ADS 468x60

01 May 2019

உழைப்பாளன் வீழ்வதில்லை.


உழைப்பே உயர்வையும், மன நிறைவையும் தரும் - ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன், தளர்வறியா உழைப்பின் மூலம், நம் பிரதேசத்தின்; பெருமையை உயர்த்தியவர், வைத்தியர், சமுக அக்கறையாளர், பேச்சாளர், கவிஞ்ஞர், சிந்தனையாளர், நிருவாகி, எழுத்தாளர், ஒருங்கிணைப்பாளர், நல்ல சாரதி, பாடகர், ஆற்றுப்படுத்துனர் அதற்கும் மேல் ஒரு அரசியலாளர் என பல தொழில் தகமைகளை தன்னகத்தே கொண்ட ஒருவரைப்பற்றி சொல்ல நினைக்கின்றேன். இவரை வைத்திய அத்தியட்சகர் எனத்தான் பலருக்கும் தெரியும் ஆனால் தனது கடின உழைப்பினால் அது தவிர்ந்த ஏனைய திறன்களை தன்னகத்தே வளர்த்துக்கொண்ட ஒரு சாதனையாளன்தான் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டிருக்கும் வைத்தியர் கு.சுகுணன் எனில் மிகையில்லை.

எனது அன்புக்கும் நட்புக்கும் உரிய ஒருவராக இருந்து அனைவரையும் மருத்துவத்தால் மகிழ்வித்து, சிரிப்பால் சிறைப்படுத்தி ஒரு சமுகத்தினையே தன்பின்னால் சொத்தாக வைத்திருக்கும் ஒருவரைப்பற்றி சில விடயங்களை நான் சொல்ல வந்துள்ளேன்.

ஒரு காலத்தில் களுவாஞ்சிக்குடி என்றால் நான் உட்பட பலருக்கு அந்த வாட்டு றோட்டால போகப் பயம் அந்த ஆஸ்பத்திரி போகப்பயம், டொக்டர பாத்தால் பயம் அப்படி ஒரு மோசமான வாடை அடிக்கும் அந்தப்பக்கம். வைத்தியர் சுகுணன் வந்தார் ஆஸ்பத்திரி ஆசுவாசப்படும் இடமாகியது, வாடடு வண்ணமயமானது.

வைத்தியர்கள் தாதியர்கள் எண்ணிக்கை அதிகரித்தன, வாட்டுகள் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டன, கட்டடங்கள் கனத்தன, ஆஸ்பத்திரி அடுக்குமாடிகளாயின, நோயாளர்கள் அதிகமாக வந்து சுகம்பெற்றுச் சென்றனர். ஒரு வைத்தியசாலைக்கு தேவையான வைத்திய உபகரணங்களையெல்லாம் தனது முயற்சியாலும் நிருவாக வாண்மையினாலும் பெற்று பெருக்கிக்கொண்டார். இது வைத்தியர் அவர்களின் கடின உழைப்பில் அவருடைய நிருவாகத்திறமை, ஒருங்கிணைப்பு வாண்மை, தலைமைத்துவத்துவம் ஆகியவற்றினை பயன்படுத்தியமைக்கு கிடைத்த வெற்றி.

இவர் தனக்கென பாரிய பொறுப்பை ஏற்று இரவு பகலாக கண்துஞ்சாது வெள்ளம், அனர்த்தம், மற்றும் பல இடர்காலங்களில் மக்களோடும் ஊழியர்களோடும் அதிகாரிகளோடும் களத்தில் நின்று கடமைசெய்த அந்த நாட்களை நாம் மறந்துவிட முடியாது. மக்களிடையே டெங்கொழிப்பு, வாகன விபத்துக்கள் போன்ற இடர்தணிப்பு விழிப்பூட்டல்களை அரச தனியார் ஒருங்கிணைப்புடன் முன்னெடுத்து இந்தப்பிராந்தியத்தினை பாதுகாத்த முன்னோடி. இந்த உழைப்புகளுக்கு பல விருதுகளை மாவட்ட, மாகாண ஏன் தேசியரீதியில் எல்லாம் பெற்று சர்வதேச பயிற்சிகளை உற்பத்தித்திறன் சார்ந்து முன்னேற்றத்தினை ஏற்படுத்திய ஒரு பெரிய உழைப்பாழி. இவர் தானும் உழைத்து மற்றவர்களையும் உழைக்க வைத்த ஒரு நிருவாகி. இத்தனைக்கும் குறைந்த வசதிவாய்ப்புக்களுடன் நிறைவான உற்பத்தியினை வெளிப்படுத்தி பொருளாதாரத்தின் கோட்பாட்டினையே நிருபித்த ஒரு சமுக விஞ்ஞானி.
இத்தனை வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் என்னைப்பொறுத்தமட்டில் தனது நேரத்தினை சுய முன்னேற்றத்துக்கு என ஒதுக்காமல் சமுகத்தின் மீதான அக்கறையின் காரணமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க என்னோடும் இன்னும் பலரோடும் சேர்ந்து சேவை செய்யும் ஒரு சமுக சேவகன். மக்களுடன் மக்களாக அவர்களுக்கு பல அறிவுறைகளை செய்ய எமது மாவட்டத்தின் பட்டிதொட்டியெல்லாம் சென்று தனது பேச்சாற்றலால் மாற்றங்களை செய்து வரும் பேச்சாளன். இவர் இத்துடன் நின்றுவிடாமல் பல போராட்டங்களை சாதாரண மக்களின் உரிமைக்காக இளைஞர்களுடன் இணைந்து முன்னெடுத்து அவற்றை வெற்றிகண்ட செயற்பாடுகளிலும் ஈடுபட்ட ஒரு போராட்டவீரன். ஆதனால் இவரை ஏனைய வைத்தியர்களைவிடவும் அனைவருக்கும் நன்கு அறியப்பெற்றவர்.
இவர் ஒரு சிறந்த கவிஞ்ஞன் அதிலும் கவிதைக்கு கவிதையாலே கணைதொடுக்கும் சொல்வாண்மைகொண்ட ஒரு திறமைசாலி அதனால் பலரை கவிபாடி கவிழ்துவிடும் திறமை இவரில் உள்ளது. அத்துடன் எமது இனம், கலாசாரம் சார்ந்து அவற்றை பேணிப்பாதுகாக்கும் ஒரு அக்கறையாளன்.

உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதிலும் ஒருங்கிணைப்பதிலும் இவருக்கு நிகர் இவர்தான். எனக்கு ஞாபகம் இருக்கின்றது, ஒரு முறை எமது மண்முனை பிரதேசத்துக்கே முதன் முதலாக ஜனாதிபதி மைத்திரிபால அவர்கள் விஜயம் மேற்கொண்டு ஆதார வைத்தியசாலையில் ஒரு கட்டிடத்தினை திறந்துவைத்தார். இதற்கான அத்தனை வேலையினையும் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாத ஒருவர்போல் ஓராமாய் நின்றவரின் பணிவு, உழைப்பு சொல்லில் அடங்காது. இதுவரைக்கும் ஒரு பா.ம உறுப்பினர், அல்லது அமைச்சர்கூட செய்ய முடியாத வேலையை செய்து முடித்து இந்த பிரதேசத்தினை ஒரு ஜனாதிபதிக்கு கொண்டு காட்டியமை வரலாற்று முத்திரையாய் பதிக்கப்படவேண்டியது.

உங்களுக்கு கிடைத்திருக்கும் வேலைகூட இவரின் பல்திறமையுடன், அனுபவத்துடன் ஒப்பிடும் பொழுது ஒன்றுக்கும் போதாது இது 'யானைத்தீனிக்கு சோளப்பொரிபோல' இதற்கும் மேல நாங்கள் எதிர்பார்க்கின்றோம் அதற்கான உழைப்பு, திறன், அறிவு மற்றும் அனுபவம் இவரிடம் உள்ளது.

ஆகவே என்னுடன் இவர் நல்ல நட்பு வைத்தவர் என்ற வகையில் அல்ல, இவரை தூரத்திலும் அருகிலும் இருந்து அவதானித்தவன் என்ற வகையில் இன்றய உழைப்போர் தினத்தில் ஒரு பல்திறன் உழைப்பாழியை அடையாளங்காட்டவேண்டிய ஒரு தார்மீக கடமை எனக்குள்ளது அதனால் இவற்றை பதிவிடுகின்றேன்.

அத்துடன் எமது மக்கள் உங்களது சேவையை இழந்து மிக கவலையடைகின்றனர். எமக்கு தெரியும் எங்கிருந்தாலும் இங்கும் ஒரு கண்ணை வைத்துக்கொள்ளுங்கள் என வேண்டுவதுடன். ஏதாவது அபிவிருத்திக் குழுக்களை அமைத்து அதில் ஒருவராய் இருந்தால் துறைசார் வேலைப்பணிகளுக்கான பயன் உள்ள ஆலோசனைகள் உங்களிடம் இருந்து கிடைத்து அது எமது பிராந்திய விருத்திக்கு வித்தாக இருக்கும் என்பது எனது சிறிய வேண்டுகோள்.

இவ்வாறு மெய்வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண்துஞ்சாது, கருமமே கண்ணாயிருந்து இன்று அதற்கு பலனாக கல்முனை பிராந்திய மேலதிப் பணிப்பாளராக பணிக்கமர்த்தப்பட்டிருக்கும் வைத்தியர் சுகுணணின் உழைப்பையே நான் இங்கு பார்க்கின்றேன். அவருக்கு எமது மட்டு மண் சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுவதுடன், இன்னும் இன்னும் உயர்ந்து பல படிகளைக்கடந்து எமது பிராந்தியத்தின் விடிவிக்காய் ஒளிரும் நட்சத்திரமாய் இருக்க வாழ்த்துகின்றேன்.

0 comments:

Post a Comment