ADS 468x60

13 January 2022

நாம் நமது பொங்கல் விழாவுக்கு முக்கியம் கொடுப்பதில்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதமாக தை மாதம் விளங்குகின்றது. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இனியும் கொண்டாடவேண்டும்.

நமக்கென்று இருக்கின்ற அடையாளம், பண்பாடு, விழா அதை நாம் போற்ற வேண்டும் அல்லவா! ஆனால் நாம் அதை விடுத்து நட்சத்திரங்களை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஆரிய விழாக்களைக் கொண்டாடுகின்றோம். நமக்கென தமிழருக்கென பிரத்தியேகமாக இருக்கின்ற தை மாதத்தில் வருகின்ற தமிழ் முதலாம் திகதியினை கொண்டாடுவது குறைந்து வருகின்றது. 

பாருங்கள் சித்திரை தொடங்கினால் சித்ரா பவுர்ணமி என்கின்றோம் சித்திரை நிலவு எனறு யாரும் சொல்வதில்லையே. வைகாசி வந்துவிட்டால் வைகாசி விசாகம் என்கின்றோம், ஆனியில் அதை ஆனித் திருமஞ்சனம் என்று கொண்டாடுகின்றோம் ஆடியில் ஆடிப்பூரம் என ஒரு உற்சவம் வைத்துக் கொண்டாடுகிறோம். ஆவணியில் ஆவணி அவிட்டம் யாரோ பூணூல் போடுகின்ற விழாவாகக் கொண்டாடுகின்றோம். 

புரட்டாசியில் சனி விரதங்களை கொண்டாடுகின்றோம் நவராத்திரி விழாக்களைக்; கொண்டாடுகிறோம் இதுகூட தமிழர்களுடைய விழாக்களில் வருவதுகிடையாது, ஆனால் இவை கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி தொடங்கிவிட்டால் தீபாவளி கார்த்திகையில் தீபங்களை வைத்துக் கொண்டாடுகின்றனர். அடுத்து மார்கழி அந்த மாதத்தினை பீடை மாதம் எனச் சொல்லுகின்றார்கள். மார்கழி; மழை பெய்கின்ற காலம் பஞ்சம் எல்லோருக்கும் நோய் பிணியோடு வாழுகின்ற மாதமாக அதனால் மார்கழியை கூட சிறப்பாக கொண்டாடுவதில்லை. 

தை என்பது பொங்கல் மாதம் தமிழர்களுடைய பாரம்பரிய கொண்டாட்டங்களை சுமந்து வருகின்ற வருடத்தின் முதல் நாளாக கொண்டாடப்படுகின்ற மாதம் அதில்கூட தைப்பூசம் என்றுதான் முதன்மைப் படுத்துகிறார்கள். மாசி மாதத்தில் மாசி மகத்தை கொண்டாடுகின்றார்கள் பங்குனியில் பங்குனி உத்தரம் இந்த மாதங்களில் வருகின்ற விழாக்கள் எல்லாம் தமிழர்களுடையதா என்று நீங்கள் பார்க்க வேண்டும் கிடையாது.

வருடங்ளில் கூட பிரபவ விபவ சுக்ல பிரமோதூத பிரசோற்பத்தி ஆங்கீரச ஸ்ரீமுக பவ யுவ எனது துவங்கி குரோதன அட்சய என்று அறுபது வருடங்கள் இவை ஒன்றும் தமிழர்களுடைய வருடங்கள் அல்ல அவற்றை நாங்கள் கொண்டாடுகின்றோம் ஆனால் எங்களுடைய வருடமாக புது வருடமாக கொண்டாட்டமாக இருக்கும் தைத்; திருநாளை நாங்கள் கொண்டாடுவது குறைந்து வருகின்றது அதுதான் உண்மையான தமிழர்களுடைய உண்மையான அடிப்படை கொண்டாட்டமாக இருந்துவருகின்றது. ஆனால் நாம் ஆங்கில வருடம் பிறந்ததும் எடுக்கின்ற பெரு அலங்காரங்கள் தோரணங்கள் மின் விளக்குகள் என்பன எதமிழர்களாகிய நாம் தமிழர்களுடைய விழாவான தை பொங்கல் கொண்டாடுவதற்கு கரிசனை செலுத்துகிறோமா இல்லவே இல்லை. 

எனவே தமிழர் திருநாள் தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல்ல வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஆனாலும் இன்று எமக்கே உரித்தான எமது தைப்பொங்கல் மதங்களைக் கடந்து அதிகமான தமிழ் மக்களால் இது உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சூரிய உதயத்தின் போது வீட்டு முற்றத்தில் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுகின்ற நாள் ஆகும்.

உலகத்திலுள்ள மக்களின் அன்றாட தேவைகளுள் உணவு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. உலகிலுள்ள ஜீவராசிகளின் தேவையும் உணவாக இருக்கின்றது. அனைத்து மக்களும் வாழ்வதற்கு நெல் அரிசிச்சோறு தேவைப்படுகின்றது. இதன் நிமித்தம் உழவன் என்பவன் தன் உடம்பை வருத்தி உலக மக்களுக்கு உணவை வழங்குகின்றான். எனவே தைத் திருநாளை உழவர் திருநாள் என்றும் கூறலாம். உழவன் என்பவன் இல்லை என்றால் உலகமே பட்டினியாகும். அந்த விவசாயம் செழிக்க இயற்கை ஒத்துழைக்க வேண்டும். இயற்கை என்னும் போது சூரிய பகவான் ஒளியூட்ட வேண்டும். 

அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும் போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும்.

நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம். 

எனவே அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினம் தமிழர் வாழும் அனைத்து பகுதிகளிலும் விசேடமானது.

பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டில் புதிய நம்பிக்கை பொங்கி, அந்த நம்பிக்கையில் புதிய முயற்சிகள், புதிய வழிகள் மற்றும் புதிய வாழ்க்கை என்பன தொடங்கி, கடந்து வந்த கடினமான பழையவைகள்; எல்லாம் அழிந்து, புதியன புகும் நாள் தான் இந்த தமிழர் திருநாளாக இருக்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அந்த வழி பிறக்க நாம் இந்த காலத்தில்; பட்ட துன்பங்கள் மறைந்து தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து, இந்த ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழ சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம். அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மன மகிழ்ச்சி அடைகின்றேன்.


0 comments:

Post a Comment