ADS 468x60

13 November 2021

அரச ஊழியர்களே இந்த நாட்டுக்கு சுமையாக உள்ளனர். ஏற்றுக்கொள்ளலாமா?

இன்று எங்கு பார்த்தாலும் பதுக்கல், தட்டுப்பாடு, விலையேற்றம், தரமற்ற பொருட்கள் என நாட்டு மக்களின் வாழ்க்கை பெரும் சுமையால் நீழ்கின்றது. இதனுள் அகப்பட்ட பலரில் அன்றாட வாழ்வாதாரத்தில் ஈடுபடுபவர்கள், சுயதொழில் புரிபவர்கள், தனியார் தொழில் செய்பவர்கள் ஆகியோர் முக்கியயமாகக் கருதப்படுகின்றனர். கோவிட் காலத்தில் இந்த வர்க்கத்துக்கு நிவாரணமும் கிடையாது வருமானமும் கிடையாத நிலையில் பெரும் துன்பத்தை அனுபவித்த வர்க்கத்தினர். ஆனால் எந்த அரச தொழிலில் இருந்தவர்களுக்கும் அரசு ஒரு ரூபாய் கூட குறையாமல் அவர்கள் வேலைக்கு செல்லாத சந்தர்ப்பங்களிலும் முழு சம்பளத்தினை செலுத்தி வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

இந்தப் பின்னணியில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை கடுமையான புரட்சிகரமான மாற்றத்தைக் எதிர்பார்க்கின்ற போதிலும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தற்போதைய வருமான வீழ்ச்சியின் போக்குகளைக் குறைக்கும் வகையில் பெரிதாக எந்தவித உபாயங்களையும் முன்மொழியவில்லை. 

அரசாங்கத்தின் பெருகிவரும் செலவுகள்,. நாடு தற்போது எதிர்கொள்ளும் அந்நியச் செலாவணி நெருக்கடி, அல்லது விவசாய இரசாயனங்கள் மீதான சமீபத்திய தடையிலிருந்து உருவாகும் உணவு நெருக்கடிக்கு தீர்வுகளை அது பரிந்துரைத்திருக்கின்றதா? என்ற கேள்வி ஒரு அடிப்படை பொருளாதாரம் தெரிந்த ஒருவருக்கே விளங்கும்.

குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவைக் குறைத்தல் மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கு அவர்களின் பதவிக் காலத்தை நீடித்தல் போன்ற வரவுசெலவுத்திட்டத்தின் பல சிறப்பம்சங்கள் நாட்டின் முக்கிய பிரச்சினைகளுடன் ஒப்பிடும்போது அவை மிகச்சிறிய ஆலோசனைகளாகவே பார்க்கப்படுகின்றது.


அரச சேவைகளுக்கான பொதுமக்கள் வரி ஒதுக்கீடு

 
மேலே உள்ள மத்திய வங்கியின் அறிக்கைக்கிணங்க, பொதுமக்களிடம் இருந்து அறவிடப்படும் மொத்த வரிப்பணத்தில் 86.47 விகிதம் 2020இல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கான கொடுப்பனவுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளமை அவர்களின் வினைத்திறனான சேவை இந்த நாட்டுக்கு தேவை என்பதனை காட்டுகின்றது. 

இருந்தபோதிலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது வரவு செலவுத் திட்ட உரையில் அண்மையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய 30,000 மில்லியன் ரூபாவை மேலதிகமாக ஒதுக்கீடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அண்மையில் அரச துறை ஊழியர்கள் நாட்டுக்கு பெரும் சுமை என்று நிதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பொதுத்துறை தொழிற்சங்கங்கள் கடும் கோபத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.

இருப்பினும், அதே நேரத்தில், அரசதுறை ஊழியர்களின் ஓய்வு வயது இன்னும் ஐந்து ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று அவர் அறிவித்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கலாம். உண்மையில், ஓய்வூதிய வயதை உயர்த்துவது என்பது பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது. மறுபுறம், இது மற்றொரு சமூக பிரச்சினையை உருவாக்க வழிவகுக்கும் அல்லவா. 

தொடரும் பொருளாதார வீழ்ச்சியினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் புதிய பணியாளர்களுக்கும் முறையே ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதால், அரச நிறுவனங்களுக்கு புதிய ஆட்சேர்ப்புகளை அனுமதிப்பதில் இருந்து நிதி அமைச்சு விலகியிருக்க விரும்புகிறது. 

அதேநேரம். அந்த நிறுவனங்களின் தற்போதைய ஊழியர்களின் சேவைகளை நீட்டிப்பதுதான் அதற்கான ஒரே வழி எனவும் கருதுகின்றது இந்த நிறுவனங்கள். இந்த நடவடிக்கையின் மூலம், அவர்களது மூத்த ஊழியர்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைத் பெற்றுக்கொள்ள வழிவகுக்கலாம். ஆனால் அவர்களின் முதுமைக்காலத்தில்  இவ்வாறான சேவை நீட்டிப்பு குறுகிய காலத்துக்கு இருந்திருக்கவலாம். மறுபுறம், இந்த நடவடிக்கை அரச துறையில் சேர விரும்பும் இளைஞர்களிடையே அமைதியின்மையை, பீதியினை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அரச துறை பணியாளர்கள் சுமை என்று கூறும் அமைச்சர் அரச பணித் துறையை அளவுகோலாக எடுத்திருப்பது அதன் சேவையின் தரத்தினையா அல்லது சேவையாளர்களின் அளவினையா  என்று யோசிக்கலாம். அவர் முக்கியமாக வருமானம் மற்றும் செலவு மற்றும் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் அவரது முன்மொழிவைக் கையாள்வதால், அவர் அளவைக் குறிப்பிட்டார், மாறாக சேவையின் தரம் அல்ல என்று முடிவு செய்ய வேண்டும்.

உள்ளூர் வருமானம் சரிவு மற்றும் அன்னியச் செலாவணி நெருக்கடி போன்ற நிகழ்வுகளைப் போலவே, இந்தச் சுமைக்கு தற்போதைய நிர்வாகம் உட்பட அடுத்தடுத்த அரசாங்கங்கள்தான் காரணம், ஏனெனில் அரச துறையை அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களின் குப்பைத்தொட்டியாக கருதுகின்றனர்.

50,000 பட்டதாரிகளுக்கும், 100,000 குறைந்த வருமானம் பெறுவோருக்கும் அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் அறிவித்தது, அது அந்த நேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிறுத்தப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று - தேர்தலுக்கு ஒன்பது நாட்களுக்குப் பிறகு - புதிய பணியாளர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி வேலைக்குச் செல்வார்கள் என்று அறிவித்தது. 

ஓவ்வொரு அரசாங்கமும், தமது நாட்டினை முன்னேற்ற புதிய திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதைச் சொல்லத் தேவையில்லை. தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் முக்கிய துறைகளின் விரிவாக்கம் போதாத நிலையில் இங்கே, இந்த 150,000 ஆண்களும் பெண்களும் ஏற்கனவே ஊழியர்களால் நிறைந்து வழியும் நிறுவனங்களில் உள்வாங்கப்பட்டனர்.

ஏவ்வாறெனினும் மறுபுறத்தில், பல திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் அரச துறையில்; இருந்தாலும், அவர்களின்; சுறுசுறுப்பின்மை மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் ஊழல் பாரபட்சம் ஆகியன காரணமாக இது மக்களிடையே பிரபலமடையாத துறையாகவே உள்ளது. 

உதாரணமாக, ஜனாதிபதியாக பதவியேற்ற ஆறு வாரங்களில், டிசம்பர் 26, 2019 அன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறுவனத்தின் செயல்திறனை ஆய்வு செய்வதற்காக, வேரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (மோட்டார் வாகனப் பதிவாளர்) அலுவலகத்திற்கு விஜயம் செய்தார், மேலும் அவர் அவர்களின் சேவைத்தரத்தினை விமர்சிக்க வேண்டியிருந்தது. பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரிகள் செய்வதறியாத ஒரு பதற்றமான சூழ்நிலையை நாம் அனைவரும் நேரடியாக அவதானித்தமை குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் அதே வருடம் டிசம்பர் 31ஆம் திகதி, பொதுப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் அரச துறையின் திறமையின்மை முடிவுக்கு வர வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தமையும் சேவையின் தரத்தை அதிகரிக்கும் பரிந்துரைகளாகவே பார்க்கப்படவேண்டும்.

குறிப்பாக 2016 மே 1 முதல் ஓகஸ்ட் 31 வரை (நான்கு மாதங்களுக்குள்) 15 பொது நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட ரூ.110 பில்லியன் இழப்புகளை பெப்ரவரி 8, 2017 அன்று பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப்) சுட்டிக்காட்டியது. பொதுத்துறையில் இதே போன்ற அல்லது இன்னும் பெரிய ஊழல் நடவடிக்கைகள் பாராளுமன்றத்தின் கோப் மற்றும் பொது கணக்கு குழு மூலம் இதற்கு முன்னும் பின்னும் அம்பலப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

அதுபோல புகழ்பெற்ற வற் மோசடி, மத்திய வங்கியின் பத்திரம் மற்றும் அண்மைய சீனி ஊழல் ஆகிய மூன்று திடுக்கிடும் சம்பவங்கள், அரச நிறுவனங்களின் ஊழல் சம்பந்தமாக பெரிதாகப் பேசப்பட்டன. 

எனவே, பொதுத் துறையானது அதன் சேவைத்தரம் மற்றும் அதன் ஊழியர்களின் அளவு அடிப்படையில் பொதுவாக இந்த நாட்டுக்கு சுமையாக இருந்து வருகிறது, ஆனால் இவை அனைத்துக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அனுசரணையுடன், இயங்கும் உயர் அதிகாரிகளே காரணமே தவிர உண்மையான சாதர மற்றும் நடுத்தர ஊழியர்கள் அல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.


0 comments:

Post a Comment