ADS 468x60

19 May 2019

இலங்கையில் சிங்களவரும் தமிழரும்-01.

விஜயன் காலம் இருந்து இன்றுவரை இரு சமுகத்துக்குமான ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள் பலவாறு பல சாஸ்த்திரங்கள், நுர்ல்கள் ஊடாக தெரியப்படுத்து வந்துள்ளது. சிவபக்தனான இலங்கை வேந்தன் இராவணன் ஆண்ட கால அளவுக்கு தமிழர்களது பூர்வீகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்ன சண்டை சச்சரவு இருந்தாலும் அவை அனைத்தும் அரசியல் இலாபம் கருதி உருவாக்கப்பட்டவையே தவிர வேறு ஒன்றும் இல்லை. பல கசப்பான காலப்பகுதிகள் எம் கண்முன்னே தோன்றி மறையாமல் இல்லை. இருப்பினும் பல புரிதலும் ஒற்றுமைகளும் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றை தேடி வளர்த்தெடுக்கவேண்டிய காலத்தனை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

நாங்கள் கொண்டாடும் சித்திரை வருடப்பிறப்பினைத்தான் அவர்களும் கொண்டாடுகின்றார்கள், எமது ஆகம முறை அவர்களிடமும் இருக்கின்றன, நாம் வணங்கும் முழுமுதற் தமிழ் கடவுளான முருகப் பெருமானை கதிர்காமத்தில் அவர்களுக்கு வெற்றி தந்த கடவுள் எனக் கொண்டாடி மகிழ்கின்றனர், மரத்தினையும், குளத்தினையும், கல்லையும் மண்ணையும் எம்மைப்போல் அவர்களும் கடவுளாக நேசிக்கின்றனர். அதற்கும் மேல் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் சிங்கள மொழிகளுக்குள் விரவிக்கிடக்கின்றமை எல்லாம் சிங்களவரும் தமிழரும் வெறும் மொழியால் இரண்டுபட்டவர்களே அன்றி வேறு வேற்றுமைகளை காணமுடியாது.

தமிழ் அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும்.

அவற்றுக்கு உதாரணமாக, தமிழரான லக்ஷ்மன் கதிர்காமர் 1999 இல் ஐக்கிய நாடுகள் சபையில் 'வெசாக் பௌர்ணமி தினத்தை' 'சர்வதேச விடுமுறை' நாளாக பிரகடனப்படுத்தும்படி கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அங்கிருந்த ஏனைய நாட்டு பிரதிகளைச் சந்தித்து அந்தப் பிரேரனைக்கு ஆதரவு திரட்டினார். இறுதியில் கதிர்காமரின் கடும் முயற்சியால் வெசாக் நாளை சர்வதேச விடுதலை நாளாக்கும் பிரேரணை ஐ.நா. வில் நிறைவேறியது. இந்தப் பிரேரணையின் படி விரும்பிய நாடுகள் அந்த விடுமுறையை அமுல்படுத்தலாம். இந்த வெற்றியினால் சிங்கள பௌத்தர்கள் கதிர்காமரை இன்றும் கொண்டாடுகிறார்கள்.

அதுபோல் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர், சேர் பொன் இராமநாதன் பௌத்தர்களின் 'பௌர்ணமி' நாளை விடுமுறை நாளாக்கும்படி இலங்கையின் அரசாங்க சபையில் போராடியதை இன்றும் பல சிங்களத் தலைவர்கள் போற்றி வருவதைக் காண்கிறோம். அன்று சிங்களத் தலைவர்கள் கூட அந்தளவு முனைப்புடன் இருக்காத நிலையில் இராமநாதன் அவர்களின் அபிலாஷைகளுக்காக இருந்தார். இராமநாதன் 1915 கலவரத்தின் போது கைது செய்யப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களை இங்கிலாந்துக்குச் சென்று வாதாடி விடுவித்தார். அவரை பல்லக்கில் தூக்கி வரவேற்றது சிங்களத் தரப்பு. 

தர்மபால ஒரு முறை தனக்கு பிறகு பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்று நினைத்தால் நான் ஹிந்து பக்தரான இராமநாதனையே நியமிப்பேன் என்றார். ஆனால் அந்த இராமநாதனையே கொழும்பை விட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடும் அளவுக்கு இனத்துவ பாரபட்சத்துக்கு உள்ளாக்கிய சம்பவங்களை இலங்கை வரலாறு கடந்து வந்திருக்கிறது அவற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அறக்கோட்பாடுகளில் ஒற்றுமை.

தமிழ் அறநூல்கள் கூறுகின்றமைக்கமைவாக, பிற அற மரபுகளிலும் முறைமைகளிலும் உள்ளதுபோல், சிற்றின்பங்களைத் துறக்க வேண்டும் என்ற அழைப்பையோ மைய மார்க்கம் ஒன்றைத் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற கோட்பாட்டையோ இந்து சமயங்களிலும் மரபுகளிலும் நாம் பார்க்க முடியாது. பிறர் வாழ்வில் குறுக்கிடாமல் நமக்கு விருப்பப்பட்ட வகையில் நிறைவான வாழ்வு வாழ அனைவரும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மனிதன், தன் ஆசைகளைக் குறுக்கிக் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அது பேராசையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பசி, தாகம், கலவி போன்ற இயற்கை நாட்டங்களை நிறைவு செய்து கொள்ளும் விருப்பம் இயல்பானது. இதை உணர்ந்திருப்பதால், புலன் இன்பங்களைக் கட்டுப்படுத்த மிதமிஞ்சிய விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.

இதையே பௌத்தர்களும் பஞ்சசீலக் கொள்கையினூடாக சொல்லி இருக்கின்றனர் அவை, கொல்லாமை, பிறர் பொருளை விரும்பாமை, தவறான இன்பத்தைக் கொள்ளாமை, பொய் பேசாமை கள் அருந்தாமை ஆகியனவாகும். குறிப்பாக தமிழகத்திலும் இலங்கைத் தமிழர்களாலும் பௌத்த நெறிகள் பெரும்பாலும் விரும்பப்பட்டன. இவை நல்ல நெறிகளாக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டன. இப்பொழுது வெஷாக் தினத்தினை தமிழ் மக்களும் கொண்டாடி வருகின்றனர். காரணம் அது பௌர்ணமி நாளில் வருகின்றது. தமிழ் இந்துக்களுக்கு எல்லா பௌர்ணமி நாட்களும் ஆண்மீகத்துடன் தொடர்புபட்டிருக்கின்றது.

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவசமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது.

பௌர்ணமி தினங்களின் முக்கியத்துவம்

இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் சிங்கள பௌத்தர்களைப்போல் முக்கயிமானவையாகப் பார்க்கப்படுகின்றன அவை இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.

சித்ரா பவுர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்,
வைகாசி பவுர்ணமி - முருகனின் பிறந்தநாள்.
ஆனிப் பவுர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
ஆடிப் பவுர்ணமி - திருமால் வழிபாடு
ஆவணிப் பவுர்ணமி - ஓணம், ரக்சாபந்தனம்
புரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவர பூசை
ஐப்பசி பவுர்ணமி - சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
கார்த்திகைப் பவுர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
மார்கழிப் பவுர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்.
தைப் பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
மாசிப் பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
பங்குனிப் பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்

திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.

அதுபோல் ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமி தினங்களையும் 'போயா தினம்' என பக்தியுடன் கொண்டாடி வருகின்றனர் சிங்கள சகோதரர்கள். அவை வெசாக் போயா தினம், பொசோன் போயா தினம், எசல போயா தினம், நிகினி போயா தினம், வினர போயா தினம், வப் போயா தினம், இல் போயா தினம், உண்டுவப் போயா தினம், துருது போயா தினம், நவம் போயா தினம், மெடின் போயா தினம் மற்றும் வக் போயா தினம் என விஷேடமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றமை எமக்கிடையேயான தனித்துவ ஒற்றுமையைக் காட்டுகின்றதல்லவா.

தமிழர்கள் வழிபடும் பல சிறுதெய்வங்களை பௌத்தர்களும் வைத்து வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக காளி, கண்ணகி, பிடாரி, திரௌபதையம்மன் என நீண்டுகொண்டு போவதனைக் காணலாம். அத்துடன் விவசாயத்தின் போது பல பாரம்பரியங்களை இரு இனத்தவரும் ஒத்த முறையில் கடைத்து வருகின்றமை எமது கலாசார பண்பாட்டு ரீதியான ஒற்றுமையை காட்டி நிற்கின்றது.

என்ன பரிகாரங்களை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. இருப்பினும் சாதாரண மக்களிடம் எந்தவித பாகுபாட்டினையும் நீங்கள் காணமுடியாது. இவை அனைத்தும் படித்த, நன்கு பிரித்தாழும் தந்திரம் தெரிந்த அரசியலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டவையே. இருப்பினும் எமது தமிழ் அரசியல்வாதிகள்தான் சிங்கள மக்களின் பல முக்கிய விடயங்களை உலகளவில் வென்று கொடுத்துள்ளனர் என போற்றுமளவுக்கு அவர்களது அன்யோன்யம் மேலோங்கி இருந்திருக்கிறது.

எமது சிங்கள தமிழ் இளைஞர்கள் மிகவும் கல்வியறிவுடையவர்கள், பொதுவாக தொண்டாண்மை எண்ணங்கொண்டவர்கள், தம்மைப்போலே பிறரையும் நேசிக்கும் பண்பினர், ஆண்மீக நாட்டம் கொண்டவர்கள் இவற்றால் பாதகச் செயல் சார்ந்த எதையும் விரும்பாதவர்கள். ஆனால் இவர்களை மூளைச் சலவை செய்யும் சுயநல நோக்கம் கொண்டவர்களால் பல உயிர்களையும் உடமைகளையும் காலா காலமாக இந்த ஜனநாயக நாட்டில் சந்தித்து வந்துள்ளோம்.

இன்று பிரச்சினைக்கான காரணங்கள் முகப்புத்தகமோ ஏனைய சமுக வலைத்தளங்களோ அல்ல, இந்த இளைஞர்கள் சேர்ந்துள்ள கூட்டம், பிற்போக்குத்தனமான அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப பின்னணி ஆகியவற்றையே நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு கிணற்றுத் தண்ணீரை நஞ்சாக்க ஒரு துளி விஷம் போதுமல்லவா. அதுபோல் ஒருவர் போதும் ஒட்டுமொத்த சமுகத்தினையும் தூண்டிவிட. 

இங்கு அக்கறையுள்ள இளைஞர்கள் தலைமை தாங்கி அந்தந்த பிரதேச இளைஞாத்களை நன்னெறிப்படுத்த வேண்டும். அவர்களை அழிவில் இல்லாமல் ஆக்கபூர்வமான செயற்பாட்டின்பால் உற்பத்தி திறனுள்ளவர்களாக மாற்றவேண்டும். குடும்பத்தில் இருந்தே நல்ல தலைவர்கள், ஆழுமைகள் உருவாகின்றன. அதனால் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் அவர்களை கண்காணித்து அவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்ற வேண்டும்.

இவ்வாறான சிறு சிறு செயற்பாடுகள் மூலமே நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளாக பேதம் மறந்து, ஒரே குறிக்கோளுடன் நாட்டினை இந்த நிலையில் இருந்து ஒரு படி முன்னோக்கி அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஆதன் மூலமே தன்னிறைவு அடைந்த ஒரு சமுகத்தினை மகிழ்ச்சி நிறைந்த ஒரு நாட்டினை கண்முன்னே காணலாம்.

 நாம் கடந்த பத்து வருடமாக சமாதானம் சகவாழ்வுக்காக நம்மை அர்பணித்துவிட்டோம். ஓவ்வொரு தடவையும் நாம் கடந்துவந்த கறைபடிந்த 1983 கறுப்பு யூலையை திரும்பிப் பார்க்கின்றோம். அவற்றில் இருந்து மீண்டெழ நாம் என்ன செய்ய வேண்டும்!
இனவாத மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக எழுந்து வருவோம்.
நம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளிடம் அவர்களின் பொறுப்பை தட்டிக்கேட்போம்.
முப்படைகளையும் வன்முறைகள் இல்லாது பாதுகாத்துதர அவர்களை ஊக்கப்படுத்துவோம்.
குற்றவாளிகளை விரைவாகத் தண்டிக்கும்படி சட்டத்திடம் நீதி கேட்போம்.
மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக குரல்கொடுப்போம்

உஷாத்துணை.

0 comments:

Post a Comment