ADS 468x60

01 January 2022

புத்தாண்டில் எடுக்கும் உறுதிப்பாடுகளை பலர் தொடர்கின்றோமா!

தமிழரின் புதிய ஆண்டு பிறக்கப்போகின்றது, ஆங்கிலப் புதுவருடம் பிறந்திருக்கின்றது இந்தவேளையில் எத்தனை பேர் நம்மை வாழ்த்தினார்கள்! வாழ்த்துவார்கள்! எவ்வளவு பேர் நமக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பினார்கள்! அனுப்புவார்கள்! இந்த ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கின்றன இருக்கும் ஊக்குவிக்கின்றன மற்றும் ஊக்குவிக்கும். இவை அனைத்தும் நிகழவேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். நிகழும் என்று நம்புவோம்.

நம்மில் பலர் பொதுவில் ஒவ்வொரு புத்தாண்டிலும் அநேகர் பல பல உறுதிகளை எடுப்பார்கள். உதாரணமாக 

நான் இனி வீணாகக் காலம் கழிக்கமாட்டேன்.

நான் இனி முறையாய் உடற்பயிற்சி செய் வேன்.

நான் இனி குடிக்க மாட்டேன்.

நான் நன்றாகப் படிக்கவேண்டும்.

என்றெல்லாம் அவரவர் தேவைக்கேற்ப ஏதோ ஒன்றினை உறுதியாய் பிடித்து தொடரவேண்டும் என்று முனைகின்றனர். ஆனால் பலர் ஒரு வாரத்திற்கு உள்ளாகவே கைவிட்டுவிடுவர். அதிலும் எடை குறைப்பு செய்ய முயல்வோருக்கு சவாலாகவே அமைந்துவிடுகின்றது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும்தான்.

எனவே வருடம் தோறும் மனிதனின் வாழ்வு அவன் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆயுள் முடியும்வரை வாழ்வு மனிதனுக்கு அனுபவ பாடங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஏட்டுக்கல்வி அவசியமே என்றாலும் அனுபவ கல்வி என்றென்றும்; மறக்க முடியாத ஒன்றாகும்;.

உண்மையில் வாழ்வு என்பதனை மிகவும் ரசித்து வாழ்வதற்கான சூழ்நிலை ஒரு சிலருக்கே அமைந்துள்ளதாக இருக்கலாம். ஆயினும் வாழ்வு அனைவருக்கும் பல நேரங்களில் அதிர்ஸ்டத்தினையும், அதிசயித்தினையும் தரமறுப்பதில்லை. இன்று நாம் வாழ்வில் காணும் முன்னேற்றங்கள் அனைத்துமே அதிர்ஸ்டங்களும், அதிசயங்களும் தானே! இருப்பினும் வாழ்வு மிகப் பெரிய சுமையாகவே பலருக்கும் இருப்பதாய் நினைக்கின்றோம் இல்லையா.

இந்த உலகில் பலருக்கு குறைகளும், குழப்பங்களும் சந்தேகங்களும் அதிகமாக இருக்கின்றன. காரணம் முனைப்பும், நிதானமும், பொறுமையும் வெகுவாய் குறைந்துவிட்டது. மழையும் காத்தும் சேர்தடிக்கும் பொழுது எத்தனை மரங்கள் வீழ்ந்தன. எத்தனை பறவைகள் கூடுகளை இழந்தன. குஞ்சுகளை இழந்தன. ஆனால் எந்த பறவையும் மழையினை பார்த்து நீ என் வாழ்வினை அழித்து விட்டாய் எனக்குறை கூறவில்லை. முடங்கி மூலையில் அமரவில்லை. மீண்டும் கூடுகட்டி வாழ்கின்றன.

நம்மால் மட்டும் ஏன் இது முடி வதில்லை. அலுத்து சலித்து நொந்து போகின்றோம். காரணம் வாழ்வு என்றாலே போராட்டம் என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம். கோபப்படுகின்றோம். நியாயமான இடத்தில் அளவான கோபம் காட்டலாம். ஆனால் நமக்கு ஏற்படுவது ஏமாற்றத்தின் காரணமாக ஏற்படும் கோபம். இந்த கோப உணர்ச்சி புயலாய் வீசி விடுகின்றது. கோபம் வீசி முடித்த பிறகு ஏற்படும் இழப்புகள் ஏராளமாகி விடுகின்றது.

சரி ஏன் ஏமாற்றம் ஏற்படுகின்றது? ஏனெனில் தகுதியே இல்லாதவற்றுக்குக் கூட ஆசைப்படுகின்றோம். அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புகள் நிகழாத பொழுது ஏமாற்றம், கோபம், சோர்வு, ஏற்படுகின்றது. ஒரு மனிதன் முறையாய் வாழ்ந்து குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதே சவாலாகவும் சாதனையாகவும் உள்ளது என்பதினை இந்த கால கட்டத்தில் நாம் உணரவேண்டும் அல்லவா. 

நம் வெற்றிக்கும் சாதனைக்கும் சிபாரிசுகளை தேடி அலைய வேண்டாம். செய்யாதீர்கள் சிபாரிசுகள் தரும் வெற்றி சில காலம் மட்டுமே நம்மோடு கூடவரும். ஆனால் நமது தன்னம்பிக்கை மட்டுமே நமக்கு நிரந்தர வெற்றி தரும். இதனை பேசுகின்றோம். ஆனால் செயல்படுத்துவதில்லை. பொறுமை, நிதானம் இவை இரண்டும் இருந்தாலே வாழ்வில் வெற்றி பெற்று விடுவோம். இது நன்கு தெரியும். ஆனால் ஏனோ ரத்தத்தில் இவை அவ்வளவாக பதியவில்லை.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் 'எளிமையான வாழ்க்கை ஒருவரை வலிமையாய் வாழவைக்கும்'.

ஆனால் எளிமையான வாழ்க்கைக்கு உறுதியாய் இருக்கின்றோமா என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.

முடிந்தவரை கட்டுப்பாட்டுடன் இருந்தாலே நல்ல மனமகிழ்ச்சி ஏற்படும் செய்கின்றோமா?

ஒழுக்கமாய் வாழ்ந்தாலே ஒரு வித நிம்மதி எப்பொழுதும் நம் முன் பட்டாபோட்டு வீடு வாங்கி விடும். ஆனால் ஒழுக்கம் என்றால் எது வென்று புரிகிறதா? குறைந்தது வரிசையில் நிற்கும் பொழுது பிறரை தள்ளி முன்னால் முண்டியடித்து செல்லாமல் இருக்க முடிக்கின்றதா? பல நேரங்களில் முடிவதில்லையே. ஆனால் ஒழுக்கம் என்பது ஒருவகை நிம்மதியை கொடுக்கும். பதை பதைப்பினை குறைத்து விடும்.

எல்லாம் இருந்தும் ஏன் நாம் குறைகளோடும் குழப்பத்தோடும் வாழ்கின்றோம். மீண்டும் இந்த கேள்வி எழும். இதற்கு பதில் நமக்கு நம் வாயினை மூடத் தெரியவில்லை. வாயை மூடத் தெரியவில்லையா? அப்படியென்றால் என்ன பொருள்? வாய்க்கும், வாழ்விற்கும், என்ன சம்பந்தம்? என்றால் சம்பந்தம் இருக்கின்றது.

குழந்தையாய் பிறந்தவுடன் வாய் திறந்து அழுகின்றோம். இது பசி, தூக்கத்தோடு நிறைவு பெற்று விடும். இரண்டு வயதில் மழலை பேச ஆரம்பிக்கும் நாம் காலம் முழுவதும் எல்லோரையும் என்ன வெல்லாம் பேசுகின்றோம். அதே போன்று ரைஸ்மில் போல் ஓயாது ஏதாவது மென்று கொண்டே இருக் கின்றோம். நேரம் கெட்ட நேர உணவு, தவறான உணவு, சதா உணவு என்று உண்டு 20 வயதிலேயே நிரந்தர நோயாளி ஆகி விடு கின்றோம்.

கட்டுப்படாத நாக்கு மனிதனை நோயாளி ஆக்குகின்றது. கட்டுப்படாத நாக்கால் மரியாதை, ஒழுக்கம் இழந்து தீரா பிரச்சினைகளோடு வாழ்கின்றோம்.

அன்பு என்பது அனைவருக்கும் தேவையாய் இருக்கின்றது. ஆனால் பிறருக்கு அதனை கொடுக்க அநேகருக்கு முடிவதில்லை. காரணம் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் விதம்தான். நாம் அன்பை பொழிவோம். பதிலுக்கு ஒரு ஆறுதலையாவது எதிர்பார்ப்போம். இந்த இடத்தில் நான் எங்கோ படித்த வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றது.

தேவைப்படும்போது நம்மை உபயோகிக்க குடை போல் தூக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள். நாம் வேண்டாம் என்கிற போது ஒரு மூலையில் தொங்கவிட்டு விடுவார்கள். நாம் தடுக்கி விழுந்துவிட்டால் கைகொடுக்க ஆள் இருப்பதில்லை. ஆனால் எழுந்து நடக்க முயன்றாலே போதும். திட்டம் போட்டு ஓடி வந்து காலை தடுக்கி விடுவார்கள்.

ஆக ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையினை கெடுக்கவும் ஒரு கூட்டமே முயன்று செயல்படுவதை நாம் பார்க்கின்றோம். ஏன்? அனுபவிக்கவும் செய்கின்றோம். இதனை மீறிதான் ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றான்.

பின் அன்பு எப்படி ஏற்படும்? எப்படி பரவும். ஆகவே தான் எதிர்பார்ப்புகளை உருவாக்கி பின் ஏமாந்து வலியினை சுமக்கக்கூடாது என்கிறோம். சுமந்தால் வாழ்க்கை நரகம்தான்.

எனவே நம் மனம், நம் மவுனம், நம் சகிப்புத்தன்மை புரியாத உறவுகளுக்கு நாம் பேசினாலும் புரியாதுதானே? வாழ்வில் நம் வேதனைகளை மனதில் களஞசியப்படுத்தி வைத்துவிட்டு வெளியே புன்முறுவல் செய்கின்றோம். தாய் தந்தையரின் திட்டிற்கு பின்னே கொட்டிக் கிடக்கும் அன்பை பார்க்கின்றோம். இவைகளை புரிந்தால் தான் நாம் கொடுக்கும் அன்பு நமக்கு திரும்ப கிடைக்கும். இல்லாவிடில் நம்பி ஏமாறுவது அன்றாட நிகழ்வாகிவிடும். இது தேவையா?

ஆக வேண்டாதவைகளை தூக்கிப்போட்டு விட்டு கசப்பான சில நிகழ்வுகள் கடந்த காலத்தில் இருந்தால் அதனையும் திரும்பிப் பார்க்காது முன்னேற முனைவதுதான் புத்தாண்டு என்பது அதுமட்டுமல்ல ஒவ்வொரு நாள் விடியலின் பொழுதும் நாம் வாழ வேண்டிய வாழ்க்கை முறையாக அமையும். மகிழ்ச்சி வேண்டுமா? குழந்தைகளோடு நேரத்தினை செலவழித்துப் பாருங்கள்.

ஒரே நேரத்தில் சிரிப்பு, ஆனந்தகண்ணீர் இரண்டும் இருக்கும். அன்றாடம் இரவு தூங்கப்போகும் முன் சற்று யோசிப்போம். அன்றைய நாளில் நாம் செய்த நன்மைகள், அல்லாதவைகள் பற்றி சிந்திப்போம். தவறுகளை அவ்வப்போதே திருத்திக் கொள்வோம்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் அதனை உறுதியாய் கடைபிடிப்போம். ரூபம் பலவானாலும் ஒளியும், ஒலியும் தான் இறைவன் ரூபத்தினை அழகுபடுத்தி ஆராதிப்பது. நம் ஆத்மாவிற்கு ஆழ் மனதிற்கு நாமே கொடுத்துக் கொள்ளும் ஒரு விருந்து.

அதேபோல் தன்னம்பிக்கையினை தன் ஆத்ம சக்தியினை கெட்டியாய் பற்றிக் கொள்ளலாம். இங்கு ஒளியும்-ஒலியும் தான் அவரவர் ஆத்மா, ஆழ் மனது எனலாம்.

ஆழ் மனதே அதிக சக்தி வாய்ந்தது. எனவேதான் அனை வரும் தியானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. தியானம் அனை வருக்கும் பொதுவானது.

தியானத்தின் மவுனம் மிக உயர்ந்தது. அந்த மவுனமே நமக்கு பல உண்மைகளை ரகசியங்களை நமக்கு சொல்லிவிடும். இயற்கை நமக்கு சில நிமித்தங்கள் மூலம் உணர்த்தும். அவற்றினை புரிந்து கொள்ள நம் மனம் தெளிவாய் இருக்க வேண்டும். இறைவன் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார். மனதிலும் மூளையிலும் அதிக டிராபிக் ஜாம் இருப்பதால் இறைவன் பேச்சு நம் காதில் விழுவதில்லை.

யாரையும் திட்டாதீர்கள். சொற்களால் மட்டுமல்ல. மனதாலும் ஒருவரை திட்டாதீர்கள். அவர் உங்களை மனம்நோக செய்திருக்கலாம். இருந்தாலும் திட்டாதீர்கள். ஏன் இப்படி சொல்கின்றேன். உங்களை அன்னை தெரசாபோல் வாழச் சொல்கின்றேனா? இல்லவே இல்லை. அது அனைவருக்கும் சாத்தியமா என்ன? நான் சொல்லும் காரணம் வேறு. கேட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். இந்த புத்தாண்டில் எதை கடைபிடிக்கின்றீர்களோ இல்லையோ இதனை கடைப்பிடிப்பீர்களா? அப்படி என்ன ரகசியம் என்றால் நிச்சயம் இது ரகசியம் தான்.

ஒருவர் பிறரை தொடர்ந்து திட்டும்போது அவரின் பாவங்களை திட்டுபவர் ஏற்றுக் கொள்கிறாராம். திட்டு வாங்குபவர் திட்டுபவரின் புண்ணியங்களை பெற்றுக்கொள்கிறார்களாம். எனவே அடுத்தவரை இனி திட்டாதீர்கள். இது குழந்தைகளுக்கு பிறரை நிந்திக்கக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட கற்பனை கதை என்று கூட வைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து பிறரை திட்டிக் கொண்டே இருப்பவரை வீடோ, ஆபீசிலோ வேறு பெயர் சொல்லி குறிப்பிடு வார்கள். இவ்வாறு தொடர்ந்து கோபப்பட்டால் அனைத்து நோய்களும் உடலில் நிரந் தரமாய் குடியேறும். உறவுகள் விலகும். இவை அனைத்துமே பாதிப்புகள்தானே. முடிந்தால் எதிராளியை திட்டாமல் அவர் நினைவு வரும் போது வாழ்க வளமுடன் என சொல்லிப்பாருங்கள்;. பலர் அவ்வாறு சொல்லும் போதே அந்த சபதம், ஆங்காரத்தில் எதிராளி பொசுங்கி விடுவாரோ எனத் தோன்றும். நாளடைவில் அந்த வேகம் வலுவிழந்து எதிராளியின் நினைப்பே நீங்கி விடும்.

ஆகவேத்தான் நாம் தனியாய் இருக்கும்போது நம் எண்ணங்கள் மீது கவனம் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் இருக்கும் போது நம் வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

'காலத்திற்கு அதிக சக்தி உண்டு

காயங்களை ஆற்றும் சக்தி உண்டு'

'காலத்தின் கணக்கு இறைவனுக்கு மட்டுமே தெரியும்

பொறுமைதான் பலம், சக்தி.

- யோகி ராம் சுரத்குமார்

காலம் நமக்கு சொந்தமானது இல்லைதான். அதனால் காலத்தோடு ஒன்றி நம் வாழ்வினை பயணிக்க வேண்டும்.

Thanks malimalar


0 comments:

Post a Comment