தமான நேரத்தில் வந்துள்ளது எனச் சொல்ல முடியாது.

நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டிய ஒரு விடயம், 2022 ஜனவரி 18 அன்று முதிர்ச்சியடைந்த சர்வதேச கடன்தொகை ஒன்றினைத் திருப்பிச்செலுத்தியது. அதனைச் செலுத்தாமல், அதற்குப் பதிலாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை உணவு மற்றும் எண்ணெய் இறக்குமதிகளுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற வாதம் ஒன்று இருக்கின்றது. அவ்வாறு நடந்திருந்தால் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் வந்திருக்கும். ஒரு நாடு கடனைத் திருப்பிச் செலுத்தாத நாடாக அடையாளம் காணப்பட்டவுடன், முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் நன்மதிப்பிற்கு திரும்புவது மிகவும் கடினம். 30 வருடகால யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் கூட அதன் வெளிநாட்டு கையிருப்பு வெறும் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்த போதும் கூட, இலங்கை வரலாற்றில் எந்தக் கட்டத்திலும் வெளிநாட்டுக் கடன்களை சரியாகத் திpருப்பிச் செலுத்துவதில் தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக நம் எல்லோருக்கும் தெரியும் கோவிட்-19 தொற்றுநோயால் நாடு சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவுகள் பலதடவைகள் கிடைக்காமல் போயுள்ளன. அதேபோல் சமீபகாலமாக, எரிபொருளைப் பெற இங்கிலாந்தில் பெரும் வாகனங்கள் வரிசையில் நிற்பதனைக் கண்டுள்ளோம். இதேபோல் ஒவ்வொரு நாடும் சில நெருக்கடிகளை சந்தித்துள்ளன. அண்மையில் ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியது என்னவென்றால், நம்மிடையே சிறு வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்று. அது இனறு இந்த நாட்டின் மீட்சிக்கு மிக இன்றியமையாதது.

எனவே அரசு படிப்படியாக இந்த முக்கிய மூன்னு துறைகளையும் கட்டியெழுப்புவதற்கான பூர்வாங்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான திறனாளர்களை நாம் ஊக்குவித்து தயார்படுத்த கல்வி நிறுவனங்களுடன் செயற்படவேண்டும் இதே தேவை இந்த பதிய சாதாரண நிலையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியிலும் தேவையாக உள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து சுகாதார நடைமுறைகளும் தொடர்ந்து இடைவிடாது பேணப்படவேண்டும், உறுதிப்படுத்தவேண்டும் இவ்வாறான நிலை தொடர்ந்தால் நிச்சயம் எமது நாடு இந்த படுகுழியில் இருந்து மீண்டு வரும் என்பதனில் எந்தவித ஐயமும் இல்லை.


0 comments:

Post a Comment