ADS 468x60

14 September 2019

கொக்கட்டிச் சோலை தனில் குடி கொண்ட ஈஸ்வரனே!

திக்கெட்டும் உன் பெயர் தெரியாதார் யாரும் உண்டோ
தமிழ் திகழ் மட்டு மண் வந்தமர்ந்த நீல கண்டா
நிற்கட்டும் என்று சொல்ல நீண்டெழுந்த நந்தி கண்டு
நிலை கெட்டு வெள்ளையனை நெடுந்தூரம் விரட்டியவா
தக்கித் தகதி என நடம் ஆடி நலம் அருளும்
தான்தோன்றி ஈஸ்வரனாய் தமிழீழ மண்ணின் கிழக்கே
கொக்கட்டிச் சோலை தனில் குடி கொண்ட ஈஸ்வரனே!
கொடும் பாவி எந்தனுக்கு குறை களைவதென்நாளோ!

முத்திக் கிடக்கும் வயல் முயல் பாயும் முல்லைக்காடு
முன்னால் சுருதி கூட்டும் மட்டக் களப்பு வாவி
கத்திக் குரவை போடும் களத்து மேட்டு நாரைகள்
எத்திக்கும் எழுந்து ஆடும் எழில் மயில் கூட்டம்
குத்தால அருவி போல பால் சுரக்கும் பசுத்தத்தி
குடி வந்தோரை வாழவய்கும் வாய்ப்பான மக்கள்- இது
அத்தா நீயுறையும் அருள் பொங்கும் திரு வீடு
எத்தாலும் மறவாமல் எமையாளும் உன் கோயில்
உள்ளம் உருகுதப்பா உன் நாமம் ஒலிக்கையிலே
ஊரெல்லாம் திரண்டு வந்து தேரோட்டம் காணுதப்பா
பள்ளம் நிறய பரவி வரும் தண்ணீர் போல்
பரமனே உன்னருள் பட்டி தொட்டி எல்லாம் நிறையுது
வெள்ளம் அடித்தது போல் வெறுமயாய் நானிருக்கேன்
வேத நாயகா உன் பிள்ளை வேதனைப் படலாகுமா
எள்ளளவும் எனக்கு வேண்டாம் இரக்கமற்றோர் உறவு
வேண்டும் இரங்கும் உன் தாய்மையான அன்பு
ஓடினோம் உடைந்தோம் தொலைந்தோம்
வாடினோம் பயந்தோம் அலைந்தோம்
இழந்தோம் குழைந்தோம் இரந்தோம்
முடிந்தோம் இடிந்தோம் மடிந்தோம்
இருந்தும் இன்னும் வருந்தும் எமக்கு,

மருந்தே சோலையூர் குருந்தே
மனம் இனிக்க அருளும் கரும்பே
காவலாய் தமிழ் பொங்க கவிஞனாய்,
கூவி அழைப்போர்கு சேவகனாய்,
கொடும்பாவிகளுக்கு கொட்டும் தேழாய்,
மறவனாய் வாழ வைக்க இறைவனாய்,
துறவு கொண்டோர்கு துணையாய்!
இணையாய் எழுவாய் அருள்வாய்!
சோலையூர் தேவா சொக்கா!
எக்காலமும் உன்னருள் மக்களுக்கு
அருள வேண்டுகிறேன் அப்பா!

0 comments:

Post a Comment