'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்ப்பவர் யார்?'
கிடைக்கின்ற பெருமைக்கு பின் பல உழைப்பு இருக்கும் என்பார்கள் அதற்கமைவாக கோடியில் ஒருவராய் மறைந்தும் மறையாமல் இன்றும் தழிழை உலகெங்கும் மணக்கவைத்து மக்களின் மனதில் நிற்கும் ஈழத்துப் பூராடனார் கலாநிதி சு.தா. செல்வராச கோபால் அவர்கள் போற்றப்படவேண்டியவர். தமிழை அறிந்து ஆய்ந்து அதன் சுவையை நுகர எத்தனையோ மேலைத்தேயவர்கள் எமது கீழைத்தேயம் நோக்கி வந்து தமிழ் பரப்பினர். ஆனால் கீழ்த்தேசத்தில் இருந்து அதுவும் ஈழத்தின் கீழைத்தேயமான மட்டக்களப்பிலிருந்து மேலைத்தேயத்தை தமிழால் அலங்கரித்த பெருந்தகை இவர் என்றால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட மகான் போற்றப்படவேண்டியது அதுவும் அவர் வாழ்ந்த மண்ணான தேத்தாத்தீவில் பாராட்டப்பட வேண்டும் என்ற அவாக்கொண்ட மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க தேற்றாத்தீவு கலை இலக்கிய மன்றத்தினரின் ஏற்பாட்டில் 26.01.2011 அன்று மட்/சிவகலை வித்தியாலய கலை மண்டபத்தில் பிற்பகல் 03.30 மணியில் இருந்து 6.00 மணிவரையும் ஒரு தமிழ் ஒன்றுகூடலாக இது நிகழ்த்தப்பட்டது. (முதலில் அவரது வீட்டில் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது பின்னர் மழைகாரணமாக இடமாற்றப்பட்டது) இந்த நினைவுப்பேருரையுடன் தேற்றாத்தீவில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை (2009க்கு முன்னர் தற்போது பல்லைக்கழக மாணவர்களாக இருப்பவர்களுக்கு) பரிசு வழங்கிப் பாராட்டுகின்ற நிகழ்வும் கனடா வாழ் எமது தேற்றாத்தீவு மக்களின் அனுசரணையுடன் இனிதே நடந்தேறியது.
இது மண்முனைத் தென் எருவில் பற்று கலாசார பேரவையின் செயலாளர் இரா .கோபாலபபிள்ளை அவர்களின் தொடக்கவுரையுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வை சிறப்பித்த பெருந்தகைகளாக விழாவை அலங்கரித்தவர்கள் வித்துவான் தமிழ் ஒளி க.செபரெத்தினம், பேராசிரியரும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவருமான ச.செல்வராசா, மற்றும் கலாபூசணம் ஆ.அரசரெத்தினம், மூத்த எழுத்தாளர் அன்புமணி, ஊடகவியலாளர் செ.பேரின்பராசா, கலாபூசணம் பெ.ஆறுமுகம், திரு.வ.திருநாவுக்கரசு, மட்/தேற்றாத்தீவு மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்ற ஊரில் சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப் பூராடனாரின் இயற்பெயர் சு. தா. செல்வராசா கோபால். தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர். இவர் துணைவியார் பசுபதி அம்மா இருவரும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் இவர்கள் கனடாவில் குடியேறினர்.
அவரின் ஒரு அழகிய கவிதை....
குளங்களிலே சேற்று மணம்
குலைகளிலே காற்று மணம்
களப்பினிலே கதகதென்று கவியொழிரும் கழனி மணம்
வளம் மிகுந்த வயலினிலே வைக்கோலின் வரண்ட மணம்
அளவாக வளர்பூக்கள் அமைவாலே ஆகுமணம்
கடற்கரையில் ஒதுங்கு சிற்ப்பி கரைதட்டி சுண்ட மணம்
பகல் பாம்பு வம்மிப்பூவாய் பள்ளயத்து பந்தி மணம்
தெருக்களிலே புது வித்துக்கள் எழுந்து வீசும் மணம்
வருக்கனொடு தேன்வதைகள் வாழைபலா கமுகு தெங்கு
உருக்கொண்ட பாவையரின் உடுபுடவை உகந்த மணம்
கருவோடு குழந்தைகளின் கலையோடு கலந்த மணம்
இத்தனையும் கலந்த மணம் இயல் மட்டக்களப்பதிலே
சுத்தஇசை மீன் மகளின் சுதியூட்ட இருபாங்கும்
முத்தமிழின் கூத்தொலியும் முரல்பாயும் மண்வாசனை
வித்தக பேச்சுவளம் விழங்கு தழிழ் வாசனையே..
இத்தனை பெருமையா எங்கள் திருநாட்டினுக்கு என வியக்கும் கவிஞன், கட்டுரையாளன் ஆய்வாளன், எழுத்தாளன், அச்சுக்கலைஞன் ஒட்டு மொத்தத்தில் இவர் ஈழத்துப் பன்முகத்தமிழ் அறிஞர் என இங்கு பறைசாற்றப்பட்டார்...
(பேராசியர் ச.செல்வராசா நினைவுப் பேருரையாற்றுகையில்)
இவர் பெருமை உங்களுக்கு தெரிந்தாலும் இவர் வழியில் செல்ல என்ன செய்யவேண்டும் என்ற வினாவுக்கு விடையிறுத்த பெருந்தகைகளுள் பேராசியர் செல்வராசா குறிப்பிடுகையில் இந்த மகான் விபுலானந்த அடிகள் போன்று போற்றப்படவேண்டய பெருந்தகை என்றும் இவர் பேரில் கலை மண்டபங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், விருதுகள் வருடா வருடம் கொடுக்கப்படவேண்டும் என்றும் இவரது நூல்களை பல்கலைக்கழக மட்டத்தினில் ஆய்வுக்குட்படுத்தவேண்டும் அது முதுமாணி, கலாநிதி பட்டத்தை தொடர்பவர்களுக்கும் கொடுக்கப்படவேணும் என்று விதந்துரைத்தமை அவரின் புகழை காட்டுகின்றதல்லவா..
(கலை நிகழ்வில் கலைஞர்கள்)
இதுக்கும் அப்பால் இந்நிகழ்வு தமிழ் பண்பு நடை, உடை பாவனை தமிழ் வாசனை மாறாமல் இருக்கும் அழகான தேற்றாத்தீவு களரியில் நடத்தப்பட்ட முறை , பலரையும் மூக்கில் விரல்வைத்து வியந்து பாராட்ட வைத்தமை மீண்டும் ஒருமுறை கலையூர் என்பதனை பறைசாற்றி இருக்கின்றது தேனூர். இந்நிகழ்வுகளை மேலும் மெருகூட்ட செவிக்கு விருந்தாக பல கலை நிகழ்வுகள் இடையிடையே படைக்கப்பட்டமை மட்டக்களப்பின் மண்வாசனையின் நீள அகலங்களை வரையறுத்துக் காட்டியது. அதுபோல் இந்நிகழ்வை அழகாக தொகுத்து வழங்கிய ச.இன்பராஜனையும் இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
(பல்கலைக்கழக மாணவர்க்கான பரிசு வழங்கலும் கௌரவிப்பும்)
இத்தனைக்கும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் பிரசன்னம் எமக்கெல்லாம் பூரிப்பைத்தந்தது, அவர்கள் தமிழ்ச்சங்கத்தை நிறுவ காரண கர்த்தாவாக உந்து சக்தியாக இருந்தமைக்கு இவரே (ஈழத்துப்பூராடனார்) மூலகாரணம் என வித்துவான் அவர்கள் பெருமைபடக் கூறியதுடன் இந்நினைவுப் பேருரை இவ்வளவு அழகாய் ஒழுங்கமைத்த தேத்தாத்தீவு மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
(தமிழ்வாழ்துப்பா பாடும் தேத்தாத்தீவு மகாவித்தியாலய மாணவிகள்)
இங்கு தேத்தாத்தீவின் புகழ்கீதம் பல்கலைக்கழக மாணவர்களால் பாடப்பட அதே போன்று நிகழ்வின் இறுதியில் தமிழ் வாழ்த்துப்பா பாடப்பட்டு நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிது முற்றுற்றது.
தன் கைகளைக் கொண்டு செயல்படுகிறவன் தொழிலாளி, தன் கைகளோடு மூளையையும் கொண்டு செயல்ப்படுகிறவன் கைவினைஞன் ஆனால் தனது கைகள் மூளை இவற்றுடன் இதயத்தையும் கொண்டு செயல்படுகிறவனே கலைஞன் அப்பேர்பட்ட கலைஞன் மறைந்தாலும் தமிழர்களின் மனதில் உட்காந்து இருக்கும் இந்த அரியாசனம் யார் பெறுவார்.??
"வாழ்க தமிழ் வளர்க தமிழ்"
2 comments:
ahhaa.. enne.. arumaiyaana padaippu thamby. vaazhka ungal kalai aarvam, valarka ungal 'TAMIL pani' anaivarukkum nanrigal.
anann ananthan, canadaavilirunthu.
நன்றி அண்ணா....
Post a Comment