ADS 468x60

18 January 2022

பணிப்பாளர் Dr.சுகுணன் புதிய நியமனம்- காலத்தின் கட்டாயம்!

இன்று ஒரு செய்தி கேட்டு அகமகிழ்ந்து போனேன். நண்பரும் வைத்தியருமாகிய சுகுணன் எமது மாவட்டத்துக்கு பிராந்தியப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஒரு மாற்றத்துக்கான ஆண்டாக இருக்கின்றது என்பதற்கு இது சான்றாக இருக்கும்.

நண்பர் வைத்தியர் சுகுணன் அவர்கள் எனக்கு நெடுநாளாக தெரிந்த ஒரு பெரு முயற்சியாளர், வேலையில் புதுமை புனைகின்ற ஒரு அசாத்திய நிருவாகத் திறமை மற்றும் தலைமைத்துவப் பண்புக்கு சான்றாக உள்ளவர். பிற உத்தியோகத்தர்களுடன் மிகச் சாதுரியமாக தொடர்பாடலை மேற்கொண்டு திட்டமிட்ட பல செயற்பாடுகளை நடத்திக்காட்டும் வல்லவர். 

இனம், மதம் மற்றும் பிரதேசம் கடந்து சேவையாற்றக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுள் வைத்தியராகவும், பணிப்பாளராகவும் உள்ள சுகுணணுக்கு நிகர் அவரேதான். எனவே எனக்குள் எனது மக்களின் முன்னேற்றம் சார்ந்து இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து கனவினை நனவாக்கும் நம்பிக்கை நாயகனாக உங்களை இந்த மக்களைப் போல நானும் பார்க்கின்றேன். இத்தருணத்தில் உங்களை இச்சேவையில் நட்சத்திரமாக அல்ல சூரியன் போல பிரகாசித்து ஒரு வரலாறு படைக்க இறைவனை வணங்குவதுடன், உங்கள் சேவைக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருப்பேன் என்பதனைக் கூறிக்கொண்டு, சுகாதார முன்னேற்றத்தில் சில கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயங்களை உங்கள் செவிகளுக்குள் போட்டுவைக்க விரும்புகின்றேன்.

நாம் எதிர்பார்க்கும் சேவைகளாக,

1. பாடசாலைகளில் இந்தச் சூழலில் தொடர்சியாக டெங்கு, கொவிட் ஆபத்துக் காணப்படுவதனால் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் செயலணிகளை உருவாக்கி அவற்றை முறையாகச் செயற்படுத்த வேண்டுகின்றேன்.

2. எமது முதியோர்கள் நலிவுற்றவர்கள், விசேட தேவையுடையவர்களின் நலன் கருதி அவர்களுக்கான பிரத்தியேக சுகாதார அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துங்கள். அது புதிய மாதிரியாக முன்னெடுங்கள் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நாம் குறைத்து தரமான சுகாதார சேவையினை வழங்க ஆவண செய்யுங்கள்.

3. முதலில் இந்த மட்டக்களப்பு மாவட்ட பணிமனைக்கான இணையத்தினை சீர்படுத்துங்கள், பிறர் அதனை இலகுவாக அணுகும் வண்ணம் அதனை செப்பமிடுவது தேவையாக உள்ளது. ஏனெனில் தகவல் மிக இன்றியமையாதது தகவல் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் இருந்தால் அது நோயற்ற சமுகத்தை அதிகரிக்கும். அதுபோன்று இது தமிழிலும் தகவல்களை கொண்டிருந்தால் அது அதிக மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும்.

4. எமது கிராம மக்களின் நலன் கருதி செயற்பட்டுக்கொண்டிருக்கும் மொபைல் கிளினிக் (நினைக்கின்றேன் 9 கிளினிக் உள்ளது) வசதிகளையும் அதனை அதனை இலகுவாக அணுகும் வசதிகளையும் சீர்செய்து அவற்றை கண்காணிக்கும் ஒரு குழுவினை அமைத்து அதனை சீர்செய்யவேண்டும். குறிப்பாக வாகரை மற்றும் கிரான் போன்ற பகுதிகள் உங்கள் சேவையால் மிகக் கவனத்துக்குள்ளானால் மேன்மை பெறும்.

5. பின்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள எம் ஓ எச் காரியாலயங்களின் வினைத்திறனான செயற்பாட்டையும் வசதிகளையும் உறுதிப்படுத்தல்.

6. அதுபோன்று எமது மாவட்டத்தின் 14 ஆரம்ப சுகாதார பிரிவுகளில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள அனைத்துக்குமான வசதிகள் சேவைகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றை குறுகிய நீண்ட காலத்தில் நிவர்த்திக்கும் திட்டத்தினை பல்கலைக்கழக அமைப்புக்கள், ப.க.ப மாணவர் சங்கங்களின் உதவியுடன் திட்டமிட்டு மேம்படுத்தவேண்டும். அதன் மூலம் அனைத்து மக்களும் சீரான சேவையினைப் பெறும் ஒரு பாரிய உதவியினை செய்யலாம்.

7. அதுபோன்று நமது பிராந்திய மற்றும் ஆதார வைத்தியசாலைகளின் தரமுயர்வு, வைத்தியர்கள், தாதிமார் பற்றாக்குறை அதுபோன்று ஏனைய சிகிச்சை வசதிகளின் பற்றாக்குறைகள் பல உள்ளன. அவை நிபுணர்கள், மற்றும் பொதுமக்கள், திட்டமிடலாளர்களால் நன்கு கண்டறியப்பட்டு அவை அபிவிருத்திக் குழுத்தலைவர் ஊடாக அமைச்சுக்கு அறிவிக்க நீங்கள் ஆவண செய்ய வேண்டுகின்றேன்.

8. இவற்றின் அடைவுகளையெல்லாம் இந்த மாவட்ட இணையத்தளத்தில் பதிவேற்றி மற்றவர்களின் பார்வைக்கு விட்டு வையுங்கள். அதுபோல பொதுப் புகார் பெட்டகம் ஒன்றை மக்களின் கருத்துக்களை கேட்டறிய ஸ்தாபியுங்கள்.

9. சுகாதார மேம்பாடுகள், அபிவிருத்தி சார்ந்த மாநாடுகளை, ஒன்றுகூடல்களை நடாத்தி அவற்றின் மூலம் நல்ல முடிவுகளை இந்தப் பிராந்திய சுகாதார அபிவிருத்திக்காக செய்யுங்கள். இதற்காக துறைதேர்ந்த அமைப்புக்களின் உதவியினை நாடலாம். உ.ம் பல்கலைக்கழகங்கள்.

எனவே, தலைமைத்தவத்தின் சிறப்பானது தனதும் தன்னைப் பின்பற்றுவோரதும் விழுமியங்களையும் (Values) ஊக்கங்களையும் (Motivation) நோக்குகின்ற பார்வையில் தங்கியுள்ளது எனலாம்.ஒகியோ பல்கலைக்கழகம் (ஐ.அமெரிக்கா) ஆய்வில் தலைமைத்துவத்தின் நடத்தைகளில் நான்கு முக்கிய காரணிகள் குறிப்பிடப்படுகின்றன.

1. பிறர் நலச் சிந்தனை (Consideration)

2. குழு அமைப்பினைத் தொடக்கி வைத்தல் (Initiating Structure)

3. உற்பத்திக்கு வலியுறுத்தல் (Production Emphasis)

4. சமூக நுண்ணுணர்வு (Social awareness)

எனவே, இந்த அனைத்துப் பண்புகளையும் உடைய உங்களுக்கு எமது கல்வி மற்றும் சுகாதார நிலையில் பின்னிற்கும் மாவட்டத்தினை முன்னே கொண்டு செல்ல கிடைத்த வாய்பாய் எடுத்து மக்கள் சேவையினைத் தொடருங்கள்.

இவை அனைத்தும் ஈடேற்றும் நடாத்திக்காட்டும் ஒரு திறமையாளர் நீங்கள் மாத்திரம்தான் இருக்க முடியும் என்பதனாலேயே இவற்றை தெரிவிக்கின்றேன். நான் இதுபோன்று வேண்டுதலை யாரிடமும் வைத்ததில்லை ஏனெனின் அந்த நம்பிக்கை வரவில்லை அவர்களிடம். ஒன்றாகப் பயணிப்போம்.


0 comments:

Post a Comment