ADS 468x60

16 May 2019

முள்ளிவாய்க்கால் முடிவல்ல! போராடு இந்த எழில் தேசத்தைக் கட்டியெழுப்பலாம்.

நான் யுத்தத்தின்பின், கொடுமையான போரின் அனல் சற்றும் மாறாத தமிழ் மாவட்டங்களில் நேரடியாக மக்களுடன் வேலை செய்து, இம்மக்களின் தேவை, வேதனை, வலிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஒன்றாய் வேலை செய்து அறிந்தவன் என்ற முறையில் இக்கட்டுரையை உரிமையுடன் வரைகின்றேன். 

அழகிய இலங்காபுரியின் வடக்கே வன்னி நிலத்தின் நடுநாயகமாக விளங்கும் 'வடக்கின் நெற்களஞ்சியம்' என கிளினொச்சி மாவட்டம் புகழ்தேத்தப்படுகிறது. இதன் அழகை 
'விழிகளில் வன்னி நிலம் அழகள்ளிச் சொரியும்
வேரில்லாச் செடியைப்போல் மயிலாடித் திரியும்
எழில் தோய்ந்த கிளினொச்சி வயல்கள் குலுங்கும்
எங்கும்; தமிழ் மணம் இன்பம் பரப்பும்' 

எனக் கூறுவது சாலப் பொருத்தமே. இந்த மாவட்டம் 126613 (2012 statistical hand book, Kilinochchi)    மக்கள் தொகையை தன்னகத்தே கொண்ட ஒரு பெரு நிலப்பரப்பாகும். சுமார் 30 விகிதமான நெற்காணிகளையும் மேட்டுநிலத்தினையும் கொண்ட இந்தப் பிரதேசம் அதிகமாக விவசாயத்தினை மையமாகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

போருக்கு பின்னரான மனித வலு மாற்றத்தில் அது கொண்டிருக்கும் சவால், அதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை வெற்றி கொள்வதற்க்கான மார்க்கங்கள் பற்றி இந்த கட்டுரை ஆராய்ந்துள்ளது.

கிளினொச்சியின் வராலாற்றில் ஒரு துளி

1902 இற்கு பின்னரே இரணைமடு குளம் உருவாக்கப்பட்டு குடியேற்றங்களாகவே இந்த மாவட்டம் உருவானது (கரை எழில் 2012, ப.72). இவ்வாறு 1950 இல் இருந்து 1970 களுக்குள் பொற்காலம் என வர்ணிக்கும் அளவுக்கு தெற்கையும் வடக்கையும் இணைக்கும் ஒரு பொருளாதார கேந்திர மையமாக மாறி இருந்தது. வேலைவாய்ப்புகள் அனைவருக்கும் கிடைதிருக்கும் அளவுக்கு அங்கு கொட்டிக்கிடக்கும் வளங்களைக் கொண்டு வினைத்திறனான உற்பத்திகள் பெருகி இருந்தன. மக்களின் மனநிலையில் மகிழ்சி ததும்பியதால் திருவிழா களியாட்டங்களில் பங்குகொண்ட ஒரு தன்னிறைவான சமுகமாக பரிநமித்திருந்தது.

பிற்பாடு மெது மெதுவாக இந்த அழகான நகரம் யுத்தம் ஆரம்பமான கையோடு களை இழக்கத் தொடங்கியது. கிளிநொச்சி மாவட்டம் யுத்த அனல் மாறாத ஒரு பூமியாக வைத்திருந்தனர். இடப்பெயர்வு தொடங்கியது, தொழில் ஸ்த்திரத்தன்மை அடியோடு பாதிப்படைந்தது, கல்வி இடைநிறுத்தப்பட்டது, முதலாளிகள் கூலிகளாகவும், கூலியாட்கள் வேலை இன்றியும் இருக்கும் நலிவுறு நிலை அதிகரித்தது. தொடர்ந்து வேதனைகளும் வலிகளும் துன்பங்களும் இழப்புகளும் நிறைந்த பூமியாக மாறியது. துடிப்புள்ள ஒரு எடுத்துக்காட்டான சமுகம் பொடிப்பொடியானது, மனித வலு அப்படியே குன்றிவிட்டது.

இவர்கள் பொருளாதார ரீதியில் பிச்சைக்காரர்களாகவும், உழவியல் ரீதியாக பயித்தியகாரர்களாகவும், அன்பற்று அநாதரவானவர்களாகவும், கண்காணிப்பில் இருக்கும் திறந்தவெளிக் கைதிகளாகவும், காலிழந்து, கண்ணிழந்து, கணவனை இழந்து, கற்பிழந்து பொருள் பண்டம் எல்லாமே தொலைத்து நடமாடும் பிணங்களாகவே இவர்களைப் பார்த்தேன்.

இந்த இயங்கு நிலையிழந்த தமிழ் சொந்தங்களை வைத்து அரசியல் செய்யும் ஒரு குழுவினரும் இல்லாமல் இல்லை களுகுகளாட்டம். 

இந்த நிலையில் உள்ள சமுகத்தினை நிச்சயம் அதே வேகத்துடன் கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மாத்திரமே நாம் பழையதையே நினைத்து எமது ஆயுளையும் முன்னேற்றத்தினையும் கருத்தில் எடுக்காமல் வெறும் அரசியலுக்காக உங்கள் பரிதாபத்தினை பசளையாக்க இடம்கொடுக்கவேண்டாம். அவ்வாறு முன்னேறிய பல நாடுகள் எமக்கு உதாரணமாக இருக்கின்றது.

உள்நாட்டு யுத்தத்தில் இருந்து மீண்டெழுந்த நாடுகளின் அனுபவம்

இது இங்குமட்டுமல்ல உலகில் பல பாகங்களில் உள்நாட்டு யுத்தங்களால் இவ்வாறு பெரிய இழப்புகளை எதிர்கொண்ட நாடுகள் அதே மூச்சில் மீண்டு வந்திருப்பது ஒரு பாடமாக உள்ளது. வரலாறுகளைப் பார்க்கும்போது மாபெரும் தொழில் புரட்சிகளும், பொருளாதார மாற்றங்களும் நடந்தேறியிருப்பது உள்நாட்டு யுத்தங்களின் பின்னரான காலப்பகுதியில்தான். இதனை போருக்கு பின்னரான பொருளாதார வளர்ச்சி (Post war economic boom) என அழைத்து வருகின்றனர். 

குறிப்பாக பல நாடுகள் 1945 இல் முடிவுற்ற இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின் முதலாளித்துவத்தின் பொற்காலம் ((Golden Age of Capitalism))  என வர்ணிக்கப்பட்டு இருந்தது. இந்த காலங்களில் மேற்கு ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் உலகலாவிய ரீதியிலேயே நிறை வேலைவாய்புடன் கூடிய மிக உயர்ந்த பொருளாதார வளர்சி (high worldwide economic growth) காணப்பட்டது. 

அதுபோல் இந்த உள்நாட்டு யுத்தங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிறீஸ் (கிறீஸ் பொருளாதார அதிசயம் (Greek economic miracle)  மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் மிக உயர்ந்த பொருளாதார வளர்சியைக் கொண்டிருந்தன. பாழடைந்த நிலங்கள் பொன் விளையும் பூமியாகின, கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், வணிக விஸ்தரிப்பு எனடபன பல்கிப் பெருகின, இறந்த காலத்தினை நினைத்து என்ன பயன் என எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதில் எறும்புபோல் செயற்படலாயினர் இதனால் தான் அன்று வீழ்ச்சி அடைந்த நாடுகள் இன்று வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றன்.

இலங்கையிலும் முப்பது வருட கால கொடிய உள்நாட்டு யுத்தம் பல உயிர்களையும், உடமைகளையும் முற்றாக அழித்தொழித்திருந்தது. இப்போது அந்த யுத்தம் முடிவடைந்த பின்னர் மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளதா என்பதுதான் கேள்வி!  

பொதுவாக கல்வி, கமுக நல மேம்பாடு, கலாசாரம் மற்றும் சமய மறுமலர்சி மற்றும் சமுக பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றில் 2012ம் ஆண்டு கச்சேரியின் புள்ளி விபர அறிக்கைப்படி 8,078,600 ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன. இதுபோல் வாழ்வாதாரம், உட்கட்டுமானம், சுகாதாரம், மீள்குடியேற்றம், நீர்பாசனம், குடி நீர் விநியோகம் என எல்லா வகையிலும் பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு மீளுருவாக்கம் இடம்பெறினும். இன்னும் மனித வளத்தை வலுவூட்டுவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இங்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்க்கான முன்னகர்வுகளை எடுத்தேத்துவதன் மூலமே நலிவுறும் தன்மையை குறைக்கலாம். அதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துவதனை பின்வரும் மாதிரி காட்டுகிறது.

இந்த இலக்கினை நோக்கி இவர்களை வலுப்படுத்துவதில் பல பிரச்சினைகள் உள்ளது. யுத்தத்தின் பின்னரான மன ரீதியான மீட்சி இன்னும் அவர்களிடத்தில் ஏற்படவில்லை, அத்துடன் இடப்பெயர்வு போன்ற இன்னோரன்ன காரணங்கள் அவர்களிடையே தேக்க நிலையை உருவாக்க கூடியதாக உள்ளது. 

போட்டி நிலையில் உள்ள சமுகத்திற்குள், உலகமயமாதலை விழுங்கிய மக்களுக்குள் பாரம்பரியமாக வாழ்ந்த சமுகத்தை திணிக்கமுடியவில்லை, 
நிற்க்க 30 வருட யுத்த அறைக்குள் அடைபட்டுக்கிடந்த மக்கள் கூட்டத்தை உலக அரங்கில் சங்கமிக்க வைக்கவும் முடியாத ஒரு நிலையில் திணிக்க முயலுகின்ற எதுவும் விபரீதத்தினை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் மனித வலுவை வளப்படுத்துவது ஒரு சவாலே! மறுப்பதற்கில்லை.

விவசாயம் , மீன்பிடி என்ற பாரம்பரிய தொழில்களுக்கு அப்பால் புள்ளிவிபரப்படி சிறிய தொழில் மையங்களில் என பயிற்றுவிக்கப்பட்ட வெறும் 947 மனித வலுவினை மட்டும் இந்த மாவட்டத்தில் அடையாளங்கண்டுள்ளனர். 

இவர்கள், அரிசி ஆலைகள், குளிரகம், கைப்பணி வேலையகம், தையல், இனிப்பு தயாரிப்பு, அச்சிடல், வெதுப்பகம், ஒட்டு தொழில், கல்லாலை, தளபாடத்தயாரிப்பு போன்ற சில இடங்களில் வேலை செய்வதை அது சுட்டிக்காட்டுகின்றது. 

பல தொண்டு நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் என்பனவற்றின் ஒட்டுமொத்த கவனமும் இங்கு திரும்பி இருக்கும் தருணத்தினை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி மீண்டும் ஒரு முயற்சி உள்ள சமுகமாக உலகிற்கு எடுத்துக்காட்ட தொழில் பயிற்சி பெறுதல் அவசியம், அதனூடாகவே தரமான, போட்டித்தன்மையான, விசேடத்துவமான உற்பத்திகளை அறுவடை செய்யலாம்.

இது இன்று எம்மிடையே ஏந்தி நிற்கும் நலிவுறு தன்மையை படிப்படியாக குறைவடையச் செய்யும்.

ஒரு மாற்றத்தினை காண்பதற்கு அடிப்படையில் அங்கு கிடைப்பனவாக உள்ள வளம் அவசியம், அத்துடன் பாதை அபிவிருத்தி, போக்குவரத்து, தொடர்பாடல், சந்தைப்படுத்தல், எனைய உட்கட்டுமானங்கள் என்பன இன்றியமையாதனவே.

அத்துடன் செழிப்பான நில வளம், நீர்வளம், காட்டுவளம் உள்ளமையால் எதையும் உற்ப்பத்தி செய்யும் வளக்கிடைப்பு ஒரு வரப்பிரசாதமே. 

யப்பான் உலகமகா யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த போது ஒரு இயற்கை வளமும் அங்கு இருக்கவில்லை அத்துடன் மனித வளம் கூட அணுகுண்டு வீச்சில் சிதைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களது 'மீண்டு வரவேண்டும் என்ற வெறித்தனமே' இன்று உலகில் முன்னணியில் உள்ள நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ஆகவே எங்களிடம் வளம் இருக்கிறது, அவற்றைப் பயன்படுத்தும் வகையில் திறன் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் கல்வியை இடைநிறுத்தி இருக்கலாம் அவர்களுக்கு தொழில் பயிற்சிகள் அரசாங்கத்தினாலும் அரசசார்பற்ற நிறுவனங்களினாலும் வளங்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், இவர்கள் அதில் ஆர்வமாக பங்கேற்கிறார்களா? என்ற கேள்வியுள்ளது. 

இதனை மக்களிடையே விழிப்படையச் செய்து சுயதொழில் மற்றும் கூட்டுத்தொழில் சார்ந்த வாய்புகளை ஏற்ப்படுத்துவதும் இவர்களை பழய நினைவுகளில் இருந்து மீட்டெடுக்கும் மார்க்கமாகவும் இருக்கும்.

இங்குள்ள மக்களில் அதிகமானோர் கடன்காரர்களாக மாறி வருவதனை அவதானிக்க முடிகிறது, இது மரத்தால் விழந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் அவர்களை துன்பச் சுழிக்குள் தள்ளுகின்ற துர்பாக்கிய நிலையில் உள்ளனர். இவர்கள் வெறும் தற்காலிக கூலித்தொழிலில் நம்பிக்கை வைத்து பல நேரங்களில் அதற்கான சந்தர்ப்பத்தினை இழந்து சங்கடப்படுகிறார்கள். 

அவர்களுக்கான மீட்சி ஒவ்வொருவரும் ஆளுமையுள்ள தொழில் திறன் அல்லது ஆற்றலுள்ள மக்களாக மாற்றப்படும்போதே கிடைக்கும். இது உழவியல் மற்றும் பொருளியல் சேர்ந்த மாற்றத்துக்கான மார்க்கமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. 

ஆகவே இன்றய துன்பமான நினைவுகளை முறியடிக்க அழுவதை விட எழுவதே எமக்கு உள்ள கடமையாகும். யுத்தத்தின் போது உயிர்துறந்த அனைத்து எம்சொந்தங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாருக்கும்பொதுவான இறைவனை வேண்டுகின்றேன்.

உஷாத்துணை 
கரை எழில் 2012
·         Satistical hand book-2012, Kilinochchi District.

0 comments:

Post a Comment