"பொருளாதாரம் என்பது
வெறுமனே எண்களின் கூட்டல் கழித்தல் அல்ல;
அது
மனிதர்களின் கண்ணீரையும், அவர்களின்
அன்றாடப் புன்னகையையும் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் வாழ்வியல் கருவி" என்று
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் (Amartya Sen) அவர்கள் ஒருமுறை
குறிப்பிட்டார். அந்த ஆழமான தத்துவத்தை நெஞ்சில் சுமந்து கொண்டுதான் இன்று நான்
உங்களோடு பேசுகின்றேன்.
அன்பின் உறவுகளே, இன்று எமது தேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? பொருளாதாரத்தில் ஒருவிதமான ஸ்திரத்தன்மையின்மை மீண்டும் மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கியுள்ளது. அண்மையில், எமது மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு செய்தியாளர் சந்திப்பில், "பொருளாதாரம் மீண்டும் ஒரு இக்கட்டான நிலைக்கு நுழையக்கூடும்" என்றும், "நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யக்கூடிய நிச்சயமற்ற தன்மை" காணப்படுவதாகவும் மிகவும் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், டொலர் (Dollar) மதிப்பு மீண்டும் ரூபாய்க்கு எதிராகக் கணிசமாக உயர்ந்து வருகிறது. எண்களைப் பகுப்பாய்வு செய்யும் எனக்குத் தெரியும், இந்தச் சாதாரண அறிக்கைக்குப் பின்னால் மறைந்திருக்கும் பொருளாதார இழப்புகள் எவ்வளவு பயங்கரமானவை என்று!
இந்த
நிலைமை ஏன் உருவானது? புதிய மத்திய
வங்கிச் சட்டம், நாட்டின்
பணவியல் கொள்கையை அரசாங்கத்திடமிருந்து பிரித்து, ஒரு "சுதந்திரமான" மத்திய வங்கிக்கு
மாற்றியுள்ளது. கேட்பதற்கு இது மிகவும் முற்போக்கான விடயமாகத் தோன்றலாம். ஆனால் கள
யதார்த்தம் என்ன? இந்த புதிய
சட்டத்தின் கீழ், மக்களின்
உணர்வுகளோ அல்லது நாளாந்தப் போராட்டங்களோ நிதிச்சபை முடிவுகளில் எந்தவிதத்
தாக்கத்தையும் செலுத்துவதில்லை.
தத்துவார்த்த ரீதியாக,
மத்திய வங்கி இன்று வெறும் எண்களின் அடிப்படையில் மட்டுமே
முடிவுகளை எடுக்கும் ஒரு இயந்திரத்தனமான நிறுவனமாக மாறிவிட்டது. மக்களின் பொருளாதார சுயாட்சிக்கான
உரிமையை, மக்களால் நேரடியாகக்
கேள்வி கேட்க முடியாத அரசாங்கத்திற்கு வெளியே உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பது
எவ்வளவு ஆபத்தானது என்று இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதே பல அறிஞர்களால்
எச்சரிக்கப்பட்டது. இன்று அந்த எச்சரிக்கை மெய்ப்படத் தொடங்கியுள்ளது. ஆளுநர்
அளித்த இந்த 'நிச்சயமற்ற
எதிர்காலம்' குறித்த அறிக்கை, சர்வதேச அரங்கில் தவறான சமிக்ஞைகளை அனுப்பி, வெளிநாட்டு மு தலீடுகள் வராத ஒரு நிலைக்கும், தற்போதுள்ள முதலீடுகள் திரும்பப் பெறப்படும்
ஒரு கொடூரமான நிலைக்கும் நாட்டைத் தள்ளிக்கொண்டிருக்கிறது.
அரசாங்கம்
நாட்டின் பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் (Management) செய்யவில்லை என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், ஒரு நாட்டின் நிதி நிலைமையைக் கட்டிக்காக்க
வேண்டிய பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள்,
எவ்விதத்
தீர்க்கமான மாற்றுத் திட்டங்களுமின்றி இவ்வாறான பீதியை வெளிப்படையாகச் சொல்வதன்
மூலம் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. உங்களுக்கு நினைவிருக்கலாம் உறவுகளே, 2022-ஆம் ஆண்டில் எமது நாடு
"வங்குரோத்து" என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டபோதும் இதே
நிலைமைதான் ஏற்பட்டது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று மாயை
காட்டியவர்கள், திடீரெனக் கைகளை
விரித்தார்கள். இன்றும் அதேபோன்றதொரு ஆபத்தான திரைக்கதை எழுதப்படுகிறதா என்ற
சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.
இன்று
அரசாங்கமும் அதிகாரிகளும் பொருளாதாரம் மீண்டு வருவதாகக் கூறுகிறார்கள்.
பணவீக்கத்தின் சதவிகிதம் (Percentage) குறைந்துவிட்டது, அந்நியச் செலாவணிக் கையிருப்பு
அதிகரித்துள்ளது, பொருளாதார
வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று புள்ளிவிபரங்களை அடுக்குகிறார்கள். ஆனால், இந்த மாயைத் தரவுகளிலிருந்து சற்று வெளியே
வந்து, எமது மக்களின் அன்றாட
வாழ்க்கையைப் பாருங்கள். அங்கே நாம் காண்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு
யதார்த்தத்தை!
இன்றும்
சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவியே நிற்கின்றன. அரிசி, தேங்காய், மரக்கறிகள்,
பால்
பவுடர் போன்ற அன்றாடப் பொருட்கள் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. ஒரு
நோயாளியைக் காப்பாற்ற ஒரு
டொக்டர் (Doctor) எழுதிக்
கொடுக்கும் மருந்துகளைக் கூட வாங்க முடியாதளவிற்கு விலைகள் ஏறியுள்ளன. மின்சாரம்
மற்றும் தண்ணீர்க் கட்டணங்கள் ஒரு சாதாரண தொழிலாளியின் மாதாந்த வருமானத்தில்
பெரும் பகுதியை ஈவிரக்கமின்றி உறிஞ்சுகின்றன. இதற்கு மேலாக, மறைமுக வரிகள், மதிப்புக்கூட்டு வரி (VAT) மற்றும் வருமான வரி எனப் பலவிதமான
வரிச்சுமைகளால் நடுத்தர வர்க்கம் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
பொருளாதாரம் என்பது வரைகபுகளில் ஏறி இறங்கும் கோடுகள் அல்ல; அது மக்களின் பணப்பையின்
மூலமாகவே உணரப்பட வேண்டிய யதார்த்தமாகும்! தங்கள் குழந்தைகளின் பாடசாலை (School) மற்றும் கல்விச்
செலவுகளைச் செலுத்த முடிகிறதா? நோய் வந்தால்
மருந்துகளை வாங்க முடிகிறதா? மாத இறுதியில்
கடனில்லாமல் குடும்பத்தை நடத்த முடிகிறதா?
இவைதான்
ஒரு தேசத்தின் உண்மையான பொருளாதாரக் குறிகாட்டிகள். இன்று நாட்டில் பெரும்பாலான
மக்கள் வங்கிக் கடன்கள், குத்தகைக்
கடன்கள், நுண்நிதிக் கடன்கள் என
முடிவற்ற கடன் சுழற்சிக்குள்தான் தங்களின் மூச்சைப் பிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
எமது
பாரம்பரிய விவசாயம் (Agriculture) இன்று பாரிய
நெருக்கடியில் தத்தளிக்கிறது. விவசாயிக்குத் தேவையான உரம் தங்கம் போல விலைமதிப்பு
மிக்கதாகிவிட்டது. வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயியின் விளைச்சலுக்குச் சரியான
விலை கிடைக்காமல், இடைத்தரகர்கள் (Middlemen) லாபம் ஈட்டும் ஒரு
கொள்ளைக் கூட்டப் பொருளாதாரம் இன்று ஒவ்வொரு வீதி (Road) மற்றும் கிராமங்களிலும்
நிலைபெற்றுள்ளது. ஒரு சிறு தொழிலதிபர் தனது தொழிலை நடத்துவது பெரும் போராட்டமாக
மாறியுள்ளது. தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப் பாதுகாப்பில்லை; அரச ஊழியர்களின் சம்பளத்தில் குடும்பத்தை
நகர்த்துவது மாயக் குதிரையை விரட்டுவதைப் போலாகிவிட்டது. இந்த விரக்தி எமது இளம்
தலைமுறையினரிடையே பாரிய கோபமாக உருவெடுத்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு
விடப்பட்ட மிகப் பெரிய அபாய எச்சரிக்கையாகும்.
இன்று
எமது சந்தைகளில் மீண்டும்
டொலர் விலை உயர்வு
பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. டொலர் உயரும்போதெல்லாம் மக்களின் நெஞ்சில்
புளியைக் கரைப்பது போல ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம், எமது பொருளாதாரம் முற்றுமுழுதாக
இறக்குமதியைச் சார்ந்திருப்பதுதான். எரிபொருள், மருந்துகள்,
தொழிற்சாலைகளுக்கான
மூலப்பொருட்கள், எரிவாயு, உரங்கள் என அனைத்திற்கும் நாம் டொலரையே
நம்பியிருக்கிறோம். டொலரின் விலை அதிகரிக்கும்போது, இந்தப் பொருட்களின் விலைகளும் சங்கிலித் தொடர் போல
அதிகரிக்கின்றன.
ஒருபுறம், நாட்டை வந்தடையும் டொலர்களின் அளவு
குறைவாகவே உள்ளது. எமது ஏற்றுமதிப் பொருளாதாரம் இன்னும் பலவீனமாகவே காணப்படுகிறது.
பாரம்பரியமான தேயிலை, இறப்பர் மற்றும்
ஆடை ஏற்றுமதிகளைத் தாண்டி, நவீன
தொழில்நுட்பத் தொழில்களையோ அல்லது ஒரு பாரிய உற்பத்திப் பொருளாதாரத்தையோ நாம்
இன்னும் உறுதியாகக் கட்டியெழுப்பவில்லை. சுற்றுலாத் துறையும் வெளிநாட்டுப்
பணப்பரிமாற்றங்களும் ஓரளவிற்குக் கைகொடுத்தாலும், அவை இன்னும் முழுமையாக வலுப்படுத்தப்படவில்லை.
மறுபுறம், ஒரு வேடிக்கையான ஆனால் மிகக் கொடூரமான மோசடி
அண்மையில் அரங்கேறியுள்ளது. பல வருடங்களாகத் தடைசெய்யப்பட்டிருந்த வாகன
இறக்குமதிக்குத் திடீரென அனுமதி வழங்கியதும்,
பின்னர்
அந்த அனுமதியை அவசர அவசரமாக நிறுத்தியதும் பெரும் சந்தேகங்களை எழுப்புகின்றன. இறக்குமதி செய்யப்படும்
வாகனங்கள் மீது 50
சதவிகிதம் வரி விதிக்கப்படுவதற்குச் சரியாக ஒரு நாள்
முன்னதாக, சில தரகு
நிறுவனங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க வலையமைப்புகள் ஊடாகப் பில்லியன் கணக்கான
டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் (LCs) திறக்கப்பட்டுள்ளன என்ற
குற்றச்சாட்டு சாதாரணமான ஒன்றல்ல. அதிகாரத்தின் ஆசீர்வாதத்துடன் நடக்கும் இத்தகைய கொள்ளைகளே
டொலருக்கான தேவையைச் செயற்கையாக அதிகரித்து,
அதன்
விலையை உயர்த்துகின்றன.
இன்று
எமது நாடு இருப்பது ஒரு உண்மையான பொருளாதார மீட்சியிலா? இல்லை உறவுகளே! நாம் இன்று காண்பது ஒரு 'செயற்கையான நிலைத்தன்மை' (Artificial Stability) மட்டுமே. வரிகளை உச்சத்திற்கு
உயர்த்துதல், மக்களின்
கொள்வனவு சக்தியைக் குறைத்தல், மற்றும்
அத்தியாவசிய இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட
ஒரு தற்காலிகமான, போலியான சமநிலை
இது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)
நிபந்தனைகளின் அமுல்படுத்தல் (Implementation) மக்கள் மீது ஈவிரக்கமற்ற
அழுத்தத்தை ஏற்றுகிறது. பொதுச் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் நிறுவன
மறுசீரமைப்பு என்ற பெயரில் சாதாரண மக்களின் சமூகப் பாதுகாப்புக்
கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
அமெரிக்காவின்
மூன்றாவது ஜனாதிபதியான தோமஸ் (Thomas) ஜெபர்சன் ஒருமுறை
கூறினார், "ஒரு
அரசாங்கத்தின் முதன்மையான மற்றும் ஒரே நியாயமான நோக்கம் மனிதர்களின் வாழ்வையும்
அவர்களின் மகிழ்ச்சியையும் பாதுகாப்பதே தவிர,
அதை
அழிப்பதல்ல." ஆனால் இன்று எமது கொள்கைகள் மக்களைப் பாதுகாக்கின்றனவா அல்லது
அவர்களைப் பலியிடுகின்றனவா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
அடுத்து
என்ன நடக்கும் என்ற அச்சம் எம்மைச் சூழ்ந்துள்ளது. வரவிருக்கும் காலம் எமக்கு
நிச்சயமாக எளிதாக இருக்கப் போவதில்லை. டொலரின் மதிப்பு மேலும் அதிகரிக்கலாம், வாழ்க்கைச் செலவு இன்னும்
சுமையாக்கப்படலாம். ஆனால், இந்த இருண்ட
யதார்த்தத்தை எண்ணி நாம் முடங்கிப் போய்விடக் கூடாது. நாட்டை நீண்டகால
அடிப்படையில் மீண்டும் கட்டியெழுப்ப,
எமக்கு
ஒரு மாறுபட்ட, முற்போக்கான
பொருளாதாரப் பார்வை தேவை.
நாம் வெறுமனே வரிகளை அறவிட்டு வாழும் ஒரு தேசமாக இருப்பதை நிறுத்திவிட்டு, உற்பத்தியை
அடிப்படையாகக் கொண்ட ஒரு மாபெரும் 'மீண்டெழு' (Resilience) பொருளாதாரத்தைக்
கட்டியெழுப்ப வேண்டும்.
எமது
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றம் மற்றும் பிரதேச சபை
(Council) ஊடாகவும் கிராமியக் கைத்தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பாரம்பரிய
விவசாயத்தை நவீனமயமாக்கி, தொழில்நுட்பத்துடன்
இணைக்க வேண்டும். எமது இளைஞர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக அல்லாமல், உலகளாவிய இ கொமர்ஸ் (E-commerce) மற்றும் ஒண்லைன் (Online) தளங்கள் ஊடாகத்
தொழில்முனைவோராக உருவெடுக்க வேண்டும். இதற்கான அடித்தளம் ஒவ்வொரு கல்வி வலயம் (Zone) ஊடாகவும், பாடசாலை மட்டத்திலிருந்தே மாணவர்களுக்கு
வழங்கப்பட வேண்டும்.
எந்தவொரு
அரசாங்கமும், எந்தவொரு கொள்கை
வகுப்பாளரும் ஒரு அடிப்படை உண்மையை மனதில் நிறுத்த வேண்டும்: ஒரு நாட்டின்
பொருளாதாரம் என்பது மத்திய வங்கியின் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருக்கும்
புள்ளிவிபரங்களால் மட்டும் கட்டமைக்கப்படுவதில்லை. அது சேற்றில் இறங்கி உழைக்கும்
விவசாயியின் வியர்வையிலும், ஒவ்வொரு நாளும்
வாழ்வாதாரத்திற்காகப் போராடும் சாதாரண மக்களின் நம்பிக்கையிலும்தான்
தங்கியிருக்கிறது. மக்களின்
வாழ்க்கைத்தரம் மேம்படும்போது மட்டுமே, ஒரு பொருளாதாரம்
உண்மையாக வெற்றிகரமானது என்று மார்தட்டிக் கூற முடியும். அந்த உண்மையான பொருளாதார
வெற்றியை நோக்கி, எமது தேசத்தை
ஒரு தற்சார்புள்ள, அறிவார்ந்த
மற்றும் மீண்டெழு திறன் கொண்ட தேசமாக மாற்றியமைக்க, நாம் அனைவரும் விழிப்புடன் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
நன்றி!


0 comments:
Post a Comment