ADS 468x60

03 May 2019

எது உண்மை? பயங்கரவாதமும் தமிழர்களும்!

மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.யேசுகிறிஸ்த்து.

இலங்கைத் திருநாடு இன்னும் ஈஸ்ட்டர் திருநாளில் இடம்பெற்ற இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதலினால் பட்ட ரணத்தில் இருந்து மீளவில்லை. ஞாபகம் இருக்கிறது இறப்புக்களின் எண்ணிக்கையினை அதிகரித்தவண்ணம் இருந்த அன்றய காலைப் பொழுது. இத்தாக்குதல்கள் இலங்கையின் தேவாலயங்களில் தமிழர்கள் கலந்துகொள்ளும் பூசை நேரங்களை மையப்படுத்தியே நடைபெற்றிருக்கின்றமை தெரியவந்துள்ளது. அதுபோல் பிரபல நட்சத்திர கோட்டல்களில் குறிப்பாக அதிகம் வெளிநாட்டவர்கள் வந்துசெல்லும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளன. ஆனால் இங்கு தமிழர்கள் தாக்குப்படவேண்டும் என்ற பெரும்பாலான நோக்கத்தின் பின் இருக்கும் உண்மை என்ன என்பது எல்லோரது கேள்வியாக இருக்கின்றது. 

1970 களில் இருந்து தமிழர்கள் வெந்து நொந்து உயிர்களை உடமைகளை நிலபுலத்தினை கற்பினை எல்லாம் இழந்து அரசியல் ரீதியாகக்கூட நாதியற்ற ஒரு இனமாக இடப்பெயர்ந்து சொல்லொண்ணா துயரத்தில் உழன்று இப்போதான் அரையும் குறையுமாக சிறிது சொந்தக் காலில். சுயமுயற்சியில் நின்றபடி தழைக்க துவங்கி இருக்கின்றனர். இந்த வலிகளைச் சுமந்து இரண்டு பரம்பரைகள் இருக்கின்றன. ஆனால் மூன்றாவது பரம்பரையினையும் வலிசுமக்க வைத்த இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதல் இன்னும் எம்மவரை ஒருபடி பின்னோக்கித் தள்ளியுள்ளது. சாண் ஏற முழம் சறுக்க வைக்கப்பட்டுளளனர். 

அன்று தொடங்கப்பட்ட யுத்தத்தில் எப்படி தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பார்க்கப்பட்டார்கள் என்பதை எண்ணினால் மனம் பதைபதைக்கின்றது. எத்தனை றவுண்டப், ஆட்கடத்தல், கப்பம், கற்பழிப்பு, சிறை என வகைதொகையில்லாமல் பயங்கரவாதச்சட்டத்தினை கையில் எடுத்து பதம்பாத்தது அப்போதைய அரசுகள். அந்த வலி தாங்கொணாது இலெட்சோப லெட்சம் தமிழர்கள் வீடு, வாசல், தோட்டம் தொரவு எல்லாவற்றையும் விட்டு விட்டு சென்றார்கள். அதை எண்ணிப்பார்க்கவே நடுங்குகின்றது. இத்தனை விலைகொடுத்தனர் தமிழர்கள் பயங்கரவாதம் என்றபேரில். ஆனால் அன்று எல்லோரும் அவற்றையெல்லாம் வாய்பொத்தி கண்மூடி கண்டும் காணாததுபோல் மௌனியாக இருந்தனர். முஸ்லிம்களை அவ்வாறு யாரும் பார்க்கவில்லை அப்படி பார்க்கும் நெஞ்சம் தமிழ் மக்களுக்கு வராது. ஏனென்றால் அந்த வலி எதிரிக்கும் வரக்கூடாது என நினைக்கின்றனர். இதுதான் உண்மை.

தர்மம் என்பது என்றோ ஒருநாள் தற்கொலை புரிந்ததப்பா- உன்
தலைவன் உடலும் நீதிக்கு பயந்து கோயிலில் மறைந்ததப்பா. என்பதற்கிணங்க எப்பவோ தர்மம் தற்கொலை செய்துகொண்டுள்ளது.

'இஸ்லாத்துக்கும் இந்தப் பயங்கரவாத அடிப்படைவாதச் நடவடிக்கைகளுக்கும் எந்தவித தொடர்புமில்லை நாம் இவர்களைக் கண்டிக்கின்றோம்' என்பதெல்லாம் இந்த நிலையை மாற்றிவிடப்போவதில்லை. 'முஸ்லிம்கள் தவிந்தவர்கள் காபிர்கள் அவர்கள் கொல்லப்படவேண்டும்' எனவும் அதுவே 'ஒவ்வொரு முஸ்லிம்களின் புனிதக்கடமை, சிறந்த மறுமையை அடைய அதுவே சிறந்த வழி' எனவும்  தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் மேற்கோள் காட்டுகின்றான். என்றால் அதனை ஏனைய முஸ்லிம்கள் மறுத்து எதிர்த்து இயங்கி இருந்திருக்கவேண்டும். 

ஆனால் அப்படி அவர்களது சித்தாந்தத்தினை எதிர்த்து நிற்கும் கருத்து நிலை இச்சமுத்தில் பெருவாரியாக வெளிவரவில்லை என்பதனால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் ஏனைய சமுகத்தினரால் சந்தேகம் கொள்ள ஏதுவான வழிகளை உருவாக்கி இருக்கின்றது. அதற்கு எடுத்துக்காட்டாக படுத்துறங்கும் வீடு இருந்து பள்ளிவாசல் ஈறாக வகைதொகையின்றி கைப்பற்றப்படும் சட்டரீதியற்ற ஆயுதங்களும், மருத்துவ வில்லைகள், ஆவணங்களும் நிரூபிக்கின்றன. எது எப்படி இருப்பினும் பல இஸ்லாமிய மக்கள் இவர்களை பூண்டோடு அழிக்க உதவி வருவதனையும், இவற்றினையெல்லாம் எதிர்த்து குரல்கொடுத்து வருகின்றமையும் மறுப்பதற்கில்லை. 

ஆனால் இன்று தமிழ் மக்கள் ஒட்டுமொத்தத்தில் அடைக்கலம் கேட்கும் நிலையில் அரசியலிலும் சரி பொருளாதார ரீதியிலும் சரி அனாதரவானவர்களாக இருப்பது இன்று நேற்றல்ல அன்றுதொடக்கம் இதுதான் உண்மை. ஆக தமிழர்கள் பயங்கரவாதியென்றும் பயங்கரவாதத்தினாலும் அழிக்கப்படுகின்ற ஒரு துர்பாக்கிய இனமாகவே கொள்ளப்படுகின்றனர். எமக்கென வலுவான அரசியல், பொருளாதார இனரீதியான தலைமைத்துவம் அதன் மூலமான அதிகாரப் பகிர்வு அதன் மூலமான சுதந்திரம் என்பன கிடைத்தால் மாத்திரம் தமிழர்களின் பாதுகாப்பு, இருப்பு மற்றும் அடையாளம் வெளிச்சத்துக்கு வரும். 

'பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களைச் சபிப்பவரை வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்' இயேசுவின் பொன்மொழியில் இருந்து.

0 comments:

Post a Comment