ADS 468x60

16 November 2021

டெங்கா கொரோணாவா! தடுமாறும் நோயாளர்கள்: டெங்கபாயம் கொரோணாவை மிஞ்சுமோ!

"மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல்" இன்று இலங்கை மக்கள் என்ன சாபக்கேட்டுக்குள்ளானரோ தெரியவில்லை. கொரோணா வந்து முடியாத நிலையில் டெங்கின் ஆதிக்கம் எங்கும் பரவுகின்றது. இதுவும் ஒரு ஆட்கொல்லி நோய். இந்த அடைமழைகாலத்தில் நிச்சயம் பாரிய பாதிப்பினை இந்த நோய்ப்பரவல் தூண்டும் என்பது எம்மை விழிப்புடன் இருக்கச் செய்யவேண்டும்.

இலங்கையில் 2021 இல் மாத்திரம் இன்றுவரை 24,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் டெங்கு தொற்றுநோயின் உச்சத்தில் ஆண்டுதோறும் 100,000 நோயாளர்கள்; பதிவாகியதில் இருந்து இந்த அபாயம் வெகு தொலைவில் இருந்தாலும், கொரோணாவின் கூடுதல் பாதிப்புக்காரணமாக, இது மக்களால் பெரிதாகக் கணக்கிடப்படாத ஒன்றாக இன்று உள்ளது வருந்தத்தக்கது.

உண்மையில், இந்த இரண்டு நோய்களின் சில அறிகுறிகளிலும் உள்ள பொதுவான தன்மைகள், ஆரம்ப கட்டங்களில் அவற்றுக்கிடையே வேறுபடுத்திப்பார்ப்பது மிகவும் கடினம்தான். இது எந்தநோய் எனப்பிரித்து அடையாளங் காண்பதில் மேலும் சிக்கலாக இருக்கின்றது. 

இந்த டெங்கு நோயானத, நாடு முழுவதும் பெய்து வரும் அடை மழை காரணமாகவும் மற்றும் படிப்படியாக நாடு மீண்டும் திறக்கப்படுவதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து அதனால் கோவிட்-19 தொற்றுநோய் அதிகமாகும் அதேவேளை டெங்கு நோயின் அதிகரிப்பு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, இந்த நிலை சுகாதார சேவையாளர்களுக்கும் அதனோடு தொடர்புடைய சேவையாளர்களுக்கும் அதிக சுமைக்கு வழிவகுக்கும்.

ஆகவே டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அரசும் பொதுமக்களும் இன்னும் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக உள்ளது என்பதே நிதர்சனம்.

நமது பக்கத்தில் உள்ள நாட்டினைப் நேரடியாகப் பாதிக்கும் தொற்றுப் பிரச்சனையை நாம் ஏற்கனவே பார்த்த பல அனுபவங்கள் எமக்குண்டு. அந்தவகையில்; இந்திய மாநிலமான ஒடிசாவில், கோவிட் தொற்றாளர்கள்; குறைந்திருந்தாலும், டெங்கு நோயின் தாக்கம் அண்மையில் அங்கு 15 மடங்கு அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட தொற்றாளர்களின்; எண்ணிக்கை அங்கு சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட தாக்கத்தில் இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டுகளில், மக்கள் விழிப்புணர்வு அதிகரித்த போதிலும், டெங்கு ஒரு தீவிரமான மற்றும் சில சமயங்களில் ஆபத்தான நகர்ப்புற சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது, அதனால் இதுவரை அவற்றைக்கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் பயனற்றவை என்பதை நிரூபிக்கின்றன.

அடுத்தடுத்து பல அனர்த்தங்களால் விரக்தியடைந்த அரசாங்கம், இராணுவம் உட்பட, ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு மக்களைப் பயமுறுத்துவது போன்ற பல முன்முயற்சிகளை கொவிட் நோயின் மீது இருந்துவிடுபட எடுத்துவந்தபோதிலும் இவை அனைத்தும் ஒரு இடைநிறுத்தல் நடவடிக்கைகளாகவே நோக்கப்படுகின்றன. மக்கள் அவர்களாகவே உணர்ந்து அவர்களின் இயற்கையான மீண்டுவருதலையே இவ்வாறான நோய்த்தொற்றுக்களின்போது முன்னெடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வருடங்களாகப் கொவிட்டை கட்டுப்படுத்த பெரிய அளவிலான நாட்டை முடக்குதல் நடவடிக்கைகள் வருடாந்த டெங்கு எண்ணிக்கையைக் குறைத்தாலும், பிரச்சனையின் அச்சுறுத்தல் இப்போது மீண்டும் வெளிவருவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் - குறிப்பாக நாடு திறக்கப்பட்ட நிலையில் எல்லா மாணவர்களும் இப்போது மீண்டும் பாடசாலைக்கு செல்லுவதும் இன்றளவில் கூர்ந்து கவனம் செலுத்தவேண்டிய ஒரு விடயமாகும். 

இன்று பலர் பொதுவாக, கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோமோ என்ற அச்சம் காரணமாக, அதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் போது, மருத்துவமனைகளுக்குச் செல்வது குறித்து பொதுமக்களுக்கு நியாயமான கவலைகள் இருக்கும் விடயமும் உள்ளது. எவ்வாறாயினும், அரசாங்க வல்லுநர்கள் அந்த அச்சத்தைப் போக்க பலவகையிலும் முயன்றுவருகின்றனர், இன்று அறிகுறிகள் தென்படும்போது அதனை மக்கள் டெங்குவா அல்லது கோவிட் காய்ச்சலா என்பதை அடையாளம் காண, ஆன்டிஜென் அல்லது முழு இரத்த பரிசோதனை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இன்று இந்தச்சூழலில் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் இல்லாத சூழலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களுடன், தங்கள் வீடுகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் டெங்கு பரவும் இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வருவது பாராட்டத்தக்கது.

இதற்கிடையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது, சுகாதாரசேவை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் முப்படையினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் நுளம்பு பெருகும் இடங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்க நல்ல விடயம்.

இம்முயற்சி ஒரு தொடக்கமாக இருந்தாலும், சீரற்ற காலநிலையின் வடிவில் தடைகளை பல வந்தவண்ணமுள்ளது. இதற்கிடையில், கோவிட் எண்ணிக்கை வெளித்தோற்றத்தில் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அரசாங்கமும் ஊடகங்களும் அதில் கவனம் செலுத்துவதனைக் குறைத்து வருகின்றது. ஆனால் இன்னும் நாம் எமது மக்களை வழிப்பு நிலையில் வைத்திருந்தால் மாத்திரம் இன்னுமொரு அலையில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம். அத்துடன் இன்னொரு டெங்கு ஆபத்தையும் நாம் நமக்குள் அண்டவிடாமல் பாதுகாக்க அனைத்து பகுதியினரும் ஒன்றுபடவேண்டும்! ஆகவே நாம் பாதுகாப்பாகவும் விழிப்போடும் இருப்பது மாத்திரமே நம்மை மீட்டெடுக்க உதவும்.

S.Thanigaseelan

0 comments:

Post a Comment